"கார் கூந்தல் சரிந்து விழ"

  


"கார் கூந்தல் சரிந்து விழுந்து

காற்றோடு அது அலை பாய

 

காதணி குலுங்கி இசை அமைத்து

கார்த்திகை அதற்கு ஒளி வழங்க

 

காகொடி தரும் நஞ்சை விடவும்

காமப் பால் நெஞ்சில் வடிய

 

காசனம் செய்யும் விழிகள் திறந்து

காகோதரம் போல் நெளிந்து வந்தாள் !"

 

"காசினி மேலே அன்னநடை போட்டு

கால் கொலுசு தாளம் போட

  

காஞ்சனி உடலில் தொய்யில் எழுதி

காருண்யம் காட்ட  என்னை அழைத்து

 

காதல் தெளித்து ஈரம் ஆக்கி

கானல் உள்ளத்தை சோலை ஆக்கி

 

கார் மேகமாய் அன்பு பொழிந்து

காலம் அறிந்து காரிகை வந்தாள் !"

"காதோரம் மெதுவாய் செய்தி கூறி

காங்கேயம் காளையாக வலு ஏற்றி

 

காட்டுத் தீயாக  ஆசை பரப்பி

காவல் உடைத்து என்னை தழுவி

 

காவணம் முழுதும் மலரால் அலங்கரித்த

காமன் விழாவிற்கு என்னை அழைத்து

 

காலை மாலை முழுவதும் கொஞ்சி

காவற் கடவுளாய் நம்பி வந்தாள் !"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

காகொடி - A thorny poisonous tree [Strychnine tree], எட்டிமரம் [காஞ்சிகை], ஒரு விஷ மரமாகும்.

காசனம் - Killing,slaying; கொலை

காகோதரம் - snake, பாம்பு

காசினி - world, Earth, உலகம், பூமி

காஞ்சனி - colour of gold, பொன்னிறம்

தொய்யில் -  மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு

காருண்யம் - mercy, compassion, கருணை

காரிகை - woman, பெண்

காவணம் - open hall,  pandal, மண்டபம், பந்தல்


0 comments:

Post a Comment