விலங்கினத்தில் பிறந்துவிடு , வாழ்வித்தைகள் கற்றுவிடு



அடைத்த பை உடலைக் கொண்டதெல்லாம் மனிதனா?
படைத்தவனுக்கே படையலிடும் அவன் மனிதனா?

பகுத்தறிவைப் பயன்படுத்தாது
பாதை தவறி நடப்பவனும் மனிதனா?

சிறுமைத்தனமாய் சினம் வளர்த்து,
சீரழிவைத் தேடுபவனும் மனிதனா?

பொறுமையிழந்து பொல்லாங்கு புரிந்து,
பிறர் மனதைப் புண்படுத்துபவன் மனிதனா?

அயலார் வீழ்ச்சியில் ஆனந்தமடைந்து,
அவர்தம் கண்ணீரில் களிப்பவனும் மனிதனா?

தயையே தங்காத நெஞ்சுடையவனும்
தரணியில் வாழும் மனிதனா?

கருணையே இல்லாத கொடும் கயவனும்
கண்ணில் மனித உருவம் கொண்டவனா?

குருவையே பழித்துக் கூசாது பேசும்
குணமற்ற நாவுடையவன் மனிதனா?

செய்த நன்றிகளைச் சிந்தையில் கொள்ளாது,
செய்ந்நன்றி மறந்து செல்வவனும் மனிதனா?

பொய்மொழி பொழிந்து, பொய்யையே வாழ்வாக்கி,
பொதுநலம் மறப்பவனும் மனிதனா?

கண்ட வழியில் காசைக் கவர்ந்து,
கள்ள வழியில் வாழ்பவனும் மனிதனா?

கொண்ட கடனை அடைக்க மறந்து,
கொள்ளையன் போல் வாழ்பவனும் மனிதனா?

சொன்ன சொல்லை மாற்றி மாற்றிப் பேசி,
சொல் தவறி நடப்பவனும் மனிதனா?

அன்னை மொழியை மறந்து அலைந்து,
அடையாளம் இழப்பவனும் மனிதனா?

பிறந்த நாட்டினைப் பிறரோடு சேர்ந்து
பழித்துரைப்பவனும் மனிதனா?

தன் இனத்தைத் துறந்து தூரம் சென்று,
தன் வேரை மறப்பவனும் மனிதனா?

கதிரைக்காக இனத்தையே காட்டிக் கொடுத்து,
காசுக்காகக் கொள்கை விற்பவனும் மனிதனா?

சதி செய்து சண்டைக்கு இழுத்து,
சமாதானம் கெடுப்பவனும் மனிதனா?

இனத்தையே ஒரு இனமழிக்கத் தூண்டி,
இரத்த வெறி வளர்ப்பவனும் மனிதனா?

மனத்தை மனித வழியில் செலுத்தாது,
மனிதநேயம் மறப்பவனும் மனிதனா?

இறைவனை மனித உயிருள்  காணாது,
மனிதநேயத்தினை  மதிக்காதவனும் மனிதனா?

மதங்களை மோதவிட்டு,
மனிதர்களைப் பிரிப்பவனும் மனிதனா?

குழந்தையின் மீது கொடூரக் கண்கொண்டு,
குழந்தை மனதை நசிப்பவனும் மனிதனா?

பெண் என்றாலே கிள்ளி எறியும்
வெறியனும் இந்த உலகில் மனிதனா?

மனிதத்தைத் தொலைத்த பின்னும்
மனிதன் என்ற பெயர் அவனுக்குத் தகுமா?

புனிதத்தைப் பாழாக்கி வாழும்
பொய்மையின் உருவம் மனிதனா?

உடல் மட்டும் மனிதனாய் இருந்தால்
உள்ளமும் மனிதமாகுமா?

உயிர் மட்டும் மனிதனாய் இருந்தால்
உணர்வும் மனிதமாகுமா?

அன்பு இருந்தால் மனிதன்;
அருள் இருந்தால் மனிதன்;
நன்றி இருந்தால் மனிதன்;
நாணம் இருந்தால் மனிதன்;
நல்ல மனம் இருந்தால் மனிதன்;
நடுவுநிலை இருந்தால் மனிதன்;
பிறர் துயர் கண்டு துடிக்கும்
இதயம் இருந்தால்தான் மனிதன்!

விலங்கினத்தில் பிறந்தாலும்
வாழ்வித்தைகள் கற்றுக்கொள்;

மனிதனாய்ப் பிறந்திருந்தால்
மனிதத்தை மட்டும் தொலைக்காதே!

மனித உருவம் பெறுவது பிறப்பினால்;
மனிதனாய் வாழ்வது பண்பினால்!

👬👬👬👬👬👬👬👬👬
 
---- செ.மனுவேந்தன்

3 comments:

  1. மனிதனை விலங்கினத்தோடு ஒப்பிட்டு, விலங்கினத்தை இவ்வளவுக்கு கேவலப்படுத்தியது மிகவும் வருத்தமாக இருக்கிறது!

    ReplyDelete
  2. உங்கள் வருத்தத்திற்கு நியாயம் உள்ளது. நல்லமனிதர்களும் உலகில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு மனிதர்கள் கீழ்த்தரமானவர்கள் எனும்போது வருத்தம் ஏற்படும் என்பது உண்மை..ஆனால் இன்று தமிழர்மத்தியில் ஆட்கடத்தல் ,கற்பழிப்பு,கொலை ,கள்ளத்தொடர்புக்காக கணவன் கொலை அல்லது மனைவி கொலை, அல்லது குழந்தை கொலை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, கொலை மட்டுமல்ல ,சடடத்திலிருந்து தப்பலாம் என்ற நினைப்பில் சடலத்தை எரித்தல்,அல்லது புதைத்தல் ,மதங்கள் மூலம் அமைதியின்மை , தற்கொலை எனப் பல கொடுமைகள் மலிந்துவிடடன என செய்திகள் மூலம் அறிகிறோம். எமது பக்கத்தில் செய்திகள் நிறுத்தப்படடமைக்கு இதுவும் ஒரு காரணம். அவற்றின் வெளிப்பாடே மேற்படி வரிகள்.உங்கள் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete