"முகமூடி மனிதனாவாய்!"
பல்லாயிரம் மாந்தர்; பல்லாயிரம் விருப்பம்!
ஒவ்வொரு மனித னுக்கும்
ஒவ்வொரு குணமுண் டாகும்!
செவ்விதிவ் வுலகில் வாழும்
சிலரவர் விருப்பத் திற்காய்
வெவ்வேறாய் உன்னை மாற்ற
விரும்பிநீ முயல்வா யாயின்,
எவ்வழி நடப்பாய் நெஞ்சே?
எவரடி போற்றி நிற்பாய்?
எல்லாரையும் திருப்தி செய்ய இயலாது!
இனியொரு மனிதன் வந்து, "இப்படி வாழ்க" என்பான்;
கனியொரு மனிதன் வந்து, "கடுமையாய் மாறுக" என்பான்;
துனியுறு மனிதன் உன்னைத் "துணிவிலன்" என்று சொல்வான்;
இனிதுனை மாற்றிக் கொண்டே இருந்தால்உன் வாழ்வு மெய்யோ?
உன் சுயத்தை இழக்காதே!
கடலினில் அலைகள் போலே
கருத்துக்கள் மாறும் நாளும்!
உடலினில் உயிரைச் சுமக்கும்
உன்னதத் தனித்துவம் விடுத்து,
அடுத்தவர் சொல்லுக் கெல்லாம்
அடிபணிந்து உருவை மாற்றின்,
தொடுத்திடும் உலக மாந்தர்
தொலைத்துன் பொலிவை அழிப்பர்!
இறுதியில் எஞ்சுவது பூஜ்ஜியம்!
ஆளுக்கொரு முகமூடி அணிந்து கொண்டே போனால்,
நாளைக்குன் சொந்த முகம் நழுவியே மறைந்து போகும்!
கோழைக்குக் குணம்மா றாதே! கோலங்கள் உனக்கேன் தோழா?
நாளைக்குன் தனித்த வீறு நலிந்திடா துகாக்க வேண்டும்!
தத்துவம்
மண்ணினில் உனக்கோர் பாதை!
மனதினில் உனக்கோர் வேகம்!
விண்ணினில் பறக்கும் பறவை
வேறொரு பறவை யாகக்
கண்ணிமைப் பொழுதும் மாறாக்
காரணம் இயற்கை அன்றோ?
உண்ணிறை குணத்தைக் காப்பாய்!
உனைநீயே போற்றி வாழ்வாய்!
-செ .மனுவேந்தன்
'தானே தனக்குள் ஏனோ சிரிக்கின்றாள்'
தானே தனக்குள் ஏனோ சிரிக்கின்றாள்
தனிமைப் பொழுதில் காதலை நினைக்கின்றாள்
உள்ளத்தில் ஏதோ மாயம் செய்கின்றாள்
உதட்டுச் சுழியில் கவிதை நெய்கின்றாள்
கண்கள் மூடி கனவில் ஆடுகின்றாள்
காதலன் வரவை எண்ணி வாடுகின்றாள்
நாணப் புன்னகை பூவாய் உதிர்க்கின்றாள்
நாட்கள் முழுதும் இன்பம் காண்கின்றாள்
ஆசை நெஞ்சில் ரகசியம் சொல்கின்றாள்
அழகிய நிலவாய் எங்கும் மின்னுகின்றாள்
🌢...🌢...🌢...🌢...🌢...🌢
'பக்கத்துவீட்டு பருவமச்சான் பார்வையிலே கதைபடிச்சான்'
பக்கத்துவீட்டு பருவமச்சான் பார்வையிலே கதைபடிச்சான்
மாடத்தில் நின்று தூக்கத்தைக் கலைத்தான்!
வெட்கத்தை விடுத்து மெல்லப் பார்த்தேன்
வாட்டாத நிலவில் இதயம் தொலைத்தேன்!
மொட்டு விரிந்து வாசனை தந்தது
ஒட்டிய உடையில் கம்பீரம் தெரிந்தது!
தட்டுத் தடுமாறித் திகைத்தே நின்றேன்
எட்டிப் பார்த்து இன்பம் கொண்டேன்!
மட்டுமிலா ஆசை நெஞ்சில் பிறந்தது
கட்டிப் போட்டான் காதல் பார்வையிலே!
🌢...🌢...🌢...🌢...🌢...🌢
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]