'நான்மணிக்கடிகை' /03/ வாழ்க்கை உண்மைகளை வெளிப்படுத்தும்....

 

சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.

 
11👉

கன்றாமை வேண்டும், கடிய; பிறர் செய்த

நன்றியை நன்றாக் கொளல் வேண்டும் - என்றும்

விடல்வேண்டும், தன்கண் வெகுளி; அடல்வேண்டும்,

ஆக்கம் சிதைக்கும் வினை.

ஒருவர் செய்த தீமைகளுக்காக அவரைக் கறுவாமை வேண்டும். ஆனால் அவர் செய்த நன்மைகளை மறவாமை வேண்டும். நம்மிடம் தோன்றும் கோபத்தை விட வேண்டும். பிறரது முன்னேற்றத்தைத் தடுக்கும் தவறான செயல்களை ஒழித்தல் வேண்டும்.

 

12👉

பல்லினான் நோய் செய்யும் பாம்பு எல்லாம்; கொல் களிறு

கோட்டான் நோய் செய்யும், குறித்தாரை; ஊடி,

முகத்தான் நோய் செய்வர், மகளிர்; முனிவர்

தவத்தின் தருக்குவர், நோய்.

பாம்பு தன்னுடைய பல்லினால் பிறருக்குத் துன்பம் தரும். கொல்லும் தன்மை கொண்ட காளை தன்னுடைய கொம்புகளால் பிறருக்குத் துன்பத்தைத் தரும். பெண்கள் தங்களின் ஊடலால் ஆண்களைத் துன்பப்படுத்துவர். தவ வலிமை கொண்ட முனிவர்கள் பிறரைச் சபிப்பதால் துன்பத்தைக் கொடுப்பர்.

 

13👉

பறை நன்று, பண் அமையா யாழின் நிறை நின்ற

பெண் நன்று, பீடு இலா மாந்தரின்; பண் அழிந்து

ஆர்தலின் நன்று, பசித்தல்; பசைந்தாரின்

தீர்தலின் தீப் புகுதல் நன்று.

பண் அமையாத யாழிசையை விட பேரோசை கொண்ட பறையே மேலானது. பெருந்தன்மை இல்லாத ஆண்மகனைவிட கற்புடன் திகழும் பெண்கள் உயர்வானவர். பதங்கெட்டு சுவையற்ற உணவை உண்ணுவதைவிட பசியுடன் இருத்தல் நல்லது. தன்னை விரும்பிய கணவனைப் பிரிந்து உயிர்வாழும் கொடுமையை விட தீயில் விழுந்து உயிர் விடுதல் நன்று.

 

14👉

வளப் பாத்தியுள் வளரும், வண்மை; கிளைக் குழாம்

இன் சொற் குழியுள் இனிது எழூஉம்; வன் சொல்,

கரவு எழூஉம், கண் இல் குழியுள்; இரவு எழூஉம்,

இன்மைக் குழியுள் விரைந்து.  

செல்வ வளம் எனும் பாத்தியுள் ஈகைக் குணம் வளரும். இன்சொல் எனும் பாத்தியுள் உறவினர் கூட்டம் வளரும். கருணையற்ற கடுஞ்சொற்களைப் பேசும் பாத்தியுள் வஞ்சனை வளரும். வறுமையாகிய பாத்தியுள் இரத்தல் எனும் பயிர் விளையும்.

 

15

இன்னாமை வேண்டின், இரவு எழுக! இந் நிலத்து

மன்னுதல் வேண்டின், இசை நடுக! தன்னொடு

செல்வது வேண்டின், அறம் செய்க! வெல்வது

வேண்டின், வெகுளி விடல்! 

ஒருவன் தனக்கு இழிவு வரவேண்டுமானால் பிறரிடம் கையேந்த வேண்டும். இந்நிலத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால் புகழ் உண்டாகும்படியான செயலைச் செய்ய வேண்டும். தான் இறந்த பிறகு தன்னுடன் துணை வர வேண்டுமானால் தருமம் செய்ய வேண்டும். பிறரை வெற்றிக் கொள்ள வேண்டுமானால் கோபத்தை விட வேண்டும்.

 

நான்மணிக்கடிகை  தொடரும்....

