தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:26 [முடிவுரை]

                                                                 ((தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்))
பாரம்பரிய உணவுகள் பற்றி நாம் சிந்திக்கும் போது எம் நினைவுக்கு வருவது பல ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்,எல்லாவற்றையும் கையால் செய்து,எல்லாவற்றையும் புதிதாக ஆரம்பித்த.வேட்டையாடி சேகரித்தவர்களையா?அல்லது காட்டின் விளிம்பில் முதல் முதல் பயிரிட தொடங்கி,தமது உணவு தேவையை பூர்த்தியாக்கி,இடம் விட்டு இடம் அலையாமல்,பண்ணை வீடாக,ஓர் இடத்தில் நிரந்தரமாக குடியேறியவர்களையா?இப்படி எமது மனதில் பல கேள்விகள் எழலாம்.பொதுவாக உலகத் தொல்மாந்தரின் உணவுமுறைகள் இயற்கையோடு இயைந்தே இருந்தன.தொல்தமிழரின் உணவு முறை என்பதும் அப்படியேஇயற்கையோடு இயைந்த ஒன்றாக இருந்திருக்கிறது.இயற்கை வளம் நிறைந்த சூழலில் வாழ்ந்த பழந்தமிழர்கள் தம்மைச் சூழ்ந்திருந்த உணவு வகைகளையே உண்டு வாழ்ந்துள்ளனர்.எனவே பாரம்பரிய உணவுகள் என்பது அவர்களின் நீண்ட கால நாகரிகத்தில்,அவர்கள் வாழ்ந்த சூழ்நிலைக்கு ஏற்ப,அவர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு பொதுவாக உதவியவையே.இவை பயிரிடப்பட்டு,வளர்க்கப்பட்டு பூமியில் இருந்தும் இயற்கையில் இருந்தும் அறுவடை செய்யப்பட்டவையே- அதாவது இயற்கை வேளாண்மை மூலம்,எந்தவித மரபணு மாற்றங்களுக்கும் உட்படாமல்,உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளே.இவை பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்களால் உட்கொள்ளப்பட்டவையே.தமிழர் உணவுப் பண்பாடு,பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா,இலங்கை தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில்
ஒன்றாகும்.இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது.வரலாற்றை நாம் நோக்குவோமாயின் எமது சமூகத்தால் அன்றுதொட்டு இன்று வரை இப்படியான பழமையான உணவுப்பழக்கங்கள் காணப்படுகின்றன.பல சந்தப்பங்களில்,உங்கள் உள்ளூர் சமூகத்தில் காணப்படும் உணவுகளும் பாரம்பரிய உணவாகின்றன.எனினும்,இன்று எமது உணவு  பழக்கங்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளன.இன்று நாம் எப்படி உணவுகள் தயாரிக்கப்படுகின்றனவோ,அப்படியே அவைகளை பார்த்து பழகிவிட்டோம்.எம்மால் இப்ப உணவு பொட்டலத்திற்கு அல்லது தகரக் குவளைக்கு மேல்[ package or the can] பொதுவாக எண்ணத் தோன்றவில்லை.தொழில் புரட்சி காலத்தில்,இயந்திரமயமாக்கல் வருகையுடனும் பதப்படுத்தும் தொழில் நுட்பங்கள் வளர்ச்சியாலும் எமது பாரம்பரிய இயற்கை உணவுகள் அகற்றப்பட்டு,அவை  இயற்கை நிலையில்அல்லது வடிவில் இருந்து மாற்றப்பட்டன.இது எமது ஆரோக்கியத்தில் ஏற்படுத்திய தாக்கம் ஆழமானது.சாதாரண மனிதன்,தனக்கு தேவையான ஆரோக்கிய அல்லது சத்து உணவுகளை தேர்ந்து எடுப்பது இன்றைய கால கட்டத்தில்,சக்தி வாய்ந்த நிறுவனங்கள்,தமது உணவுப் பொருட்களை விற்பதற்கு கையாளும் சந்தைப்படுத்தும் உத்திகளால் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன.இந்த தொழில் நுட்ப சாத்தியமும் வியாபாரக் கண்னோட்டமுமே நமது தற்போதைய உணவுப் பழக்கத்தை
தீர்மானிக்கிறது.ஒரு பொருளை சந்தைப்படுத்துவதற்கு அல்லது விற்பதற்கு விளம்பரம் பொதுவாக ஒரு வசப்படுத்தும் மற்றும் வெற்றிகரமான ஒரு கருவி.எனினும் இவை அருமையாகவே ஆரோக்கியமான உணவுகளை சந்தப்படுத்துகின்றன.எது எப்படியாயினும் தேர்வு உங்களுடையது.சில தரவுகளை அல்லது செய்திகளை அறிவு பூர்வமாக அறிவது மூலம்,நீங்கள் உங்களை திடமாக்கி,உங்கள் ஆரோக்கியத்தை,விளம்பரம் தீர்மானிக்காமல், நீங்களே பொறுப்பு எடுக்கலாம்.உங்கள் ஆரோக்கியத்தை நீங்களே கட்டுப்படுத்த இலகுவான முறை,பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து,இயற்கையான பாரம்பரிய உணவுகளை உட்கொள்வதாகும். 

