சங்ககால [மா]வீரர்கள்

அன்னி மி்ஞிலி[Anni njimili]& இளஞ்சேட் சென்னி[Ilamcetcenni]:

ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று; அது இவ்வுலகத்து இயற்கை  என்கின்றது புறநானூறு.இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது என்னும் உண்மையை,
 "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை" (புறம்.70)கூறும் செய்தி:
 சங்ககால வீரர்கள் என்றும் போர் வேட்கை உடையவர்களாய் இருந்தனர் என,
 "போரெனிற் புகலும் புனைகழல் மறவர்" (புறம்.31)உணர்த்துகின்றன.

போரிடுதலே புதல்வன் கடமை என்பதை, வாளைக்
கையிலேந்திச் சென்று தடுத்தற்கரிய போரைச் செய்து;
பகைவர் களிற்றியானைகளைக் கொன்று வெற்றி யொடு
மீளுவது காளையாகிய மகனுக்குக் கடமையாகும்

என வரும் பாடற்பகுதிகள் உணர்த்துகின்றன
 "ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" (புறம்.312)
 மகன் எங்கு உள்ளான் என்ற தனக்கு தெரியாதது   ,ஆயினும் புலி கிடந்து சென்ற கல் குகை போல அவனை ஈன்ற வயிறு இதுவே.  போர் ஒன்று நடந்தால் எங்கிருந்தாலும் போர்களத்திற்கு வருவான் என்று கூறும் சங்க தாய்.

"......................ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறே இதுவே
தோன்றுவன் மாதோ போர்களத் தானே" (புறம்.86)

 போர்ப் பறை கேட்டுத் தன்னுடைய குலத்தினரும் போர் செய்ய வேண்டும் என்னும் விருப்பம் கொண்டவளாய்  தனக்கு ஒருவனே யன்றி வேறு மகன் இல்லாத நிலையில் அவன் மிகவும் சிறியவனாதலால் தலைக்கு எண்ணெய் தடவி வாரியும், வெண்மையான ஆடையை உடுக்கச் செய்தும், கையில் வேலைக் கொடுத்துப் போர்க்களம் நோக்கிச் செல்க என ஏவி,தனக்குத் துணையாய் இருக்க வேண்டிய ஒரே மகனையும் போருக்கனுப்பிய தாயின் மறப்பண்பை,பாடினார் ஒக்கூர் மாசாத்தியார்.
 "ஒரு மகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென" (புறம்.279)

 மறத்தினும் அறம் திறம்பாதவர் தமிழர் என்னும் உண்மையை,
 "வேந்துவிடு முனைஞர் வேற்றுபுலக் களவின்
ஆதந்து ஓம்பல் மேவற் றாகும்" (தொல்.1003)
 எனவும்,
 "ஆவும் ஆணியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வற் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதூஉம் நும்மரண் சேர்மின்" (புறம்.9)

எனவும் வரும் சான்றுகள் உணர்த்தும்.
 பூதப்பாண்டியன் என்ற அரசன்
பகைவரை நான் வெல்லாவிடில் நான் என் மனைவியைப் பிரிந்த குற்றத்திற்கு ஆட்படுவேனாக-புறம் 71’
என்று சூள் உரைத்தான்.சோழன் நலங்கிள்ளி

பகைவரை நான் வெல்லாவிடின் என் கழுத்திலுள்ள மாலை பொது மகளிர் மார்பில் புரண்ட குற்றத்தை எய்தட்டும்-புறம். 73’ என்றான்.
 "காட்சி, கால்கோள் நீர்ப்படை 'நடுகல்'
சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்"- தொல்காப்பியம்
 சங்க காலத்தில் தன்னால் இயன்றவரையில் போர்புரிந்து உயிர்விட்ட வீரனது உடலைப் புதைத்த இடத்தில் அல்லது எரித்த இடத்தில் ஒரு கல்லை நடுவர். அக்கல்லில் அவனது உருவத்தையும், பெயரையும் இன்னபோரில், இவ்வாறு போர்புரிந்து மாண்டான் என்ற விவரத்தையும் பொறிப்பர். வீரர் நினைவாக நட்டகல் என்பதால் 'நடுகல்' எனப்பட்டது.
 காதலும் வீரமும் தமிழர் பண்பாட்டின் அடிப்படை. உயிரையும் உடமையையும் காக்கும் வீரமறவர்களைப் போற்றுவது- சமூகம் என்ற சேர்ந்து வாழும் பண்பாட்டின் அடையாளம். இதனை தமிழர் தம் வாழ்வியல் கோட்பாடாகவே இன்றும் கைக்கொள்கின்றனர்.உயிர்காத்த, ஊரைக்காத்த வீரனுக்கு அவன் நினைவு போற்ற 'நடுகல்' வைப்பது தமிழ் மரபு.
   "பாசாற்றூர் எருமைத் தொறு எயினாட்
டார்கொள்ள பாசாற்றூர்ப் பூசல்லிட
பூசல் சென்று கோவூர் நாட்டுச்
சிற்றிடையாற்று முதுகொன்றை
மூக்கின் மீமலை அயங்கயக் கரையில்
சென்று முட்டி மலையநூருடைய
செம்பர் மகன்னான காரிப்பெருமான்
உரையில் அம்பு மாள எவ்வி
பத்திரம் உருவி எதிரே
சென்று பட்டான்."
 [தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையால் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு கூறும்
செய்தி]
 மாற்றான் படை அவன் நாட்டின் மீது பாய்ந்தது. அதை எதிர்த்து நின்றான் அவ்வீர மகன். தன்னிடமிருந்து சரங்களை மாரியாகப் பொழிகிறான். உரையிலிருந்து அம்புகள் தீர்ந்துவிட்டன. எதிரிப்படை அவ்வளவு பெரியது. மலைத்தானா இல்லை. இடுப்பில் இருந்த குறுவாளை கையிலே உருவிக் கொண்டான். வெள்ளம் போன்ற மாற்றான் படை மீது பாய்ந்தான். அந்நிலையில் இறந்து பட்டான் அவ்வீரன் என கல்வெட்டு கூறும் "காரிப்பெருமான்" என்பது அப்பெரும் வீரனின் பெயர்.
 "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்." (குறள் -50)

 என்பது மனித தெய்வங்கள் பற்றிய வள்ளுவரின் மதிப்பீடு.
 மாவீரர்களும் மனிதர்களே. எனினும் அவர்கள் தமது ஆசாபாசங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக தமது உடைமை, உயர்வு, உயிர் அனைத்தையும் நல்க முன்வந்தவர்கள்.
 புறநானூறு 221ம் பாடல் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனுடைய நடுகல்லைக் குறிப்பிடுகிறது. மன்னனின் உயிர் நண்பரான பொத்தியார் நடுகல்லைப் பரவிய செய்தி இப் பாடலிற் கூறப்படுகிறது.

அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நடுகல்  நாட்டி விழாக் கொண்டாடப்பட்டது. அதில் ஒளவையார் கலந்துகொண்டார். அப்போது அவனது பெருமையை நினைத்து ஒளவையார் வருந்திப் பாடிய பாடல் புறநானூற்றில்232ம் பாடலாக இடம்பெற்றுள்ளது.
 பாடியவர்: பொத்தியார்.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன்.
[சோழனது நடுகற்கண்டு பாடிய செய்யுள்.]
 "பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே;
மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது, அத்தக் கோனை,
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று;
பைதல் ஒக்கல் தழீஇ, அதனை
வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்!
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்,
கெடுவில் நல்லிசை சூடி,
நடுகல் ஆயினன் புரவலன்’ எனவே".
 [அகன்ற இடமுள்ள இந்த உலகு துன்பம் அடைய, கேடில்லாத நல்ல புகழ்மாலையைச் சூடி, எம்மைப் பாதுகாத்தவன் நடுகல்லாகிவிட்டான் என்று வருந்தும் நம் சுற்றத்தாரோடு சேர்ந்து அக்கூற்றுவனை வைகுவம்; வாரீர்.]

