சித்தர் சிந்திய முத்துகள் ..........3/39



சித்தர் சிவவாக்கியம் -263

என்னகத்துள் என்னை நான் எங்கு நாடி ஓடினேன்

என்னகத்துள் என்னை நான் அறிந்திலாத தாகையால்

என்னகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின்

என்னகத்துள் என்னை அன்றி யாதுமொன்றும் இல்லையே.

 

என் அகத்தில் நான் ஆக இருந்த என்னை நான் அறியாத காரணத்தால் என் மனதிலேயே நான் என்றாகி நின்ற ஈசனை எங்கெங்கோ சென்று நாடி ஓடித் தேடினேன். என் அகத்திலேயே நானாக இருக்கும் ஈசனையும் நான் முழுமையாக அறிந்து உணர்ந்து தெரிந்து கொண்டதற்கு பின் என்னுள்ளே நானாக நின்ற என் உயிரில் சிவமாகிய மெய்ப்பொருளே அனைத்துமாய் இருப்பதை அன்றி வேறு யாதுமொன்றும் இல்லை என்பதை தெளிவாக அனுபவத்தால் அறிந்து கொண்டேன்.

****************************************************

சித்தர் சிவவாக்கியம் - 264

விண்ணின்று மின்னெழுந்து மின்னொடுங்குமாறு போல்

என்னுள் நின்று எண்ணும் ஈசன் என்னகத்து இருக்கையால்

கண்ணின்று கண்ணில் தோன்றும் கண்ணறி விலாமையால்

என்னுள் நின்ற என்னையும் யானறிந்து இல்லையே.

 

விண்ணில் நின்றெழும் மின்னலானது அந்த மின்னலிலேயே ஒடுங்குகின்றவாறு போல எனக்குள் ஆகாயமான நினைவில் நின்று நினைக்கும் ஈசன் நானாக என் அகத்தில் இருக்கின்றான். கண்ணில் நின்று கண்ணில் தோன்றும் என் ஈசனை கண்ணைப் பற்றிய அறிவை அறியாத தன்மையினால் என்னுள் நின்று ஆட்டுவிக்கும் ஈசனை யான் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றேன். உன்னில் நின்ற நான் ஆகிய என்னை அறிந்து உணர்ந்து தியானியுங்கள். நான் என்பது என்ன என்பதை ஆராய்ந்தறிந்து கொள்ளுங்கள்.  

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 265

அடக்கிலும் அடக்கொணாத அம்பலத்தின் ஊடுபோய்

அடக்கினும் அடக்கொணாத அன்புருக்கும் ஒன்றுளே

கிடக்கினும் இருக்கினும் கிலேசம் வந்து இருக்கினும்

நடக்கிலும் இடைவிடாத நாத சங்கொலிக்குமே.

 

எவ்வளவு அடக்கினாலும் அடக்க முடியாத மூச்சுக் காற்றை வாசியினால் சிற்றம்பலமாகிய உள்ளத்தின் உள்ளே செலுத்தி அதிலேயே நிறுத்தி அடக்க, அடங்காத மனதை அன்பினால் உருக்கி அன்பே சிவம் ஆக இருக்கும் ஒன்றான மெய்ப் பொருளையே நின்றும் இருந்தும் கிடந்தும் நினைந்து தியானம் செய்யுங்கள். மனம் உதிக்கும் இடத்திலேயே மனமானது ஒடுங்கும். அறிவு பிரகாசிக்கும், அவ்வமயம் காமம், குரோதம், லோபம் ஆகிய கிலேசங்கள் நீங்கும். இந்த ஞான யோகத்தை தொடர்ந்து அப்பியாசம் செய்யும் சாதகர்களுக்கு தியானத்தில் அமர்ந்திருந்தாலும் நடந்து கொண்டிருந்தாலும் அவர்கள் உள்ளே வாசிலயமாகி இடைவிடாத நாதம் சங்கோசை ஒலித்துக் கொண்டே இருக்கும்.

 

****************கே எம் தர்மா & கிருஷ்ணமூர்த்தி


என் இறுதி சடங்கில்.....

 


"என் இறுதி சடங்கில் என்னை

எரிவனம் எடுத்து சென்று எரிக்க

என் நேரடி தொடர்பை அறுக்க

எல்லோரும் கூடி கதைப்பது கேட்குது"

 

"ஓய்வு எடுக்க பெட்டியில் வைத்து

ஒளி தீபங்கள் சுற்றி வைத்து

ஒதுங்கி இருந்து தமக்குள் கதைத்து

ஒழுங்கு படுத்துவது எனக்கு தெரிகிறது"

 

"சிறந்த ஆடைகளை தேர்ந்து அணிவித்து

சிறப்பான அலங்கார பாடை தருவித்து

சிறார்கள் கையில் பந்தம் கொடுத்து

சிரிப்பு இழந்து தவிப்பதை பார்க்கிறேன்"

 

"நரம்பு நாடி தளர்ந்து போகையில்

நம்மைநாடி நோய் வந்து சேர்கையில்

நமக்கு பிடித்தவர் இல்லாமல் போகையில்

நல்வரமாய் தான் இறப்பு இருக்குது"

 

"மன்னனாய் பிறந்தாயென்று

 கர்வம் கொள்ளாதே

மன்மத அழகனென்று லீலைகள் செய்யாதே

மதுபோதையில் தவழ்ந்து

 முட்டாளாய் வாழாதே

மரணத்தை நினைத்து அஞ்சியும் சாகாதே"

 

"நான் தீயில் சங்கமிக்கும் பொழுது

நாடகம் ஆடியவாழ்வு முடிவுறும் பொழுது

நான் என்னை சற்று பார்த்தேன்

நாமம் மறந்த சடலமாக கண்டேன்"

 

"உறவினர் நண்பர்கள்

 முகங்களைப் பார்த்தேன்

உவகை இழந்த சிலரை கண்டேன்

உறக்கம் துறந்த பிள்ளைகளை கண்டேன்

உரிமை காட்டிட வந்தோரையும் கண்டேன்"

 

"உடம்பு கெட்டால் 

உயிருக்கு மரியாதையில்லை

உயிர் பிரிந்தால் உடம்புக்கு மரியாதையில்லை

உலகத்தை விட்டு நான் போகும்தருவாயில்

உண்மையை நான் இன்று அறிகிறேன்"

 

"காமம் தெளித்த உடலும் படுத்திட்டு

காதல்  தந்த மனதும் உறங்கிற்று

காதற்ற ஊசியும் வர மறுக்குது

காலனின் வருகையால்

 எல்லாம் தொலைந்திட்டு"

 

"என்  பிள்ளைகளிடம் ஒன்று கேட்கிறேன்

என் பெயரை மறக்க வேண்டாம்

என் பெயர் எம் அடையாளம்

எங்கள் இருப்பு இனத்தின் வாழ்வு"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

நாங்கள் முளைக்க தயார்,நீங்கள் விதைக்க தயாரா?


Vidhai - Award Winning Tamil Short Film | Velayutham




சிரிக்க சில நிமிடம்....



😄01 😄

கணவன் : டியர்…இன்னிக்கு ராத்திரி என்ன டிபன்?

மனைவி : (கடுங்கோபத்துடன்) ஒரு டம்ளர் விஷம்

கணவன் : ஓ கே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.

😄02 😄

மன்னன்: மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?

அமைச்சர்: மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்லியிட்டான்.

மன்னன்: நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!

 அமைச்சர்: அதைத்தான் சொல்லிட்டான்...!

😄03😄

விமானம் ஒன்று ராக்கெட்டைப் பார்த்து கேட்டது, :ஹே,,,நீ எப்படி இவ்வளவு வேகமாக பறக்கிறாய் என்றது. 

ராக்கெட் சொன்னது அழகிய குரலில்: போடாங்ங்ங்கொய்யா.... உனக்கு பின்னால தீ வெச்சா தெரியுமடா... தீ......

😄04😄

வேலு:'மின்சாரம் தாக்கிய அனுபவம் உங்களுக்கு

உண்டா?'' 

பாலு:''அதெல்லாம் ஒண்ணுமில்லே.. சம்சாரம் தாக்கிய அனுபவம் வேணா உண்டு!''

😄05😄

பெண்: "டாக்டர் சார்! என் கணவருக்கு திடீர்னு மூச்சு திணறுது!"

டொக்ரர்:"ஏன் என்னாச்சு?"

பெண்:"அது ஒண்ணுமில்லை டாக்டர் என் கூந்தலில் இயற்கையாகவே மணம் இருக்கா இல்லையான்னு மோந்து பார்த்தார்!"

😄06😄

கணவன்: கடைசி முறையாக கேட்கிறேன், கிளம்புகிறாயா? இல்லையா?

மனைவி: நானும் எவ்ளோ நேரமா சொல்லிக்கிட்டு இருக்கேன்.. இதோ சாறி கட்டியதும் , வந்துடுறேன்னு.. இருங்க..