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

தேட‌ல்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, வேண்டும், நன்று, பாத்தியுள், வளரும், நோய், வேண்டின், இலக்கியங்கள், நான்மணிக்கடிகை, குழியுள், எழூஉம், கொண்ட, எனும், வேண்டுமானால், பதினெண், கீழ்க்கணக்கு, செய்த, இரவு, செய்ய, பிறருக்குத், கோபத்தை, வெகுளி, சங்க, செய்யும், பாம்பு, தரும், தன்னுடைய, பெண்கள்

நான் சரியான busy, எனக்கு நேரமில்லை! -கடவுள்(கதை)


தேவ லோகத்தில், கடவுள் உறைவிடத்து முன் கதவு 'டொக்கு, டொக்கு' என்று பெரிய சத்தத்தில் தட்டப்படுவதைக் கேட்டு கடவுள் உண்மையிலேயே பயந்துவிட்டார்.

 

"யாரங்கே?" என்று அவர் கேட்கும்பொழுதே, பூவுலக மனிதன் ஒருவன், காவலாளிகளையும் தள்ளி விழுத்திவிட்டு உள்ளே நுழைந்தான.

 

"எங்கே அந்தக் கடவுள்? எங்கே அவன்?" என்று கூச்சல் இட்டபடியே வந்து எதிரே நின்ற கடவுளைக் கண்டதும்,

 

" , ஓ! இங்கேதான் இருக்கின்றாயா?" என்று இரைந்தான் மனிதன்.

 

மடிக் கணணியை மூடி வைத்தபடியே, கடவுள்

"யாரப்பா நீ?  இங்கு ஏன் நீ வந்தாய்? உனக்கு என்னதான் வேண்டும்?

 

" ஆ.. ஹா, ஹா!  சரியாய் போச்சு! அப்போ நான் யாரென்று உனக்குத் தெரியவில்லை; ஏன்  வந்தேன் என்றும் உனக்குத் தெரியாது! அப்படித்தானே?"

 

கடவுள் சுதாகரித்துக்கொண்டே,

"சரி, சரி தெரியும்; இப்போது என்னதான் வேண்டும் உனக்கு?

 

"நான் தினம், தினம் வணங்குவது உனக்குத் தெரிவதில்லையா?"

 

"தெரிகின்றது"

 

 "நாள்தோறும் உன்னை வேண்டுவதும் கேட்பதில்லையா?"

 

"கேட்கின்றது".

 

"கேட்டதும் கொடுப்பவன்தானே நீ?"

 

"உண்மைதான்"

 

"அப்படி என்றால், ஏன் எனக்கு இன்னமும் நீ செவி சாய்க்கவில்லை?"

 

"..........." மௌனம்.

 

"வாய்க்குள்ளை என்ன கொழுக்கட்டையா வைச்சிருக்கின்றாய், பதில் சொல்லேன்?"

 

"கொழுக்கட்டையைக்கூடி எப்பவாடா என்னைச் சாப்பிட விட்டனீங்கள்....." கடவுள் முணு முணுத்தார்.

 

"என்ன, கடவுள்தான் என்ற கொழுப்பா? என்ன அங்கே முணு முணுப்பு?"

 

"இல்லை மகனே, அந்தக் காலம் போல இல்லை இப்போ; எனக்கு இப்போது எக்கச் சக்கமாக வேலைப் பளு  கூடி விட்ட்து; அதனால் எல்லாம் பார்த்துக் கணக்குப்போட்டு செய்து முடிக்க நேரம் அதிகம் செலவாகின்றது"

 

"வேலைப் பளு? கடவுளுக்கு? நீதானே எல்லாவற்றையும் உருவாக்கிப்போட்டு, இப்பொழுது பளுவும், புழுவும் என்று சொன்னால் நாலு பேர் சிரிக்கப் போகிறார்கள்!"

 

"நான் உருவாக்கினேனா? யார் உனக்குச் சொன்னது?"

 

"நீதான் என்று நீயே சொன்னதாக நீ எழுதிய புத்தகங்களில் சொல்லி இருக்கின்றாயே!"

 

"என்று யார் சொன்னார்கள்?"

 

"உன்னால் அனுப்பப் பட்டவர்கள்!"

