"மாட்டு வண்டிக்காரன்" – (சிறு கதை)

வேலன் ஒரு விவசாயி. அவன் எங்க பெரியம்மா வீட்டிற்கு அருகில் இடைக்காடு என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். அது ஒரு தோட்டங்கள் நிறைந்த அச்சுவேலிக்கும் செல்வச் சன்னதிக்கும்  இடைப்பட்ட கிராமம். அவன் தன்னுடைய தோட்டத்திலும் மற்றும் அந்த கிராமவாசிகளின் தோட்டத்திலும் விளையும் மரக்கறிகளை காலையில் அச்சவேலி சந்தைக்கு, தனது மாட்டு வண்டியில் எடுத்துச் சென்று விற்பது வழக்கம். வேலன் என்று சொல்வதை விட, 'மாட்டு வண்டிக்காரன்'  என்றால் அந்த ஊரில் உள்ள எல்லோருக்கும் தெரியும்.

 

ஒருமுறை வழமையாக செய்வது போல, மரக்கறிகளை சுமந்து கொண்டு, அவனின் மாட்டு வண்டி சந்தையை நோக்கி போய்க்கொண்டு இருந்தது. முதல் நாள் பெய்த மழையால், அந்த மண் வீதி சேறும் சகதியுமாக இருந்தது. அவன் நேரத்துடன் சந்தைக்கு போனால் தான், அவன் கொண்டு வந்த மரக்கறி முழுவதும் விற்க இலகுவாக இருக்கும். எனவே கொஞ்சம் விரைவாக, எதோ ஒரு காதல் பாட்டை முணுமுணுத்துக் கொண்டு  மாட்டு வண்டியை செலுத்திக் கொண்டு இருந்தான்.

 

அவனின் வேகமும் தாகமும் வண்டில் சில்லுக்கு புரியுமா? அது திடீரென சேற்றில் புதைந்து, உருளமுடியாமல் போய்விட்டது. மகாபாரதத்திலும் இதற்கு  ஒத்த  ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. விறுவிறுப்பான போரின் ஒரு கட்டத்தில் கர்ணனின் தேரின் சக்கரம் சகதியில் சிக்குகிறது. அதை மீட்கும்படி தேரோட்டி சல்லியனுக்கு கட்டளையிடுகிறான். ஆனால் அவன் மறுத்து அங்கிருந்து வெளியேறுகிறான்.  ஆனால் கர்ணன் மனம் தளரவில்லை, சோர்வடையவில்லை, தானே சக்கரத்தை தன் தோளின் வலிமையால் உயர்த்தி அதில் இருந்து எடுக்க  முற்பட்டான் என்பது வரலாறு. ஆனால் எங்க வண்டிக்காரனுக்கு அது புரியவில்லை. அவன் மாட்டு வண்டியில் இருந்து இறங்கி அதன் பக்கத்தில் நின்று யாராவது வருகிறார்களா என்று  பார்த்துக் கொண்டு நின்றான். மரக்கறி எல்லாம் விற்காவிடில் பழுதாகி விடுமே  என்ற கவலை ஒருபக்கம். அவனுக்கு. அவன் வானத்தை பார்த்து சத்தம் போட்டான்:  " நான் அதிர்ஷ்டம்  இல்லாதவன், இந்த ஆண்டவன் அங்கே என்ன செய்கிறான்? அவனுக்கு என்ன குறை ?? நாம் தான் பூலோகத்தில் எல்லா கஷ்டமும் அனுபவிக்கிறோம்?" என்று பெரும் முறையீடு செய்து கொண்டு இருந்தான்!

 

அந்த நேரத்தில் தான் நான் பெரியம்மா வீட்டிற்கு அச்சுவேலி தாண்டி, ஸ்கூட்டர் [scooter] ஒன்றில் நெருங்கி கொண்டு இருந்தேன். வேலனை முன்பே எனக்கு தெரியும் என்பதால், "சும்மா சத்தம் போட்டு, ஆண்டவன் என்ற ஒருவனுக்கு முறையிட்டு ஒன்றும் நடக்காது." என்று கூறிக்கொண்டு அவன் அருகில் சென்று நடந்ததை விசாரித்தேன்.

 

திருப்பவும் கர்ணன் தான் ஞாபகம் வந்தது. போர் தர்மத்திற்கு எதிராக ஆயுதம் இல்லாது, தேர் சில்லை உயர்த்திக் கொண்டு இருந்தவனை, நல்ல சந்தர்ப்பம் என்று ஆண்டவனாக கருதப்படும் கிருஷ்ணர் சொல்ல ,  அருச்சுனன் அம்பு எய்தி, கொல்ல முயற்சிக்கிறான். ஆனால் அவன் உயிர் பிரியவில்லை. அதை கண்டு, ஏன் அப்படி அதிசயமாக கேட்ட அருச்சுனனுக்கு, உடனடியாக  உதவி செய்ய, பிராமணன் வேடம் போட்டு ஒரு நாடகமே நடத்தியதாக நான், நல்லூர் திருவிழா மூட்டம், மணி ஐயர் பிரசங்கம் கேட்டது என் மனதில் நிழலாடியது. ஆனால் அவன் [ஆணடவன்]  இங்கு வரவில்லை, ஏன் மனிதன் நாகரீகம் அடைந்து தன் பாட்டில் சிந்திக்க பாமரமக்கள் தொடங்கிய நாளில் இருந்து இன்னும் வரவில்லை, ஏமாற்றும் பல சாமியார்கள் வந்துள்ளார்கள், வந்து கொண்டு இருக்கிறார்கள்!. என் உருவில் வந்தான் என்று இதற்கு விளக்கம் கொடுக்க பலர் காத்திருப்பது எனக்கும் புரியும்.

 

நான் அவனிடம் சுருக்கமாக, ஆனால் நம்பிக்கை வரக்கூடியதாக, " நீ முறையிடுவதால், வண்டி அசையாது. முயற்சி இன்றி வெற்றி வராது! துணிவுடன் எடுத்த செயலை செய்யின், நினைத்த எண்ணம் தானாய் வரும் என்று கூறி, எழும்பு,  உன் தோள்பட்டை சக்கரத்தில்  வைத்து  தூக்க பார், எல்லாம் சரிவரும் என்று, நானும் சேர்ந்து உயர்த்தி வெளியே எடுத்தோம்!

 

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின் [குறள் 666]

 

வண்டியின் சில்லு வெளியே வந்ததை பார்த்த அவன், தன் செய்யலை எண்ணி வெட்கப்பட்டான். அதை சமாளிப்பதற்காக வண்டிக்கார வேலன், என்னை பார்த்து " வேலனை வள்ளியுடன்  இணைக்க, விநாயகர் யானை வேடம் போட்டு உதவினார்,  இன்று தில்லையில் இருக்கும், லிங்கத்தை தனது அடையாளமாக கொண்டவனின் மகனாக இந்த விநாயகர் எனக்கு உதவி புரிந்தார்" என என் பெயரை [தில்லைவிநாயகலிங்கம்] சொல்லாமல் சொல்லி வாழ்த்தி சென்றான், அந்த மாட்டு வண்டிக்காரன்!

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி-/-யாழ்ப்பாணம்]

கடந்த வாரம் வெளிவந்த திரைப்படங்கள் எப்படி?

சுருக்கமான பார்வை 'கடமையை செய்' விமர்சனம் [Kadamaiyai Sei Tamil Movie  Review]

வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த்மொட்டை ராஜேந்திரன் , வின்சென்ட் அசோகன், சார்லஸ் வினோத் எனப் பலர்  நடிக்கும் இப்படத்தினை ரமேஷ் தனது, கணேஷ் எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

 

 சிவில் இன்ஜினியர்  எஸ்.ஜே.சூர்யா ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து வரும் நிலையில் இருப்பதை கண்டுபிடிக்கிறார். அதை அவர், மாடி உரிமை யாளரிடம் தெரிவிக்க, அது பிடிக்காத  உரிமையாளரின்சூழ்ச்சியில் வீழ்ந்த சூர்யா, கோமா நிலைக்கு தள்ளப்படுகிறார். இந்நிலையிலும்  அக்குடியிருப்பாளர்களை சூர்யா எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதை.


கடமையில் தவறாத படம் [3/5]

 

⭐⭐⭐⭐⭐

 

'காடவர்விமர்சனம் [Kadavar  Tamil Movie  Review]

 அனூப் எஸ் பணிக்கர் இயக்கத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரில்லர் படத்தினை  இப்படத்தின் நாயகி அமலா பால் தனது அமலா பால் ப்ரோடுக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கரஞ்சின் ராஜ் இசையமைத்துள்ளார். இவருடன் அதுல்யா ரவி,ஹரிஷ் உத்தமன், முனீஷ்காந் ராமதாஸ், ஆதித் அருண், ரித்விகா, வைஷ்ணவி, நிழல்கள் ரவிஎனப்பலர் நடிக்கின்றனர்.


ஒரு நோயியல் நிபுணர் (pathologist ) ஒரு இறப்பு  நடந்தால் காரணம் என்ன  என்று கண்டுபிடக்கூடிய திறமை வாய்ந்தவர். அப்படி இருக்கையில் ஒரு கொலை நடக்கிறது அந்த கேஸ் போலீஸ் கமிசனர் விஷால் (ஹரிஷ் உத்தமன்)பத்திரதங்கவேல் உதவியுடன் விசாரிக்கின்றார். ஒரு கட்டத்தில் இதற்கு காரணம் வெற்றி என்னும் ஒரு கைதி காரணம் என்று சொல்லப்பட .அந்த கைதியை வெற்றி இருப்பதோ சிறையில் அப்பறம் எப்படி கொல்ல முடியும் அப்ப கொலைசெய்தது  யார் ? எதுக்காக  ? என்பது தான்  காடவர் திரைப்படத்தின் மீதி கதை .

திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படம் பார்த்த உணர்வு  இருக்கும் .

 

⭐⭐⭐⭐⭐

 

'விருமன்' விமர்சனம்[Viruman Tamil Movie  Review]

 

 முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ் கிரண், பிரகாஷ் ராஜ் என  பலர் இணைந்து நடித்த குடும்பம் மற்றும் அதிரடி திரைப்படம். சூர்யா சிவகுமார் தனது '2D' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

பிரகாஷ்ராஜ்,வேலைக்கார பெண்மணியுடன் முறையற்ற தொடர்பில் இருப்பதை கண்ட மனைவி சரண்யா தற்கொலை செய்து கொள்கிறார். தன் அம்மாவின் சாவுக்கு காரணமான அப்பா பிரகாஷ்ராஜை திருத்தி பழிவாங்க துடிக்கிறார் கார்த்தி. எலியும், பூனையுமாக இருக்கும் பிரகாஷ்ராஜ், கார்த்தி பகை இறுதியில் என்னவானது? தந்தை பிரகாஷ்ராஜை கார்த்தி பழிவாங்கினாரா, இல்லையா? என்பதே விருமன் படத்தின் மீதி கதை.

குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம்.

 

⭐⭐⭐⭐⭐

 

'கட்டம் சொல்லுது 'விமர்சனம்[ kattam SolluthuTamil Movie  Review]

 

 இயக்குனர் எஸ் ஜி எழிலன் இயக்கத்தில் எஸ் ஜி எழிலன் - தீபா ஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.

 

 கணவனை இழந்த தீபா சங்கர் தன் பொண்ணுக்கு திருமணம் ஆகப் போகுது என்று ஜோதிடர் ஒருவர் சொன்னதை நம்பி, தேதியை முடிவு செய்து பந்தல்காரர் முதல் சமையல்காரர் வரை புக் செய்துவிட்டு மாப்பிள்ளை தேடுகிறார்.கல்யாணம் எப்படி நடந்தது என்பதுதான் கதை.

 

 சிரிக்கச்  சிரிக்கக்  கதை சொல்ல முயன்றிருக்கிறார்கள்[2.75/5]

 

⭐⭐⭐⭐⭐

 

'லால் சிங் சத்தா' விமர்சனம்[  Laal Singh ChaddhaTamil Movie  Review]

 

அட்வைட் சந்தன் இயக்கத்தில் அமீர் கான், கரீனா கபூர், நாக சைதன்யா எனப்  பலர் இணைந்து நடித்திருக்க   இப்படத்தினை நடிகர் அமீர் கான் தயாரிக்க, இசையமைப்பாளர் பிரிதம் மற்றும் தனுஜ் திக்கு இணைந்து இசையமைத்துள்ளனர்.

 

 திரைப்படம் ஒரு பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தினை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' தயாரிப்பு நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.

 

 லால் சிங் சத்தா (ஆமிர் கான்) , அவனை மனநலம் குன்றியவனாகவே அனைவரும் நடத்துகின்றனர்.  பள்ளித் தோழி ரூபா டிசோசா (கரீனா கபூர்) அளிக்கும் அன்பும், ஊக்கமும் அவனை, தடைகளைக் கடந்து சாதிக்க வைக்கின்றன. இதனால் ரூபாவை விரும்பத் தொடங்குகிறான். ஆனால், நடிகை ஆக விரும்பும் ரூபா விலகிச் செல்கிறாள்.  ரூபாவுக்கு என்ன ஆனது? லால் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தகட்ட திருப்பம் என்ன? இக்கேள்விகளுக்கு பதிலே   படம்.

 

இப்படம் பார்க்க அதிக பொறுமைதான் தேவை

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

தொகுப்பு:செ.மனுவேந்தன்

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