சத்திரசிகிச்சை-மயக்க மருந்து- வெறும் வயிற்றில் இருத்தல்:

 


கேள்வி- சத்திரசிகிச்சைக் கூடத்துக்குச் செல்வதற்கு 12 மணித்தியாலத்துக்கு முன் நீர் அருந்தக் கூடாது என மருத்துவர்கள் சொல்கின்றார்களே. இது எதனால்?

எஸ். கயூரன் யாழ்ப்பாணம்

பதில்:- சத்திரசிகிச்சை செய்வதற்கு முன்னர் மயக்க மருந்து கொடுப்பார்கள். சில விதமான சத்திரசிகிச்சைகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதில்லை. குறிப்பிட்ட பகுதியை மட்டும் மரக்கச் செய்துவிட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்வார்கள். மயக்க மருந்து கொடுத்தால் அவர் நினைவிழப்பார். தனக்கு என்ன நடக்கிறது என்பதை சற்றேனும் அறிய முடியாத நிலையில் இருப்பார்.

 

மயக்க மருந்து கொடுத்திருக்கும்போது எமது இச்சை செயற்பாடுகள் மட்டுமின்றி அனிச்சை செயற்பாடுகளும் தற்காலிகமாகச் செயற்படாது.

 

இதன்காரணமாக இரைப்பையில் உணவு அல்லது நீராகாரம் இருந்தால் அது வாந்தியாக வெளியேறலாம். அல்லது தொண்டைப் பகுதிக்குள் அல்லது களப்பகுதிக்குள் மேலெழுந்து வரக் கூடும். அவ்வாறு மேnலுழுந்து வரும் உணவு அல்லது நீராகாரம் சுவாசப்பையினுள் சிந்திவிடக் கூடும்.

 

உணவானது அவ்வாறு மேnலுழுந்து வரும்போது, அது சுவாசக் குழாய்களுக்குள் சென்று அவற்றை அடைத்துவிடும் ஆபத்து உண்டு. இதனால் சுவாசம் தடைப்பட்டு மூச்சடைக்கும் ஆபத்து உண்டு. அத்துடன் உணவு அல்லது நீராகாரம் சுவாசப்பையினுள் சென்றுவிட்டால் சுவாசப்பையில் கிருமித்தொற்று ஏற்பட்டு நியூமோனியாவாக மாறக் கூடிய ஆபத்து உண்டு. இவை இரண்டுமே உயிராபத்தைக் கொண்டுவரக் கூடியவை.

 

இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவதைத் தடுப்பதற்பாகவே மயக்க மருந்து கொடுக்கும் வேளையில் இரைப்பை வெறுமையாக இருக்க வேண்டும். எனவேதான் வெறும் வயிற்றில் இருக்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.

 

இருந்தபோதும் நவீன மயக்க மருந்து கொடுக்கும் முறைகள் பாதுகாப்பனவை. சுவாசக் குழாய்களுக்குள் உணவு அல்லது திரவம் செல்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவேயாகும்.

 

எவ்வாறாயினும் வெறும்வயிற்றில் இருக்க வேண்டிய தேவை இருக்கவே செய்கிறது. ஆனால் எவ்வளவு நேரத்திற்கு இரைப்பையை வெறுமையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் வேறுபாடுகள் மட்டுமின்றி மாற்றுக் கருத்துகளும் உண்டு.

 

நீங்கள் சொல்லியபடி 12 மணிநேரம் எதுவும் உட்கொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது பழைய காலத்தில். இதுவே ஆண்டாண்டு காலமாக நிலவிவந்த முறையாகும். இன்றும் ஒருசிலர் இதைச் சொல்லக் கூடும்.

காலையில் 9 மணியளவில் சத்திரசிகிச்சை நடக்கும் என எதிர்பார்ப்பதால் இரவு உணவு உட்கொண்ட பின்னர் எதுவும் உண்ணவோ குடிக்கவோ வேண்டாம் எனச் சொல்லப்பட்டது.

 

ஆனால் இப்பொழுது அவ்வளவு நீண்டநேரம் வெறும் வயிற்றில் இருக்க வேண்டியதில்லை என்ற கருத்தே நிலவுகிறது. பொதுவாக 6 மணிநேரம் வெறும் வயிற்றில் இருந்தால் போதும் என்பதே தற்போதைய நடைமுறையாகும்.

 

குழந்தைகளின் இரைப்பை விரைவாகச் செயற்படுவதால் அவர்களுக்கு 4 மணித்தியாலயங்கள் வெறும் வயிற்றில் இருப்பது போதும் என்ற நடைமுறை உள்ளது.