😄07😄

நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.

டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?

நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்.

😄08😄

நிருபர்: உங்க வருங்காலக் கணவர் எப்படி இருக்கணும்னு நினைக்கிறீங்க?

நடிகை: நிகழ்காலக் கணவரை விட நல்லவரா இருக்கணும்னு தான்.

😄09😄

பயணி:"கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும்." 

நடத்துனர்: "அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே, அதோ ட்ரைவர் தூங்கிட்டிருக்கார், எழுப்பி அவர் கிட்டே சொல்லு."

😄10😄

மனைவி: "ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!"

கணவன்:"நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."

😄11😄

சோமு: எங்க ஆபீஸ்ல புதுசா வேலைக்கு சேர்ந்தவர் என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்ப நேரம் திரு திருன்னு முழிச்சுகிட்டு இருந்தார்

தாமு:அப்புறம்?

 சோமு: நான் தான் தட்டிக் கொடுத்து, ஒருமாதிரித்  தூங்க வச்சேன்…!

😄12😄

வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு தூக்கிட்டீங்க?

ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க 'டிபன் ரெடியா?'ன்னு கேட்டா 'நேத்தே ரெடி'ங்கறான்!

😄13😄

காதலன் : எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு உங்க வீட்ல ஒத்துகிட்டாங்க..

காதலி : பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....

😄14😄

இராசம்மா :"பொண்ணு பார்க்க வந்த பையன் சொன்னத கேட்டதும், பொண்ணு வீட்டுக்காரங்க அவனுக்கு பைத்தியம்னு பொண்ணு கொடுக்க மாட்டேனுட்டாங்க." "அவன் அப்படி என்ன சொன்னான்?"

செல்லம்மா: "நான் கொஞ்சம் தனியா பேசணும். பரவாயில்லையா?"னு சொன்னான்.

😄15😄

உண்ண வந்தவர்: "என்னப்பா காபியில '' செத்துக்கிடக்குது...?" 

பரிமாறுபவர்: "ஸ்பெஷல் காபியிலதான் சார் '' உயிரோட இருக்கும்"

📂:தொகுப்பு:செ.மனுவேந்தன் 


"சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 07



ஒரு முறை தந்தை சேரலாதன் மற்றும் தமையன் செங்குட்டுவனுடனும் இளவரசன் இளங்கோ அமர்ந்திருந்தான். அப்போது அரசனைக் காண வந்த நிமித்திகன் ஒருவன், அரசனாக வீற்றிருக்கும் அழகிய வடிவ இலக்கணம் உனக்கே உண்டு என்று இளங்கோவை பார்த்து சோதிடம் சொன்னான். எனவே, மூத்தவன் இருக்க இளையவனுக்கு பட்டம் என்பதை ஏற்காத இளங்கோவடிகள் மூத்தவனுக்கு வழி விட்டு துறவியானார் என்பது கதை. அப்படி என்றால் சோதிடம் பிழைத்து விட்டதே என நீங்கள் ஜோசிக்கலாம். இதில் ஒரு மனதை கவரும்  விடயம் அடங்கி இருக்கிறது. இளங்கோவடிகள் துறவு கோலம் பூண்டு கண்ணகி காப்பியம் எழுதியதால் தான் சேரன் செங்குட்டுவனையே நமக்கு இன்று தெரியும். அதுமட்டும் அல்ல, சேரன்செங்குட்டுவன் புகழ் நிலைக்க இளங்கோவடிகள்தான் காரணமானார். எனவே ஒரு விதத்தில் பார்த்தால் நிமிதன் கூற்று பொய்யாகி விட்டதாகவும் சொல்ல முடியாது. ஏனெனில் இன்று வரை மக்களின் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அரசனாக கொலு வீற்றிருப்பவர் இளங்கோவடிகள்தானே தவிர சேரன் செங்குட்டுவன் இல்லை. அகநிலை சரிபார்ப்பு இப்படித்தான் வேலை செய்து பொய்யானதையும் சரியாக்கி விடும் என்று கருதுகிறேன். சோதிடக் கலை விஞ்ஞான கலையாக இல்லா விட்டாலும், பல்லாயிரம் ஆண்டுகளாக வழக்கில் இருந்து வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த அகநிலை சரிபார்ப்பு என்றுதான் நம்புகிறேன்.

 

மூன்றாவதாக நான் இன்னும் ஒன்றையும் கட்டாயம் சொல்ல வேண்டும். திருமண பொருத்தம் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரியாக அமைகிறது என்பதை அறிய பத்து பொருத்தங்கள் பார்க்கிறார்கள், அதில் தினப் பொருத்தம், கணம் பொருத்தம், யோனி பொருத்தம், ராசி பொருத்தம் அல்லது மகேந்திர பொருத்தம் மற்றும்  ரஜ்ஜூ பொருத்தம் உட்பட அதிகமாக குறைந்தது எட்டு பொருத்தங்களை எதிர்பார்க்கிறார்கள். அதிலும் பார்ப்பனர்களுக்கு ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்துக் கொள்ளளும் தினப் பொருத்தம், சத்திரியர்களுக்கு மனைவியாக / கணவனாக வரப்போகும் நபர் எப்படிப்பட்ட குணம் கொண்டிருப்பார் என்பதை தெரிந்து கொள்ளும் கணப் பொருத்தம், வைசியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ளும் ராசிப் பொருத்தம், சூத்திரர்களுக்கு கணவன்- மனைவி தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் யோனிப் பொருத்தம் கட்டாயம் என்கின்றார்கள் சோதிடர்கள் என அறிகிறேன். அது மட்டும் அல்ல ஒரு ஆண், தன்னிலும் தாழ்த்தப்பட்ட வர்ணத்துப் பெண்களை திருமணம் செய்யலாம் என்று இங்கு வர்ணத்தையும் சோதிடத்திற்குள் நுழைக்கப்பட்ட காரணம் ஒன்றே சோதிடம் நம்பக் கூடியது இல்லை என்பதற்கு சிறந்த உதாரணமாகவும் அமைகிறது.

 

இது மட்டும் அல்ல, 27 நட்சத்திரத்தையும் 14 மிருகங்களாக பிரித்து, உதாரணமாக, மூலம் மற்றும் திருவாதிரையில் பிறந்தவர்களுக்கு நாய் யோனி என்றும், எனவே ஒருவர் திருவாதிரையிலும் மற்றவர் மூலத்திலும் என்றால், பொருத்தம் இருக்கிறது என்கின்றார்கள்.இதோடு மட்டும் சோதிடர்கள் நின்று விடவில்லை, ஒவ்வொரு நட்சத்திர மிருகத்திற்கும், பகை [எதிரி] நட்சத்திர மிருகம் அமைத்துள்ளார்கள். குதிரையை மிருகமாக கொண்ட அசுவனிக்கும் மற்றும் சதயத்திற்கும் எருமையை மிருகமாக கொண்ட  சுவாதி மற்றும் கஸ்தம் பகை என்கிறார்கள். உலக நடைமுறையில் குதிரையும், எருமையும் பகை மிருகங்களா? ஒன்றை யொன்று பார்த்தால் மோதுகின்றனவா ? சண்டையிடுகின்றனவா ? ஆனால் சாதகப் பொருத்தத்தில் அசுவனி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் குதிரை யோனியாம். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், கஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் எருமை யோனியாம். குதிரை யோனியும் எருமை யோனியும் பகையாம். அதனால் சாதகம்  பொருந்தவில்லையாம், எனவே, திருமணம் நடக்கக் கூடாதாம்! எப்படி நட்சத்திரத்தை யெல்லாம் மிருகங்களாகப் பிரித்தார்கள்.? ஏன் இந்த மிருகங்களில் கடவுள் அவதாரமான பன்றியைக் காணவில்லை, காளை மாட்டைக் காணவில்லை? உங்களில் யாருக்காவது புரிகிறதா ?

 

உதாரணமாக, சோதிடர் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்று வைப்போம் அதனால் என்ன பயன் என்று யோசிக்க வேண்டும். சோதிடத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒரு உதாரணம் - இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால் கொஞ்சம் வழி நன்றாகத் தெரியும். வழியில் குண்டு குழிகளில் விழாமல் தப்பிக்கலாம். அப்படி எல்லாத் தடங்கல்களையும் சோதிடம் மூலம் தாண்டி விடலாம் என்று. அப்படி என்றால் சோதிடத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் ஏன் வருகிறது? இதற்கு அவர்கள் பொதுவாக சொல்லும் பதில், சோதிடன் சொன்ன பரிகாரத்தை சரியாகச் செய்ய வில்லை என்பதாகும். சோதிடம் பார்க்கும் எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கி விட முடியும் என்றால் அனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே? சோதிடம் சொல்லுகிறவன் உட்பட? சோதிடத்தை பிறருக்கு சொல்லி அன்றாடம் தன் வயிறையும் குடும்பத்தின் வயிறையும் நிரப்புகிறவன், அதில் இருந்து தான் மீள ஏன் தன் சோதிடத்தை பார்ப்பதில்லை? இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆகவே மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும் என்று ஒரே கொள்கையில் நிற்பவர்களை சோதிடம் ஏமாற்ற முடியாது. அது அவர்களுக்கு தேவையும் இல்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவது ஊன்று கோலைத் தேடிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் இருக்கும் மட்டும் இந்த ஏமாற்றுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

