சித்தர் சிந்திய முத்துக்களில் நான்கு /13


சிவவாக்கியம்-134

அறையறை இடைக்கிடந்த அன்று தூமை என்கிறீர்
முறை அறிந்து பிறந்தபோதும் அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீற்குளித்தால் அன்று தூமை என்கிறீர்
போரை இலாத நீசரோடும் போருந்துமாறது எங்ஙனே.

இளம்பெண்களை மாதத்தில் மூன்று நாட்கள் அறையில் ஒதுக்கி வைப்பது ஏன் என்றால் அவள் தீட்டு என்று சொல்கின்றார்கள். பத்து மாதம் கருவிலிருந்து பிறந்த குழந்தைகளுக்கும் தீட்டு என்கிறார்கள். இறந்த சாவுக்குப் போய்விட்டு குளத்தின் துறைகளில் குளிக்கும் காரணம் கேட்டால் அதற்கும் தீட்டு என்கிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் தீட்டு எனும் பொறுமை இல்லாத நீசர்கலோடும் நீ தீட்டாகவே பொருந்தி இருப்பது எவ்வாறு இறைவா?
******************************************* 

சிவவாக்கியம்-135


சுத்தம் வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகிய நீரிலே தவண்டு மூழ்கும் மூடரே
சுத்தம் ஏது சுட்டதேது தூய்மை கண்டு நின்றது ஏது?
பித்தர் காயம் உற்றதேது பேதம் ஏது போதமே.

சுத்தமான ஆகாயத்திலிருந்து சுத்தமான மழைநீர் பெய்கிறது.இதனை உனக்குள் அறியாது சிற்றின்ப நீரிலே மூழ்கி  அதனாலேயே பல துன்பங்களுக்கு ஆட்பட்டு விந்து விட்டு நொந்து கெடும் மூடரே!!! நீரிலே மூழ்குவது மட்டும் சுத்தம் அல்ல. மனதிலுள்ள மாசுக்களை நீக்குவதே சுத்தம். சுத்தம் ஏதுதீயாக சுட்டது ஏதுஎன்பதை அறிந்து அது பேதம் ஏதும் இல்லாத மெய்ப்பொருளாய் இருப்பதை அறிந்து உணர்ந்து மனதை அதிலேயே இருத்தி தியான போதத்தில் திளைத்திடுங்கள்.

******************************************* 

சிவவாக்கியம்-136


மாதா மாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான்
மாத மற்று நின்றலோ வளர்ந்து ரூபம் ஆனது
நாதம் ஏது வேதம் ஏது நற்குலங்கள் ஏதடா
வேதம் ஓதும் வேதியா விளந்தாவாறு பேசடா!!

மாதம்தோறும் பெண்களுக்கு இயற்கையாய் வரும் தூமையே அவள் தூய்மையானவள் என்பதற்கு சான்று. அது நின்று போனால் அவள் கருவைத் தான்கியிருக்கின்றால் என்பதே காரணம். அத்தீட்டில் கலந்தே உடலும் உயிரும் வரர்ந்து உருவமாகி ஜனிக்கின்றது. நாதமும் விந்துவும் கலந்தே உயிர்கள் யாவும் உண்டானது. இதில் நாதம் எதுவேதம் எதுநற்குலங்கள் எதுஎல்லாம் அத்தூயமையில் இருந்தே தோன்றியுள்ளது என்பதனை அறியாமல் வேதங்களை வெறும் வாயால் ஓதுவதால் மட்டும் உயர்ந்த குளம் எனப் பேசும் வேதியரே! நீங்கள் இப்போவியில் இவை இல்லாமல்தானோ விளைந்தீர்களாஅது எப்படி எனக் கூறுங்கள்!!!

*****************அன்புடன் கே எம் தர்மா.

'உன்நினைவுகளில் என்றும் ...... '

 


"எங்கள் வீட்டின் குலமகளாய் இணைந்து

எல்லார் நெஞ்சையும் சிரிப்பால் இணைத்து

எடுப்பாய் குடும்பத்தில் இரண்டற கலந்து

எம்மோடு ஒருவளாக வாழ்ந்த திருமகளே!"

 

"மனதை கவர்ந்து அன்புமழையில் நனைத்து

மணக்கோலம் கொண்டு மணமகளாய் வந்து

மகரிகை தொங்க வலதுகால் வைத்த

மகிமை பொருந்திய எங்கள் கலைமகளே!!"

