ஒளிர்வு-(41)- பங்குனி,2014 எம்மைப்பற்றி....,

அனைவருக்கும் வணக்கம்,
தீபம் சஞ்சிகையின் வாசகர்களை நோக்கிய பணலாப நோக்கமற்ற கலைப் பணி தொடரும் வேளையில், யாம் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறுக எனும் எண்ணத்துடன் யாம் செயற்பட ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கும் அனைவரினையும் நன்றியுடன் நோக்குகிறோம்.
பொறாமை என்பதனை நாம் என்றும் எதிரியாகவே எண்ணுகிறோம்.அதன் பாதகமான விளைவுகளை அவ்வப்போது எமது சஞ்சிகையில் வெளியிட்டும் வந்திருக்கிறோம்.ஆளும் வளரணும், அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்த்தி எனும் கவியரசின் சிந்தனை கொண்டு அனைவரும் இணைந்து வளர அனைத்து ஊடகங்களுடனும் கைகோர்த்து நிற்கிறோம்.முதலில்,
 சிந்தனைஒளி
நன்மையையும் தீமையும் மனிதனுக்கு இறைவனால் அளிக்கப்படுவதில்லை. மனிதனால் மனிதனுக்கு கிடைக்கப்பெறுகிறது.
ஒருவரின் பாவமோ அல்லது புண்ணியமோ இன்னொருவர் சுமப்பதற்கு அவை அரிசியோ, மாவோ அல்ல.அவரவர்தான் சுமக்க வேண்டும்.

உயிரே உயிரே (ஆங்கிலச்சிறுகதை)- அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்

 1902ம் ஆண்டில் W.W.Jacobs என்பவரால் எழுதப்பட்ட சிறுகதை Monkey;s Paw( குரங்கு நகம்) என்பதாகும். இது பின்னர் ஓரங்க நாடகமாகவும், பல தடவை திரைப்படங்களாகவும் உருவாக்கப்பட்டது.

ஒரு சிறிய அன்பான குடும்பம். தந்தை, தாய், ஒரு அன்பான மகன். மூவர் மாத்திரமே. தொலைதூரமெல்லம் போய்வரும் ஒரு நண்பர், இந்தியாவில் கிடைத்ததென்று ஒரு குரங்கு நகத்தை அவர்களுக்கு கொடுக்கிறார். மூன்று விருப்பங்களைக் கேட்டால் அது தரும் என்று சொல்கிறார். மனைவி பணத்தேவை வர பணம் கிடைக்கவேண்டுமென்று கேட்கிறார். பணம் அப்படியே கிடைக்கிறது. ஆனால் பெரிய இழப்போடுதான் அது வருகிறது. அவர்களின் மகன் வேலை செய்யும் தொழிற்சாலையில் விபத்தில் இறந்துவிட நட்ட ஈடாக கிடைக்கிறது. அடுத்த விருப்பமாக, மகன் மீண்டும் திரும்பி வரவேண்டுமென்று தாய் கேட்கிறார்.. உடனே கதவு தட்டிக் கேட்கிறது. இறந்து 10 நாட்களாகியபின்னர், அடக்கம் செய்தபின்னர், விபத்தினால் சிதைந்து போன மகனின் கோலம் எப்படியிருக்கும் என்று தெரிந்த தகப்பன், நகத்தை அவசரமாக எடுத்து "நீ போ" என்கிறான். சத்தம் நின்றுவிடுகிரது.

இந்த ஓரங்க ஆங்கில நாடகநூல், நான் கொழும்பில் இருக்கும்போது, எனக்கு
கிடைத்தது. வாசித்தபோது இதை தமிழில் மேடையேற்றலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது. நண்பருக்கு இரவல் கொடுத்து அது திரும்பி வராமல் போக அதை மறந்தும் விட்டேன்.

கனடா வந்ததின் பின்னர் இந்த கதை எனக்கு சொல்லப்பட்டது. அதாவது இதை திரைப்படமாக்கப் போவதாகவும், இதன் திரைக்கதையை எழுதுவதோடு, கதையின் ஒரு முக்கியமான பாத்திரமான தந்தையாக நடிக்கவேண்டுமென்றும் கேட்டார்கள்.

எனக்கு நன்றாகத் தெரிந்த கதை. நான்கு பாத்திரங்களுடன் மேலும் பாத்திரங்களைச் சேர்த்து, தமிழ்மயப்படுத்தி திரைக்கதை, வசனத்தை எழுதினேன்.

ஜனகன் பிக்ஷர்ஸ் சிறீமுருகன் என்பவர் தயாரிப்பாளர். ரவி அச்சுதன் இயக்கம்,
படப்பிடிப்பு என்பவற்றை பார்த்துக்கொள்ள, படத்தில் எனது மனைவியாக ஆனந்தி சிறீதாஸ் (சசிதரன்) மகனாக ரமேஷ் புரட்சிதாசன், எங்கள் குடும்ப நண்பனாக சிறீமுருகன், குடும்ப மருத்துவராக கீதவாணி ராஜ்குமார் என்று முக்கியமான பாத்திரங்களில் நடிக்க படப்பிடிப்பு ஆரம்பமாகியது.

மிசிசாகாவில் ஒரு நண்பர் வீட்டில்தான் பெரும்பான்மையான காட்சிகள் படமாகின. அதே வீட்டுக்காரரின் தொழில் நிறுவனத்திலும், வெலெஸ்லி மருத்துவமனையிலும் முக்கிய காட்சிகள் சில எடுக்கப்பட்டன.

படப்பிடிப்பு முடிவடைந்தபின்னர், படத்தொகுப்பு, இசை சேர்த்தல், குரல் கொடுத்தல் போன்ற வேலகள் ஆர்.கே.வி.எம்.குமாரின் கவனிப்பில் நடந்து முடிய, படம் வெளியிட தயாராகி விட்டது.

படம் வெளியாகிய முதள் நாள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அரங்கு நிறைந்த காட்சி என்பது கனடா தமிழ்ப் படத்திற்கு அதுவே முதல்தடவை. எதுவாக இருந்தாலும், பார்வையாளர்கள் அதை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்று தெரியும்வரை, நானும், ஆனந்தியும் Projection Room உள்லே இருந்து கொண்டோம். படம் முடிவடைந்து பலத்த கரகோஷம் எழுப்பபட தான் வெளியே வந்தோம்.

கதையின் தன்மையையிட்டு சர்ச்சைகள் இருந்தாலும் எங்கள் நடிப்பு பலருக்கும் பிடித்திருந்தது. முக்கியமாக ஆனந்தி சிறப்பாக நடித்திருந்தார். நல்ல விமர்சனங்கள் வந்தன. மீண்டும் பல தடவைகள் திரையிடப்பட்டது.

நீண்ட காலத்திற்கு பின்னர் ஒரு வீட்டிற்கு போனபொழுது, அங்கிருந்த ஒரு முதியபெண் மகனை இழ்ந்து தகப்பனும், தாயும் அழுத காட்சியின் பாதிப்பு தனக்கு இப்போழுதும் இருக்கிறது, என்று நினவு மீட்டினார். மனதிற்குள் சந்தோசப்பட்டுக் கொண்டேன்.

கனடாவில் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அடிகோலியது உயிரே உயிரேதான். அதற்காக தயாரிப்பாளரை பாராட்டலாம்.
அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நாட் குறிப்பிலிருந்து..தொடரும்

அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நாட் குறிப்பிலிருந்து..

பாடுபட்டுத் தேடிப் பணத்தை. . . . . . . .
பாடுபட்டுத் தேடிப் பணத்தைச் சேகரித்து, சேர்த்து வைத்துக் காத்திருக்கும் மானிடரே கேளுங்கள்!
வயதோ போகின்றது! உயிரோ இன்றும் போகலாம், நாளையும் போகலாம், என்றும் போகலாம்! ஆனால், நீங்கள் நாயோட்டம் ஓடி, இரவும், பகலும் சளைக்காது உழைத்துக்கொண்டு இருப்பதுதான் ஏன்? நீங்கள் சேமித்த பணத்தை, நீங்கள் அனுபவிக்க நேரமே இல்லாமல் வேறு யாருக்காக இந்த ஆக்கிரோஷமான நாயோட்டம்? ஓடி,     உழைத்து, ஆனால் செலவு செய்யாது கடைசியில் நீங்கள் ஓயும்போது, நீங்கள் அச்சமயம் செலவு செய்து அனுபவிக்க விழைந்தால், உங்கள் உடலும் இடம் கொடுக்காது, ஆர்வமும் அற்றுப் போய்விடும். நீங்கள் ஒரு ஜடப்பொருளாகி, விரக்தியுற்ற மனநிலையில், நொட்டி நொடிந்துபோய்ப் படுத்திருப்பீர்கள். ஏன்தான் ஒரு 20 வருடங்களுககு முன்பே அனுபவித்திருகலாமே என்று அந்த முதிய வயதிலே மிகவும் மனவேதனை அடைவீர்கள்.
ஆதலால், வயது போய்க்கொண்டே இருக்கும் உங்கள் யோசனைக்குச் சில சிந்தனைகள்:  
* உழையுங்கள், ஆனால் அதேவேளை, உங்கள் சொந்த விருப்புகள், ஓய்வுகள், விடுமுறைகள், பயணங்கள் என்பனவற்றுக்கும் அப்பப்பவே பணத்தைச் செலவு செய்யுங்கள்.
*உங்கள் பிற்காலத்திற்கு என்று சேர்த்துச் சேர்த்து வைத்து,உங்கள் தற்காலத்தினை இழந்து வீணாக்காதீர்கள். அளவோடு சேருங்கள்; மகிழ்வோடு வாழுங்கள்.
* பிள்ளைகளுக்கு என்று சேர்க்காதீர்கள்.அவர்கள் நொண்டியோ, குருடோ, அறிவிலிகளோ அல்ல. நம்மிலும் பார்க்கக் கெட்டிக்காரர்கள், வல்லமை படைத்தவர்கள். அவர்களுக்கு நியாயமான கல்வி வசதியைச் செய்யலாம். ஆனால் இதுதான் படி என்று நிர்பந்திக்க நீங்கள் யார்? அரசு கல்வி கடன் கொடுத்தால் அவர்கள் அதை எடுத்து பின்னர் கட்டட்டும். நீங்கள் அவர்களுக்கு என்று விட்டுச்  செல்லும் ஒவ்வொரு வெள்ளியும், அவர்களைச் சோம்பேறிகள், ஒட்டுண்ணிகள், ஊதாரிகள், தண்டச்சோறுகள், ஆடம்பரிகள், குடிகாரர், போதைபொருள் அடிமைகள் ஆக்கிவிடும்.
* சட்டப்படி பெற்றோர் விட்டுச் செல்வது பிள்ளைகளுக்குச் செல்லும்; ஆனால் பிள்ளைகள் சொத்துக்கு நீங்கள் உரிமைகோர இயலாது. ஆகவே, உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொத்தடிமைச் சேவகம் செய்ய வேண்டாம்.
* நீங்கள் மறைந்ததும் உங்கள் கதை முடிந்து விடும். நீங்கள் புதைத்து வைத்திருக்கும் செல்வம் உங்கள் மரணத்தின் பின் உங்களுக்கு ஒரு பிரஜோசனமும் தரமாட்டா.
* பேராசை கொண்டு பணம் சேர்க்கும் அவாவில் சட்டவிரோதமான செயல்கள் மூலம் சேர்க்கும் பணம் நிலைக்கா. அவப்பெயர்தான் நிலைக்கும். நல்வழியில் சேமியுங்கள்; உங்கள் தேவைக்கு மட்டும்!
* நாலு வீடுகளை வைத்துக்கொண்டு வங்கிக்கடன் கொல்லுதே என்று அழுது வடிந்து நாயாய் ஓடி உழைக்க வேண்டாம்.உங்களுக்குத் தேவை ஒரே ஒரு வீடுதான். மிகுதி எல்லாம் கொழுப்பின் விளைவுகளே.
*அளவுக்கும் அதிகமான உடைகள், நகைகள், மோட்டார் வண்டிகள், பகட்டுகள் எல்லாம் இருந்தால் போல உங்களை உயர்ந்தவர் என்று ஒருவரும் நினைக்க மாட்டார்கள். செருக்கும், திமிரும் பிடித்த பேராசைக்காரர் என்றுதான் ஒதுக்குவார்.
* பல கோடி இருப்பதால் ஒரு 100 தொன் சாப்பாட்டினை உங்கள் வீட்டுக்கு வரைவழைத்தாலும் நீங்கள் சாப்பிடப்போவது ஒரு அரைகிலோ மட்டும்தான். மீதம் எல்லாம் தேவையற்றுக் குப்பைக்குள் போகும். பல அடுக்குகளைக்  கொண்ட வெவ்வேறு அரண்மனைகள் இருந்தாலும் நீங்கள் படுக்கப் போவது ஒரே ஒரு கட்டிலில் தான். பணம் இருக்கின்றது என்று 4 விமானங்களையும், 8 ஹெலிஹோப்டர்களையும் வாங்கியா வீட்டில் தரித்து வைப்பீர்கள்?
* ஆரோக்கியத்தினை இழந்து சேர்க்கும் பணம், இழந்த ஆரோக்கியதினைத் திரும்பத் தரமாட்டா. போட்டிபோட்டுச் சேர்க்கும் பணத்தினால் மன உளைச்சல் அதிகரித்து மன ஆறுதல் அற்றுத் திரிவீர்கள். கவலை கொண்டு அலைவீர்கள். பைத்தியம் பிடித்ததுபோல் புலம்புவீர்கள்.
ஆதலால்,
* நேர்மையான வழியில் உழையுங்கள். அதுவே போதும். எல்லாக் கள்ள வழிகளும் துன்பத்தையே தரும்.
* உங்கள் தேவைக்கேற்பப் போதிய அளவுமட்டும் உழையுங்கள், சேமியுங்கள். உங்களுக்குச் செலவும் செய்யுங்கள்.
* மற்றவரைப் பார்த்துப் போட்டி போட்டு அலையாதீர்கள். அவர்கள் மடையர்கள் என்றால் நீங்களுமா?
* உங்கள் பின் சந்ததியாருக்கென்று விட்டுச் செல்லாதீர்கள். அது உங்கள் கடமையே இல்லை. நீங்கள் படி அளக்கும் கடவுளும்  இல்லை.
* உங்கள் தேவைகள், ஓய்வுகள், உல்லாசப் பயணங்கள் என்பனவற்றையும் ஒழுங்காகக் கவனித்துக் கொள்ளுங்கள்; உங்களுக்கு இயலுமாக இருக்கும்பொழுதே.
* மனதுக்குச் சந்தோசம் தரும் மனிதநேயப் பணிகளுக்கு உடம்பாலும், பணத்தாலும் உதவுங்கள். இப்பிறப்பில் பலன் கிடைக்க, மறு பிறப்புக்காக அல்ல.
* தேவைப்படும்போது, தேவையானவர்களுக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போது தானம் செய்யுங்கள். இறந்தபின் அல்ல. இறந்தபின் வழங்கினால் இலாபப்படுபவர்கள்  அவர்கள் அல்ல. அவர்கள் சாவை உண்டாக்கியவர்களும், உங்களுக்கு வேண்டப்படாதவர்களாகவும் இருக்கலாம்.
* உங்கள் சுகம். சந்தோசம் என்பனவற்றை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ளுங்கள். அளவுக்கு மிஞ்சிய பணம் அல்லலைத்தான் தரும்.
* உங்கள் ஆத்மா சந்தோசமே உருவானது. எந்நாளும், நல்ல மன நிலையில் சந்தோசமான விடயங்களை நினைத்தும், செயல்படுத்தியும் ஆனந்தம் அடையுங்கள்.
* முடிந்த காலமோ, வரும் காலமோ உங்கள் கையில் இல்லை. அக்காலங்களை எண்ணிக் கவலைப்படாமல் உங்கள் கையில் இருக்கும் நிகழ் காலத்தை ஆனந்தமாக்குங்கள்.
* நல்ல மனமே நோய் தீர்க்கும் மருந்து. சந்தோஷ மனம் நோயை இன்னும் விரைவாக மாற்றும். நல்ல + சந்தோசமான மனம் இருந்தால் நோய் கிட்டவும் நெருங்காது.
* நல்ல மனநிலை, இளம் வெயிலில் உடற்பயிற்சி, சத்தான உணவு, தேவையான அளவு உயிர்ச்சத்து உங்களை நீண்ட காலம் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வைக்கும்.
* நல்வாழ்வுக்குத் தேவையான தியானம், யோகாசனம் ஒழுங்காகச் செய்யுங்கள்.
* நல்லோர்பால் சேருங்கள், நல்லதையே நினையுங்கள், நல்லதையே செய்யுங்கள். நீங்கள் சந்தோஷ உச்சத்தை அடைவீர்கள்.
* விஷமிகள் பால் நெருங்காது ஒதுங்கி இருங்கள். நிம்மதி அடைவீர்கள்.
ஒன்றைமட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 60 வயது என்று வந்துவிட்டாலே,
60 க்கு மேல் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு வருடமும் எமக்குக் கிடைக்கும் போனஸ்.
அப்படியே,
70 க்கு மேல் ஒவ்வொரு மாசமும்,
80 க்கு மேல் ஒவ்வொரு கிழமையும்,
90 க்கு மேல் ஒவ்வொரு நாளும்,
100 க்கு மேல் ஒவ்வொரு மணியும்,
110 க்கு மேல் ஒவ்வொரு நிமிடமும்
120 க்கு மேல் ஒவ்வொரு வினாடியும் எமக்குக் கிடைக்கும் போனஸ் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
நாம் உயிரோடு இருக்கும்போதே, இளமையாய்த் திரியும் போதே, நிம்மதியான சந்தோஷ வாழ்வுக்கு, இந்த உண்மைகளை உணர்ந்து உருப்பட்டு எமக்கும் எம்மை சார்ந்தோருக்கும் பிரயோசனமாக  வாழ்வோமாக!

-செல்வத்துரை சந்திரகாசன்