பழகத் தெரிய வேணும் – 14

(பெண்ணுக்கு மரியாதை)

பல ஆண்கள் பெண்களை மட்டமாக நடத்துகிறார்கள் என்று நீங்கள் எழுதுவதைப் பார்த்து எனக்கு ஆத்திரமாக இருக்கும். நீங்க எழுதறது உண்மைதான்னு இப்போ புரியுது. என் மகளை அவளுடைய கணவர் அப்படித்தான் நடத்துகிறார். வருத்தமா இருக்கு!” என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு தெரிவித்தார் ஒரு பத்திரிகை ஆசிரியர்.

ஆண்தான் மேலானவன்என்பதுபோல், அவரே தன் மனைவியை அப்படி நடத்தியிருக்கக்கூடும். ஆனால், ‘மகள்என்று வரும்போது, ஆண்களின் பக்கம் சாயத் தோன்றவில்லை. மருமகன் மீதுதான் கோபம் எழுந்தது.

தன்னை அவமரியாதையாக நடத்தும் கணவனை மகள் ஏன் எதிர்ப்பதில்லை என்ற குழப்பம் அவருக்கு. தாயைப் பார்த்தே வளர்ந்திருந்தால் மகள் வேறு எப்படி இருப்பாள்?

மகனும் தந்தையைப்போலவே தன் மனைவியிடம் அலட்சியம் காட்டுவான். அந்த நடத்தை அவருக்குத் தப்பாகத் தோன்றாது.

ஒரு முதியவர் கடிதம்வழி, மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்தார், ‘என் மனைவி என் மனம் கோணாது நடப்பவள். மிகவும் பொறுமைசாலி,’ என்று.

பதிலுக்கு, ‘உங்கள் மனைவியின் மனதில் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறதா?’ என்று கேட்டிருந்தேன்.

கணவனின் மகிழ்ச்சிக்காக பலவற்றை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று பழமையிலேயே ஊறிப்போன பெண்கள் எண்ணுகிறார்கள்.

கதை

அடிக்கடி, நான் அம்மன் பக்தன்என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வார் சீலன். எல்லா பக்திப்பாடல்களும் அவருக்கு மனப்பாடம்.

ஆனால், அவர் மனைவி விமலாவை நடத்துவதைப் பார்த்தால், அவளுக்கு எதுவுமே தெரியாது, அடிமுட்டாள் என்பதுபோல் இருக்கும்.

சீலனுடைய மனதில் ஒரு வக்கிரம். மனைவியைப்போல் இல்லாத பெண்களைக் கண்டால் அலாதி மோகம். அவர்கள் நட்பைப் பெற பல முயற்சிகள் எடுப்பார்.

அறிவாளிகளான பெண்களுடன் நட்பு வைத்துக்கொள்ள எனக்குப் பிடிக்கிறது. சும்மா பேச மட்டும்தான்னு சொல்வார்,” என்று அப்பாவித்தனமாக விமலா கூறும்போது, கேட்பவர்களுக்கு அவள்மேல் பரிதாபம்தான் எழும்.

சீலனுக்குப் புரியாதது: அவர் எதிர்பார்த்தபடி, நடத்தியபடிதான் மனைவி ஆகியிருக்கிறாள். அவளை அவர் தோழமையுடன் நடத்தி, அவளுக்குத் தெரியாததைப் பொறுமையாகச் சொல்லிக்கொடுத்திருந்தால் அவளுக்கு அவர்மேல் அன்பு ஏற்பட்டிருக்கும். அவர் எப்படி நடத்தினாலும், ‘தலைவிதிஎன்று விரக்தியுடன் அதைப் பொறுத்துப் போயிருக்கமாட்டாள்.

புதிய விஷயங்களைக் கற்பதில் அவள் ஆர்வம் காட்டாவிட்டாலும், வேறு எதிலாவது சிறந்திருக்கமாட்டாளா! அதைப் பாராட்டியிருக்கலாமே!

ஏன் இந்த அதிகாரம்?

மனைவி ஒரு போகப்பொருள் மட்டும்தான் என்று நம்புகிறவன் அவளிடம் அதிகாரம் செலுத்துகிறான். அதனாலேயே அவளுடைய நட்பை இழக்கிறான். அதை வெளியே, நண்பர்களிடமோ, பிற பெண்களிடமோ தேடுகிறான்.

பெண்ணுக்கான கட்டுப்பாடுகள்

அவள் உணர்ச்சிப்பெருக்கில்லாது, ஆணைப்போல் யோசிக்கவேண்டும்.

ஓயாது உழைக்கவேண்டும். ஆனால், இளமையும் மாறாது இருக்கவேண்டும்.

மொத்தத்தில், கணவன் பிற ஆண்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்ள ஏற்ற வகையில் இருக்கவேண்டும்.

நடக்கிற காரியமா?

ஒரு பெண்ணை அவளது கணவன் ஏதோ செல்லப்பிராணி என்பதுபோல் நடத்தி, அதற்கு அவள் பணிந்தும் போனால், அது அவனுக்குக் காட்டும் மரியாதையாலோ, அன்பினாலோ இல்லை. அவள் வளர்க்கப்பட்ட விதத்தில் எங்கோ கோளாறு நேர்ந்திருக்கிறது என்றே தோன்றுகிறது.

கதை

சீதாபதி மெத்தப் படித்தவன். பத்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளின் தந்தை. பெண்பித்தன்.

திருமணமாகாத இளம்பெண்களைப் பார்த்தால், உரிமையுடன் அவர்கள் தோளில் கைபோட்டு, “என் மனைவி இங்கிதம் தெரிந்தவள்,” என்று ஆரம்பிப்பான்.

அவனில்லாதபோது, அவளும், ‘ஆம்படையானுடைய சந்தோஷத்தைவிட நமக்கு வேற என்னடி வேணும்?” என்பாள்.

எனக்கு நிறையப் பெண்கள் கிடைப்பார்கள்!’ என்று பெருமை பேசுகிறவன் தனக்கு ஆண்மை அதிகம் என்று எண்ணுகிறான். உண்மையில், அவனிடம் ஏதோ குறை இருப்பதால்தான் பெண்களை மயக்க முயற்சிக்கிறான். கலாசாரமும் துணை புரிகிறது.

அண்மையில் படித்தது

மெடகாஸ்கர் (MADAGASCAR) ஆப்பிரிகாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு. மிக ஏழ்மையான நாடு.

ஆண்கள் பெண்களை வதை செய்வது சர்வசாதாரணம். தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை ஏற்றே பழக்கப்பட்டதால், கணவன் அடித்து, உதைக்காவிட்டால் அவனுக்குத் தன்மீதுள்ள அன்பு குறைந்துவிட்டது என்று அத்தீவிலுள்ள பெண்கள் நினைக்கிறார்கள்!

பெண்களை எவ்விதமாவது வதை செய்வது சட்ட விரோதம் என்று இப்போது விதிக்கப்பட்டிருந்தாலும், அந்நாட்டில் எந்தப் பெண்ணும் வலிய வந்து புகார் கொடுப்பதில்லை. ஒரு பெண்ணுக்கு லஞ்சம் கொடுத்துத்தான் அவளைப் புகார் அளிக்கச் செய்ய முடியுமாம்!

ஏழ்மை, அதனால் எழும் வருத்தம் அல்லது அசௌகரியம், கலாசாரம் எல்லாம் ஆண்கள் தான்தோன்றித்தனமாக நடக்க வைக்கிறது. பெண்களையும் இவ்வாறு அடிமை வாழ்க்கையை ஏற்கச் செய்திருக்கிறது.

 கதை

நாற்பது வயதுவரை, ‘எனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆகுமா!’ என்று ஏங்கிய மலேசியப் பெண் கலாவதி.

ஒருவழியாக, திருமணம் ஆனதும், ஒவ்வொரு இரவிலும் கணவன் தன்னை நாடுவது அவளுக்குப் பெருமையைக் கொடுத்தது. அதற்குப்பின், அவளைக் கட்டிலிலிருந்து கீழே தள்ளி, அடித்து உதைப்பான். அதனால் என்ன மோசம்!

வதை அதிகரித்து, சமூகநல அதிகாரிகளின் கவனத்திற்கு கலாவதி கொண்டுவரப்பட்டாள்.

பரிதாபத்துக்குரிய இப்பெண்ணுக்குப் புத்தி சொல்வதாக எண்ணி, “ஐயோ! இந்தமாதிரி மனிதனுடன் ஏன் சேர்ந்து இருக்கிறாய்?” என்று நான் அலறினேன்.

அவருக்கு இல்லாத உரிமையா!”என்று கேட்டவளின் குரலில் கோபம்

ஏன் இந்த அவல நிலை?

பல இந்தியக் குடும்பங்களில், ‘என்ன இருந்தாலும், நீ ஒரு பெண்!’ என்று சொல்லியே பெண்குழந்தைகளை வளர்க்கிறார்கள். அவர்களுக்குள் ஏதோ ஏமாற்றம், வெறுமை. அந்தக் குழப்பம் எதனால் என்று புரிவதுமில்லை.

ஆண்என்றால் உயர்ந்த மனிதன் என்ற எண்ணம் பதிந்துவிடுவதால் அவனை அண்டி வாழ்ந்தால்தான் தனக்கு மதிப்பு என்று தோன்றிவிடுகிறது.

தம்மைப்போல் இல்லாத பிற பெண்களைக் கண்டால் அவர்களுக்கு கோபம். பொறாமையும் எழலாம். ஆனால் மாறவும் பயம். அப்போது யார் பக்கபலமாக இருப்பார்கள்? 

(தொடரும்)

:-நிர்மலா ராகவன் /=எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉அடுத்த பகுதியை வாசிக்க 
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக