கண்ணகியில் விழுந்த பழி -01வடிவத்துக்காகவே பல இலக்கியங்கள் போற்றப்படுகின்றன. சில இலக்கியங்கள் அடக்கத்தை அறியமாட்டாமையால் புறக்கணிக்கப்படுகின்றன. இந்த இரண்டாம் வகையைச் சார்ந்தது சிலப்பதிகாரம். இந்நூல் தலைசிறந்த இலக்கிய உத்திகள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டது. அவற்றுள் ஒன்று இற்றை இதழியலை (Modern Journalism) ஒத்தது. 

அதாவது சிலப்பதிகார ஆசிரியர் தாம் கூறிய சேதிகளில் ஏறக்குறைய அனைத்துக்கும் யாரோ ஒருவருடைய கூற்றை எங்கோ ஓரிடத்தில் சான்றாகக் காட்டுகிறார். எடுத்துக் காட்டாக, புகாரில் நடந்தவற்றுக்கு தேவந்தி, செவிலி, காவற்பெண்டு, மாடலன் முதலியோரையும் மதுரையில் நிகழ்ந்தவற்றுக்கு புலவர் சாத்தனார், ஐயை முதலியோரையும் சான்று காட்டுகிறார். இன்னும் இது போன்று பல சான்றுகளை ஊன்றிப் படிப்போர் நூல் நெடுகிலும் காண முடியும். 

இவ்வாறு தன் நூலுக்கு சான்றுகளைக் காட்டுவது தற்செயலானது என்றோ அல்லது வெறும் உத்தி என்றோ தள்ளிவிடத் தோன்றவில்லை. தான் கூறும் கதையில் உண்மையில் அவருக்கே ஐயம் ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லது மக்கள் அறிந்த சேதிகளுக்கு மாறுபாடாகத் தாம் எடுத்துவைக்கும் கதைக்காக அவர் தம் மீது பிழையில்லை என்பதைக் காட்டிக் கொள்வதற்காக இவ்வுத்தியைக் கையாண்டிருக்க வேண்டும். அவ்வாறு அவர் வெளிப்படையாகக் கூறும் கதைக்கு மாறுபட்டதாக வேறு கதை ஏதாகிலும் இந்நூலுக்குள் புதைந்து கிடக்கிறதா, அவ்வாறாயின் அக்கதை யாது என்று ஆராய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம். 

பதிகத்தில் இளங்கோவடிகள் சாத்தனாரிடம் ஒரு கேள்வி போடுகிறார். 

வினைவிளை காலமென்றீர் யாதவர் 
வினை விளை வென்ன... (பதிகம் 37-38) 

இந்த வினையும் விளைவும் பற்றி கட்டுரை காதை, நூலில் விளக்கமாகக் கூறுகிறது. ஆனால் அங்கு தோன்றாத ஒரு சேதியை இக்கேள்வி பதிகத்தில் வெளிப்படுத்துகிறது. 

கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியிலில் 
வெள்ளியம்பலத்து நள்ளீருள் கிடந்தேன் 

என்று தொடங்கி மதுராபதித் தெய்வம் கண்ணகிக்குப் பழம்பிறப்புரைத்ததும் அப்பழம்பிறப்பு வினையின் விளைவே கோவலன் கொலையுண்டது என்றும் கூறியதைத் தான் கேட்டதாக சாத்தனார் விடை கூறுகிறார். (பதிகம் 39-54) 

இவ்வாறு கட்டுரை காதை முழுவதற்கும் சாத்தனாரைப் பொறுப்பாக்கி விடுகிறார் இளங்கோவடிகள். அப்படியானால் சாத்தனாரின் கூற்றில் அடிகளுக்கு ஐயமேற்படக் காரணம் இருந்ததா? இருந்திருக்கலாமென்றே தோன்றுகிறது. 