அது மட்டும் அல்ல,ஒவ்வொரு பண்பாட்டிலும் உணவு,சமையல்,உண்ணும் பழக்கங்கள்
போன்றவை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.உண்ணுதல் ஒரு உடல் தேவை மட்டும் அல்ல.இது வெறும் ஊட்டச்சத்துக்கு மட்டும் இன்றி,சமுகமாக ஒன்று கூடி உண்ணுதல் வேறு தேவைக்காகவும் கையாளப்படுகிறது.அங்கு நிகழும் கலந்துரையாடல்,தகவல் பரிமாறலுக்கும் மற்றும் உறவுகளுக்கும் கூட வழிவகுக்கின்றன.அதே போல தமிழர்களின் திருமணத்தில்,புதிதாக மணம் புரிந்த தம்பதியரை,முனை முறியாத முழு அரிசி தூவி வாழ்த்துவது,எந்த விதத்திலும் உணவோடு சம்பந்தப்பட்டது அல்ல.பழுதில்லாத அந்த அரிசி போல வாழ்வில் தம்பதியரும் பழுதின்றி நிறைவாக வாழவேண்டும் என்பதே அதன் பொருள்.உணவு சமயத்திலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.ஒரு சமயத்தின் தனித்துவத்தை எடுத்து காட்டுகிறது. விலக்கப்பட்ட உணவுகள் அந்த அந்த சமயத்தை அடையாளம் காட்டுகின்றன.

மனிதன் தோண்றி சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளாக அவனது பிராதான உணவு வேட்டையாடி புசித்த மாமிசமும் பழங்கள் போன்ற தாவர உணவும் தான்.இத்தகைய உணவை ஏற்றுக்கொள்ளும்படிதான் அவனது மரபணுக்களும் ஜீரண மண்டலமும் அன்று பரிணாமத்தால் பக்குவப்பட்டிருக்கும்.எனினும் மனித வரலாற்றில் சுமார் ஆறாயிரம் வருடங்களாகத்தான்,விவசாயம் கண்டுபிடித்து,மனிதன் பெருமளவு அரிசி கோதுமை சர்ககரை போன்ற மாவு சத்துப் பொருட்களை உற்பத்தி செய்து உண்ணப் பழகியிருக்கிறான்.இந்த மாறிய உணவுப் பழக்கத்திற்கேற்ப நம் உடலியல் அல்லது அதை நிர்ணயிக்கும் மரபணுக்களோ பெரும்மளவு இன்னும் மாறவில்லை.தற்கால உணவுப் பழக்கத்தால் உடலில் அதிகப்படியாக சேரும் மாவு சத்தை எப்படிக் கையாள்வது என்பதை அது இன்னும் சரியாக அறியவில்லை.நம் முன்னோர்கள் இயற்கையாக விளைந்த சத்தான உணவுகளை மண்ணிலிருந்து நேரடியாக உண்டார்கள்.ஆனால் இன்று நாம் உண்பது 90% உணவும் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு பதப்படுத்தியது.அரிசி கூட அதன் நல்ல சத்துகள் நிறைந்த தோல் தீட்டப்பட்டே கிடைக்கிறது.எது உடலுக்கு தேவையான உணவு என்பதை விடுத்து எது சுவையானது என்று பார்த்து அதை மட்டுமே பெருமளவு உற்பத்தி செய்தும் உண்டு வருகிறோம்.சுவையான எல்லாப் பொருட்களிலும் கொழுப்பு முக்கிய அம்சமாக இருக்கிறது.இன்று சூப்பர் மார்கட்டில்[பெருஞ் சந்தை/Super Market] கிடைக்கும் எந்த பொருளுமே அதிக கலோரி தரும் மாவு,கொழுப்பு, இனிப்பு பொருட்களாகவே நிறைந்து கிடக்கிறது.அது மட்டும் அல்ல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவர உணவுகள் பெருமளவு சந்தைபடுத்தப்படுகின்றன.இந்த உணவுகளை உண்பதால் என்னென்ன பிரச்சனைகள் வருமென்பதை உடனே அறிய முடியாது இருக்கிறது.எனினும்  பிற்காலங்களில் அதற்கு உரிய விலை கொடுக்க வேண்டி வரலாம்?உதாரணமாக, மரத்திலிருந்து பறித்து உண்ணும் மாம்பழத்தை விட ரசாயனங்களால் செய்த மாம்பழச்சாறு போன்ற திரவத்தை சிறந்ததாக மக்களிடம் பரிந்துரைக்கிறார்கள்.பரிணாமத்தின் பல்வேறு கால கட்டங்களில் திடீரென உண்டாகும் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பல்வேறு உயிரினங்கள் பழங்கதைகளாகிப்போயின. இன்றைய காலங்களில் ஏற்படும் வேகமான மாற்றங்கள்,இயற்கையை விட்டு நீங்கிய உணவுப்பழக்கம் மனித வரலாற்றை அழித்து விடக்கூடாது.

பகுதி :27 தொடரும்................                                                                                                  

0 comments:

Post a Comment