இனி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த [மா]வீரர்களில் ஒரு ஆண் ஒரு பெண் [மா]வீரர்களைப் பற்றி மட்டும் இப்போது   விரிவாக சங்க பாடல் மூலம் பார்ப்போம்.மற்றவர்களை பின் ஒரு நேரம்  பார்ப்போம்.
  அன்னி மி்ஞிலி[Anni njimili] :பழிக்கு பழி வாங்கிய போர்தொடுத்த தமிழ் வீரச்சி [வீரி]
 அன்னி மி்ஞிலி எப்படி தன்  தந்தைக்காக  பழி வாங்கினாள்  என்பதை பார்ப்போம்
 பாடல்: அகநானூறு 262
கவிஞர்: பரணர்
திணை: குறிஞ்சி
 "முதை படு பசுங் காட்டு அரில் பவர் மயக்கி,
பகடு பல பூண்ட உழவு உறு செஞ் செய்,
இடு முறை நிரம்பி, ஆகு வினைக் கலித்து,
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என,
வாய் மொழித் தந்தையைக் கண் களைந்து, அருளாது,
ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின்,
கலத்தும் உண்ணாள், வாலிதும் உடாஅள்,
சினத்தின் கொண்ட படிவம் மாறாள்,
மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன்,
செரு இயல் நல் மான் திதியற்கு உரைத்து, அவர்
இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய
அன்னிமிஞிலி போல, மெய்ம் மலிந்து,
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
நுண் பல துவலை புதல்மிசை நனைக்கும்
வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன்
கொண்டல் மா மலை நாறி,
அம் தீம் கிளவி வந்தமாறே!!"
 அன்னி மி்ஞிலி ஒரு முல்லை நிலத்து அழகிய  பெண்.இவளுடைய தந்தை பழமையான காட்டைத் திருத்தி, அதில் உள்ள கொடிகளை விலக்கி.., மருத நிலத்துக்குப் புதுசாக் குடி பெயர்ந்தார்.அந்த நஞ்சை நிலத்தில்  பல எருதுகளை  ஒன்றாய்  பூட்டி உழுவு செய்தார். அப்படி  உடல் வலிக்க  உழவு வேலை  செய்யும் போது,ஒரு நாள்  அவருடைய மாடுபக்கத்து  பயறு விளையும் வயலில் புகுந்து, அங்கு உள்ள  பயிரை மேய்ந்து விட்டது.

நிலத்தின் சொந்தக்காரனோ பணக்காரன்.  மன்னனுக்கு வேண்டியவன்.கோச மன்னனின் அவையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.அன்னி மி்ஞிலியின்  வாய்மை தவறாத தந்தைதமது மாட்டின் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.அதற்க்காக  ஒரு குற்ற பணத்தை அறவிட்டிருக்கலாம் .ஆனால் மூதூர் மன்னர் குலத்தில் வந்த கோச மன்னன், அருள் என்னும் இரக்கமே இல்லாமல்… மேய்வதைப் பார்க்காமல் இருந்த பசுக்காரனின் கண்ணை எடுக்குமாறு  தீர்ப்பளித்து விட்டான்.இதனால் அவன் பெரும் குற்றம்[“நவை”]  செய்து விட்டான்  .கண்ணைக் குத்தி ஊனமாக்கிவிட்டனர்.

பார்வை போனது தந்தைக்கு! .அந்தச் சிறுமையைக் கண்டு, அவளுக்கு மனசே வெம்பிப் போச்சு. மி்ஞிலி துடிச்சாள்;அப்பாவின் கண்ணைப்  பறித்தவர்களைப் பழிவாங்குவேன்; அதுவரை…* கலத்தும் உண்ணாள் = தட்டுல சாப்பிட மாட்டாள் என்றும் * வால் இதும் உடாள் = தூய ஆடை உடுக்க மாட்டாள் என்றும்  சூள் உரைத்தாள்! சினம் மாறாமல் இப்படியான விரதம் மேற்கொண்டிருந்தாள். இது வீம்பா? இல்லை! அவ மனசு அத்துப் போச்சு ; அதுதான் சாப்பாடை  உறிய முறையில் உண்ண  மறுக்கிறா;ஒரு பெண்ணுக்கு அழகே = அழகுபட உடுத்தல் தான்; அதையும் மறுக்கிறா! அதாவது உணவு என்பது “பகை முடிக்கும் வரை” ஒரு உடல் தேவைதான், பசிச்சா சாப்பிடுவா, உயிரோடு இருக்க வேண்டி, அதுவும் பகை முடிக்க வேண்டி..ஒரு பெண் உடை மீது எவ்வளவு ஆசை வச்சிருப்பாள்? சீவி சிங்காரிச்சு, போட்டு வைச்சு பூ முடிச்சு… , இன்னும் அதிக காரணமிருக்கு தன்னை அழகா காட்டிக்க…ஆனா அழகான ஆடை கூட உடுக்க  மாட்டாளாம்.. அந்த அழுக்கு ஆடை அவள் உடம்பில் இருக்கும் வரை, அப்பன் கண் இழந்த வஞ்சம் நெஞ்சை விட்டு நீங்காம உறுத்திகிட்டே இருக்கும்.. இருக்கணும் … அதுக்கு அப்புறம் தான் மற்றது  எல்லாம்… அப்பா மேல பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் பாசம் அவ்வளவு வலிமையானது என்னும் உளவியல் உண்மையை இந்த சபதம் எவ்ளோ சிறப்பா எடுத்து காட்டுகிறது?

சூளை எப்படி நிறைவேற்றுவது?அவளோ எளிய முல்லை நிலப் பெண்ஒரு மன்னனைப் பழி வாங்கணும் என்றால்  சும்மாவா? இன்னொரு மன்னனையே உதவிக்கு அழைத்தாள் . போர்த் தொழிலில் சிறந்தவனாகிய,பொதியமலைப் பகுதியை ஆண்ட குறும்பிய மன்னன் , திதியனிடம் தன தந்தைக்கு நடந்த அநீதியை முறையிட்டாள்.அவள் முறையை ஏற்று, திதியன், அவளுக்கு உதவினான். அந்த  சிற்றரசர்  திதியன்- அவ ஒருத்திக்காக கோசனின் மீது படையெடுத்தான்; மிஞிலியின் தந்தையைக் கொன்றவனும்  ஒரு கோசன் தான், திதியனும் ஒரு கோசன் தான்! கோசர்கள்  பழைய குறுநில மன்னர்கள்; கொங்கு நாடுகளில் ஆட்சி செலுத்தியவர்கள்;சேரன் /சோழன் போல, இது தான் கோச நாடு என்று  குறிப்பிட்டுச் சொல்ல முடியாது; பல கோசர்கள் பரவியும் கிடந்தார்கள்;கண் பறிச்ச கோசன் போரிலே வீழ, அது கண்டு சினம் மாறினாள் மிஞிலி…அவளும் தன் வஞ்சினம் முடித்தாள்.

அப்போ, அவளுக்கு உள்ளுக்குள்ள எவ்வளவோ  உவகை பூத்திருக்கும்?அது போல என் மனசு பூக்குது!  உடம்பெல்லாம் ஆடுது[மெய்ம் மலிந்து ]!ஏன்னா, பல நாள் தடைகளை மீறி, இன்னிக்கி அவளைப் என்னவள் ஆக்கிக் கொண்டேன்.அவன்! அவ்வளவு ஏங்கிக் கிடந்தவன்; மனசே அத்துப் போனவன்; ரொம்ப நாள் காதல் .. கைகூட மாட்டேங்குது.மனக் களத்தில் உள்ள வெம்மை தீர,அவள் உடல் களத்தில் வெம்மை தீர்த்துக் கொண்டான் இன்றே! மிஞிலி தீர்த்துக் கொண்டது போல்…அந்த அருவிச் சாரலிலே, இருவரும் கூடும் இன்பத்திலே, பட்டுத் தெறிச்சிதாம் இன்பத் துளி.

அருமையான பதிவு. காதலன் காதலியோடு புணர்கின்றான், இருவரும் இன்பம் அனுபவிக்கின்றார்கள். எப்படி என்பதற்கு ஒரு புறப்பொருள் கொண்ட உவமை, கிளைக்கதையாக போகிறது. “நெல்லுக்கு இறைத்தநீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்” என்பது போல, பல கருத்துகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன.

அடிப்படையில் இது ஒரு பழிக்குப் பழி வாங்கும் கிளைக்கதை. இதில் 2 மேற்கோள்களை ஆங்கிலத்தில் இருந்து இறக்குமதி செய்தே ஆக வேண்டும் – one by William Shakespeare and another by Lord Byron.
 1. “Sweet is revenge – especially to women” (Lord Byron in Don Juan)
 2. “If you prick us, do we not bleed? If you tickle us, do we not laugh? If you poison us, do we not die? And if you wrong us, shall we not revenge?” (William Shakespeare in The Merchant of Venice.)
 மேற்சொல்லப்பட்ட இரு மேற்கோள்களுக்கும் இந்த அகநானூறு பாடல் பொருந்திப் போகிறது.
இளஞ்சேட் சென்னி:தலை வணங்கா தமிழன் [வீறு கொண்டுவிட்டேன் ! இனி வீழ்ச்சி எமக்கில்லை !][Sozhan Ilamcetcenni ]
புறநானூறின் 378ம் பாடல்
 "ஊன்பொதி பசுங்குடையார்
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பாடி எழுதியது
தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்து வேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதை செய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு.
இலம்பொடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித் தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின் விரற்செறிக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொழிந்தாந்தாஅங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே."
 பாடலின் சாரம் வருமாறு:

தென்நாட்டுப் பரதவரின் வலிமை அடங்க,வடநாட்டு வடுகரின் வாளால் ஏற்பட்ட கேடுகள் நீங்க,
அவர்களை ஒடுக்கி மேம்பட்டவன் இவன்!
 இச் சோழனின் நெடு நகரிலே,வெண்சுதை மாடத்தின் முற்றத்திலே நின்று.என் கிணையை இயக்கி, எஞ்சா மரபினை உடைய சோழனின் சிறப்பைப் போற்றிப் பாடினேன்.
 எமக்கென இயற்றப்படாத அரசர்க்கே உரித்தான நல்ல அணிகலன்கள் பலவற்றையும் அவன் எமக்கு நிறைய சுமக்கமுடியாத அளவுக்குத் தந்தான்.அதனைக் கொண்டு என் சுற்றத்தாரிடம் சென்று கொடுத்தேன்.
 அவர்கள் கண்டு திகைத்தனர்!
 உறவினரும் சுற்றத்தாரும் அணிந்து கொள்ளும் முறை தெரியாமல் உடம்பில் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டனர்.
 இது வறுமைத் துன்பத்தையே கண்டு வந்த கலைஞனுக்கு நினைக்க நினைக்கச் சிரிப்பைத் தந்தது என்று அவன் கூறுவதாக ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் பாடியுள்ளார்.

இளஞ்சேட் சென்னி ஒரு சங்க  கால சோழ அரசன். இவன் மிகவும் வலிமை பொருந்திய வீரன். புகாரை தலை நகராக கொண்டு ஆட்சி செலுத்தினான். .மகத நாடு தனது பேரரசை  பேர்சியாவில்  இருந்து   தென் இந்தியாவின் எல்லை வரை ஏற்படுத்திய காலமிது.  புறநானுறு சங்க பாடல்களின் சில துண்டுகள்
இளஞ்சேட் சென்னி, மோரியர்களின்[மௌரியப் பேரரசை  சங்கத்தமிழ் மோரியர் என்று குறிப்பிடுகிறது.] ஊடுருவல்களை வெற்றிகரமாக முறியடித்தான் என பாடுகிறது .கோசர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டின் வடமேற்கு மூலையிலிருந்து தெற்கு நோக்கி விரிந்துகொண்டு வந்த காலத்தில் மோகூர் கோசர்களை முறியடித்தது. அப்போது கோசர்களுக்கு உதவியாக மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது. எனினும் தோற்றுப் பின்வாங்கி விட்டது
"வெல்கொடி துனைகால் அன்னை,
 புனைதேர் கோசர், தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில்,
இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க,
தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர்
பணியாமையின்பகை தலைவந்த
மாபெருந்தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த
இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை" – அகநானூறு 251-12 மாமூலனார்.

அந்தப் படையெடுப்பு எல்லையிலேயே தடுக்கப் பட்டதால், அந்தத் தடுப்பு வலுவாக இருந்ததால், பின்னால் அசோகன் தெற்கே அதற்கு மேல் வராமல் இருந்திருக்கிறான். இதன் விளைவால், தன் கல்வெட்டுக்களில் சேர, சோழ, பாண்டியர் மற்றும் அதிகரின் நாடுகளை எல்லையில் இருந்ததாய் அசோகன் குறித்திருக்கிறான் இவனது தனிப்பட்ட வாழ்க்கையின் விபரங்கள் பெரிதாக தெரியவில்லை. மவுரிய[மௌரிய] பேரரசின் முதல் மன்னர் சந்திரகுப்த மெளரியர் ஆவார். இவரின் பேரன்  சக்கரவர்த்தி அசோகர் ஆகும்.

மேலும் சில சங்க பாடல்கள்  மவுரிய பேரரசின் தமிழ் நாட்டின் ஊடுருவல்களை பாடுகிறது.மோரியர்கள் தமிழகத்திற்க்கு வரும் பாதைகளை செப்பனிட்டனர் என்ற தகவல்களை  தருகிறது மவுரிய பேரரராசு தமிழ் நாட்டை தவிர இந்தியாவின் மற்ற எல்லா பகுதிகளையும் வெற்றி கொண்டிருந்தது. வடுவர்களின் உதவியுடன்  இந்த ஊடுருவல்  நடைபெற்றதாக கூறுகிறது .மவுரியார்  321 to 185 BC  வரை ஆட்சி செலுத்தியவர்கள்.

சங்க இலக்கியத்தில் காணப்  பட்ட தகவல்கள் இவைதான் :

" ..................................மோகூர்
பணியா மையின், பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி உருளிய குறைத்த" (அகம் - 251) எனவும்

"...............................................................
முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத்து
ஒண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த
அறையிறந்.............."--அகம்.281 எனவும் இருபாடல்களை பாடியுள்ளார்-மாமூலனார்

[மாறுபாடு மிக்க வடுகர் தமக்கு முன்னே துணையாகி வரமோரியர் என்பார் தென்றிசை நாடுகளைப் பற்ற எண்ணி வான் அளாவ உயர்ந்த பனியுடைய பெரிய மலையினை,தமது ஒள்ளிய கதிர்களையுடைய தேரின் ஆழி[சில்லு] தடையின்றிச் செல்ல,போழ்ந்து வழியாக்கிய, பாறைகளைக் கடந்து ]

அதில், பாண்டியர் படைத் தலைவன் மோகூர் பழையன் போன்ற, தமிழரசுகளின் எல்லைக் காவல் படைத்தலைவர்கள்,பணியாததால் வடுகர்கள் வழிகாட்ட,வம்ப மோரியர்கள் (மோரியர் என்பது பிராகிருதச் சொல்லாடல் ஆகும்),மேற்குமலைத் தொடர்ச்சியில் உள்ள பாறைக் குன்றுகளை வெட்டி தகர்த்து, பாதையமைத்து, பெரும்படை கொண்டு தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தனர் என்கிறார் மாமூலனார்.

நந்தர்களுக்குப் பின் வந்த மௌரியர்களை புதியவர்கள் என்ற பொருளில், முதல் பாடலில் மட்டுமே வம்ப மோரியர் என்கிறார்.(வம்ப என்றால் புதிய எனப் பொருள் படும்.). இரண்டாவது பாடலில் மோரியர் என்றே குறிப்பிடுகிறார்.

மாமூலனார் தவிர வேறு சில சங்கக்கவிஞர்களும், மௌரியர்களின் படையெடுப்பு குறித்து குறிப்பிட்டுள்ளனர். உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் தனது அகப் பாடலில்,காதலன் கடந்து சென்ற பாதை குறித்து,

"விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதர குறைத்த
அறைஇறந்து அகன்றனர் ஆயினும், "--அகம் 69  என்கிறார்.

[விண்ணை அளாவும் நீண்டுயர்ந்த பெருமலைகளில் செல்லும் தேரினையுடைய மோரியர், தஙகள் பொன்னாலியன்ற உருள்[சில்லு] தடையின்றிச்  செல்ல வெட்டி நெறியாக்கிக் கொண்ட குன்றங்களைக்கடந்து சென்றாராயினும் ]

வேங்கடமலைத் தலைவன் ஆதனுங்கனைப் பாட வந்த கள்ளில் ஆத்திரையனார்,

" .........................................வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய"---புறம் 175 என்கிறார்
.
[மலைத்தொடர்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி நிலம் 'இடைக்கழி' அத்தகைய இடைக்கழி வழியே மோரியர் தென்னகத்துக்குள் நுழைந்தனர். கொடி கட்டிய தேரில் வந்தனர். தேர்ச்சக்கரம் செல்ல மலையில் வழி உண்டாக்கினர். அதற்கு 'அறைவாய்' என்று பெயர். அறைவாய் என்பது மலையை வெட்டி உண்டாக்கிய வழி. அந்த அறைவாய்க்கு இடையே காலையில் சூரியன் தோன்றுவது போல அறத்துறையில் ஆதனுங்கன் தோன்றினான் என்கிறார் புலவர்]

இச்சங்கப் பாடல்கள், மோரியர்கள் தங்களின் தேர்படை முதலான பெரும்படைகளைக் கொண்டு வர மலைக் குன்றுகளை வெட்டி பாதை அமைத்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றன

மேலே கூறப்பட்ட ஆதாரத்தில் இருந்து ,மிக தெளிவாக தெரிகிறதுமோரியர் ஆந்திர அரசன்[வடுகர்] உதவியுடன்,தமிழ் நாட்டிற்கு  ஊடுருவல்  செய்தனர் என்பது.

மௌரியர்கள், வடுகர்கள் துணையோடு தமிழகத்தை தங்கள் பெரும்படை கொண்டு தாக்கினர் என்கிற, மேலே உள்ள சங்கப் பாடல்கள் தரும் செய்தி பல வரலாற்று மாணவர்களுக்கு ஒரு புதிய செய்தியே!

இவை நடந்த காலம் கி.மு 3ம் நூற்றாண்டுகள் ஆகும்.மௌரியர்களின் இந்தத் தமிழகப் படையெடுப்பு, சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தலைமையில் தமிழக அரசுகளால் முறியடிக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் துளுவத்தை நன்னன் என்ற அரசன் "பாழி"யை தலைநகராகக் கொண்டு  ஆண்டு வந்தான்[அகம் 15]

அசோகரின் கல்வெட்டுகள்:

எந்த ஒரு மவுரிய  அரசனும் தமிழ் நாட்டிற்குள் எப்ப ஆவதும் ஊடுருவ வில்லை. முத் தமிழ் நாடும் தொடர்ந்து  தமது சுதந்திரத்தை பேணி வந்தனை. இதை பேரரசன் அசோகனின் கல்வெட்டு உறுதி  படுத்துகிறது .

மௌரிய அரசர் அசோகர் தனது 32 கல்வெட்டுகளில், இரண்டு கல்வெட்டுகளில் மட்டுமே தனது எல்லைக்கப்பாலுள்ள அரசுகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். இரண்டிலும் (2வது, 13வது) தமிழரசுகளின் பெயர்கள் வருகின்றன. 2வது கல்வெட்டில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான மருத்துவப் பணிகளை எந்தெந்த பகுதிகளில் செய்து வருகிறேன் என்று சொல்ல வந்த அசோகர், சோழர்கள், பாண்டியர்கள், சத்ய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் ஆகிய தமிழக நாடுகளின் நான்கு அரசகுலப் பெயர்களையும் முதலில் சொல்லிவிட்டு, அதன் பின்னரே கிரேக்க அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். 13வது கல்வெட்டில், தர்ம நெறி எந்தெந்த நாடுகளில் பரவ வேண்டும் என்று சொல்ல வந்த அசோகர் முதலில் கிரேக்க அரசர்களின் பெயர்களையும், பின்னர் சோழர்கள், பாண்டியர்கள் என  தமிழரசுகளின் பெயர்களையும் குறிப்பிடுகிறார்

"......Now it is conquest by Dhamma that Beloved-of-the-Gods (Emperor Asoka) considers to be the best conquest. And it (conquest by Dhamma) has been won here, on the borders, even six hundred yojanas away, where the Greek king Antiochos rules, beyond there where the four kings named Ptolemy, Antigonos, Magas and Alexander rule, likewise in the south among the Cholas, Cheras and the Pandyas and as far as Tamraparni (river).

Edicts of Asoka - an English rendering by Ven Dhammika, publised by Buddhist Publication Society, Kandy, Sri Lanka - 1994 (Edition)

http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html
 என்றாலும் சமய ரீதியாக  [சமயப் போர்வையில்] தனது ஆட்சிப் புகழ் தமிழ் நாட்டில்  பரப்பியுள்ளான்.

 இனி நான் இப்பொழுது  "ஆதித்ய இளம்பிறையன்" & "பன்மொழிப்புலவர் கா. அப்பாத்துரையார் " ஆகியோர் தமது வலை தளத்தில் இட்ட "அசோகனை வென்ற இளஞ்சேட் சென்னி" என்ற கட்டுரையை கீழே தருகிறேன்

 அசோகனை வென்ற இளஞ்சேட் சென்னி:
 “எழூஉத்திணிதோள் சோழர்பெருமகன்
விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி
குடிக் கடனாகலின் குறைவினை மூடிமார்
செம்புறழ் புரிசைப் பாழி நூறி
வம்பவடுகர் பைந்தலை சவட்டிக்
கொன்றயானை…………………………………” (அகம் 375)
 புகார் என்ற காவிரி பூம்பட்டிணத்தை தலைநகராக கொண்டு இளஞ்சேட்சென்னி ஆண்டு கொண்டிருந்தான். அவனுக்கு கீழ் துளுவ நாடு, சேர நாடு மற்றும் பாண்டிய அரசுகள் சிற்றரசர்களாக ஆட்சி செய்தனர். தமிழகத்திற்கும் கலிங்கத்திற்கும் இடையே கோசர் என்ற முரட்டு வகுப்பினர் இருந்தனர். அசோகன் உஜ்ஜயினியிலிருந்து முதலில் கலிங்கத்தை கைப்பற்றினான். கலிங்கத்தை வெற்றி பெற்றதும் கோசர்களை கொண்டு துளுவ நாட்டின் மீது படையெடுக்க வைத்தான்.

அந்நாளில் துளுவத்தை நன்னன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனால் கோசர்களை வெற்றி கொள்ள முடியவில்லை. போரில் தோல்வியுற்ற அவனை கோசர்கள் காட்டிற்க்கு விரட்டி அடித்தனர். அவனது தலைநகரான "பாழி"யை அரணாக்கி, வலிமைபடுத்தி அதனையே தனது அடுத்த படையெடுப்பிற்க்கு கோட்டையாக்கி கொண்டனர். அதன் பிறகு அவர்கள் சேரனையும், பாண்டிய நாட்டு எல்லையில் ஆட்சி செய்து கொண்டிருந்த மோகூர்தலைவனையும், சோழ நாட்டு எல்லையில் இருந்த அழுந்தூர்வேள்  திதியனையும் படிப்படியாக தாக்கினர்.

ஆனால் அழுந்தூர்வேள் திதியனிடம் கோசர்கள் தாக்குதல் எடுபடவில்லை. திதியன் அவர்களை முறியடித்து துரத்தினான். மோகூர்தலைவன் நிமிர்ந்து நின்று பாண்டிய நாட்டு எல்லைக்குள் புகாமல் தடுத்து நிறுத்தினான். இச்சம்யம் வரை மோரியப் பேரரசு படைகள் தமிழகம் புகவில்லை. எல்லைப் படைகளே சண்டையில் ஈடுபட்டு இருந்தன. இத்தோல்விகள் மோரியப் பேரரசைத் தட்டி எழுப்பின. அவர்கள் தனது படை முழுவதையும் திரட்டினர். மைசூரைக் கடந்து தமிழகத்திற்க்கு வரும் பாதைகளை செப்பனிட்டனர்(இதைப்பற்றிய தகவல்கள் இலக்கியத்தில் காணக் கிடைக்கிண்றன).

மோரியப் படைகள் துளுவத்தில் தங்கி காட்டாறு போல் தமிழகத்தை வந்து தாக்கின. இனிமேலும் சிற்றரச‌ர்களிடம் பொறுப்பை விட்டுவிட்டு ஒதுங்கி இருப்பது தகாது என்று எண்ணி இளஞ்சேட்சென்னியும் பெரும் படைகளை திரட்டினான். இப்போரில் மோரியப் படைகள் நையப் புடைக்கப்பட்டன். மோரியர் மீண்டும் மீண்டும் புதுப் படைகளை அனுப்பினர். வடதிசைப் பேரரசின் முழுப் படைகளும் இப்போரில் ஈடுப்டுத்தப் பட்டிருந்தன. ஆயினும் சோழப் படைகளும், சிற்றரசுகளின் படைகளும் சேர்ந்து அவர்களை சிதறடித்தனர். உயிரிழந்தவரும் உறுப்பிழந்தவரும் போக மீந்தவர் சோழ நாட்டின் எல்லையிலிருந்து துளுவ நாடு வரை தப்பினோம் பிழைத்தோம் என்றோடினர்.

திதியனைப் போல இளஞ்சேட் சென்னி மோரியரை முறியடித்ததுடன் நின்று விடவில்லை அவர்கள் மறுபடி தமிழகப் பக்கம் திரும்பாதிருக்கும்படி செய்ய அவன் எண்ணினான். ஆகவே தோற்றோடிய படைகளைத் துளுவ நாட்டுக்கே துரத்திக்கொண்டு சென்றான். மோரியர் மூலதளமாகிய பாழிக் கோட்டையையே முற்றுகையிட்டான்.

தாக்கியவர் இப்போது திருப்பித் தாக்கப்பட்டனர். பாழிக் கோட்டையிலுள்ள தங்கள் பிடியையேனும் காப்பாற்றிக்கொள்ள மோரியர் அரும்பாடுபட்டனர். ஆனால் சென்னி தமிழகத்தின் அன்றைய சென்னியாகிய துளுவ நாட்டிலேயே மோரியர் தடம் அழியும்வரை போரிட்டான். பாழிக்கோட்டை தரைமட்டமாக்கப்பட்டது..

தமிழகத்தைப் பேரரசால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அசோகனுக்குத் தகர்ந்த பின்னரே[போரால் வெல்ல முடியாது என்று அசோகன் உணர்ந்த பின்புதான் ], சமயப் போர்வையில் ஆட்சிப் புகழ் பரப்ப அவன் முனைந்திருக்க வேண்டும் .

இளஞ்சேட்சென்னி மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூறு-375 பாடல்   புகழப்படுகின்றான்

செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி கி.மு. மூன்றாம் நூற்றாண்டிணன் என்று முனைவர் இராச மாணிக்கனார் கருதுகிறார்.

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்


Compiled by: Kandiah Thillaivinayagalingam]

2 comments:

  1. சங்ககாலத்து சங்கதிகளை ஆதாரங்களுடன் அழகுபடுத்தியுள்ளீர்கள்.நன்றி.

    ReplyDelete
  2. Very well documented information with proof. Job done well.

    ReplyDelete