-அடக்கம் — ஆணவம்-
ஆறு வயதான சிறுமியிடம், `உன் அக்காளிடம் பாடம் கற்றுக்கொள்,’ என்று சொன்னால், `அவ ரொம்பத்தான் காட்டிப்பா,’ என்ற சிணுங்கல் வரும்.
ஓரிரு வயதே பெரியவளான அக்காளுக்குப் பெருமை, தனக்கு தங்கையைவிட அதிகம் தெரிந்திருக்கிறதே என்று. அவளை மட்டம்தட்டிப் பேசத் தோன்றும்.
பெரியவர்கள் இப்படி நடந்தால், `அகம்பாவம்’ என்று முத்திரை குத்திவிடுகிறோம். ஆனால், அவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள்.
தம்மீது நம்பிக்கை இல்லாததாலேயே அப்படி நடக்கிறோம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.
`என்னைப்போல் யார்!’ என்று மார்பை உயர்த்திக்கொண்டு ஒருவன் நடந்தால், தன்னை யாராவது வீழ்த்திவிடுவார்களோ என்ற அச்சம் அவனுக்குள் இருக்கிறது என்று அனுமானிக்கலாம்.
ஏதாவது துறையில் அவன் தன் திறமையைக்கொண்டு சாதித்திருக்கலாம்.
அதற்கென்ன! அந்த சாதனையை வீழ்த்த வேறொருவர் வரமாட்டாரா, என்ன!
`நான் சொல்வதுதான் சரி!’ என்று ஒருவன் அழுத்திக் கூறிக்கொண்டே இருந்தால், பலர் அவன் பின்னால் நடப்பார்கள். எல்லாம், அவனைச் சார்ந்திருந்தால் ஏதாவது காரியம் நடக்குமே என்றுதான்! அவனுடைய கர்வமும் ஓங்குகிறது.
இந்த கர்வத்திற்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. மனிதனின் பிறவிக் குணம். அவ்வளவுதான்.
“முட்டாள்தனத்திற்கு அடுத்து அபாயகரமானது ஆணவம்” என்கிறார் ஐன்ஸ்டீன்.
தான்தான் உயர்ந்திருக்கிறோம் என்ற அகந்தை கொண்டவனுக்கு, `இன்னும் எப்படி முன்னேறலாம்?’ என்ற யோசனை கிடையாது. அதுவரை கிடைத்ததே போதும் என்று மெத்தனமாக இருப்பான்.
கதை:
எப்போதும் ஒரு நமட்டுச் சிரிப்புடன் நடப்பான் லிங்கம். வெளிநாட்டிலிருந்து கலைக்குழுவினரை வரவழைப்பது அவன் தொழில்.
அதிகப் படிப்போ, பணமோ அவனிடம் கிடையாது. எப்படியோ ஒரு பெரிய நிறுவனத்தினருடன் தொடர்புகொண்டு, அவர்களுக்காகப் பெரிதும் உழைப்பதுபோல் `காட்டிக்’கொண்டான். எப்போதும் அங்கேயே உட்கார்ந்திருப்பான்.
அங்குள்ள பிரமுகர்களுடன் – காலில் விழாத குறையாக — பழகி, எந்த விழாவாக இருந்தாலும் அதை நடத்திக்காட்டும் பொறுப்பை ஏற்றான்.
கலைக்குழுவினரை மட்டமான இடங்களில் தங்கவைப்பது, பெரிய விருந்திற்குச் சுமாரான உணவை ஏற்பாடு செய்வது என்றெல்லாம் தில்லுமுல்லு செய்தால் சம்பாதிக்க முடியாதா, என்ன!
`நான் இல்லாவிட்டால் இவர்கள் இப்படி நடத்திக்காட்டி இருக்க முடியுமா?’ என்ற பெருமிதம் ஏற்பட்டது.
ஒரு நிகழ்ச்சியில், “என்ன தம்பி!” என்று அதிகாரி ஒருவர் குசலம் விசாரித்தது இரண்டு வரிசை பின்னால் உட்கார்ந்திருந்த எனக்கே கேட்டது. அவன் ஏன் பதிலளிக்கவில்லை என்று ஆச்சரியமாகப் பார்த்தேன். அலட்சியமாக இருந்தான்.
