ஐயோ பாவம் அப்பாக்கள் !!


பொதுவாகவே சமுகத்தில் பெண்களுக்கென்று ஒரு மேன்மையான இடம் உண்டு.  சாதனை படைப்பவர்களையும், திறமை உள்ளவர்களையும் பெருமை படுத்தி அங்கிகாரமும் கிடைப்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். மகளிர் தினக் கொண்டாட்டமும், mother's day யும் அதை தான் பறைச்சாற்றுகின்றன. அதே சமயம் அதை தக்க வைத்துக் கொள்வதும் நம் கையில் தான் உள்ளது. ஆனால் இதே முக்கியத்துவத்தை குடும்பத்தின், சமுதாயத்தின் மற்றொரு கண்ணான கணவன், தந்தை என்ற முகங்களைக் கொண்ட ஆண்களுக்கு கொடுக்கிறோமா என்ற கேள்விக்கு முழு மனதுடன் ஆமாம் என்று சொல்வதில் தயக்கம் ஏற்படத்தான் செய்கிறது.

குடும்பத்தில் அம்மாவின் பாசம், அம்மா, பெண் , அம்மா மகன், மாமியார் மருமகள் என்று பெண்களை மையப் படுத்தியே இருக்கும் உறவுகளை பற்றியப் பாசத்தை தான் அதிகம் பேசுகிறோம், போற்றுகிறோம்.  குடும்பத்தின் நங்கூரமாக இருக்கும் ஜீவனைப் பற்றி " ஐயோ பாவம்" பேசப் படுவதும் கவனிக்க படுவதும் இல்லை; நான் குறிப்பிடுவது கணவன், தந்தை என்ற முகம் கொண்டஆண்களை பற்றி. அதுவும் கணவன் என்பதிலுருந்து தந்தை என்ற மேல்பதவி கிடைத்தால் உள்ளதும் போச்சு!! தாய் குழந்தைகள் ஒரு உலகமாகவும் தந்தை கொஞ்சம் தனிமை படுவதையும் தான் பார்க்க முடிகிறது. இது போதாதென்று நம் காலாச்சாரத்தில் ஆண்கள், பெண்களை போல் உணர்ச்சிகளை அதிகம் வெளிக் காட்டக் கூடாது; அது சந்தோஷமானாலும் சரி துக்கமானாலும் சரி;  அதுவும் துக்கத்தை அழுகையின் மூலம் வெளிப் படுத்தும் ஆண்கள் கோழைகள் என்றே தீர்மானிக்கப் படுகிறார்கள். உணர்ச்சி என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவான ஒன்று; அப்படி இருக்க,  ஆண்களுக்கு மட்டும் தடை போடுவது எந்த விதத்தில் நியாயம்?

dad ஐயோ பாவம் அப்பாக்கள் !!திருமணமானவுடன் பெண்கள், கணவன் தன்னிடம் மட்டுமே எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று நினைப் பார்கள்; எண்ணங்கள்  செயல்கள் என்று அவர்களின் முழு கவனமும் அன்பும் கணவனை சுற்றியே இருக்கும்; ஆனால் இதெல்லாம் அடுத்த  பதவி வரும் வரை தான். அதாவது தாய் தந்தை என்ற அடுத்தக் கட்டத்திற்கு போகும் போது மேற்கூறிய அனைத்தும் பின்னுக்கு தள்ளப் படுகிறது; மனைவியின்  அன்பு அரவணைப்பு  எல்லாம் அப்படியே குழந்தைகளிடம் திரும்பி விடுகிறது. அது இயற்கை தான்; .இருந்தாலும் ஒரு ஆணுக்கு அதுவரை தான் அனுபவித்து  வந்த பரிமாற்றங்கள் எல்லாம் தீடிரென்று குறைந்து அல்லது நின்று போவதால் பாவம் கொஞ்சம் தடுமாறித்தான் போகிறார்கள். கணவன் மனைவியின் மன நெருக்கமும் குறைந்து விடுகிறது. ஆண்கள்  தங்கள் எண்ணங்களையும் சுக துக்கங்களையும் பகிர்ந்து சாய்ந்துக் கொள்ள ஒரு தோள் அவசியம் இல்லையா?  பெண்களுக்கு பிறந்த வீடு, கூட பிறந்தவர், தோழிகள் என்ற பேரில் வடிகால் உண்டு; ஆனால் என்னத்தான் ஆண்கள் அலுவலகம் வேலை நண்பர்கள் என்று வெளியில் சுற்றினாலும் தனக்கே உள்ள சில personal விஷயங்களை பகிர்ந்து மகிழ நினைப்பது மனைவிக் குழந்தைகளுடன் தான். அதில் இடைவெளி ஏற்படும் போது அங்கும் தனிமையில் தள்ளப் படுகின்றனர். இதை கையாள முடியாமல் சிலர் தவறான பாதையில் செல்லவும்  வாய்ப்பாகிவிடுகிறது. இதையும் பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

தாய்க்கு குழந்தைகளுடன் எவ்வளவு உரிமை இருக்கோ அதே அளவு தந்தைக்கும் உண்டு. நடைமுறையில் சாத்தியப் படாமல் போவதிற்கு காரணம் தாயா இல்லை சூழ்நிலையா? சிறு குழந்தையாக தந்தையின்  மார்பிலும் தோளிலும் விளையாடிய குழந்தையின் நெருக்கம் பிறகு கிடைபதில்லை; காணாமலும் போய்விடுகிறது. இந்த இடைவெளி குறைய வேண்டும் . சில தாய்மார்கள் குழந்தை அடம் பிடிக்கும் போதோ,விஷமங்கள் செய்தாலோ, இல்லை சொல்வதைக் கேட்காமல் போனாலோ தந்தையை சொல்லியே பயமுறுத்தி  தங்கள் வழிக்கு கொண்டு வருகின்றனர். அப்பா வந்ததும் அடிக்க சொல்கிறேன், அப்பாவிற்கு இது பிடிக்காது, அப்பாவிற்கு கோபம் வரும் என்றல்லாம் சொல்லி ஒரு வில்லனைப் போலவே சித்தரிக்கின்றனர். தந்தை மகனுக்கான இடைவெளி இங்கிருந்தே தொடங்குகிறது. மகளிடையே தந்தைக்குஏற்படும் அன்பு  நாளை அவள் வேறு இடம் செல்பவள் என்ற  யதார்த்தத்தை புரிந்து ஒரு எல்லைக்குள் தான் இருக்கும். அதனாலேயே தந்தை மகனுக்குள்ள உறவிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை பெண்களும் உணர வேண்டும். தந்தை மகனுக்கான உன்னத உறவு ஒரு தோழமையுடன் இருந்தால் இருவருக்கும் அதை விட பெரியப்  பலம்  வேறொன்றும் இல்லை. அதுவும் பிள்ளையாகப் பிறந்து விட்டால்  அப்பாவிற்கு அடுத்த படியாக வீட்டுப் பொறுப்பையும், கூட பிறந்தவர்களின் முன்னேற்றம் தாயை கவனித்துக் கொள்வது போன்ற எல்லாக் கடமையும் அவன் மேல் திணிக்கப் படுகிறது. தந்தைக்கும் மகனுக்கும் அந்த உறவின் சுகத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பு இல்லாமலே போய்விடுகிறது. நடு வயதில் இருக்கும் தந்தைக்கு தன் எண்ணங்களை கனவுகளை சந்தோஷத்துடன் பகிந்துக் கொள்ள வளர்ந்த மகனின் தோள் கிடைத்ததால் அதைவிட சிறந்த பேறு வேறு இருக்க முடியாது.அனுபவித்தால்  தான் அருமை  தெரியும். அது போல் மகனுக்கும் தன்னை தோழமையுடன் புரிந்துக் கொண்டு நடத்தும் தந்தை அமைந்தால் எவ்வளவு மகிழ்ச்சியை தரும். மற்றவர்களின் அறிவுரையோ கருத்தையோக் கேட்டு தவறான பாதையில் போகும் அபாயமும் தடுக்கப் படலாம். சிறு வயதில்உறவின் நெருக்கம்  எப்படி இருந்ததோ அது இடை வெளி இல்லாமல் ஆரோக்கிமாக தொடரும் வண்ணம் அமைத்துக் கொள்வது நம் கையில் தான் இருக்கு. குழந்தைகளின் அந்தந்த பருவத்திற்கு ஏற்றார் போல் தந்தையும் வளர்ப்பில்  தன்னை ஈடு படுத்தி கொள்ளல் வேண்டும். பெண்களும் ஆண்களை ஒதுக்காமல் இந்த உறவின் மேன்மையை புரிந்துக் கொண்டு அந்த சுழலை குடும்பத்தில் ஏற்படுத்த  முனைய வேண்டும்.
-saarathaa

1 comments:

  1. அதுமட்டுமல்ல ஒரு குடும்பத்தில் ஆண் மட்டும் உழைக்கும்போது வருமானத்தினை தன் குடும்பத்திற்கும் தன் கூட பிறந்தவற்கும் பங்கிட சிந்திக்கிறான்.அதே குடும்பத்தில் அவன் மனைவி உழைக்க ஆரம்பித்தால் அக் காசு தன்னுடையது,தனக்குரியது என்று பேச ஆரம்பித்துவிடுவாள்.

    ReplyDelete