தமிழனிடம் சிக்கிய 'ழகரம்' படும் பாடு.தமிழில் 'ழ' என்னும் எழுத்து தமிழுக்கே உரிய ஒரு சிறப்பெழுத்து. இந்த 'ழ' உச்சரிப்பு உலகில் இன்னோர் ஆதி மொழியான சீனத்திலும், தமிழில் இருந்து தோன்றிய மலையாளத்திலும் மட்டும்தான் பாவனையில் உள்ளது. ஆனால், தமிழில் வரும் இந்த 'ழ்' என்ற எழுத்தை தமிழரில் மிக, மிகப் பெரும்பான்மையானவர்கள் சரிவர உச்சரிப்பதே இல்லை. 

அநேகமானோர், இந்த 'ழகர' த்தை ''ள' என்று கஷ்டப்படாது உச்சரித்துவிட்டுப் போய்விடுவார்கள். ஒரு சிலர் 'ல' என்றும், வேறு சிலர் 'ய' என்று கூடி உச்சரிப்பார்கள். இந்த நிலையை நாம் நாளாந்தம் பார்க்கும் திரைப்படங்கள், பாடல்கள், சின்னத்திரை நாடகங்கள், பட்டி மன்றப்  பேச்சுக்கள், நாளாந்த உரையாடல்கள் என்று எல்லாவற்றிலும் கேட்க முடியும்.

மலையாளம் பேசுவோர் இதைச் சரிவர உச்சரிக்கத் தெரிந்துள்ளனர். அவர்கள் வித விதமான ஓசைகளைத் தரும் எழுத்துக்கள் பலவற்றை உச்சரிக்கப் பழக்கப்பட்டுள்ளனர். தமிழில் உச்சரிப்புக்களுக்கு நாக்கு, சொண்டு, தொண்டை எவற்றையும் பெரிதாகக் கஷ்டப்படுத்த வேண்டிய எழுத்துக்கள் ஒன்றும் இல்லை. மலையாளமோ,  ka , kha , ga , gha , ca , cha , ja , jha , ta , tha , da , dha , மீண்டும் மென்மையான ta , tha , da , dha , மற்றும் pa , pha  , ba , bha , மேலும் பல 'ச' 'ல' 'ந' என்று பலவித எழுத்துக்கள்  இருப்பதால் அவர்கள் இயற்கையாகவே உச்சரிப்பு நுட்பங்களை அறிந்து வைத்துள்ளனர். சிங்கள மொழி பேசுபவர்களுடன் கூட நாம் கதைக்கும்போது, சாதாரண 'சிங்கம்' என்ற சொல்லை,  singam , chingam , singham , sinkam , sinkham   என்று பலவிதமாக அவர்கள் புரிய வாய்ப்புண்டு.

இந்தியத் தமிழருக்கு ஓரளவுக்கு இந்த உச்சரிப்பு ஒரு சிலருக்கு வந்தாலும், ஈழத் தமிழருக்கு இப்படி ஒரு விடயம் இருப்பதாகவே கண்டு கொள்வதில்லை. 'ஈளத் தமிளர்'   பெருபாலும் 'தமிள் மொளி' யில்தான் பேசுவார்கள்.

இளம் பிள்ளைகளுக்கு 'ழ' வின் சரியான உச்சரிப்பு வரச்செய்வதற்கு  பள்ளிகளில் அதிகமாகப் பின்வரும் வாக்கியத்தை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பார்கள். அ-து:

'ஏழைக் கிழவன் வாழைப்பழத் தோல் வழுக்கி கீழே விழுந்து அழுதான்'  என்பது. 

 நல்லது. இந்த வாக்கியத்தை  பெரிய தமிழ் அறிஞர்கள்வதான் வடிவமைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், எனது சிறிய அறிவுக்கு, இதில் மூன்று குறைபாடுகள் இருப்பதாகவே தெரிகின்றது.

ஒன்று: மதிக்கப்படவேண்டிய ஒரு முதியவரை 'அவன்', 'இவன்' என்று அழைக்கலாம் என்று பிஞ்சு உள்ளங்களுக்குச் சொல்லிக்கொடுப்பது சரியா? சிலவேளை பணமுள்ளவராய் இருந்தால் 'அவர்' என்று கூறியிருப்பார்களோ?