சிறிது பொறுத்து, அப்போதுதான் அவரைக் கவனித்ததுபோல், “அட! ஹலோ, டத்தோ! ஹௌ ஆர் யூ?” என்றான், ஆரவாரமாக. (டத்தோ என்பது மலேசியாவில் மாமன்னரோ, மாநில சுல்தான்களில் ஒருவரோ அளிக்கும் பட்டம்).
உயர்ந்த இடத்தில் பழகியதால் தானும் உயர்ந்தவன்தான் என்று நம்பிய முட்டாள் அவன்.
“ஆணவம் விவேகத்தைக் குறைத்துவிடும்” (அரபு நாட்டுப் பழமொழி)
அதிகாரியைக் கவனிக்காது விட்டது ஆணவம் — `நானும் நீங்களும் ஒரே தரத்தில்தான் இருக்கிறோம்,’ என்பதுபோல். இல்லாத தன்னம்பிக்கையை வரவழைத்துக்கொள்ளும் உபாயம் அது.
அவனுடைய போக்கு அங்கிருந்தவர்களுக்கு எரிச்சலை ஊட்ட, விரைவில் வீழ்ந்தான்.
இத்தகையவர்கள் தெரிந்தவர்களுடன் மட்டுமே பழகுவார்கள். ஏனெனில், அவர்கள்தாமே ஏற்பார்கள்! அதிகம் தெரியாதவர்களுடன் விறைப்பாக நடப்பார்கள்.
படித்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவர்களையும் ஆணவம் விட்டு வைப்பதில்லை.
இவர்கள் தாம் செய்யும் தவற்றுக்குக்கூட `ஒழுக்கம்’ என்ற சாயத்தைப் பூசுவார்கள் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இதோ!
கதை:
இரவு நேரம்.
தலைமை அதிகாரியின் வீட்டில் ஒரு பார்ட்டி.
தன் கையில் ஒரு கோப்பை மதுவுடன், அமர்ந்திருந்த ஒவ்வொருவரிடமும் வந்து, “குடி!” என்று அவர் மிரட்டினார். `என்ன! நீ இன்னும் குடிக்க ஆரம்பிக்கலியா?’ என்ற கேலி வேறு, அவ்வப்போது.
விருந்தினரில், `குடிப்பது நல்லொழுக்கம் இல்லை’ என்று நம்பியவர்கள் சிலர் இருந்தார்கள். இருந்தாலும், ஒழுக்கத்தைவிட மேலதிகாரியின் நல்லெண்ணமே பெரிது என்று பயந்து, அவருக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
மறுத்தால், அவர் செய்வது தவறு என்பதுபோல் ஆகிவிடாதா!
ஒரு வேளை, இப்படி அதிகாரமாக, ஆணவத்துடன் நடப்பதால்தான் பெரிய மனிதராக ஆனாரோ என்று, அவரைப் பின்பற்றுகிறவர்களும் உண்டு.
கதை:
அமீர் எங்கள் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அடக்கமான சிறுவன். படிப்பும் சுமாராக இருந்தது.
அவனது பணிவால் கவரப்பட்டு, அவனை prefect (சட்டாம்பிள்ளை) ஆக்கினார் கட்டொழுங்கு ஆசிரியர்.
பள்ளியில் எந்த மாணவன் தவறு செய்தாலும், அதைத் தட்டிக்கேட்கும் உரிமை அவனுக்குக் கிடைத்தபோது, அந்த ஆசிரியருக்கு அடுத்தபடி தான்தான் என்று நிச்சயித்துக்கொண்டான்.
பிற ஆசிரியர்களை மதிப்பது அறவே நின்றுபோயிற்று. எதிர்த்துப் பேச ஆரம்பித்தான்.
