நல்ல உறவில் இருக்கவேண்டிய சில அடிப்படை அம்சங்கள்!

நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறரை சார்ந்தே வாழ்ந்து வருகிறோம். அப்படி இருக்கும் போது, அந்தந்த உறவுக்கு உரியோரை முறையாக பேணுதல் அவசியம்.

அது நமக்கு மட்டுமல்லாமல், அடுத்தவருக்கும் வாழ்வியலில் மேம்பாட்டை வழங்குகிறது. ஒரு முறை இருமுறை என்றில்லாமல் தொடர்ந்து, நமது வாழ்வில் அடுத்தவருக்கு இடம் கொடுத்து, அவரது வாழ்வில் சிறந்த இடம் பெற்று இருக்க வேண்டும். அதுவே சிறந்த உறவுகளுக்கான நல்ல அறிகுறி. அவ்வாறான உறவுகள் அந்த இருவரையும் தாண்டி, சமூக முன்னேற்றத்திற்கும் வித்திடும். பொதுவாக ஒரு உறவானது மிகவும் மகிழ்ச்சியுடன் தொடங்குகிறது.

அந்த உறவை ஒரு நல்ல உறவாக பராமரிக்க வேண்டியது சம்மந்தப்பட்ட இரு தரப்பின் கடமை. ஒருவருக்கொருவர் நல்ல விதமாக உறவுமுறையை வைத்து கொள்வதற்கு சில குறிப்புகள் உள்ளன. அதில் அர்ப்பணிப்பு, பரஸ்பர காதல், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகியவை அடங்கும். மேலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளுதலும், ஒற்றுமையாய் இருத்தலும் முக்கியம். இப்போது அந்த அழகான உறவுக்கென்று இருக்கும் அடிப்படையான சில விஷயங்களைப் பற்றி பார்ப்போமா!

உறவுக்கான அடித்தளம்
ஒரு நல்ல உறவை ஆரம்பித்த பின், அதற்கு ஒரு வலிமையான அடித்தளம் அமைக்க வேண்டும். அதிலும் அந்த அடித்தளத்தை நம்பிக்கை மற்றும் நேர்மை கொண்டு உருவாக்க வேண்டும்.

கடந்த கால நினைவுகள்
ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தில் தேவையில்லாத கடந்த கால நினைவுகள் இருக்கும். அவற்றை எல்லாம் எதிர்காலத்திற்கு எடுத்து செல்ல கூடாது. அதிலும் முக்கியமான ஒன்று என்னவென்றால், கணவர்/மனைவியிடம் அதை பற்றி முழுவதுமாக கூறி விட வேண்டும் அல்லது முழுமையாக மறைத்து விட வேண்டும்.

புரிதல்
ஒரு உறவு என்பது புரிதலுடன் செல்லக்கூடிய முடிவில்லா பயணம் ஆகும். உங்களது அன்புக்குரியவர் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளாத விஷயம் நிச்சயம் ஏதேனும் ஒன்றாவது இருக்கும். எனவே நல்ல புரிதலுடன் இருப்பதே நல்ல உறவைப் பலப்படுத்தும்.

தொடர்பு
ஒரு நல்ல உறவை உருவாக்குவது தடையற்ற தொடர்பு தான். ஆகவே அன்புக்குரியவரிடம் தொடர்ந்து உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை பகிர்ந்து கொண்டால், அந்த உறவானது ஆரோக்கியமாக செல்லும்.

மரியாதை
முக்கியமாக அன்புக்குரியவரின் உணர்வுகள் மற்றும் ஆசைகளை மதிக்க வேண்டும், மேலும் அவர்களை எவ்வித மாற்றமும் இல்லாமல், அவர்களாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மன்னிப்பு
இவ்வுலகில் எல்லா விதத்தில் மிக சரியாக இருக்கும் ஒருவர் என்று எவரும் பிறக்கவில்லை. ஆகவே அன்புக்குரியவர் செய்யும் முக்கியமற்ற பிழைகளை, தவறுதலாக செய்த விஷயங்களை மன்னித்து மறக்க வேண்டும். குறிப்பாக மன்னிக்கும் போது, அவற்றை எந்நேரத்திலும் சொல்லிக் காண்பிக்கக்கூடாது.

நட்பு
நல்ல ஆரோக்கியமான உறவில் நல்ல நட்புறவுடன் இருத்தல் மிகவும் அவசியம். இதனால் இது உறவை வலுபடுத்த உதவும்.

எல்லைகள்
அன்புக்குரியவருக்கு எவ்வளவு தான் மிகவும் முக்கியமானவராக இருந்தாலும், உங்களுக்கென்று எல்லைகளை வகுத்து கொள்ள வேண்டும். உங்கள் அன்புக்குரியவரின் எல்லைகளையும் மதிக்க வேண்டும். அவ்வாறு இருப்பது உங்கள் தனித்துவத்தை காண்பிக்க உதவும்.

தனிமை
ஒவ்வொருவருக்கும் தனிமை மற்றும் இடைவெளி இருக்க வேண்டும். ஆகவே ஒருவருக்கொருவர் அவரது விருப்பங்களை மதித்து இடைவெளி கொடுத்து, அவர்கள் புதிய பழக்கங்களை வளர்த்து கொள்ள நேரம் கொடுக்க வேண்டும்.

விசுவாசம்
நல்ல உறவில் மிக முக்கியமான அடித்தளம் விசுவாசம் ஆகும். அது இல்லாமல் எந்த உறவும் நீடிப்பதில்லை. அன்பும், மரியாதையும் அடிப்படை ஆதாரமாக கொண்ட உறவுக்கு விசுவாசம் அதிமுக்கியம்.








0 comments:

Post a Comment