 

"வந்தாரை மகிழ்வித்து மனமார வாழ்த்தி

வஞ்சனை இன்றி வெளிப்பட கதைத்து

வயிறு நிறைய உபசாரம் செய்து

வணக்கம் கூறி வழியனுப்பும் மலைமகளே!"

 

"கல்விஞானம் அத்தனையும் ஒருங்கே கொண்டு

கண்ணாக குடும்பத்தை அணைத்து வாழ்ந்து

கருணையுடன் எல்லோரையும் வழி நடத்தி

கண்டவர்கள் மனம் நிறைந்த அலைமகளே!"

 

"மீதி வாழ்வை பாதியில் விட்டுவிட்டு

மீளாதுயரில் எம்மை ஆழ்த்தியது எனோ?

மீட்சி உண்டோ விடிவுஉண்டோ எமக்கு ?

மீண்டும்நீ எம்மிடம் வரும் வரை?"

 

"சொல்லாமல் கொள்ளாமல் நீ பிரிந்ததை

சொல்லியழ எமக்கு வார்த்தை இல்லை

சொர்க்கம் என்று ஒன்று இருந்தால்

சொந்தமாய் அதில்நீ என்றும் இருப்பாய்!"

 

இயற்கையின் அழைப்பை ஏற்றதனால் - நீர்

இசைந்து எம்மை விட்டு  விரைந்தீரோ ?

இளகிய இதயம் கொண்டதனாலா - அவன்

இயமன் வலையில் நீர் விழுந்தீரோ?"

 

"உறவாய் உற்றவளாய் உடன் பிறப்பாய்

உத்தமியாய் எத்தனை பரிணாமம் நீர்கொண்டீர்?

உயிராய் உன்கொள்கைகளை  போற்றி நாம்

உன்நினைவுகளில் என்றும் வாழ்ந்திடுவோம்!".

 

👨[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

தமிழ் Bigg Boss நிகழ்ச்சி ஒரு மேடை நாடகமா?


தமிழ் தொலைக்காடசி ஒன்றில் தற்சமயம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி பற்றி பொதுமக்களால் பலவிதமாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

 

இது, உள்ளிருப்போர் இடையில் ஒர் இயல்பில் நடக்கும் சம்பவங்களைக்  கோர்வைப்படுத்தி, மாற்றம் ஒன்றும் இன்றி அப்படியே காண்பிக்கிறார்களா அல்லது இயக்குனர்களின் கடுமையான நெறியாழ்மையுடன் ஏற்கனவே சொல்லிவைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி நிரலின் படி நடிக்க வைக்கப்பட்டு மீள் ஒழுங்குபடுத்தி ஓட விடுகிறார்களா?

 

இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு என்னதான் சொல்ல விழைகிறார்களோ என்னவோ, மக்கள் இதை  வெறித்தனமாக ஆவலுடன் பார்க்கத்தான் செய்கின்றார்கள். தொலைக்காட்சி நிறுவனத்தினருக்கும்  அதுதான் வேண்டும்.

 

நிஜ வாழ்க்கையில் இல்லாத முழு நீள வில்லத்தனங்களாகவே அமைந்திருக்கும் நாடகங்களை ஆசையுடன் விழுந்து, விழுந்து பார்க்கும் ரசிகர்களுக்கு, அதே போல ஒரு நிகழ்ச்சியினை ஒரு வீட்டுக்குள் இருந்து நடத்தி, ஏராளமான மக்களை பார்க்க வைக்கின்றார்கள்.

 

பொதுவான கண்ணோட்டத்தில் பார்த்தால், இங்கு நடைபெறும் (நடத்தப்படும்?) சண்டைகள், சச்சரவுகள், வாக்கு வாதங்கள், எல்லாம், ஒரு சேரிப்பகுதியில்  நடக்கும் குழாயடிச் சண்டைக்கு ஒப்பாகும்.

 

சினிமாவிலும் சரி, நாடகங்களிலும் சரி தெருச் சண்டை ஒன்று நடந்தால், போகிறவர், வருபவர் எல்லாம் கூட்டமாய் (மிகவும் ஒழுங்கான வரிசையில்) நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.  தெருச் சண்டை  கண்களுக்கு குளிர்ச்சிதானே. சிலர் கைகளைக் காட்டிக், காட்டி அபிப்பிராயமும் தெரிவிப்பார்கள். இந்த மனித நடத்தையின் பலவீனத்தைப் பணம் ஆக்குவதற்குப் பயன்படுத்தி இருப்பது போலத்தான் இந்த பிக்  பாஸ் நிகழ்ச்சி தோன்றுகிறது.

 

அதற்கு ஏற்றால் போல, சமூகத்தில் இருக்கும் பலதரப்பட்ட மட்ட, வெவ்வேறு துறையில் ஆர்வம் உள்ள கிராமத்து மற்றும் நகரத்து மக்களை தெரிவு செய்து உள்ளே விட்டிருக்கிறார்கள். என்றால்தான் சண்டை வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். வந்தால் பார்க்க கண்களுக்குக் குளிர்ச்சியாய் இருக்கும். படிக்காடு, பட்டணம், படித்தவர், படியாதவர், அலங்கார ராணி, கலாச்சார மங்கை, நல்லவர், சகுனி வேலை பார்ப்பவர்,கோபம் வருபவர், சாந்தமானவர், ஆங்கிலம் தெரியாதவர், (தற்காலிகமாக} நடித்துக் காதலிக்க இருவர் என்று பலவிதமாக வேடங்களில் ஆட்கள் இருப்பார்கள்.

 

24 மணித்தியாலங்களுக்கும், அத்தனை பேருக்கும் எப்படி வசனம் எழுதிக் கொடுக்க முடியும் என்று மறுப்பார்கள். அப்படி சொல்லுக்குச் சொல், வசனத்திற்கு வசனம் என்று எழுதிக் கொடுப்பதில்லை. ஆனால், முழு நிகழ்ச்சியும் இன்று, இந்த முறையில்தான் போகவேண்டும் என்று அறிவுறுத்திக்கொண்டு இருப்பார்கள்.

 

அறிவுறுத்தல்கள் தெளிவானவை மற்றும் வரையறுக்கப்பட்டவை. விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் பணிகள் முடிக்கப்படுகின்றன. ஒருவர் கூறும் ஒரு கடினமான வார்த்தைக்கு, மற்றவர் என்ன கூறவேண்டும்  என்று சொல்லிக் கொடுக்கப்படும். அதை எவர், எவர் வந்து, யார் பக்கம் நின்று அந்தச் சண்டையை பெரிது படுத்திக்கொண்டு போகவேண்டும் என்று கட்டளைகள் கொடுக்கப்படும்.பின்னர் எப்படித் தீர்த்து வைக்கவேண்டும் என்றும் கூறப்படும். தொலைக்காடசியில் காட்டும்போது இடையில் நிறுத்திய கணங்கள் ஒன்றும் வரமாட்டா.

 

உள்ளிருப்போர் எல்லோரும் எதோ ஒரு விதத்தில் பிரபலமானவர்கள். இவர்கள் எல்லோரும்  முட்டாள்கள் போல சண்டையிடுவதும், உயர் தொனியில் கத்துவதும் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையில் தாக்குவதும் என்று காட்டுவதை நம்ப முடியவில்லை. ஒருபோதும்  இவர்கள் பல கேமராக்களின் முன் இப்படிச் சின்னத் தனமாகச் செயல் பட மாட்டார்கள். தரம் குறைந்த வார்த்தைகளை உபயோகிக்க மாட்டார்கள். எல்லோருமே நடிக்கிறார்கள், பணத்திற்காக!

 

நாடகங்களின் கருக்கள், வடிவங்கள் மாற்றப்படும். சில வதந்திகள், போட்டி விளையாட்டுகள், நாட்டிய நாடகங்கள், கொடுமைச் சொற்கள், சிரிக்கும் தருணங்கள், நடவடிக்கை ஒவ்வாமை, வேறுபட்ட இயல்பு ரீதியான துஷ்பிரயோகம், மாறுபட்ட குணாதிசய ரீதியான கருத்து வேறுபாடுகள், காதல், பாசம் என்று இருக்கும்.

 

இந்தியாவில், ஒரு பொது விடுதியில் தங்கி இருக்கும், அல்லது வேலைத் தலத்தில்  ஊழியம் செய்யும், அல்லது சந்தையில்  வியாபாரம் செய்யும் பலதரப்பட்ட குணம் உடைய ஆண்கள், பெண்கள் எல்லாம் இப்படியா நாய்கள் போல், வாள் , வாள்  என்று தொடர்ந்து குலைத்துச் சண்டை பிடித்துக் கொண்டு இருப்பார்கள்?

 

ஒருவர் இங்கு நின்று யாரோ ஒரு நபரைப் பற்றி பேசினால்,அதே சமயம் வெளியே அல்லது சமையல் அறையில் அதே நபரைப் பற்றி இன்னொருவர் பேசுவது எப்படி? திரிகால ஞானிகளோ?

