கோடை காலம் . இரவுப் பொழுதும் மெல்ல மெல்ல மறைந்து கதிரவனும் உதயமாகிக் காட்சி கொடுத்துக் கொண்டு இருக்க, போர்வைக்குள் உறங்கிக் கொண்டு இருந்த ரகுவும்
விழித்துக் கொண்டான்.விழித்துக் கொண்டாலும் அவன் மனம் சஞ்சலப்பட்டு மனம் கனக்க முணுமுணுத்தபடி,
"அம்மா ஒரு முறை வந்துவிட்டு போங்கோ"
பதில் எதுவும் வரதாதல் பல முறை கூப்பிட்டான். சந்தேகம் அடைந்த
ரகு தாய் தூங்கும் அறையில் சென்று பார்த்தான். அங்கு யாரும்
இருக்கவில்லை.
அப்பொழுது அவனுடைய பிள்ளை
"என்ன அப்பா தேடிக் கொண்டு இருக்கிறீங்கள் , அப்பம்மா வேலைக்கு போய்விட்டா ..."
என்று கூற அதிர்ச்சி அடைந்த ரகு
"ஒன்றும் இல்லை செல்லம் சும்மா தான்..."
என்று சமாளித்து கொண்டு தன் அறையை நோக்கி சென்றான். அங்கு சென்ற அவனுக்கு நேற்று நடந்து முடிந்த சம்பவங்கள் மீண்டும் ஞாபகத்திற்கு வர நிம்மதி தொலைந்து அழுகையும் வரத் தொடங்க, மனதையும் சாந்தப்படுத்த முயன்றும் முடியாமல், நேற்று நடந்த சம்பவங்களை அசை போடத் தொடங்கினான்...
.........................................................................
‘’அம்மா எனக்கும் நேரம் இல்லை, வேலைக்கு போக வேணும் , மனைவியும் இன்றைக்கு பிந்தி தான் வருவாள் ,அதனாலை பின்னேரம் ஒருக்கா மகன் வகுப்பு முடிந்தவுடன் அவனை போய் கூட்டிக்கொண்டு வாங்கோ’’
என்று சொல்லவும் ,
அம்மாவோ,
‘’நான் இன்றைக்குகோயிலுக்குப் போக வேணும், என்னை கோயிலுக்குக் கொண்டு போய் விடு . நீ உன் மனைவிக்கு சொல்லி கூட்டி கொண்டு வரச் சொல்லு’’ என்று சொல்ல நானும் என்ர பங்குக்கு
‘’என்ன அம்மா நீங்கள் வர வர என் பிள்ளையையும் கவனிக்கிறது இல்லை, உங்களுக்கு மட்டும் நான் சேவை செய்து கொண்டு இருக்க வேணுமா ?’’என்று கேட்க
‘’என்னை நீ கதைக்கிறாய் ? மனைவி சொன்னவளோ இப்படி எல்லாம் கேள்..என்று ?
‘’ஏன் அம்மா அவளை இழுக்குறீங்கள் , ஊரில் இருக்கும் போது நீங்கள் என்ர பிள்ளையை விழுந்து விழுந்து கவனிச்சீங்கள், ஆனால் இப்ப கவனிக்கிறேல்லை , ... பிள்ளை பாடசாலைக்கு போயிட்டு வந்தால் எப்பவாவது சாப்பாடு கொடுத்து இருப்பியளா ? அல்லது அவனோடு அன்பாய் 2 வார்த்தை பேசியிருப்பியளா? எந்த நேரமும் டிவியும் நாடகமும் ....உனக்கு அலுப்பாக இருந்தால் கோயிலுக்குக் கொண்டு வந்து விட வேணும் .நான் என்ன மனிசனா ,மிருகமா ?என்ர வேலையைப் பார்த்து கொண்டு, உங்களுக்கும் சேவை செய்து கொண்டு இருக்க!எனக்கு துணையாக இருப்பீங்கள் என்று தான் இவ்வளவு கஸ்ரப்பட்டு ஸ்பொன்சர் செய்து உங்களை கூப்பிட்டேன் ...’’
‘’அப்ப உன்ர வீட்டு வேலையளையும் செ ய்து கொண்டு ,உன்ர பிள்ளைகளையும் பாராமரிக்கும் ஒரு வேலைக்காரி தேவை எண்டோ என்னை இஞ்சை இருக்க வா எண்டு கூப்பிட்டாய்’’
‘’இல்லை அம்மா நான் சும்மா ஒரு கதைக்கு சொன்னேன்.’’
‘’இல்லை யடா ,உன்ர மனதில் உந்த எண்ணம் தான் ஓடுது.’’
‘’அப்படி இல்லை அம்மா ,போன மாதம் தானே உங்களை பிரான்சுக்கு டிக்கெட் போட்டு அனுப்பிவிட்டனான் , மகளை பார்த்திட்டு வா என்று....’’
‘’என்னை நீ பெரிய உதவி செய்த விட்டாய்? மற்றப் பிள்ளையள் தன் தாய் தந்தைக்கு உதவி செய்யிற அளவுக்கு நீ என்ன பெரிசா செய்து போட்டாய்?’’
அம்மா என்னைப் பார்த்து கேட்ட வார்த்தைகள் மனதுக்குள் ஒரு ஓரமாய் வலித்தன . இன்றைக்கு ஒரு முடிவு எடுக்க வேணும் என்று அம்மா சொல்லிப்போட்டுப் போன ஞாபகம்.
வெளிநாட்டுக்கு போக விருப்பம் இன்றி இருந்த என்னை யுத்தத்துக்குப் பயந்து வலுக்கட்டாயமாக (வெளிநாடு )இங்கு அனுப்பி மொழி தெரியாத தேசத்தில் வந்து குளிருடன் போராடி மொழி கற்றுக்கொண்டு நித்திரை கொள்ள நேரம் இன்றி ,உழைத்து சகோதரங்களுக்கு உதவி செய்து அவர்களை கரை சேர்த்து ,ஓடாய் தேய்ந்ததுக்கு தண்டனையோ என்ற நினைவலைகளோடு வேலைக்கு வெளியேறினேன் .