ஒளிர்வு-(24) ஐப்பசி த்திங்கள்-2012


தளத்தில்:சிந்தனை ஒளி,///கனடாவிலிருந்து.......ஒரு கடிதம் /// 2300 களில்மனிதன்/// அது,இது,எது /// சிறையில்....தெய்வங்கள்///ஆன்மீகம்/// "பால் கடல் கடைதல்"///ஆராய்ச்சியாளரின்செய்திகள்,/// தொழில்நுட்பம்,!// உணவின்புதினம்,///கணினி உலகம்/// கர்ப்பிணிகளே..!///பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை/// உங்களுக்குதெரியுமா?/// ஒன்றிலிருந்து.... ///சிரிக்க...சிரிக்க....சிரிப்பு வருது!,///சினிமா.
தொடர்புகளுக்கு: manuventhan@hotmail.com
சிந்தனை ஒளி
§  குற்றத்தை ஒப்புக் கொண்டாலே,பாதி மன்னிப்புக் கிடைத்து விடும்!
§  வாழ்க்கை என்பது நீ சாகும் வரையல்ல,மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை.
§  கடமை, கண்ணியம், கட்டுப் பாட்டுடன்,திண்ணியராக எண்ணியதை முடிப்போம்!
§  இதயம் ரோஜா மலராக இருந்தால்,பேச்சில் அதன் நறுமணம் தெரியும்!
§  காதலியை மனைவியாக்கத் துணிவு தேவை,மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!


ஆராய்ச்சியாளரின்செய்திகள்


அய் ஜாலி! தங்கத்தை உருவாக்கக் கூடிய பாக்டீரியா கண்டுபிடிப்பு.தங்கத்தை உருவாக்கக் கூடிய பாக்டீரியா:- 24 காரட் தங்கத்தை உருவாக்கக் கூடிய பாக்டீரியாவை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் துறை விஞ்ஞானிகள் நுண்ணுயிரிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

அப்போது, திரவத் தங்கத்தை உருவாக்கக் கூடியகியூப்ரியாவிடஸ் மெடல்லிடியூரன்ஸ் என்ற பாக்டீரியாவைக் கண்டுபிடித்தனர். இந்த பாக்டீரியாவில் தங்க குளோரைடு என்ற சேர்மம் நிறைந்துள்ளது. இதையடுத்து, தங்க குளோரைடை இந்த பாக்டீரியாவுக்கு உணவாக உட்செலுத்தினர்.

ஒரு வாரம் கழித்துப் பார்த்தபோது தங்க குளோரைடு, திடத் தங்கமாக மாறியிருந்தது. அது 24 கேரட் தங்கத்தின் தரத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட தங்கக்கட்டிகளைக் கொண்டு ஒரு கலைப்பொருளையும் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். அதை ஒஸ்திரியா நாட்டில் நடைபெற்று வரும் கலைப் போட்டியில் கண்காட்சிக்கு வைத்துள்ளனர்.
தானாகவே இதயத்தைக் குணப்படுத்தும் மருந்து:-மாரடைப்பு நோயால் இதயத்தசை இறந்துவிடுகிறது; காலப்போக்கில் இறந்த இவ்விடத்தில்தசைப்பகுதிக்குப் பதிலாக நார் இழையங்கள் வளருகின்றன; இதனால் இதயம் தனது இயல்பான சுருங்கிவிரியும் தொழிலைப் புரிவதில் சிரமம் ஏற்படுகின்றது. இதய இலயமின்மையால் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, திடீர் இதய நிறுத்தம், இறுதியில் இதயச் செயலிழப்பு போன்ற உயிர்த் தீவிளைவுகள் ஏற்படுகின்றன.