அடுத்தது:: சௌகரியமாக 'ழ' எழுத்துக்களை மாத்திரம் வரப்பண்ணி, மிகவும் அவதானமாக ழகர உச்சரிப்பை மட்டும் சிரமமோ, குழப்பமோ, நா நெகிழ்ச்சியோ வராமல் ஒரு வசனத்தை பயின்றால், மற்றைய 'ல'  'ள'  'ய' எல்லாம் சேர்ந்து வரும் சாதாரண சம்பாஷணையின்போது குழப்பமடைய மாடடார்களா?

மூன்றாவதாக, குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு நல்ல விடயம் ஒன்றும் இல்லையா? ஏன்தான் விழுந்தது, உடைந்தது, முறிந்தது, அழுதது என்று எதிர்மறை விடயங்களை அவர்கள் மனதில் விதைக்கவேண்டும்? ஒரு சில நல்ல சிந்தனைகளை அவர்களுக்கு ஊட்டிடலாமே!

தமிழ் ஆசிரிய அறிஞர்கள் இப்படியான ஒரு வசனத்தை உருவாக்க மாடடார்களா? அ-து:


"எல்லாக் குந்தைகளும் காலையில் வேளைக்கு எழுந்து, பல் துலக்கி, காலைக்கடன் முடித்து, குளித்து, முழுகி, பய பக்தியுடன் கடவுளைத் தொழுது, உணவருந்திப், வாழைப்பத்துடன் பள்ளிக்கு மகிழ்ச்சி யுடன்  செல்வார்கள்" 

இப்படிப்பட்ட ஒரு வசனத்தினால்தான், ல, ள, ழ,  ய, என்று எல்லா எழுத்துக்களும் வருவதால், பிள்ளைகள் சரியாக நா நெகிழ்ச்சிப் பயிற்சியைப் பெறுவதோடு, நல்ல சிந்தனைகளையும் பெற்று, சரியான 'ழகர' உச்சரிப்பை அவர்கள் நாளைடைவில் பெறுவர்.

அதுவின்றேல், இந்த ழானா, தெலுங்கு, கன்னட மொழிகளில் காணாமல் போனதுபோல தமிழிலும் ஒழிந்து போய்விட வாய்ப்புண்டு.
'ல', 'ள' 'ழ' உச்சரிப்பது பற்றி ஒரு சிறு விளக்கம்:

'ல' :  மேல்வாய்ப் பல்லின் அடியை, நாவின் நுனி வெளிநோக்கி, இரு பக்கங்களும் தடித்து பொருத்தி, எடுத்து எழுப்பும் ஒலி. 

'ள':  முன் விளிம்பு நாக்கு தடித்தபடி, சற்று மேல்நோக்கி (உள்நாக்கை நோக்கி) வளைத்து, மேல் அண்ணத்தின்  நடுப்பாகத்தை  தொட்டு எடுத்து  எழுப்பும் ஒலி.

'ழ':  நுனி நாக்கு  சற்று மேல்நோக்கி (உள்நாக்கை நோக்கி) வளைத்து, மேல் அண்ணத்தின்  நடுப்பாகத்தை  மெதுவாகத் தடவி எழுப்பும் ஒலி.

அண்ணத்தைத் தொடும்போது மிகவும் அழுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பி.கு: 
இந்த 'ழ' விற்கு  'zh ' போட்டு எழுதும் பழக்கம் ஏன்தான் தொடக்கினார்களோ தெரியாது! ஒரு தமிழ் தெரியாதவர் 'தமிழ் மொழி' யை ஆங்கிலத்தில் எழுதியதை வாசிக்கும்போது 'தமிஸ் மொசி' என்றல்லவோ உச்சரிப்பார்!


எண்ணம்:செல்வத்துரை சந்திரகாசன் 

3 comments:

 1. துரைசெல்லThursday, August 04, 2016

  தமிழில பேசவே விரும்பிறாங்க இல்லை .இதில வேற ழ ழ ..ழா

  ReplyDelete
 2. இனியாவது ழ வினை ழ வாக உச்சரிப்போம்

  ReplyDelete
 3. குழந்தைகள்,
  மாலையில் மகிழ்ச்சியாக
  விளையாடி வாழைப்பழம் உண்டு,
  பழத்தோலை குப்பைத்தொட்டியில் போட பழகுக!!!

  ReplyDelete