"மீனவன்"-கவிதை

 


"அலை எதிரே  முட்டி மோதி

வலை வலையாய்  தூக்கி வீசி

உலை வைத்து கறி சமைக்க

ஓலைக் குடிசை மகிழ்ந்து வாழ

காலை நேரம் மீன் பிடிக்கிறான்!”

 

"மரத் தோணியில் கடலை அளந்து

மகர மீன் பல பிடித்து

மகிழ்ச்சி பொங்க கரை வந்து

மண்ணைத் தொட்டு வானை வணங்கி

மனையாள் முகம் கண்டு மலர்கிறான்.!"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

மனைவி/House Wife -குறும்படம்

 

மனைவியின் அன்பை உணராத சில பேருக்கு இது ஒரு சமர்ப்பணம். வாழ்க்கைத் துணையை நேசியுங்கள், வாழ்வில் வசந்தத்தை காண்பீர்கள்.

📽பகிர்வு:செமனுவேந்தன் 

விஞ்ஞானம் வழங்கும் விந்தை

 

அறிவியல்=விஞ்ஞானம்

 

📸பலன் தரும் ஒளி சிகிச்சை


குறைந்த ஆற்றலுடைய லேசர் அல்லது எல்..டி. விளக்குகளிலிருந்து வரும் ஒளியை மருத்துவத்திற்குப் பயன்படுத்தும் முறைக்குப் பெயர் போட்டோ பையோ மாடுலேஷன் (Photobiomodulation -- PBM) என்பதாகும். இதைக் கொண்டு சாதாரண காயம் முதல் இதய நோய்கள் வரை சிகிச்சை செய்ய முடியும்.

சமீபத்தில் சில மனநல பிரச்னைகளுக்கும் கூட இந்த முறையைப் பயன்படுத்தி சிகிச்சை செய்துள்ளனர். நாள்பட்ட மன அழுத்த (Chronic stress) நோயைக் குணமாக்க தலையிலும், வயிற்றிலும் ஒளிச்சிகிச்சையைப் பயன்படுத்த முடியும் என ஸ்பெயின் நாட்டின் பார்செலோனா பல்கலையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

மன அழுத்தம், நினைவுக் குறைபாடு, ஆட்டிசம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் குடலில் உள்ள நுண்ணுயிர்களுக்கும் தொடர்புண்டு என்று ஏற்கனவே பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய ஆய்வு இந்த முடிவுக்கு மேலும் வலு சேர்க்கிறது.ஆய்வாளர்கள் போட்டோ பையோ மாடுலேஷன் சிகிச்சையை மன அழுத்த முள்ள எலிகள் மீது 28 நாட்கள் தொடர்ந்து மேற்கொண்டனர். மன அழுத்தத்தால் எலியின் மூளையில் வீக்கமும், குடல் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையில் குறைபாடும் ஏற்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் ஆறு நிமிடங்கள், அகச்சிவப்புக் கதிர்கள் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் மேற்குறித்த இரண்டு பாதிப்புகளும் சரியாயின. இந்தச் சிகிச்சை மேம்படுத்தப்பட்டு விரைவில் நம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

 

🍛புற்றுநோய்க்கு காரணம் உப்பா?

அதிகளவில் ஏற்படும் புற்று நோய் வகைகளில் ஐந்தாம் இடத்தில் இருப்பது இரைப்பைப் புற்றுநோய். கிழக்காசிய நாடுகளில் மட்டுமே அதிகளவில் காணப்பட்டு வந்த இந்தப் புற்றுநோய் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளிலும் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுவும் குறிப்பாக, 50 வயதுக்குட்பட்டவர்களிடம் இந்நோய் அதிகரித்து வருவதால், இதுகுறித்த ஆய்வில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த வியன்னா பல்கலை இறங்கியது.

உணவில் அதிகப்படியான உப்பைச் சேர்ப்பது டிமென்ஷியா, டைப்-2 நீரிழிவு ஆகியவற்றை அதிகரிக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில ஆய்வுகளில் அதிக உப்பு இரைப்பையில் உள்ள பாதுகாப்புப் படலத்தைச் சேதமாக்குவதாகவும், சேதமான இடத்தில் ஹெலிக்கோபேக்டர் பைலோரி பாக்டீரியா வளர்ந்து புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் சில ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

இந்த ஆய்வறிக்கைகளைப் படித்த பின்னர் தனி ஆய்வு ஒன்றை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். நடுத்தர வயதுடைய 4,71,144 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களின் சராசரி வயது 56. அவர்களில் 53.9 சதவீதம் பெண்கள். அவர்கள் அன்றாட உணவில் எவ்வளவு உப்பு சேர்த்துக் கொள்கின்றனர் என்று கண்காணிக்கப்பட்டது.

குறைவாகச் சேர்ப்பவர்கள், மிதமாகச் சேர்ப்பவர்கள், அதிகம் சேர்ப்பவர்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர்.

ஆய்வின் இறுதியில் அதிகமான உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்குப் பிறரை விட இரைப்பைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு, 41 சதவீதம் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. உணவில் சேர்க்கப்பட வேண்டிய பாதுகாப்பான உப்பு அளவு என்ன என்பது குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடந்தபடி உள்ளன.

 

இரண்டு நாட்கள் விரதம்

மதுசாரா கொழுப்பு மிகு ஈரல் நோய் என்பது, மதுப் பயன்பாட்டினால் வருவதல்ல. மாறாக மரபியல், உடல் பருமன் இவற்றால் வருவது. ஐந்து நாட்கள் உண்பது, இரண்டு நாட்கள் விரதம் இருப்பது என்ற விரத முறையின் வாயிலாக இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

 

🐘யானைகள் என்ன செய்யும்?

புதிதாக அறிமுகமானவர்கள், ஏற்கனவே அறிந்தவர்களைக் காணும்போது வணக்கம் சொல்வது, கையசைப்பது மனிதர்களின் பழக்கம். ஆனால் யானைகள் என்ன செய்யும்? ஆப்பிரிக்க யானைகளைத் தொடர்ந்து கண்காணித்த ஆய்வாளர்கள் அவை தங்கள் நண்பர்களைப் பார்க்கும்போது தும்பிக்கையைத் துாக்குவது, காதுகளை அசைப்பது, வாலை ஆட்டுவது முதலிய செயல்களை செய்கின்றன என்கின்றனர். ஆனால், இதை விட சிறுநீர், கழிவு, வியர்வு வெளியேற்றுவதையே பிரதானமாகச் செய்கின்றன. இதிலிருந்து வரும் வாசனையை கொண்டே அவை தங்கள் நண்பர்களை அறிந்து கொள்கின்றன.

 

🦷பல்லை வளர வைக்க…

உரிய வயதில் பல் வளராதவர்கள் மற்றும் பல்லை இழந்தவர்களுக்கு, பல்லை வளர வைக்கும் சிகிச்சையை ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். பல் வளர்ச்சியைத் தடுக்கின்ற ஒரு வகை புரதத்தைக் கட்டுப்படுத்துவதன் வாயிலாக இதைச் சாத்தியப்படுத்த முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

🌊நீரில் நுண்நெகிழிகளை சுத்தப்படுத்தும் ரோபோ

இன்றைய தேதியில் 'மைக்ரோ பிளாஸ்டிக்' எனப்படும் நுண்நெகிழிகள் இல்லாத இடமே இல்லை என்று கூறலாம். நுண் நெகிழி என்பது, 5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டத்தை உடைய நெகிழிகளைக் குறிக்கும்.

இவை நீரில் அதிகமாகக் காணப்படுகின்றன. தண்ணீரில் மிதக்கும் நெகிழிகள் சிதையும்போதும், சிந்தடிக் உடைகளைத் துவைக்கும் போதும், கார் டயர்கள் சாலைகளில் உராயும்போதும் இவை உருவாகின்றன. இவற்றின்மீது ஆபத்தான பாக்டீரியா ஒட்டிக் கொண்டு வளர்கின்றன. அதனால் நாம் நுண்நெகிழிகள் உள்ள தண்ணீரை குடிப்பது ஆபத்தாகிறது. நுண்நெகிழி களை நீக்கவல்ல சிறிய ரோபோக்களை செக் குடியரசு நாட்டின் தொழில்நுட்பப் பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உருளை வடிவத்தில் உள்ள இவை, வெறும் 2.8 மைக்ரோ மீட்டர் அளவுடையவை. இவற்றின் மையத்தில் காந்தம் இருக்கும்.

இந்த ரோபோக்களை நீரில் மிதக்கவிட்டு வெளியில் இருந்து காந்தப் புலத்தைக் கொண்டு அவற்றை இயக்குவர். இவை பாக்டீரியா, நுண்நெகிழிகளைத் தங்களை நோக்கி ஈர்க்கும். 30 நிமிடங்கள் கழித்து இந்த ரோபோக்கள் வெளியே எடுக்கப்படும். அல்ட்ரா ஒலிகளைக் கொண்டு ரோபோக்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் கிருமிகள், நுண்நெகிழிகள் நீக்கப்படும்.

நீக்கப்பட்ட கிருமிகள் மீது புற ஊதாக் கதிர்கள் பாய்ச்சப்பட்டு அவை கொல்லப்படும். ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த ரோபோக்கள் சிறப்பாகச் செயல்பட்டன. 5 முதல் 10 ஆண்டுகளில் இவை பலவகைகளில் மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

🛳ஹைட்ரஜன் வாயுவில் கப்பல்

முழுதும் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ஆடம்பர பயணியர் கப்பல் நெதர்லாந்து நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 821 என்று அழைக்கப்படும். இதில், ஹைட்ரஜன் மைனஸ் 253 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் சேமிக்கப்படுகிறது.

 

🧠கெடாமல் வைத்திருக்க

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்குத் தேவையான உறுப்புகளை, நீண்டகாலம் கெடாமல் பாதுகாப்பது கடினமானது. சீனாவைச் சேர்ந்த ஃபூடான் பல்கலை விஞ்ஞானிகள் மெத்தில் செல்லுலோஸ் உள்ளிட்ட நான்கு வேதிப் பொருட்களைக் கொண்டு, மெடி (MEDY) எனப்படும் திரவத்தை உருவாக்கி உள்ளனர். இதில் 18 மாதங்கள் வரை மூளையைக் கெடாமல் வைத்திருக்க முடியும்.

 

🦴சுலபமாக எலும்பு முறிவு

அமெரிக்காவில் 30,000 முதியவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்காகத் தொடர்ந்து, மருந்துகள் எடுத்துக் கொள்பவர்களுக்கு எலும்பு வலிமை குறைவதால், சுலபமாக எலும்பு முறிவு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

 

🤽கடலில் தப்பிக்க…

கடலில் தத்தளிக்கும் மனிதர்களுக்கு உதவும் வகையில் TY -- 3R எனும் புதுவகை ட்ரோனை, சீனாவைச் சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. தத்தளிப்பவர்களை நோக்கி இது பறந்து செல்லும். அவர்கள் இதைப் பற்றிக் கொண்டு நீந்தித் தப்பிக்கலாம்.

 

🩸ரத்த ஓட்டத்தை அறிய…

மூளையில் ரத்த ஓட்டத்தைக் கண்காணிப்பது சுலபமல்ல. அஞ்சல்தலை அளவே உள்ள ஒரு புதிய கருவியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை வடிவமைத்துள்ளது. அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம் வாயிலாக இந்தக் கருவி ரத்த ஓட்டத்தை அறிய உதவுகிறது.

 

🦻கேட்கும்… கேட்காது

அமெரிக்காவைச் சேர்ந்த வாஷிங்டன் பல்கலை செயற்கை நுண்ணறிவைக் கொண்டு செயல்படும் ஒரு புது ஹெட்போனை உருவாக்கி உள்ளது. இதை அணிபவர் கூட்டத்தில் இருக்கும் ஒருவரைப் பார்த்தால் அவர் பேசுவது மட்டும் கேட்கும். வேறு ஒலிகள் கேட்காது.

 

🝀'டாட்டு'களால் புற்றுநோய்

உடலில் 'டாட்டு' குத்திக் கொள்வது தற்போது பிரபலமாகி வருகிறது. சுவீடனைச் சேர்ந்த லுண்ட் பல்கலை 'டாட்டு'களால் புற்றுநோய் வரும் வாய்ப்பு, 21 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுப்பூர்வமாக நிறுவியுள்ளது. பாதுகாப்பான வகையில் 'டாட்டு'களை வரைந்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது.

 

🏢சிமென்டுக்கு மாற்று

இன்றைய தேதியில் முக்கியமான கட்டுமானப் பொருளாக இருப்பது, கான்கிரீட் தான். கான்கிரீட் தயாரிப்பதற்கு சிமென்ட் தேவை. சிமென்ட் உற்பத்தி மட்டுமே உலகின் மொத்த கார்பன் மாசுபாட்டில் 8 சதவீத பங்கு வகிக்கிறது. ஆகவே, சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும் என்றால் சிமென்டுக்கு மாற்றான பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும். அப்படித் தான் எரிமலைகளிலிருந்து கிடைக்கும் சாம்பலை பயன்படுத்துகின்ற வழக்கம் வந்தது. ஆனால், இது எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. இதற்கு மாற்றாக அனல் மின் நிலையங்களில் வீணாக்கப்படும் கரியிலிருந்து கிடைக்கும் சாம்பலைப் பயன்படுத்த முடியும் என, விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்.எம்..டி. பல்கலை அனல் மின் நிலையத்திலிருந்து கரி சாம்பலை எடுத்துக் கொண்டு, அதனுடன் 18 சதவீதம் சுண்ணாம்பையும் 3 சதவீதம் நானோ சிலிகாவையும் கலந்தனர். இந்தக் கலவையை கான்கிரீட்டுடன் சேர்த்துப் பயன்படுத்தி பார்த்தனர். இந்த கான்கிரீட், வழக்கமாக போர்ட்லாந்து சிமென்ட் பயன்படுத்தப்பட்டு செய்யப்படும் கான்கிரீட்டை விட அதிக வலிமையோடு இருந்தது.

சல்பேட், அமிலங்கள் ஆகியவற்றால் எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. எனவே வழக்கமான சிமென்டிற்குப் பதிலாக இதைத் தாராளமாகப் பயன்படுத்தலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்