 

சமைக்கும்போது சில சின்னப் பாத்திரங்களில் சமைத்த ஒரு சிறிய அளவு உணவு அவ்வளவு பேருக்கும் எப்படி அப்பா போதும்? அட்ஷய பாத்திரமோ?

 

நடிகர்களின் அசைவுகள், முக வெளிப்பாடுகள் எல்லாம் zoom பண்ணி அங்குலம், அங்குலமாக, பக்கத்திலேயே இருந்து பார்த்து எடுப்பதுபோலக் காட்டுகிறார்களே, அது எப்படி? புது தானியங்கித் தொழில் நுட்பமோ?

 

தொலைக்காட்சிகள் எல்லாம் தங்கள் TRP தர நிர்ணய புள்ளியை உயர்த்துவதற்காக எந்த மட்டத்திற்கும் போய் நிகழ்ச்சிகளை நடத்தி, பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதை நிச்சய படுத்திக்க கொள்வார்கள்.

 

உங்கு எந்த துறையினரும் மக்களுக்கு நல்ல சிந்தனைகளை ஊட்டுவதற்காக செயல்படுவதில்லை. தங்கள் பண வருவாயை மேம்படுத்த, நல்லதோ கெட்டதோ மக்கள் வாயைப்பிளந்து பார்க்கக்கூடியதாக எந்த விதமான சரக்குகளையும் காட்டிக்கொள்வார்கள். 

 

அங்கே காட்டுவதெல்லாம் உண்மையும் இல்லை, முழுமையும் இல்லை.

 

நடிப்பவர்கள் ஒப்பந்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர்கள்; உண்மைச் செய்தியை வெளிவிட்டால் மிகப்பெரிய இழப்பு அவர்களுக்குத்தான்!

 

பல மணித்தியாலங்களாக எடுக்கப்பட்ட நாடகம் ஒன்றின் 'சுவாஸ்கரியமான' சில காட்சிகளே உங்களை வந்தடைகின்றது!

பார்த்துப் பரவசமடையுங்கள்!


ஆக்கம்:செ.சந்திரகாசன் 

பாடுபட்டுத் தேடிப் பணத்தை -கனடாவிலிருந்து ஒரு கடிதம்

               

                                                                12.12.2010

அன்புள்ள தங்கைச்சிக்கு, 

நாம் நலம், அதுபோல் உனது சுகமுமாகுக!

உனது கடிதம் கிடைத்தது. யாவும் அறிந்தேன்.

 

 தங்கைச்சி, உனது கடிதத்தில்  நீயும்  , உனது கணவரினதும்  ஓயாத உழைப்பினை வழமைபோல் தேவாரம் பாடியிருந்தாய். இருவரும் சந்திப்பது குறைவு என்றும் ,பிள்ளைகளை வார இறுதியில் சில மணிநேரம் காணலாம் என்று வேறு குறிப்பிட்டுள்ளாய். எனக்குப் புரியவில்லை.இருவரும் என்ன ஒரு நாட்டினை விலைக்கு வாங்கவா இப்படி ஓயாது உழைக்கிறீர்கள். சிந்தித்துப் பார்.

 

கேட்டால் பிள்ளைகளுக்காக, பிள்ளைகளுக்காக என்று கூறுகிறாய். பிள்ளைகள் கல்விக்காக என்று நீ கூறினால்  அது நியாயம் என்பதுடன் அதற்கு இவ்வளவு தூரம்,இத்தனை காலம்  ஓட வேண்டிய அவசியம் இருக்காது என நினைக்கிறேன். அதேவேளை பிள்ளைகள் கல்வியினை  நிறைவு செய்து , அவர்கள் வேலைக்குப்  போக ஆரம்பித்த   பின்னரும் அதே ஓட்டம்  இருவரும்  ஓடுகிறீர்கள். அதுதான்  ஏன்  என்பது புரியவில்லை.

 

கேட்டால் பிள்ளைகளுக்கு இனி சொத்து சேர்க்கவேணும் என்று மேலும்  புலம்புகிறாய். இன்னும் சிலகாலம் சென்றபின் பேரப் பிள்ளைகளுக்குச் சொத்துச் சேர்க்கவேணும் என்று ஓடிக்கொண்டிருப்பீர்கள்  என நம்புகிறேன்.

 

அப்படியாயின் நீங்கள் எப்போது வாழ ஆரம்பிக்கப் போகிறீர்கள்? எப்பொழுது நீங்கள் பெற்ற  பிள்ளைகளுடன் நேரத்தினைச் செலவழிக்கப் போகிறீர்கள்? அல்லது சாகும்வரையில் உழைப்பதுதான் உங்கள் இலட்சியமா? அப்படியாயின் வெறும் இரும்பு மெஷின்களாகவே நீங்கள் பிறந்திருக்கலாம்.