 

"ஒ மனிதா!  இல்லாது இருந்த என்னை உருவாக்கியதே மனிதன்தான். பின்னர் எனது மகன்கள், அவதாரங்கள்  என்று உங்கு பிறந்து  நான் சொன்னேன் என்று பொய்ப்புரை பரப்பியதும் மனிதன் தான். நான் சொன்னேன், எழுதினேன் என்று ஆயிரம் புத்தகங்களை எனது வாக்குகள் என்று அறிவித்ததும் மனிதன்தான்"

 

"அப்போ, நீ கடவுள் இல்லையா?"

 

" நான் கடவுளோ, இல்லையோ என்பது வேறு கதை. என்பாட்டில் நான் இங்கு 'சிவனே' என்று உட்க்கார்ந்து கொண்டு இருக்க, நான் இங்கு என்ன, என்ன செய்வேன் என்று எதிர்பார்த்து அங்கு மனிதன், வெவ்வேறு மதங்களில் இருந்துகொண்டு  செய்யும் காரியங்களுக்குப் பலன் கொடுக்கும் வேலைதான் என்னை இங்கு படுக்கவே நேரமில்லாமல் அல்லல்பட வைக்கின்றது".

 

"நானும்தானே ஒவ்வொருநாளும் உன்னை வணங்கி வருகின்றேனே"

 

"சரி, சொல்லு, எப்படி நீ என்னை வணங்குவாய்?"

 

" தினமும், பூ வைத்து, விளக்கு காட்டி, மணி அடித்து...."

 

" ஹா.., ஹா.. பூ...அவ்வளவுதானே!"

 

"கடவுளே... ஏன்ன இது...?"

 

"கேட்கவே சிரிப்பு, சிரிப்பூ வருகின்றது!"

 

" இறைவா...!

 

"இல்லை மனிதா, மன்னித்துவிடு. உன் ஒற்றைப்பூவை விட, அவனவன் எனக்கு லொறிக்கணக்கில் விதம், விதமாகப் பூ மழையாகப் பொழிகிறான்;  தங்க நகைகளாகக் கொட்டுகிறான்; பால், தேனால் குளிப்பாட்டுகிறான்; பணம், பணமாக இடுகிறான்; தங்கத்தேரில் ஓட்டுகிறான்"

 

"அத்தோடு வணக்க ஸ்தலங்கள் பெரிது, பெரிதாய்க் கட்டுகிறான். ஒரு நாளைக்கு ஐந்து, பத்து, இருபது தரம் என்று வீட்டில் வணங்குகிறான்; கிழமைக்கு பல தடவைகள் வணக்க ஸ்தலம் சென்று வணங்குகிறான். யாத்திரைகள் செல்கிறான். பட்டினி கிடக்கிறான். என் பெருமை பேசிப் பாடுகிறான், சொற்பொழிவுகள் செய்கிறான். முதலில்  நான் அவர்களை எல்லாம் பார்த்து நிறுத்துக் கணக்குப்போட்டு பலன் அளிக்கவேண்டாமா?"

 

" அப்போ.. நான்...?"

 

"இதை விட இன்னும் பெரும் வேலை எனக்கு இப்போ இருக்கிறது; அதைச் செய்து முடிக்க உடம்பில் பலம் இல்லாது போய்விடுகிறது"

 

"அப்படி என்ன அந்தப் பெரிய வேலையோ?"

 

"ஒரு கூட்டம் இருக்கிறது; நான் சொன்னேன் என்று சொல்லி, என்னைக் காப்பாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு, தான் சொல்லும் பெயரில் கடவுளைக் கும்பிடாதவர்கள் எல்லோரையும் கொன்று ஒழிப்பதில் ஈடுபட்டு விசுவாசியாக மரணிக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் , நான் என்ன, என்ன வசதிகள் எல்லாம் இங்கு செய்து கொடுக்க வேண்டி இருக்கிறது என்று தெரியுமா உனக்கு?"

 

".....இல்லையே...?"

 

" இறந்து வரும் ஒவ்வொரு ஆணுக்கும், தனித் தனி ஒய்யார அரண்மனைகளில்  72 சுத்தமான, கன்னி கழியாத, சுருக்கம், வாட்டம், தொய்வு அற்ற இளம் பெண்களும், 80,000 அடிமைகளுக்கும், 24 இளம் ஆண்களும்; சிலருக்கு 4500 கன்னிகளும், 8000 அனுபவசாலிப் பெண்களும் வழங்கப்பட  வேண்டும். கலப்படமற்ற, பக்க விளைவுகள் ஒன்றுமே தராத, ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் வைன் மது பானங்களும், உணவு வகைகளும் நாளாந்தம் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் அனுபவிப்பதற்காக, இங்கு வரும் தியாக ஆண்களை எப்பொழுதும் 30 வயசினினிலே, எந்நேரமும் உடலையும், உறுப்புகளையும் 'தயார்' நிலையில் வைத்தருக்கவேண்டும்"

 

" அதற்கு ..?"

 

"என்ன அப்படி வலு சுகமாய்க் கேட்கிறாய்?. இப்படி கன்னித்தன்மையோடு இவ்வளவு பெண்களை உற்பத்தி செய்ய நானே நேரே இறங்கினால்தான் நம்பிக்கையாய் இருக்கும்.. உருவாக்கிப், பிறப்பித்து, வளர்த்து கல்யாண வயசு வரும்வரை விளக்கில் எண்ணெய்யை விட்டுப் பார்த்து காக்கவேண்டும், ஒரு காற்றோ, கறுப்போ அண்டாமல்"

 

"அப்போ இறந்து வருகின்ற பெண் தியாகிகளுக்கும் 72, 1000 என்று இளம் ஆண்களும், பெண்களும் கிடைப்பார்களோ?"

 

"இல்லை இல்லை, அவர்கள் தங்கள் பழைய கணவர்மார்களில் ஒருவரைத் தெரிவு செய்து அவருக்கு மனைவியாக இருக்கலாம்"

 

"அட, உங்கேயும் பெண்களுக்குச் சம உரிமை இல்லையா? தலை சுற்றுகிறது, கடவுளே"

 

"அது மட்டும் இல்லை. இன்னும் பல வேலைகள் இருக்கிறது. எனது ஒரு பெயரைச் சொல்லி ஒருவர் பிரசாரம் செய்து திரிந்தார். இன்னொரு எதிர்க் கடவுள் பெயரில் வணங்குபவர்கள் சிலர், அவர் கதறக் கதற, அவரை பிடித்து மரண தண்டனை தீர்ப்பளித்து அவரைக் அடித்துக் கொன்றார்கள். ஆனால், இப்பொழுது சொல்லித் திரிகின்றார்கள் தங்கள் பாவங்களின் பொறுத்து அவர் மடிந்தார் என்று. ஆதலால்  தாம் என்ன பெரிய பாவம் செய்தாலும் நான் மன்னித்து விடுவேன் என்று மத குருவிடம் பாவ மன்னிப்பு எடுத்து விடுவார்கள்"

 

"ஆதலால்.."

 

" அவர்கள் என்ன, என்ன பாவங்கள் செய்தார்கள் என்று பட்டியல் போட்டு, அவற்றை எல்லாம் மன்னிக்கும் பொறுப்பும் எனக்கு வந்திருக்கிறது"

 

" நீ கடவுள்தானே? இது கஷ்டமா?"

 

"அது மட்டுமல்ல!. இப்பொழுது கண்டறியாத பல சமூக வலைத் தளங்களினூடாகப் பல செய்திகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறீர்கள்"

 

"அப்படி என்ன செய்திகள்..?"

 

" இந்தக் கடவுள் செய்தியை ஒரு நிமிடத்தினுள், 10 பேருக்கு அனுப்பினால் 24 மணித்தியாலங்களுக்குள் நீங்கள் நினைத்தது நடக்கும். இல்லையேல் மிகவும் துன்ப நிகழ்வு ஏற்படும்" என்று பரப்புகிறார்கள்.

 

"அத்தோடு, இந்த ஆற்று நீர், அந்தக் கிணற்று நீர், மற்றக் குளத்து நீர் குடித்தால் சகல நோய்களும் தீரும் என்றும் கூறித் திரிகிறார்கள்"

 

"அதனால்....?"

 

"அவற்றை எல்லாம் பார்த்துப் படித்து, எண்ணிக் கணக்குப்போட்டு, பலன் கொடுத்து, ....; அப்பப்பா, போதும் போதும் என்று ஆகிவிடும், எல்லாம் செய்து முடிக்க ..!"

 

"இங்கை பார் கடவுள். இது எல்லாம் உனக்குப் பெரிய விடயமே இல்லை. பக்தர்கள் கேட்பவை எல்லாவற்றையும் கொடுக்க வேண்டியது உனது கடமை"

 

"அப்படி என்றுதானே பல மதங்களையும் உருவாக்கி, என்னையும் உருவாக்கி பல வேலைகளையும் என்னைச் செய்து முடிக்கும்படி என்னை இங்கு இருத்தி வைத்து இருக்கிறார்கள்"

 

"சரி, எனக்கு என்னதான் பதில்?"

 

"நான் வலு busy, எனக்கு நேரமில்லை! நிறைய இருக்கிறது. உனக்கு என்னதான் வேண்டும்?"

 

"எனக்கு இரண்டு வரம் வேண்டும்"

 

"..ம்ம்.., சொல்லு.."

 

"எனது மனைவியைக் கொலை செய்ய வேண்டும்"

 

" அட பாவமே. திருமணமாகி இரண்டு வருடங்கள்தானே ஆகின்றது!"

 

"ஏன், என்ன காரணம்?"

 

"அவளுடைய தங்கைகளை மணம் புரிய எனக்கு விருப்பம்; அதற்கு அவள் ஒத்துப் போக மாட்டாள்"

 

"தங்கைகள்? அவர்கள் வயது?"

 

"ஒன்பதும், பதின்ரண்டும்"

 

" அட  பாவியே, என்ன துணிச்சல் உனக்கு?, உன் மதத்தில் இரண்டும் மிகவும் பாவச் செயல்கள் என்று உனக்குத் தெரியாதா?, நம்பி வந்தவளை வெட்டி விடுவதும், இருவரை, அதுவும் பால் வடியும் குழந்தைகளை திருமணம் என்ற பெயரில் சிதைப்பதுவும் ..."

 

"அதற்கு நானே நல்ல வழி ஒன்றையும் சொல்கிறேனே"

 

"எனக்கே வழி சொல்கிறாயா?"

 

"முதலில் ஒரு மதத்தில் சேருகிறேன். என் மனைவியை ஒழித்துக் கட்டுகிறேன். விஷயம் முடிந்ததும் பாவ மன்னிப்பைப் பெறுகிறேன்"

 

"சந்தர்ப்ப வாதி....!"

 

"பின்னர் இன்னொரு மதத்திற்கு மாறி நான் விரும்பிய பெண்களைத் திருமணம் செய்து கொள்வது.."

 

"சீ..., தூ.., அயோக்கிய ஜென்மமே, கொடூரமான உன் சுய போகத்துக்காக மதம் பிடித்து மதம், மதமாய் மாறுகிறாய். நீ மனிதனாய் பூமியில் வாழ்வதற்கு அருகதை அற்றவன்!"

 

உக்கிரம்  கொண்ட கடவுள், தனது மடிக்கணினியை அவன் தலை மீது வீசி எறிந்துகொண்டே,

"யாரங்கே? இந்தக் கொடூர சிந்தனை உள்ள இவனின் தோலை உரித்து, கொதிக்கும் எண்ணெய்க் கிடாரத்தில்  எறிந்து, பொரித்துப் பொசுக்கி விடுங்கள்"

 🛏⇹⇹⇹⇹⇹🛏

"ஆ..., ஆ.. ஐயோ...! கடவுளே...!" என்று புலம்பியபடி கட்டிலில் இருந்து கீழே விழுந்த கண்ணனை அணுகிய இலட்சுமி,

 

"என்னங்க, என்னங்க ஏதாவது கெட்ட கனவு கண்டீங்களா? எழும்புங்க!"

 

"கெட்ட கனவு..? கடவுள்.... இல்லை, இல்லை; நல்ல கனவுதான் இலட்சுமி" என்று கூறியபடி, தனது கைகள் தெரியாமல் அவள் பாதங்களைத்  தெரியாமல் தொடுவதுபோல் தொட்டு எழும்பி இருந்தான்.

 

"நீங்கள் செய்யும் பூசைகள், வழிபாடுகள் எல்லாவற்றுக்கும் கடவுள் உங்களுக்கு எப்பொழுதும் நல்லதைத் தானே காட்டுவார்"

 

"உண்மைதான் இலட்சுமி" என்று அணைத்த கைகளை விடச் செய்ய நீண்ட நேரம் ஆயிற்று.


- சந்திரகாசன் ,செல்வத்துரை