 

நீண்ட நேரம் ஆகாரம் இன்றி வெறும் வயிற்றில் இருந்தால் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு. உதாரணமாக மயக்க மருந்தின் வேகம் தணிந்து நினைவு திரும்பும்போது தலையிடி, தலைச்;சுற்று, ஓங்காளம் போன்ற உடல் சற்று அசௌகர்யங்கள் ஏற்படலாம்.

 

அத்தோடு நீண்ட நேரம் நீராகரமும் அருந்தாமல் இருப்பதால் உடலில் நீரிழப்பு நிலை (Dehydration) ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு. இதனால் நாளங்களைக் கண்டுபிடித்து அதனூடாக ஊசி ஏற்றுதல்,  பரிசோதனைகளுக்காக இரத்தத்தை எடுத்தல் போன்ற செயற்பாடுகள் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் சிரமமாகலாம்.

 

இவற்றைக் கருத்தில் கொண்டு அமெரிக்க மயக்க மருந்தூட்டும் மருத்துவ நிபுணர்கள் பல முன்னேற்றமான சிபார்சுகளைச் செய்துள்ளார்கள்.

 

அதன்படி மயக்க மருந்து கொடுப்பதற்கு இரண்டு மணித்தியாலயங்கள் முதல் வரை நீர், பால் சேர்க்காத வெறும் தேநீர்,பழநார்கள் அற்ற வெறும் பழச்சாறு, மென்பானம் போன்றவற்றை அருந்தலாம் எனச் சிபார்சு செய்கிறார்கள்.

 

வரட்டிய பாண், பால் தேநீர் போன்ற ஆகாரங்களை சத்திரசிகிச்சைக்கு ஆறு மணிநேரத்திற்கு முன்வரை உட்கொள்ளலாம்.

 

ஆனால் சற்று கனதியான உணவுகளை சத்திரசிகிச்சைக்கு எட்டு மணிநேரத்திற்கு முன்னரே நிறுத்திவிட வேண்டும். கனதியான உணவு என்னும்போது இறைச்சி, பொரித்த வதக்கிய உணவுகள்ரூபவ் எண்ணெய் பட்டர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

 

மேற்கூறிய அமெரிக்க மயக்க மருந்தூட்டும் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டல்கள் எமக்கும் பொருந்தும் என்ற போதும் ஒவ்வொருவரும் அவரவரது மருத்துவர்கள் சொல்லும் கட்டுப்பாடுகளையே கடைப்பிடிப்பது அவசியம். ஒவ்வொரு தனிநோயாளரது தேவைகளை கருத்தில் கொண்டு; அந்து மருத்துவ சூழலுக்கு எற்றவாறே கட்டுப்பாடுகளை

விதிக்கிறார்கள்.

 

இருந்தபோதும் அவற்றில் ஏதேனும் இடைஞ்சல்கள் அசௌகர்யங்கள் இருக்குமாயின் மருத்துவருடன் கலந்தாலோசித்து மாற்றங்கள் செய்வதும் சாத்தியமே.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [ஆரணி]போலாகுமா?

 
ஆரணி (AARANI) இந்தியா மாநிலமான தமிழ்நாட்டை சேர்ந்த திருவண்ணாமலை மாவட்டத்தில்,  இரண்டாவது பெரிய நகராட்சி ஆகும். இவ்வூர் பட்டுப்புடவைகளுக்கும், பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர்பெற்றது. இந்த நகரம் கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

 

 சோழர், பல்லவர்கள் காலத்தில் ஆரண்யம் என்று அழைக்கப்பட்டு வந்த ஆரணி ஜாகீர்தார்களின் தலைமையிடமாக விளங்கியது. இங்கு காஞ்சிபுரத்திற்க்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் தஞ்சாவூருக்கு அடுத்தப்படியாக பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றதாகும். ஆரணி பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றிருப்பதனால் ஆரணி நகரை இந்தியாவின் பட்டு நகரம் (ARANI SILK CITY) என்றும், தமிழ்நாட்டின் அரிசி நகரம் (ARANI RICE CITY) என்றும் இரு பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. ஆரணி பட்டு சேலையானது, புவிசார் குறியீடு பெற்று தேசிய விருதும் பெற்றுள்ளது. அதேபோல் ஆரணி அரிசிக்கும் தேசிய விருது பெற்றுள்ளது. 

 

ஆரணி நகரம் தென்னிந்தியாவின் மிக பழமையான நகரங்களில் ஒன்றாகும். ஆரணி நகரம் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் அமைந்துள்ளது'

கிபி.4 ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் ஆட்சியின்போது சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய வணிகத் தலமாக ஆரணி விளங்கியது.

சுமார் 300வருடங்கள் சோழர்களின் பரம்பரையான, சோழர்கள், விக்கிரம சோழன், முதலாம் குலோத்துங்கன் சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆகிய மன்னர்கள் ஆரணியை ஆட்சி செய்தனர்.

இராஷ்ரகூடர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு மன்னர்களும் ஆரணியை ஆட்சி செய்தனர்.

கடம்பூர் சம்புவராயர்கள் படைவீட்டை தலைமையிடமாக கொண்டு திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, போளூர், ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தனர்.

கி.பி.1640 முதல் 1901 ஆம் ஆண்டு வரை ஆரணி ஜாகீர்தார், சிவாஜி ஆகியோர்கள் ஆரணியை நகரமைத்து சத்திய விஜய நகரத்தை தலைமையிடமாக கொண்டு ஆண்டதாக வரலாறு உள்ளது.

1902 ஆம் ஆண்டு முதல் 1948 அதாவது இந்தியா விடுதலை அடையும் வரை பிரிட்டிஷின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஆரணி ஜாகீர்தார்களான ராஜா திருமலை IV ராவ் சாஹிப் - (1902-1931) மற்றும் ராஜா சீனிவாச IV ராவ் சாஹிப் - (1931-1948) [3] ஆகியோர்கள் ஆரணியை ஆட்சி செய்து வந்தனர்.

 

பெயரின் பிறப்பு 

பழங்காலத்தில் ஆரணியை ஆரண்யம் என அழைக்கபட்டது ஏனெனில் இந்த பெயர் சமஸ்கிருதம் மொழியிலிருந்து வந்திருக்கலாம் எனவும். ஆர் என்பது அத்தி மரம். முற்காலத்தில் இந்த இடத்தில் அதிகப்படியான அத்திமரம் இருந்துள்ளது. இந்த இடத்தில் கமண்டல நாகநதி ஆறு உள்ளது. நதியும் மரமும் ஆபரணமாக உள்ளதால் அதாவது (ஆறு+அணி) ஆரணி என இறுதியாக பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது.

 

ஆரணி கோட்டை / அரண்மனை 

ஆரணி மண்டலேஷ்வரர்கள் தங்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை கண்காணிக்கவும், பாதுகாக்கவும், நிர்வாகம் செய்யவும் வசதியாக கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி அளித்தனர். இப்படி கட்டப்பட்டதுதான் இன்று கான்கிரீட் கட்டிடங்களின் அடித்தளமாக மாறிப்போயுள்ள ஆரணி கோட்டை.

மண்டலேஸ்வரர்களுக்கான அரண்மனைகள், அதிகாரிகள், படைவீரர் குடியிருப்புகள், ஆயுத கிடங்கு, குதிரைகளுக்கான லாயம் என அனைத்து அம்சங்களுடன், சுற்றிலும் அகழியுடன் இந்த கோட்டை விளங்கியது. அதோடு சூரியகுளம், சந்திர குளம், சிம்மக்குளம் போன்ற குளங்களும் கோட்டையை ஒட்டி அமைந்தன. கிபி.1760 ல் நடந்த கர்நாடகப் போரில்  ஆரணி கோட்டையின் பெரும்பகுதி நாசமானது. இதில் இரண்டு குளங்கள் மட்டுமே இப்போதும் இருந்து கொண்டிருக்கின்றன. ஆரணி கோட்டை இப்போது ஜெயமஹால் அரண்மனை / ஜெயமஹால் அரண்மனை ஹோட்டல் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு வரலாற்று சிறப்புமிக்க புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம்கைலாசநாதர் ஆலயம்எந்திர வடிவில் சனீஸ்வர பகவான் ஆலயம்அருள்மிகு பச்சையம்மன் ஆலயம்பெரியநாயகி அம்மன் ஆலயம்ஸ்ரீவேம்புலியம்மன் ஆலயம் அமிர்தாம்பிகை உடனுறை சந்திரசேகரேஸ்வரர் ஆலயம் ஆகியவை கோவில்கள் அமையப்பெற்று கோவில்களின் நகரம் எனும் போற்றப்படும் அளவிற்கு கோவில்கள் உள்ளதாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளமை சிறப்புமிக்கவை ஆகும். 

தொகுப்பு:செ.மனுவேந்தன்