 

கணேசன் குடும்பத்தில் நடந்தது உனக்குத் தெரியாதா? பெற்றவர்கள்  வேலை ,வேலை என்று காலமெல்லாம்  பாய்ந்துகொண்டிருக்க பிள்ளைகள் தங்கள் பாதையில் சென்றபின் தலையில் அடித்து அழுது என்ன பயன்?

  

தங்கைச்சி, உனது கணவரோ ,நீயோ  பெரிதாய் படியாமலேயே , செய்யும் வேலைமூலம் உனக்கும் பிள்ளைகளுக்கும் எவ்வித குறைகளும் வைக்கவில்லை என்கிறாய். அப்படியாயின்  தற்காலத்தின் நவீனயுகத்தின்   கல்வியினை  நிறைவு செய்யும் பிள்ளைகளால் எப்படியெல்லாம் சாதிக்க முடியும் என்பதினை ஏன் உங்களிருவராலும்   உணர முடியவில்லை?. உங்களால் உழைக்க முடிந்ததை விட பலமடங்கு பிள்ளைகளால் முடியும் என்பதனை ஏன் எண்ணிப் பார்த்ததில்லை? பிள்ளைகளுக்கும் உங்களைப்போல் கை ,கால் உண்டுதானே? ஏன் உங்கள் உழைப்பினை , தீனியாகப் போட்டு  அவர்களின் சுய முயற்சிகளை   முடமாக்குகின்றீர்கள்நீங்கள் பெற்றோர்களாக கொடுக்கவேண்டிய அரும்பெரும் சொத்து எதுவெனில் கல்வி ஒன்று தான்.   அவர்கள் வாழ்வில் வெற்றியடைய அது ஒன்று போதுமானது என்பது அனுபவ ரீதியாக பலரும் கூறும் உண்மை.

 

வாழ்வதற்கு உழைப்புத் தேவைதான். அதற்காக உழைப்பதுதான் வாழ்க்கையாகிவிட்டால் ,நீங்கள் இல்லறத்தில் இணைந்ததில் அர்த்தமேது? இப்புவியில் வாழ்வதில் அர்த்தமேது? என்று நான் கேட்கமாட்டேன் ,ஏனெனில் நீங்கள் வாழவில்லை. இப்புவியில் நடமாடுவதில் அர்த்தமேது? என்றுதான் கேட்கிறேன்.

 

தங்கைச்சிஉன் அண்ணன் நான் என்பதால் தான் உரிமையுடன் கூறுகிறேன். இப்படியெல்லாம் கூறினால் பொறாமையில் கூறுவதாக நீ கோவித்துவிடுவாய் என்பதால் அடுத்தவர்கள் இக்கருத்தினை உன்னிடம் கூற மாட்டார்கள். எதிர்காலத்தில் பிள்ளைகள் திருமணம் முடித்து உங்களை விட்டுச் சென்றபின், நான் கூறுவது உனக்கு மிகவும் சரியாகவே தென்படும்.

 

மாமா பரந்தாமன் நிலையினை எண்ணிப்பார். ஒரு பிள்ளை இருந்தும், காலமெல்லாம் ஆவ் ,ஆவ் என்று  ஓடியோடி உழைத்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்தே  காலமானார். அதேவேளையில் மகளுக்குச் சேர்ந்த அவரது இரு வீடுகளும் ,அவளது விவாகப் பிரிவினால்,சட்டப்படி பாதி சொத்து அவள் கணவனை  அடைய , இன்று யாரோ அந்த ஒருவன் ஒரு வீட்டினை, தனது புதிய மனைவியுடன்  அனுபவித்துக் கொண்டிருக்கிறான். இதைத்தானோ ஒளவையாரும் அன்றே

 

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்  -  கூடுவிட்டிங்

காவிதான் போயினபின் பாரே யநுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்.


என்று தனது நல்வழியில் கூறியுள்ளார்.

 

தங்கைச்சி, ஏதோ என் மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றி உனது நலன் கருதியே இக்கருத்தினை எழுதுகிறேன். இவற்றினை ஏற்றுக்கொள்வதும், கொள்ளாததும் உன்னைப்பொறுத்தது.

உன்னுடைய கருத்துகளை ,உனது பதில் கடிதத்தில் எதிர்பார்க்கிறேன்.

வேறு புதினங்கள் இல்லை.


இப்படிக்கு,

அன்பின் அண்ணன்

செ.மனுவேந்தன்