சிலப்பதிகாரக் காலத்தில் தமிழ் நாட்டு மூவேந்தர் அரசுகளும் மிகக் குழப்பமான நிலையிலிருந்தமை நூல் முழுவதும் படிக்கும்போது தெரிகிறது. அதனை மிக நுணுக்கமாக ஓரிடத்தில் ஓர் உவமை மூலம் காட்டுகிறார் அடிகள். அந்திமாலைச் சிறப்புச் செய்காதையில் கதிரவன் மறைந்ததால் கவிந்த இருளை நிலவு தோன்றி அகற்றுவதை, 

கறை தெழு குடிகள் கை தலை வைப்ப 
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி 
வலம்படு தானை மன்னரில் வழிப் 
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் 
............................................................. 
மல்லல் மூதூர் மாலை வந்திறுத் தென 
இளையராயினும் பகையரசு கடியும் 
செருமான் தென்னர் குல முதலாகலின் 
அந்தி வானத்து வெண்பிறை தோன்றி 
............................................................ 
மீனரசாண்ட வெள்ளி விளக்கத்து..... (4: 10-26) 

சோழர் கதிரவன் குலமென்பதும் பாண்டியன் நிலவுக் குலமென்பதும் மரபு. இங்கு கதிரவன் மறைந்து இருள் சூழ்ந்ததை வலம்படு தானை மன்னரில் வழி என்பதன் மூலம் சோழப் பேரரசன் இயற்கை யெய்தி புதிய அரசன் பட்டமேறாத இடைக்காலத்தைக் குறிக்கிறது எனலாம். கரிகாலன் காலத்துக்குப் பின் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளிகளுக்கிடையில் கலகம் நிகழ்ந்ததற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. ஆனால் சிலம்பு கூறும் ′விருந்தின் மன்னர்′ (புதிய மன்னர்) சோழ குலத்தவராக இருக்க முடியாது. இலக்கியங்கள் மறைக்கும் நிகழ்ச்சி ஏதோ ஒன்று அதில் அடங்கியிருக்க வேண்டும். அரசு வலுவிழந்திருந்த போது புதிதாகத் தோன்றிய சிற்றரசு ஒன்றின் அரசன் புகார் மீது படையெடுத்து அதைப் பிடித்திருக்க வேண்டும். உள்நாட்டுக் குழப்ப நிலையை அவன் பயன் படுத்தியிருக்க வேண்டும். இவ்வெதிரியை முறியடிக்க, பாண்டியன் ஒருவன் சோழ அரசனுக்கு உதவியிருக்க வேண்டும். அது தான் ′இளையோராயினும் பகையரசு கடியும் செருமான் தென்னர் குலமுதல்′ என்று நிலவைக் கூறுகிறார். (இவ்வாறு இளமையிலேயே பகைவர்களைச் கடிந்தவனாக ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியனே கூறப்படுகிறான். இவன் தான் கோவலனைக் கொலைக்களப் படுத்திய நெடுஞ்சழியன்.) 

இவ்வாறு முகாமையான ஒரு வரலாற்றுச் செய்தியை ஓர் உவமையினுள் நுண்மையாக இளங்கோவடிகள் மறைந்து வைத்திருப்பதைக் காணும் போது இவர் மூலக்கதையிலும் ஏதோ ஒரு நிகழ்ச்சியைப் புதைத்து வைத்திருப்பாரோ என்ற எண்ணம் உருவாகிறது. 

உண்மையில் அத்தகைய ஒரு நிகழ்ச்சி சிலப்பதிகாரத்தில் மறைந்திருக்கவே செய்கிறது. சிலப்பதிகாரக் காலம் சங்க காலத்தின் இறுதிக் காலம். சங்க இலக்கியங்களினுள் வரி விதிப்பைப் பற்றி கிழார்களாகிய புலவர்கள் குறைபட்டு அரசனுக்கு அறிவுரை கூறுவோராகக் காணப்படுகின்றனர். அதே வேளையில் அரசர்களை வானளாவப் புகழ்ந்து அளவிறந்த பரிசில்களைப் பெறும் புலவர்கள், குறிப்பாகப் பார்ப்பனப் புலவர்கள் பெருகி வருகின்றனர். இது, வாணிகர், வேளாளர் முதலிய மக்கட் குழுவினருடன் கலந்து முடிவெடுக்கும் தன்மையிலிருந்து அரசன் மாறுபட்டு, மக்களிடமிருந்து விலகி, கட்டற்ற முடியாட்சிக்கு மாறியதையே காட்டுகிறது. இச்சூழ்நிலையில் தம்மை இடித்துரைப்போரை விடத் தம்மைப் போற்றிப் புகழுவோரே அரசர்களுக்கு இனியோராகத் தோன்றுகின்றனர். இவ்வாறு சங்க கால இறுதியில் பார்ப்பனர்கள் அரசர்களிடமிருந்து முற்றூட்டுகளைப் பெறகின்றனர். இதற்கு ஒரு பதமாக: 

தடம் புனற்கழனித் தங்கால் தன்னுடன் 
மடங்கா விளையுள் வயலூர் நல்கிக் 
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் 
இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கி...... (23:118-121) 

என்பது காணப்படுகிறது. 

இவ்வாறு கட்டில்லா முடியாட்சியின் விளைவுகள் பல துறைகளிலும் பெருகுகின்றன. இப்போது போரிடுவது மக்களுக்குப் பகைவரிடமிருந்து பாதுகாப்பளிப்பது, பஞ்சம் வந்த வேளையில் வளமிக்க நாடுகளிலிருந்து பொருள்களைப் பெறுவது என்ற நோக்கம் மாறி மன்னர்தம் புகழ் ஒன்றே குறியாகிறது. போர்களில் அயல்நாடுகளைக் கொள்ளையடித்து தன் அரண்மனையை வளப்படுத்தியும் படைத்தலைவருடனும் படைவீரர்களுடனும் பங்கிட்டும் கொண்டனர் அரசர்கள். தலைநகரில் இவ்வாறு சேர்ந்த செல்வம் ஆடம்பர விளையாட்டுகளில் செலவாயின. விலை மகளிரால் தலைநகர் நிறைந்தது. இதனை மதுரையில் கோவலன் நுழைந்ததும் காட்டுகிறார் இளங்கோ. 

வையமுங் கவரியும் மணிக் கால் அமளியும் 
உய்யானத்தின் உறுதுணை மகிழ்ச்சியும் 
சாமரைக் கவரியும் தமனிய அடைப்பையும் 
கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப....... (14:126-129) 

சிறப்புரிமைகளைப் பெற்ற விலைமகளிரை அரசன் உருவாக்கியிருந்தான். 

செவ்வி பார்க்கும் செழுங்குடிச் செல்வரொடு 
வையங்காவலர் மகிழ் தரு வீதியும்........ (14:144-145) 

எனவும் 

முடியர சொடுங்கும் கடிமனை வாழ்க்கை (14:146) 

எனவும் கணிகையர் வீதிப் பெருமையும் வீட்டுப் பெருமையும் கூறுவார் போல் அரசனும் சுற்றமும் கணிகையர் வீடுகளுக்குச் செல்வதை அடிகள் குறிப்பாக உணர்த்துகிறார். 

அடுத்து, கொலைக் களக் காதையில், 

கூடல் மகளிர் ஆடல் தோற்றமும் 
பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் 
காவலனுள்ளம் கவர்ந்தன என்று தன் 
ஊடலுள்ளம் உள்கரந் தொளித்துத் 
தலைநோய் வருத்தந் தன் மேலிட்டுக் 
குலமுதல் தேவி கூடா தேக .......... (16:131-136) 

அரசன் பரத்தையர் வீடு சென்றானென்று வெளிப்படக் கூறவில்லை யாயினும் மேலே காட்டியவற்றிலிருந்து அரசன் செயலையும் அதற்காக தேவி ஊடியதையும் குறிப்பாகக் காட்டுகிறார் அடிகள். 

பொற்கொல்லன் திறம் பற்றி யாருக்கும் ஐயமில்லை. அவன் ஒரு கொடியவன், கயவன். ஆனால் அவனுக்கு கோப்பெருந்தேவி கோயில் வாயில் வரை சென்று அரசனைக் காணும் அளவுக்கு உரிமையிருந்தது. அரசனின் ஆட்சித் திறத்தை அவனை அண்டியிருப்போரைக் கொண்டு அளவிடலாம். ′உன்னைத் தெரிந்து கொள்வதற்கு உன் நண்பனைத் தெரிந்து கொண்டால் போதும்′ என்ற ஆங்கிலப் பழமொழிக்கேற்ப அரசன் ஆட்சி செய்த வகையைத் தெளியலாம். 

இத்தகைய ஓர் அரசனின் தலைநகரில் சிலம்பை விற்று அதை முதலாக்கி வாணிகம் செய்யவென்று வந்த வெளியூர் வாணிகன் ஓருவன் அரசன் ஆணையால் முறைகேடாகக் கொல்லப்படுகிறான். அவன் மனைவியோ இக்கொடுமையை அறிந்து வாளாவிருக்கவில்லை, கொதித் தெழுகிறாள். கையில் மீதமிருந்த சிலம்புபொன்றை ஏந்தி வீதியில் முறையிட்டுக் கொண்டே வருகிறாள். 

பொதுவாக இக்காட்சியைப் பற்றி, கண்ணகி வீதியில் தன்னந்தனியாகத் திரிந்ததாகவே பலரும் கருதுகிறன்றனர். உண்மையில் அவளைத் தொடர்ந்து ஒரு பெரும் கூட்டம் திரண்டு விட்டதை, 

கம்பலை மாக்கள் கணவனைத் தான்காட்ட (19:29) என்று ஆசிரியர் காட்டுவதை அவர்கள் கவனிப்பதில்லை. 

அவள் கணவனைக் கண்டதையும் அவனோடு பேசியதையும் அரசனைக் கண்டு முறை கேட்பேன் என்றதையும் ஒரு பெரும் மக்கட் கூட்டம் பார்த்துக் கொண்டே அவளைப் பின் தொடர்ந்தது என்பதை இவ்வொரு சொல் விளக்குகிறது. 

இவ்வாறு தன்னையும் வெட்டுண்டு கிடக்கும் தன் கணவனையும் சூழ்ந்து தெருவில் குழுமி நின்ற கம்பலை மாக்காளை (கம்பலை = ஒலி, ஆரவாரம்) நோக்கி, 

பெண்டிரும் உண்டுகொல் 
சான்றோரும் உண்டுகொல் 
தெய்வமும் உண்டு கொல் (19:48-52) 

என்று வினவுகிறாள். 

"நீங்கள் பெண்கள் தானா?" 
"நீங்கள் சான்றோர் தானா?" என்று கேட்கிறாள். 

இவ்வாறு மாலைக் கதிரவன் மறைந்த பொழுதிலிருந்து மறுநாள் காலை அரசவை கூடும் வரை அவள் மதுரை நகரின் வீதியைக் சுற்றிச் சுற்றி வருகிறாள். இதற்குள் அவளைப் பின் தொடர்ந்து பெருங்கூட்டம் கூடியிருக்க வேண்டும். இதுவரை கேள்வி கேட்பாரின்றி காட்டாட்சி நடத்திய அரசன், அவன் படையினர், காவலர், அவனை அண்டியிருந்த கொடியவர் ஆகியோரின் கொடுமைகளால் கொதிப்படைந்திருந்த அவன் கொட்டத்தை(கொற்றத்தை?) அடக்கவும் கேள்வி கேட்கவும் தங்களுக்குத் தலைமை தாங்க வந்த தெய்வமாகக் கண்ணகியை மக்கள் கண்டனர். 
மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன் 

தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல்....... (19:19-20) 

செம்பொற் சிலம் பொன்று கையேந்தி நம்பொருட்டால் 
வம்பப் பெருந் தெய்வம் வந்ததிது வென் கொல்.......... (19:23-24) 

மன்பழி தூற்றும் குடியதே மாமதுரை....... (19:28) 

என்பவற்றைக் காண்க. 

அண்மையில் கேரள மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி யொன்று நாளிதழ்களில் வந்தது. ஒரு தெருவில் மருத்துவர் ஒருவர் குடியிருந்தார். அவருக்கும் அத்தெருவில் குடியிருந்தோர்க்கும் நாட்பட்ட பிணக்குகள் இருந்து வந்தன. ஆனால் அவரை எதிர்க்க வழியின்றி இருந்தனர் அவர்கள். ஒரு நாள் மருத்துவர் வீட்டுக்கு சுமையுந்தில்(லாரியில்) செங்கல் வந்தது. எல்லோரிடமும் சச்சரவிடும் மருத்துவர் செங்கல் இறக்கும் தொழிலாளரோடும் சச்சரவு வளர்த்தார். விளைவு, மருத்துவர் வீட்டைத் தொழிலாளர்கள் தாக்கத் தொடங்கினர். இவ்வளவு நாளும் சினத்தை அடக்கி வைத்திருந்த தெருமக்களும் அவர்களுடன் சேர்ந்து மருத்துவர் வீட்டைத் தீவைத்துக் கொளுத்தித் தீர்த்தனர். 

இது தான் மதுரையில் நடந்தது. நெடுநாட்களாக அரசனும் அவனைச் சார்ந்தவர்களும் மக்களுக்கு இழைத்த தனித்தனிக் கொடுமைகளுக்குப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த மக்களை ஒன்றுதிரட்டும் கருவாக கண்ணகி செயற்பட்டாள். அந்த மக்களால் கொளுத்தப்பட்ட தீ தான் கண்ணகி மூட்டிய தீ. 

(தொடரும்) 

எழுதியவர்: குமரிமைந்தன் 

0 comments:

Post a comment