 

விஞ்ஞானிகள் தாம் முன்வைக்கும் கருத்துக்களை, மற்றவர்கள் ஆதரிக்கவும் அல்லது முரண்படவும் வரை காத்திருப்பதில்லை. தாமே தம் கருத்துக்களை பலவழிகளில் சோதித்து ஏற்றுக் கொள்ள வேண்டியவைகளை தக்க காரணங்களுடனும் சான்றுகளுடனும் ஏற்று, மற்றவைகளை அவ்வாறே நிராகரித்து விடுகிறார்கள். ஆனால் சோதிடர்கள் இவற்றுக்கு முரண்பாடானவர்கள். அவர்கள் தாம் ஏற்றுக்கொள்ளும் சோதிட கருத்துக்களை கடுமையாக ஆராய்வதாக தெரியவில்லை. உதாரணமாக 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி இந்தியா அரசாங்கம் ₹500 மற்றும் ₹1000 ரூபாய் தாள்களை உடனடியாக அன்று நள்ளிரவில் இருந்து செல்லதாகியது [On 8 November 2016, the Government of India announced the demonetisation of ₹500 and ₹1000 banknotes with effect from midnight of the same day] ஆனால் மரத்தடியில் இருக்கும் சோதிடர் முதல் அலுவலகம் வைத்திருக்கும் சோதிடர் வரை தாமே அந்த தாள்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு அடுத்த நாள் அதை மற்ற வரிசையில் நின்றார்கள் என்பது வரலாறு. இவர்கள் எப்படி மற்றவர்களுக்கு எதிர்காலம் கூறுவார்கள் என்று யாராவது சிந்தித்தார்களா ? அதனால் தான் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மகாகவி பாரதியார்

 

"சோதிடம் தனை இகழ், வானநூல் பயிற்சி கொள்"

 

என்று கூறிச் சென்றார். பொதுவாக பிரச்சினைகளுக்கு விடை நேரடியாகத் தேடத் தெரியாத மன வலிமை குறைந்தவர்கள் தான் சோதிடரிடம் போகிறார்கள். அது சோதிடனுக்கு நன்றாக தெரியும். எனவேதான் சோதிடர் அவரிடம்  "உங்களுக்கு இப்பொழுது மனதில் குழப்பமும் கவலையுமாக இருக்குமே" என்று பொதுப்படையாக ஆரம்பிப்பார். ஆகா, எப்படி வந்த விடயத்தை கண்டு பிடித்து விட்டாரே என்று வியந்து சோதிடரிடம் சரணாகதி அடைந்துவிடுவார். அதற்கு பிறகு நான் சொல்லத் தேவை இல்லை. என்றாலும் ஒரு தன்னம்பிக்கை உள்ளவருக்கு 'நாளும் கோளும்' ஒன்றும் செய்துவிடாது. உதாரணமாக ஒரு முறை அரசியான மங்கையர்க்கரசியார் திருஞானசம்பந்த நாயனாரை பாண்டி நாட்டிற்கு வரும்படி அமைச்சர் மூலம் அழைப்பு விடுத்தார். சமணர்களின் தொல்லைகளை அனுபவித்த திருநாவுக்கரசு நாயனார், ‘நாளும் கோளும் நன்றாக இல்லையே’ என்று யோசித்தார். அப்பொழுது நீலகண்டனை சிந்தனை செய்பவர்களுக்கு நாளும் கோளும் என்ன செய்யும் எனும் பொருள்படும்படி

 

"வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்

மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்

உளமே புகுந்தவதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

சனி பாம்பிரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல

அடியாரவர்க்கு மிகவே!"


என்று பாடினார் என்பது ஒரு வரலாற்று உண்மை    

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 08 வாசிக்க அழுத்துங்கள் 

👉  Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு அலசல்" / பகுதி: 08

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துங்கள் 

👉Theebam.com: "சோதிடம் பற்றி ஒரு சிறு அலசல்" / பகுதி: 01: