சரிதா, அர்ச்சனா, கீர்த்தி சுரேஷ் வரிசையில் சாயாதேவி!


பத்தரை மாத்து தங்கம் என்று சொல்லுவதைப் போல அட்சர சுத்தமான தமிழ்ப் பொண்ணு சாயாதேவி என்பதை நினைக்கிறபோது சந்தோஷம் ரெக்கை கட்டி பறக்கும்.
கலைக் குடும்பத்து வாரிசு சாயாதேவி .1970களின் பிற்பகுதியில் தமிழ் திரைப்பட உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த தரமான இயக்குனர் மகேந்திரனின் முகாமில் குருகுலவாசம் பயின்றவர் இயக்குனர் பன்முகக் கலைஞர் யார் கண்ணன் இன்னொரு பக்கம் நம்பர் ஒன் நாட்டிய இயக்குனராக எழுபது எண்பதுகளில் வெற்றி வலம்வந்த ஜீவா தம்பதியின் மகள். இப்படி பாட்டும் நாட்டியமும் இயக்கமும் கலந்திருக்கும் குடும்பத்தின் கலை வாரிசு சாயாதேவி… மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?
பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு சினிமா மோகத்தில் இருந்தவருக்கு 'கன்னிமாடம்' வாழ்க்கை கொடுத்திருக்கிறது. அறிமுகப் படம் இவரை காலூன்ற வைத்திருக்கிறது கலை உலகில்.
கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள்.
மேற்கத்திய நடனமும் அத்துப்படி. சொந்தக் குரலில் பேசி நடித்திருப்பதும் சிறப்பு.
தமிழ் நடிகைகள் இல்லை இல்லை என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இதோ இங்கே இருக்கிறேன் நான் என்று பதில் குரல் கொடுப்பதைப் போல கன்னி மாடத்தில் சாயாதேவி. சரிதா, அர்ச்சனா, கீர்த்தி சுரேஷ் வரிசையில் இன்றைய காலகட்டத்தில் போஸ் வெங்கட்டின் சாயாதேவி என்று தனி முத்திரை குத்தலாம்.

தமிழ் சினிமாவுக்கு: நடிப்பு- இளமை – இனிமை – வசீகரம், நான்கும் ஒருங்கிணைந்த கலவையில் சாயாதேவி… ஊரும் உலகமும் மெச்ச உச்சம் தொடுவது நிச்சயம்.

📽 📽 📽 📽 📽 📽 📽 📽 📽 📽 📽


குடும்பம் என்றால் குழப்பம்தானா ?


























அன்று, இறந்தோர்க்கு ஆண்டொருநாள் நினைவுதினம். இன்றோ அழிந்துபோன காதலுக்காக காதலர் தினம், அணைக்கப்படாத அன்னையரின் நினைவில் ஒரு  அன்னையர்தினம் , தனித்துவிடப்பட்ட தந்தையரின் நினைவில் ஒரு  தந்தையர்தினம், அவை விசாலமடைந்து இன்று குலைந்து சிதைந்துகொண்டிருக்கும் குடும்ப வாழ்வினை நினைந்து ஒரு குடும்பதினம் -அதுவும் வந்துவிட்டது.

தாத்தா,பாட்டி, அப்பா,அம்மா ,மாமா ,மாமி, அண்ணா ,அண்ணி , அக்கா,அத்தான் என்று கூடி அன்று வாழ்ந்த வாழ்க்கை முறை, இன்று அது சுதந்திரமில்லை என்று எண்ணிக்கொண்டு தனிக் குடித்தனம் என்ற பெயரில் குடி பெயர்த்து வாழ்ந்தாலும் அங்கே -கணவன் மனைவி வேலை, பிள்ளைகள் பாடசாலை ,வீட்டு வேலை -இயந்திர ஓட்டம்- விளைவு பதற்றம் ,அமைதியின்மை, விரக்தி, கணவன்-மனைவி-பிள்ளைகளிடையே பேசப் பழக நேரமின்மை  இந்நிலையில் எடுத்ததுக்கெல்லாம் ஒருவர்,ஒருவர்மேல் எரிந்து விழல்.  இங்குமட்டும் பிரச்சனைகள் குறைந்தா விட்டது ,இல்லை. விளைவு விவாகரத்து.

ஆனால் விவாகரத்திட்டு அது பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவந்ததா என ஆராய்ந்தால் பெரும்பாலும் தனி வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்றே பதில் வருகிறது. ஓயாத பிரச்சனைகள் என்றால்  மனிதனின் வாழ்வில்  விடிவே இல்லையா?

இருக்கிறது, மனம் தான் வாழ்க்கையென்றும் கூறுவர். எதையும் திருப்தியுடன் அணுகும்போது பல பிரச்சனைகளுக்கு இடமில்லாது போகிறது. எந்த ஒரு அடுத்த மனிதனும் நமக்கு சமமான  உணர்வுகள் கொண்டிருக்கமுடியாது என்பதனை உணரும்போது பல பிரச்சனைகளுக்கு இடமில்லாது போகிறது. என்னைப்போலவே அவளுக்கோ அன்றி அவனுக்கென்று சில  விருப்பு, வெறுப்பு ,கனவு , பேச்சு சுதந்திரம் என்பதனைப் புரியும்போது பல பிரச்சனைகளுக்கு இடமில்லாது போகிறது.

மேலும் , சென்ற காலம் திரும்பி வரப்போவதில்லை. என்பதனை ஒவ்வொரு மனிதனும் மனதில் நிறுத்திக் கொள்ளல் அவசியம்.

கல்யாணத்தின் முன் பெற்றோர்களின் பணத்தில் பறந்து திரிந்த காலம் கல்யாணத்தின் பின் இருக்கப்போவதில்லை. அதற்காக கல்யாணம் செய்யாது இருந்தால் மட்டும் ,பெற்றோர்கள் உங்கள் காலம் வரையில் மண்ணில் இருக்கப்போவதில்லை. எனவே கல்யாணம் என்பது காலத்தின் கட்டாயம். ஆணோ, பெண்ணோ ஒரு துணையினை நாடவேண்டியது இயற்கையின் நியதி.

அதேபோலவே, கல்யாணத்தின் பின் இருக்கும் வாழ்வு ,குழந்தை பிறந்தபின் இருக்கப்போவதில்லை, குழந்தை பிறந்தபின் இருக்கும் வாழ்வு ,அவர்கள் வளர்ந்து திருமணமாகி உங்களை விட்டுப் பிரிந்தபின் இருக்கப் போவதில்லை.

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு நிலைகளிலும் ,சந்தோசப்படவேண்டிய வெவ்வேறு தருணங்கள் மனிதனுக்கு கிடைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு நிலையினையும் அனுபவிக்கத்தெரியாமல் ,முன் இருந்தநிலையினை ஒப்பிட்டுப் பார்க்கையில் மனிதன் நிம்மதியினை இழக்கிறான். அதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக குடும்பத்தினுள் பிரச்சனைகள் தொடர்கின்றன.

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பர்.  உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்தினையும் உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளுங்கள். சந்தோசமான வாழ்க்கை உங்கள் கையில் தான் இருக்கிறது. உங்கள் பிரச்சனைகளுக்கு இன்னொருவர்  காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. எல்லாம் உங்கள் மனங்களிலேயே தங்கியுள்ளது.
வாழுங்கள் ,வாழ்ந்து காட்டுங்கள்.

செ.மனுவேந்தன்

நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 11A

[சீரழியும் சமுதாயம்] 

7] வரலாறு அழிப்பு  [Erasure of History]

ஸ்பானிய அமெரிக்க மெய்யியலாளர், ஜார்ஜ் சண்டயானா (1863 - 1952) என்பவர் [George Santayana], "முன்னைய தவறுத்தல்கள் மீண்டும் வராமல் தவிர்ப்பதற்கு, கட்டாயம் வரலாறு படிக்கவேண்டும்" என்கிறார், என்றாலும் இன்றைய அரசியல் சூழலில், பல்வேறு காரணங்களால், அதில் இருந்து பாடங்களை படிக்காமல், அதை தமக்கு சார்பாக திரித்துக் கூறுவதற்காக, தமக்கு பிடிக்காத அல்லது மற்றவர்களின் வரலாறு சான்று கூறும் உயர்வை பொறுக்க முடியாமல்,  உண்மையான வரலாறுகளை, அரச துணையுடன் இன்று அழிப்பதை காண்கிறோம். அப்படியானவற்றில் ஒன்று தான், 97 ஆயிரம் அரிய நூல்களுடன் காணப்பட்ட யாழ் நூலக எரிப்பு ஆகும். மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கிய, மாயன் இனத்தவரின் வரலாற்று நூல்களை, கண்டு பிடிப்புகளை, ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள், அன்று எரித்து போல, இன்று இலங்கை அரச படை இதை செய்ததை காண்கிறோம். தமிழ்ப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற வரலாற்றுப் புத்தகங்களில், சிங்களவர்கள், ஆரியர்களாக இலங்கைக்கு வருவதற்கு முன்னரே, தமிழர்கள் இரண்டு இனங்களாக இங்கு குடியிருந்தார்கள் என்ற போதிலும், அவையெல்லாம் மறைக்கப்பட்டு, தமிழர்களின் வரலாறுகள் அழிக்கப் பட்டுள்ளதுடன், தமிழ் மன்னர்கள் தொடர்பில் எதுவுமே குறிப்பிடப்பட வில்லை எனவும், ஆயிரம் வருடங்கள் வரலாற்றைக் கொண்ட தமிழ் பேசும் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பில், அந்த வரலாற்றுப் புத்தகங்களில் ஒரு வசனமேனும் இல்லை என்பதையும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், வெவேறு காலங்களில் இலங்கை நாடாளுமன்றில் சுட்டிக்காட்டி யுள்ளார்கள். இவை எல்லாம், எமக்கு எதிராக ஏற்பட்ட, வரலாறு அழித்தலுக்கான சில உதாரணங்கள் மட்டுமே!! “இலங்கை சிங்களவர்களின் தேசம், இங்கு வாழும் தமிழர்கள் வந்தேறு குடிகளே’ என்ற பாணியில் அண்மைக் காலமாக பல அரசியல் வாதிகள் தொடக்கம், புத்த மதகுரு மார் வரை சொல்லுவதை எழுதுவதை காண்கிறோம். ஒன்றை மறைத்து இன்னொன்றாகச் செய்வதே இலங்கை இனவாத எழுத்தர்கள தமிழ் வரலாற்றுக்குச் இதுவரை செய்த தொண்டாகும்.

மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்றும் தாங்களே இலங்கையின் மூத்த குடியென்றும் தங்களுக்கே நாடு சொந்தம் என்றும் பவுத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள். ஆனால் கௌதமபுத்தர் இலங்கை வருகைகளைப் பற்றி வரலாற்றுச் சான்றுகள் கிடையா, மற்றது  புத்தர் வட இந்திய ஆட்புலத்தை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. ஏன் தெற்கேயுள்ள தமிழகத்துக்கும் கூட வரவில்லை. மேலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் எனவும் நினைக்கிறார்கள். இந்த மகாவம்ச சிந்தனையே இன்றைய இன முரண்பாட்டுக்கும் மற்றும் வரலாறு அழிப்ற்கும் அடிப்படைக் காரணம் ஆகும். மகாவம்சத்தை எழுதியதன் நோக்கத்தை ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவில் நுலாசிரியர் குறிப்பிடுகிறார். எடுத்துக்காட்டாக ஆறாம் அத்தியாயத்தின் முடிவில் “(பவுத்த) பக்தர்களின் அமைதியான ஆனந்தத்துக்கும் மனவெழுச்சிக்கும் தொகுக்கப்பட்ட மகாவம்சத்தின் விஜயனின் முடிசூடல் என்ற 6 ஆம் அத்தியாயம் இத்துடன் முடிவுற்றது” எனக் கூறுவார். இது ஒன்றே நூலின் நோக்கத்திற்கு எடுத்துக் காட்டு ஆகும். இருந்தும் மகாவம்சத்தை முற்று முழுதாக இலங்கை வரலாற்றைக் கூறும் நூல் எனக் கொள்ள முடியாவிட்டாலும் அதனை முற்று முழுதாகப் புறக்கணித்து விடவும் முடியாது. மகாவம்சம் புனைந்துள்ள கதையில் சில உண்மைகள் மறைந்து காணப்படுகின்றன. மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என இயக்கர், நாகர், இப்படி சிலரை குறிக்கிறது. உதாரணமாக, நாகர் என்பவர்கள் தமிழ் இலக்கியங்களிலும் இலங்கை இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் பழங்குடி மக்களாவர். இலங்கையை மகாவம்சம் குறிப்பிடும் விசயன் (பொ.மு. 543 – 504) என்ற மன்னனுக்கு முன்பே முடிநாகர் என்னும் தமிழ் நாகர் இனத்தவர்கள் ஆண்டனர் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. இதற்கு ஆதாரமாக முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் முடிநாகர் இனத்தைச் சேர்ந்தவர் சேர மன்னனான உதியஞ்சேரலை பாடியதை குறிப்பிடுகின்றனர். இவர்கள் நாகவுருவை தலையில் அணிந்ததால் இவர்கள் முடிநாகர் என்றும் சூட்டுநாகர் என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையில் பண்டு தொட்டு தமிழர் எவரும் வாழவில்லை என்றும் சிங்கள அரசுகள் மீது படையெடுத்து வந்த சோழ, பாண்டியர் படைகளோடே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து குடியேறினர் என சில சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் துட்ட கைமுனு காலத்தில் மாகா கங்கைக்கு அப்பால் தமிழர்கள் வாழ்ந்தார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசன் தேவநம்பிய தீசனே. இவனுக்கு முன்னர் அனுராதபுரத்தை ஆண்ட அரசர்கள் வைதீக மதத்தவரே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 307 – 247) ஆவான். இவர்கள் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்கள். மகாநாகன் இவனது உடன்பிறப்பு ஆவான். இவன் துட்ட கைமுனுவின் பாட்டனுக்குப் பாட்டன் (ஒட்டன்) ஆவன். எனவே தமிழர்கள் இலங்கையின் ஆதி குடிகள் என்பது மகாவம்சத்திலேயே கூறப்பட்டுள்ளதை காண்க. ஆனால் இவை சில உதாரணங்களே, இன்னும்பல வரலாற்று ரீதியான ஆதாரங்களும் உதாரணங்களும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

உதாரணமாக, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஆனைக்கோட்டை என்னும் இடத்தில், 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், தொல்லியலாளர் கா. இந்திரபாலாவின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராச்சிக் குழுவினர் நடாத்திய அகழ்வாய்வு ஒன்றின் போது, கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த இறந்த மனிதன் ஒருவனுடைய கல்லறை கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு ஒரு முத்திரை ஒரு மோதிரத்தின் முன் பகுதியாக கண்டு எடுக்கப் பட்டது. அங்கு பதியப்பட்டிருந்த இரண்டு வரியிலமைந்த எழுத்துக்கள், தமிழ் பிராமிவகையைச் சார்ந்தாக இருந்தது. கோ வெ ர அல்லது "கோ" "வே" "த" (ko ve ta) என்ற அந்த எழுத்துக்கள் முதல் சங்ககால எழுத்துக்ளைச் சார்ந்தாகும் [யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை முத்திரை]. அதை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா, மற்றும்  பொ. இரகுபதி, முனைவர் ஆர். மதிவாணன் போன்றோர்கள், அந்தக் கல்லறை ஒரு தமிழ் மன்னனுடையதாக இருக்கக்கூடும் என்கின்றார்கள். அது மட்டும் அல்ல  இந்தியாவின் கலிங்க நாட்டிலிருந்து துரத்திவிடப்பட்ட அந்நாட்டு இளவரசனான விஜயன் என்பவன் தனது தோழர்கள் எழுநூறு பேருடன் இலங்கையில் வந்து இறங்கி, அதன் பின், தொடக்கத்தில் தமிழர் [இயக்கர், நாகர்] பண்பாட்டை பின்பற்றி இருந்த இவர்களிடையே மகிந்ததேரரால் கிமு 3ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டதும், பண்டைய சிங்கள எழுத்துக்கள், குறிப்பாக மட்பாண்டங்களில் கி பி 6 ஆம் நூற்றாண்டின் பின்னர்தான் காணப்படுவதும் அதிகார பூர்வமான வரலாற்று சான்றாகும். என்றாலும் பவுத்த – சிங்கள அரசியல் மேலாண்மை இன்னும் தொடர்கிறது. உதாரணமாக, அண்மையில், முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்து குடிகொண்டுள்ள பௌத்த துறவியான கொலம்ப மேதாலங்க தேரர், பாரிய புத்தர் சிலை ஒன்றை நிறுவி முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தார். அங்கு மிக நீண்டகாலமாக ஒரு பிள்ளையார் ஆலயம் இருந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றாலும், அடாத்தாக பௌத்த பிக்குவால் 2019 ஆண்டு தொடக்கத்தில் விகாரை அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. அதே போல் கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலய விவகாரமும் இன்னும்  2019 ஆண்டு நடுப்பகுதியை தாண்டியும் தொடர்கிறது.
  
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்→
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A

ஜப்பானியர்களின் நீர் சிகிச்சை



   மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு ஆக்சிஜனுக்கு அடுத்தபடியாக நீர்தான் முக்கிய ஆகாரமாக விளங்குகிறது. மனித உடலில் 70 சதவீதம் நீர் நிறைந்திருக்கிறது. இது தாகத்தை கடந்து மனித உடல் இயக்கத்திற்கு நீரின் பங்களிப்பு எந்த அளவுக்கு அவசியமானது என்பதை உணர்த்துகிறது. சுறுசுறுப்புக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஜப்பானியர்கள் உடல் ஆரோக்கியத்திலும் வலுவானவர்களாக இருக்கிறார்கள். அவர்களது தேகமும் பளபளப்புடன் பிரகாசமாக காட்சியளிக்கும். அதற்கு அவர்கள் கையாளும் நீர் தெரபி சிகிச்சையே காரணமாகும்.
தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் நான்கு, ஐந்து டம்ளர் தண்ணீர் பருகுகிறார்கள். அந்த தண்ணீர் அந்தந்த காலநிலைக்கு ஏற்ப அறையின் வெப்பநிலைக்கு இணையாக சாதாரணமாகவோ அல்லது மிதமான சூடுடனோ இருக்குமாறு பார்த்துக்கொள்கிறார்கள்.
ஒருபோதும் அவர்கள் குளிர்ந்த தண்ணீரை பருகுவதில்லை. தண்ணீரில் இருக்கும் குளிர்ச்சி உடலில் கொழுப்பு படிவதற்கு காரணமாகிவிடும், செரிமான செயல்பாட்டையும் குறைக்கும் என்பது அவர்களின் கருத்தாக இருக்கிறது. காலையில் தண்ணீர் பருகிய பிறகு 45 நிமிடங்கள் கழித்தே காலை உணவை உட்கொள்கிறார்கள். எந்த உணவாக இருந்தாலும் நிதானமாக மென்று அதிக நேரம் எடுத்து சாப்பிடுகிறார்கள். அதன்பிறகு உணவு சாப்பிடுவதற்கோ வேறு பானங்கள் பருகுவதற்கோ குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.
ஜப்பானிய நீர் தெரபி சிகிச்சையால் மலச்சிக்கல் மற்றும் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. தலைவலி மற்றும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதையும் தடுக்க உதவும். ஜூஸ், சூப் போன்ற திரவ ஆகாரங்கள் தண்ணீருக்கு ஈடாகாது. அவற்றுள் சர்க்கரை, உப்பு போன்ற மூலப்பொருட்கள் கலந்திருக்கும். அவை உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும். நீங்கள் சுறுசுறுப்பானவர்களாகவோ, வெளி இடங்களுக்கு சென்று வேலை பார்ப்பவர்களாகவோ, வெப்பமான காலநிலை கொண்ட பகுதியில் வசிப்பவர்களாகவோ இருந்தால் நிச்சயமாக அதிக தண்ணீர் பருக வேண்டும்.
ஜப்பானிய நீர் தெரபி சிகிச்சையை பின்பற்றும்போது கலோரிகள் கட்டுப்படுத்தப்பட்டு உடல் எடை குறைய வாய்ப்பிருக்கிறது. பழச்சாறு வகைகள், சோடா மற்றும் இனிப்பு கலந்த பானங் களுக்கு பதிலாக தண்ணீரை பருகினால் உடலில் கலோரி அளவு தானாகவே குறைந்துவிடும். இதன் மூலம் தினமும் அதிக கலோரிகளை குறைக்கலாம். நிறைய தண்ணீர் பருகினால் உணவு சாப்பிடும் அளவு குறையும்.
அதன் மூலம் உணவில் உள்ள கலோரிகளின் அளவை குறைத்துவிடலாம். ஜப்பானிய நீர் தெரபி சிகிச்சையில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரே நேரத்தில் அதிக அளவில் தண்ணீர் பருகுவது நீரிழப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்துவிடும். சீறுநீரகத்திற்கு அதிக சுமையை கொடுத்துவிடும். நீரிழிவு நோயாளிகள், சிறுநீரக பாதிப்புக்கு ஆளானவர்கள், குறிப்பிட்ட சில நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் டாக்டர் களிடம் ஆலோசித்துவிட்டு தண்ணீர் பருகும் அளவை தீர்மானிக்க வேண்டும்.

🤽🤽🤽🤽🤽🤽🤽🤽🤽🤽🤽

குழந்தையும் கல்வியும்

Sadhguru-Jaggi-Vasudev

உங்களைப்போல ஒருவர் , 

உலகில் ஒருவர் கூட 

இருக்கமுடியாது.






குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் தங்களுக்குத் தாங்களே அழுத்தத்தினை வரவழைத்துக்கொள்கிறார்கள். இந்த அழுத்தம் எதனால் என்றால்நீங்கள் முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த வெவ்வேறு உயிர்களை ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள். உங்கள் குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது. தனித்தன்மை வாய்ந்த அக்குழந்தையினை ஒப்பிட்டுப் பேசுவது உங்கள் தவறான கண்ணோட்டமே!

உங்கள் குழந்தையை அவரின் அறிவு வளர்ச்சியை கருத்தில் கொண்டா பாடசாலைக்கு அனுப்புகிறீர்கள்அவர்கள் படித்து முடித்து பெரும் பணம் சம்பாதிக்கவேண்டும் என்று கருதுவது துரதிஷ்டமனதாகும்.

அறிவுக்கான தாகம் குழந்தைக்கு தூண்டி விடப்பட்டால் அவன் கற்பதை யாராலும் தடுத்து விட முடியாது. ஆனால் அவ் ஆர்வத்தை துண்டாமல் நீங்கள் அதனை அடக்குகிறீர்கள். ஏனெனில் உங்களைப் பொறுத்தவரையில் பணமும்சமுக அந்தஸ்த்தும் நோக்கம். அதனை அடைவதற்காக நீங்கள் கொடுக்கும் நிர்ப்பந்தங்கள் பிள்ளைகளை சோக நிலைக்குத்தள்ளிவிடுகின்றன.

உங்கள் குழந்தை எப்படியாவது எல்லாப்பாடங்களிலும் 100 புள்ளிகள் எடுக்கவேண்டும் என்பதே உங்கள் அவா. அவர்கள் கல்வியிலோஅறிவு வளர்ச்சியிலோ உங்களுக்கு அக்கறை இல்லை. பிள்ளை உச்சாணியில் அமரவேண்டும் என்பதே உங்கள் நோக்கம். ஆனால் எல்லோரும் எக்காலத்திலும் உச்சத்தில் இருந்துவிட முடியாது. எனவே இந்த நோய்த்தன்மை மாறவேண்டும்.    

பல்கலைக் கழக சான்றிதழ்கள் உங்கள் புள்ளிகளால் கிடைக்கலாம்.

அப்புள்ளிகள் எல்லோருக்குமே வாழ்க்கையில் வெற்றிபெற உதவிடாது. கல்வியில் கற்கவேண்டியவை இரண்டு. முதலாவது ஒருமனிதன் சம்பாதிப்பதுக்கு தயார் செய்வது எப்படிஇரண்டாவது இவ்வுலகில் வழ்வதுக்கு தன்னை தயார் செய்வது எப்படிஎன்பன. நாம் குழந்தையை இந்த நவீன உலகில் வாழ்வதற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும். அதே நேரத்தில் புதுமை என்கிற பெயரில் நடக்கும் முட்டாள் தனத்திலும் அவன் சிக்கி விடப்படாது.

எந்தவித கருத்துக்களும் திணிக்கப்படாமல் இருந்தால் ஒரு குழந்தை தனக்குத் தேவையான கல்வியை தானே தானே தெரிவு செய்யும்போது. அக்குழந்தை தனது நிலையினை உள்நோக்கிப் பார்கின்றபோது அதாவது தாமாகவே சிந்திகின்றபோது அவனுக்குள் நிகழும் அனுபவம் வாழ்க்கைகல்வியின்  ஆரம்பநிலை. சுய புத்திசாலித்தனத்துடன் வாழ ஆரம்பித்தாலே ஆனந்தமாய் மாறுவது இயல்பாய் மாறுவது அவனுக்குள் நிகழும்.ஆனந்தமாய் மாறுவதுதான் இறுதி இலக்கு இல்லையா?

--சற்குரு வாசுதேவ்.

கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும்....



 கடவுளுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
     கடவுளை நம்பாமல் நான் ஆன்மீகத்தில் ஈடுபட முடியுமா?

 ஆம்! முடியும்! இந்திய தத்துவங்களைப் போதிக்கும் 6 தர்ஷணாக்களில் – நியாயம், வைசேஷிகம், சாங்க்யம் – என்ற முதல் மூன்றில் கடவுளைப் பற்றிய பேச்சே இல்லை. கௌதம மகரிஷியின் நியாய தர்ஷணா ஞானத்தைப் பற்றிச் சொல்கிறது. உன் ஞானம் சரியா அல்லது தவறா என்று விளக்குகிறது. உதாரணத்துக்கு, உன் புலன்கள் (கண்கள்) மூலம் நீ சூரியன் உதிப்பதையும், மறைவதையும் காண்கிறாய். நியாய தர்ஷணத்தின் படி நீ காண்பதை எல்லாம் நம்பக் கூடாது. மேற்படி ஆராய்ந்து சூரியன் இருக்கும் இடத்திலேயே தான் இருக்கிறது என்றும் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்வதால் சூரியன் உதிப்பது போலும், மறைவது போலும் தோற்றத்தை நீ பார்க்கிறாய் என்று தெரிந்து கொள்கிறாய்.

நாம் கோப்பர்நிகஸ் என்பவர் தான் பூமி தன்னைத் தானே தன் அச்சில் சுழல்வதைக் கண்டு பிடித்ததாக எண்ணுகிறோம். ஆனால் அது உண்மை அல்ல. அவர் கட்டாயமாக அதைத் தெரிந்து கொண்டார். ஆனால் இந்தியர்கள் பல காலம் முன்பாகவே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வருவதை அறிந்திருந்தனர். நியாய தர்ஷணாவில் இவைகள் விவரிக்கப் படுகின்றன. நாம் மெய் என்று நினைப்பவைகளில் இருக்கும் பொய்யை நியாய தர்ஷணா விளக்குகிறது.

வைசேஷிக தர்ஷணம் என்பது இந்த ப்ரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் கணக்கு வைத்திருக்கிறது. – நிலம், நீர், நெருப்பு, காற்று, வெட்ட வெளி, மற்றைய பொருட்கள், உயிர்கள் எல்லாவற்றையும் ஆராய்வது வைசேஷிக தர்ஷணம். இதில் மனம், ஆத்மா, அறிவு, சித்தம் இவற்றைப் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது.

சாங்க்ய தர்ஷணம்.இந்த மூன்று தர்ஷணங்களும் கடவுளைப் பற்றிப் பேச வில்லை. ஆனால் அவை ஆத்மாவைப் பற்றிப் பேசுகின்றன. யோக சூத்திரத்தில் (4வது தர்ஷணத்தில்) மட்டும் கடவுள் என்ற ஒரு தலைப்பு இருக்கிறது.எனவே நீ கடவுளை நம்பித் தான் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் எதன் மீதாவது நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம். குறைந்த பட்சம், ஆன்மாவின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.

பொதுவாக, கடவுள் என்றால், யாரோ சொர்க்கத்தில் அமர்ந்திருப்பவர், இந்த உலகைப் படைத்தவர், உலகைப் படைத்த பின் இங்கிருந்து சென்று நம் எல்லோருடைய தவறுகளையும் கண்டு பிடிப்பதற்காக இருக்கிறார் என்று எண்ணுகிறோம். நாம் தவறு செய்யும் போதெல்லாம் ஒரு கோலை எடுத்து நம்மைத் தண்டிப்பார் என்று நினைக்கிறோம். நாம் பேசுவது இப்படிப்பட்ட கடவுளைப் பற்றி அல்ல.

கடவுள் என்பது இருப்பின் அடையாளம். இந்த உலகம் அன்பு என்ற பொருளால் ஆனது. அன்பு தான் கடவுள். நீ தனியானவன் அல்ல. உன்னை நீ கடவுளிடமிருந்து பிரித்து தனியாக்கிக் கொள்ள முடியாது.

கடவுளுக்கு அப்பால் எதுவுமே கிடையாது. எல்லாமே கடவுளுக்கு உள்ளே தான் இருக்கிறது. அது நல்லது, கெட்டது, சரி, தவறு எல்லாவற்றையும் உள்ளடக்கியது. மகிழ்ச்சியும் வருத்தமும் அதற்குச் சமம். எது ஒன்று இருக்கிறதோ, பூரணமான ஒன்று எல்லாவற்றையும் உள் அடக்கியது எதுவோ அதை அழைக்க நாம் கடவுள் என்ற பெயர் வைத்திருக்கிறோம்.இதைப் பற்றி கவலைப் படாதே. நீ உன்னைப் பற்றி அறிந்து கொள்.

.........குருதேவர்


ஆனந்தம் ஆனந்தமே




      
"புருவம் உயர்த்தி புன்னகை பூத்து
அருகில் வந்தால் ஆனந்தம் ஆனந்தமே
பெருமிதம் கொண்டு கட்டித் தழுவி 
நெருங்கி வந்தால் ஆனந்தம் ஆனந்தமே"

"விருப்பம் தெரிவித்து வியந்து பாராட்டி
பெருமை படுத்தினால் ஆனந்தம் ஆனந்தமே
உருக்கமாக பேசி நெஞ்சில் சாய்ந்து
வருடி முத்தமிட்டால் ஆனந்தம் ஆனந்தமே"

"பருவ எழிலில் பெண்மை பூரிக்க
நேருக்கு சந்தித்தால் ஆனந்தம் ஆனந்தமே
பருத்த மார்பும் சிறுத்த இடையும் 
கருத்த கூந்தலும் ஆனந்தம் ஆனந்தமே"

"பருத்தி சேலையில் பட்டு ரவிக்கையில்
உருவம் தெரிந்தால் ஆனந்தம் ஆனந்தமே
திரும்பி பார்த்து வெட்க்கப் பட்டு
விருப்பம் என்றால் ஆனந்தம் ஆனந்தமே"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]

'கலக்கப்போவது யாரு' முதல் `டாக்டர்’ வரை சிவகார்த்திகேயன்:






எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் கடந்து வந்த பாதை........

திருச்சியில் கல்லூரியில் படிக்கும்போது தான் தனக்குள் இருந்த மிமிக்ரி கலைஞனை சிவா கண்டறிந்திருக்கிறார்.
எம்பிஏ படிப்பதற்காக சென்னை வந்தவர் நண்பர்களின் அறிவுரைப்படி 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அவருக்குள் இருந்த நகைச்சுவை உணர்வும், மிமிக்ரி கலையும் 'கலக்கப்போவது யாரு' டைட்டிலை அவருக்கு பெற்றுக் கொடுத்தது.
'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி தான் சிவா வாழ்க்கையின் திருப்புமுனை என்றே சொல்லலாம். ஆமாம், அந்த நிகழ்ச்சி மூலமாக விஜய் டிவி தொகுப்பாளராக அறிமுகமாகிறார். பின்னர் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.

விஜய் டிவியில் நட்சத்திர தொகுப்பாளரான சிவகார்த்திகேயன், விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை அவருக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் தொகுத்து வர சின்னத்திரை ரசிகர்களை சம்பாதித்தார்.
2012ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' திரைப்படத்தின் மூலம் நாயகனாக வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.அதைத் தொடர்ந்து வரிசையாக பட வாய்ப்பு வர அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
'ரெமோ' படத்தில் பெண் வேடமிட்டு நடித்து குழந்தைகளுக்கு பிடித்தமான நடிகர் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.
அம்மா பேச்சை மீறாதவர் சிவா. குடும்பத்தினருடன் கலந்தாலோசிக்காமல் முக்கிய முடிவுகளை எடுக்க மாட்டாராம்.
படத்தில் நடிக்க வருவதற்கு முன்னரே தன்னுடைய அத்தை மகளான ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.
சிவா எப்பொழுதும் என் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் எதுவென கேட்டால், என் மகள் பிறந்த நாளை மட்டும் தான் சொல்லுவேன் எனப் பல பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
சிவா தன்னுடைய மகள் ஆராதனாவை 'கனா' திரைப்படத்தில் பாட வைத்தது அவருடைய ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது.
ஆராதனாவிற்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது சிவாவின் ஆசையாம்.
எதிர்நீச்சல் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் வருகிற 'ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்' என்கிற வரியை நிஜ வாழ்க்கையில் சாத்தியப்படுத்தி பலருக்கும் முன்னுதாரணமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவருடைய பிறந்தநாளான பிப்ரவரி 17, அவருடைய 35ஆவது பிறந்தநாள் அன்று இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.