மாரடைப்பால் இறந்துபோன இதயத்தசையை மீண்டும் குறிப்பிட்ட இடத்தில் உருவாக்கினால் இதயச் செயலிழப்பு ஏற்படாது, மாரடைப்பின் பின்னரும் குறிப்பிட்ட நபர் ஆரோக்கியமாக வாழலாம், எனினும் இயல்பான நிலையில் இறந்த இதயத்தசை இறந்ததாகவே இருக்க அவ்விடத்தில் நார் இழையங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்குத் தீர்வே இல்லையென்று நினைத்திருந்த காலம் இப்பொழுது மலையேறிவிட்டது. அறிவியலாளர்கள் புதிதாக மருந்தொன்றைக் கண்டுபிடித்து உள்ளனர், இது இறந்த இதயத்தசையை மீண்டும் உருவாக்குகின்றது.

இதயம் ஒரு தசையால் உருவாக்கப்பட்ட உறுப்பு என்பது பெரும்பாலும் அறியப்பட்ட ஒரு விடயம். இதயத்தின் இத்தசைப்பகுதியைச் சுற்றி மென்சவ்வு உள்ளது; இது இதய மேற்சவ்வு (epicardium) எனப்படும். இதயத்தசையை மீண்டும் புதுப்பிக்கத் தேவையான உயிரணுக்கள் இந்த இதய மேற்சவ்வில் உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு புறத்தூண்டல் ஏற்படுத்தப்படுவதன் மூலம் இவை அங்கிருந்து இதயத்தசைப் பகுதிக்கு அசைந்து பின்னர் இதயத்தசை செப்பனிடப்படுகின்றது. ஏற்கனவே பரிச்சயமான தைமொசின் பீட்டா4 (thymosin β4) எனும் புரதம் இத்தூண்டலை ஏற்படுத்தவல்லது என அறியப்பட்டது; சுண்டெலியில் இப்புரதம் கொடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, விளைவு வெற்றிகரமானதாக அமைந்தது. சுண்டெலி ஒன்றுக்கு இப்புரதம் மருந்துவடிவில் கொடுக்கப்பட்ட பின்னர் செயற்கையான மாரடைப்பு உண்டாக்கப்பட்டது, இதனால் இறந்த தசை இழையங்கள் சிலநாட்களில் மீண்டும் உருவாகின.

இலண்டன் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர் போல் ரைலி இது குறித்து உரையாடுகையில், மாரடைப்பு வருவதற்கு முன்னரேயே இம்மருந்து உபயோகித்தல் வேண்டும் எனத் தெரிவித்தார். இப்புரதம் மருந்துவடிவில் உருவாக்கப்பட்டு இருந்தாலும் மாந்தரின் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னமும் ஆய்வுகள் தேவை; இன்னும் பத்து வருடத்தில் இம்மருந்தின் முழுமையான பயன்பாட்டைப் பெறலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
விண்ணில் உள்ள வாயு, தூசி, ஒளி போன்றவற்றை ஈர்க்கும் கருந்துளை
:-விண்ணில் உள்ள வாயு, தூசி, ஒளி போன்றவற்றை, தன்வசம் ஈர்க்கும் கருந்துளையை இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு கண்டுபிடித்துள்ளது

பிரிட்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, இந்திய விஞ்ஞானி மாண்டா பானர்ஜி தலைமையிலான குழுவினர்யுஎல்ஏஎஸ்ஜெ1234+0907′ என்ற சக்தி வாய்ந்த கருந்துளையை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து விஞ்ஞானி மாண்டா பானர்ஜி கூறுகையில், விண்ணில் இருக்கும் இந்த கருந்துளைகள், அடர்த்தியான தூசியால் மூடப்பட்டிருப்பதால், இதற்கு முன்  இதனை கண்டறிவதில் சிரமம் இருந்தது.

ஆனால், தற்போது அதிநவீன தொலைநோக்கியை பயன்படுத்தி, ஆராய்ச்சி செய்ததில், இவை, அதிகளவில் கதிர் வீச்சை வெளியிடுவது தெரிந்தது.

அருகில் காணப்படும், நட்சத்திர கூட்டங்களில் உள்ள பொருட்களை தன்னுள் இழுப்பதினாலே கருந்துளையின் வெப்பம் அதிகரித்து, அதன் காரணமாகவே  கதிர்வீச்சை வெளியிடுகிறது.

கன்னிராசி நட்சத்திர மண்டலத்திற்கு அருகே உள்ள, இந்த கருந்துளை மிகவும் பெரியதாக கருதப்படுகிறது. பூமியிலிருந்து மிகவும் தொலைவில் இருப்பதால்இதன் ஒளி, பூமியை வந்தடைய 1100 கோடி ஆண்டுகள் ஆகும்.

இது, சூரியனை விட 1000 கோடி மடங்கு அதிக அடர்த்தியானது. நமது பால்வழி மண்டலத்தை விட, 10 ஆயிரம் மடங்கு அடர்த்தி மிக்கது.இதுபோன்ற சக்தி வாய்ந்த, 400 கருந்துளைகள் விண்ணில் இருக்க கூடும்.

அனைத்து நட்சத்திர மண்டலங்களிலும், இவ்வகை பெரிய கருந்துளைகள் இருக்கும். அவை, அருகிலுள்ள நட்சத்திர மண்டலங்களோடு மோதி, அந்த நட்சத்திர துகள்களை, தன்னுள் இழுத்துக் கொள்ளும் என மாண்டா பானர்ஜி கூறியுள்ளார்.
30,000 ஆண்டுகள் பழைமையான பண்டைய யானை:- 30000 ஆண்டுகள் பழையான உரோமங்களைக் கொண்ட பண்டைய யானை இனத்தின் ௭ச்சங்கள் வட ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
30,000 ஆண்டுகள் பழைமையான பண்டைய யானை இன ௭ச்சங்கள்.உறைநிலையில் நன்கு பேணப்பட்டு காணப்பட்ட இந்த ஆண் யானை தனது 15 ஆவது வயதில் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தந்தம் மற்றும் உடலின் வலது பாகம் ௭ன்பவற்றை உள்ளடக்கிய இந்த யானையின் 500 கிலோகிராம் நிறையுடைய ௭ச்சங்கள் ரஷ்யாவின் ரேமைர் பிராந்தியத்தில் 11 வயது சிறுவன் ஒருவனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உரோமத்தைக் கொண்ட யானை இன ௭ச்சங்களிலேயே மிக சிறந்த வகையில் பேணப்பட்டநிலையில் காணப்பட்ட இரண்டாவது ௭ச்சமாகவும் 1991 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறந்த ௭ச்சமாகவும் இது விளங்குகிறது.
புவி வெப்பமடைவதால் மீன்வளம் குறையும்:- கடல் நீர் வெப்பமடைவதால் 2001ஆம் ஆண்டு தொடங்கி 2050ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அறுநூறுக்கும் அதிகமான மீன் இனங்களில் எவ்விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணினிகள் துணைகொண்டு ஆய்வாளர்கள் அனுமானித்துள்ளனர்.
நீரின் வெப்பம் அதிகரிக்கும்போது அதிலுள்ள பிராணவாயுவின் அளவு குறைந்துவிடுகிறது.
இதன்காரணமாக மீன்களின் உடல் எடையும் கணிசமான அளவில் குறைந்துபோய்விடுகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
வெப்ப வாயுக்களின் வெளியேற்றத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஏற்கனவே கருதப்பட்டதை விட மிகவும் அதிகம் என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பதால் குறிப்பிட்ட மீன்கள் தாங்கள் ஏற்கனவே வாழ்ந்த பகுதிகளில் வாழ முடியாத நிலை ஏற்படுகிறது என்றும். பல மீன் இனங்களின் இனவிருத்தி திறனும் பாதிக்கப்படுகிறது என முந்தைய ஆய்வுகள் காட்டியிருந்தன.
நீரில் வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய பல்வேறு விளைவுகளைக் அனுமானிக்கும் கணினி மென்பொருளை தற்போது ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
உலகில் வெப்பவாயு வெளியீட்டு விகிதம் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட தரவுகளை உள்ளீடு செய்து, அவற்றால் மீன்வளத்துக்கு எவ்வகையான பாதிப்பு ஏற்படக்கூடும் என இவர்கள் அனுமானித்துள்ளனர்.
கடல் நீரின் வெப்பம் சற்று அதிகரித்தாலே மீன்களுடைய உடல் எடையில் எதிர்பாராத அளவில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஏனென்றால் பாலூட்டி விலங்குகள் போல சீரான உடல் வெப்பம் கொண்டவையல்ல மீன்கள்.
சுற்றாடலின் வெப்ப நிலைக்கு ஏற்ப மீன்களின் உடல் வெப்பமும் மாறுபடும்.
மீன்களின் உடல் வெப்பம் அதிகரிப்பதனால் அவற்றுக்கு கூடுதலான பிராணவாயு தேவைப்படும். அது கிடைக்காமல் போனால் அவற்றின் உடல் எடை வேகமாக குறைந்துவிடும் என்று இந்த மாற்றத்துக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
கடலில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க வருடத்துக்கு 36 கிலோமீட்டர்கள் என்ற அளவில் மீன்கள் துருவப் பகுதிகளை நோக்கி தமது வாழ்விடங்களை மாற்றிக்கொண்டே போகும் என தற்போதைய ஆய்வுகள் காட்டுகின்றன.
'செவ்வாயில் நீரோடைகள்:-செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கி 7 வாரங்களே கடந்துள்ள நிலையில் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் என்ற ஆய்வு ஊர்தி முற்காலங்களில் செவ்வாயின் தரையில் நீரோடைகள் இருந்துள்ளமைக்கான ஆதாரங்களை பூமிக்கு அனுப்பிவைத்துள்ளது.
செவ்வாயின் தரையில் ஊர்ந்து ஆதாரங்களை சேகரித்துவரும் கியூரியாசிட்டி ரோவர் என்ற ரோபோ ஊர்தி அனுப்பி வைத்துள்ள படங்களில் கிரவெல் (சரளை) கற்களும் மணலும் கலந்து உருவான பாறைப் படிமங்கள் காணப்படுகின்றன.
இந்தப் பாறைப் படிமங்களில் காணப்படும் உருண்டை வடிவான குறுணிக் கற்களின் அளவையும் தன்மையையும் பார்க்கும்போது அவை நீரோட்டத்தால் அள்ளுண்டு வந்துள்ளமையை காட்டுவதாக இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
செவ்வாயில் முற்காலங்களில் காணப்பட்ட நீரோடைகளின் கட்டமைப்புத் தொகுதியொன்றை இந்த ஆய்வு ஊர்தி கண்டுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
'செவ்வாயின் தரையில் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்டுள்ள இந்த நீரோட்டங்கள் நீண்டகாலத்துக்கு நிலைத்து இருந்திருக்கலாம்' என்று நாசா நிலையத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பல்லாயிரம் மில்லியன் ஆண்டுகளாக இந்த நீரோட்டங்கள் செவ்வாயின் தரையில் நிலைத்து இருந்திருக்கலாம் என்று அவர்கள் நம்புகின்றனர்.
நீண்டகாலமாக விண்வெளியிலிருந்து செவ்வாய்க் கிரகத்தை ஆராய்ந்துவந்த விண்கலங்கள் தரைக்கு அனுப்பிய படங்களில், செவ்வாயில் நீரோட்டங்கள் இருந்துள்ளமைக்கான ஆதாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளன.
ஆனால், இப்போது கியூரியாசிட்டி ரோவர் ஆய்வு ஊர்தி அங்கு நேரடியாக தரையிறங்கி நடத்திய ஆய்வுகள் மூலம் கிடைத்துள்ள படங்கள் முன்னைய ஆய்வுகளை உறுதிப்படுத்துகின்ற நேரடி ஆதாரங்களாக பார்க்கப்படுகின்றன.