நம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா?-:பறுவதம் பாட்டி

அன்று சனிக்கிழமை  காலை.  கடிகாரத்தினை ஒருமுறை உற்று  நோக்கிய நான்  பாடசாலை ஓய்வு  என்ற நிம்மதியுடன் புரண்டு படுத்துக்கொண்டேன். இருந்தாலும்  மாமா வீட்டில் வாழும் அண்ணாமலைத் தாத்தா விடவா போறார்.தொலைபேசி  அலறத் தொடங்கியது.  பக்கத்து அறையில் இருந்து புரிந்து கொண்ட பறுவதம் பாட்டியும் தொலைபேசியினை கையில் எடுத்துக்கொண்டார்.
மறுமுனையில் அண்ணாமலைத் தாத்தா ஆரம்பித்துக்கொண்டார்.
''இண்டைக்கு டொக்ரரிட்டை போகவேணும்.''
''ஏன்?என்ன விஷயம்?''
''கொலஸ்ரோல் குளிசையல் எல்லோ முடியப்போகுது.''
''எல்லாம் கொழுப்பெல்லே"
"குளிசையள் கொழுப்பல்ல பறுவதம்,கொழுப்புக்குத்தான் குளிசை தருகினம்."
"என்ன!அகராதி விடுறியள் போல! உந்த கூடாத கொழுப்புகளை சாப்பிடுவானேன்.மருந்துக்கு அலைவானேன்."
''என்ன பறுவதம்,மனிசர் ஆசைக்கு சாப்பிறேல்லையே? ஒரு நாளைக்கேல்லே சாகிறது.''
"ஓமோம்,உலகத்தில மனுஷனுக்கு எதைப் பார்த்தாலும் ஆசைதான்.அதுக்காய் எல்லாத்தையும் அடைய முடியுமே?உங்கட ஆசைக்கு சாப்பிடுங்கோ,சாகிற நேரம் சாகுங்கோ!அதை மாத்தேலாது.உயிரோட இருக்கும்வரை உபத்திரவம் உங்களுக்கு மட்டுமே!பிள்ளையளுக்குமெல்லெ குடுக்கிறியள்.மிருகங்கள், பறவைகளை விட கேவலம் இந்த மனிசசாதி."
"அதென்ன பறுவதம் கேவலம் எண்டு சொல்லுறாய்?"
"வேறென்ன! புலி பசிச்சாலும் புல்லைத் தின்னுமே? இல்லை, ஆடு மாட்டுக்கு இறைச்சி குடுத்துப் பாருங்கோ தின்னுமே?அவை,அவை தங்கட சாப்பாட்டைத் தான் சாப்பிடிகினம்.மனுஷன் மட்டும் எதைக் கண்டாலும் விழுங்கத் தயாரா இருக்கிறான்.அதனால தானே மனுஷனுக்கு புதுப்புது வியாதியள் வருகுது.
வீட்டுக்கு உதவாத சாமான்களை வீட்டில் வைத்திருக்காமல் குப்பையிலை எறியிறோம்.ஆனால் உடம்புக்கு உதவாத கூடாத கொழுப்பையும், சீனியையும்,உப்பையும் வயித்துகுள்ள வீசுறோம். கடைசியில வயித்தை  குப்பைத் தொட்டியாயே பாவிக்கிறோம்.அவை உடம்புக்கு விஷமா மாறாம என்ன செய்யும்?"
மேலும் விவாதித்து தன்  பக்கம் நியாயமான கருத்துக்கள் இல்லை என உணர்ந்த தாத்தாவும்,
"நீ சொல்லுறது சரி,பறுவதம். உதுகளை முந்தி ஆர் யோசிச்சது. இனியாவது கவனமாய் இருப்பம்.நானும் வெளிக்கிட வேணும்.சரி."
என்றவாறே தன் உரையாடலை முடித்துக்கொண்டார் அண்ணாமலைத் தாத்தா.
 அம்மாவின் வழமையான தேவாரம் ஆரம்பிக்கவே படுக்கையிலிருந்து நானும் எழுந்து பாத்ரூம் நோக்கி நடையைக் கட்டினேன்.
ஆக்கம்:செல்லத்துரை,மனுவேந்தன் 

0 comments:

Post a Comment