“உனக்கு ஏதோ பதவி கிடைத்துவிட்டதால், நீ ஆசிரியர்களைவிட உயர்ந்த நிலைக்குப் போய்விட்டதாக எண்ணமா?” என்று நான் திட்ட, “சரியாகச் சொன்னீர்கள், டீச்சர்!” என்று மாணவிகள் ஆமோதித்தார்கள். அவர்களுக்கும் அவனுடைய புதிய போக்கால் எரிச்சல்.
சில வாரங்களிலேயே பொறுக்கமுடியாது போக, என் சக ஆசிரியரிடம் புகார் செய்தேன்.
“இவனுக்கெல்லாம்போய் பெரிய பதவி கொடுத்திருக்கிறீர்களே! அதைப் பிடுங்கினால்தான் இவன் வழிக்கு வருவான். படிப்பிலும் அக்கறை போய்விட்டது,” என்று எடுத்துச்சொன்னேன்.
அவருக்கு அவமானமாகப் போய்விட்டது.
அடுத்த முறை அமீர் என் வகுப்புக்கு வந்தபோது, பயந்தவனாகக் காணப்பட்டான். பதவி போய்விட்டால், தன் மதிப்பு குறைந்துவிடுமே என்ற பயம்.
சில காலம் இந்த மாற்றம் நிலைக்கும்.
இன்னொரு கதை:
மலேசிய அரசாங்கப் பள்ளிகளில் காலை, மத்தியானம் என்று இரு அமர்வுகள் உண்டு. காலையில் பதினைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள்.
வயதில் சற்றுக் குறைந்தவர்களுக்கு மத்தியானப்பள்ளி.
அதில் போதிக்கும் ஓர் சீன ஆசிரியை என்னிடம் வலிய வந்து, குழைந்து குழைந்து பேசுவாள். எனக்கோ அவள் பெயர்கூடத்தெரியாது.
`இவள் ஏன் நம்மிடம் இவ்வளவு இழைகிறாள்?’ என்று என் யோசனை போயிற்று.
நான் பெரிய வகுப்புகளில் போதித்த மூத்த ஆசிரியை. அவள் என்னைவிட வயதில் மூத்தவளாக இருந்தாலும், பட்டதாரி இல்லை. அதனால் வந்த அடக்கம்.
பள்ளி அரசாங்கப் பரீட்சை ஒன்றில் அவளுடைய மகள் சிறப்பான தேர்ச்சி பெற்றிருந்தாளாம். மகள் பெற்ற வெற்றியால் தானும் உயர்ந்துவிட்டதாக அவள் நினைத்திருக்க வேண்டும்.
அதன்பின், `நான் உன்னைவிட உயர்த்தி!’ என்று மார்தட்டிக்கொள்வதுபோல் என்னிடம் மரியாதைக்குறைவாகப் பேசினாள்.
இவளைப்போன்ற பலருக்கு, மற்றவர்களைவிடத் தாங்கள் உயர்ந்திருக்க வேண்டும்.
உயர்ந்த நிலையில் இருப்பவர்களுடன் இணைந்து பழகினால் தாமும் உயர்ந்துவிட்டதாகப் பிறர் எண்ணுவார்களே என்ற நப்பாசை.
அல்லது, பிறருடன் ஒப்பிட்டுக்கொண்டு, தாழ்வாக இருக்கிறோமோ என்ற மனக்கலக்கம்.
அவ்வப்போது அசடு வழி
`நான் இருக்கிறபடி இருந்துவிட்டுப்போகிறேன். பிறருடன் என்னை ஒப்பிட்டுக் கொண்டிருப்பானேன்!’ என்ற விவேகம் இருந்தால்தான் நிம்மதி கிடைக்கும்.
எந்த சூழ்நிலையிலும், `பிறர் நம்மைப்பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ!’ என்ற பயத்துடன் நடக்க வேண்டியதில்லை.
அவ்வப்போது அசட்டுத்தனமாக நடந்தால், நமக்கே நாம் உற்சாகமூட்டிக்கொள்ள முடியும்.
:-நிர்மலா
ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.
தொடரும்....
👉அடுத்தப்பகுதி வாசிக்க... அழுத்துக
👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக