தை மாதம் ஒரு சிறப்பான மாதம்!:பகுதி-04‏(முடிவு)

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
"மன்ற எருமை மலர்தலைக் கார்ஆன் 
இன்தீம் பால்பயங் கொண்மார் கன்றுவிட்டு
....................................
தைஇத் திங்கள் தண்கயம் படியும் 
பெருந்தோள் குறுமகள் அல்லது 
மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே"
[நற்றிணை 80]

தொழுவத்துள்ள அகன்ற தலையையுடைய கார் எருமையின் மிக
 இனிய பால் நிரம்பக் கறந்துகொள்ளும் பொருட்டு அவற்றின் கன்றுகளைத் தொழுவத்து நிறுத்திவிட்டு; ..........என்னைப் பெறுமாறு தான் எடுத்துக்கொண்ட நோன்பின் பயனாகத் தைத்திங்களிலே தண்ணிய நீரில் ஆடுகின்ற பெரிய தோளையுடைய அவ்விளமகளே யான் உற்ற நோயை நீக்கும் மருந்தாயமைந்துள்ளாள் அவளல்லது பிறிதொரு மருந்து இல்லைகாண் என்கிறது  .


"வேம்பின் பைங்காய் என்தோழி தரினே,
தேம்பூங் கட்டி என்றனிர் ; இனியே,
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர் 
ஐய ! அற்றால் அன்பின் பாலே ! "
(குறுந்தொகை - 196 )

தலைவனே ! முன்பு (திருமணத்துக்கு முந்திய களவுக் காதலின் போது) என் தலைவி வேம்பின் காயை உனக்குத் தந்தாள்.அதனை அழகிய இனிக்கும் வெல்லக் கட்டி என்று சொன்னாய்.இப்போதோ தை மாதத்தில் குளிர்ந்து கிடக்கும் பாரியின் பறம்பு மலையில் உள்ள குளிர்ச் சுனையின் நீரை அவள் தருகிறாள்.‘அது வெம்மையாய் உள்ளது - உவர்ப்பாய் உள்ளதுஎன்று கூறுகிறாய்.நின் அன்பின் தன்மை இப்படிப்பட்டதாகி விட்டதேஎன்கிறது 

மந்தி ஒன்று தினைக் கதிரை கவர்ந்து சென்று தன் கடுவன் குரங்குடன் இருந்து உண்டது.அதைப் பார்த்த சங்கப்புலவருக்கு  அக்காட்சி பனியால் நனைந்த முதுகோடு நோன்பு நோற்கும் பெண்கள் தைமாத விரத உணவை உண்ண இருந்தது போல் தோன்றியது.அதனை

வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தைஊண் இருக்கையின்.........” - (நற்றிணை: 22: 6 - 7)என நற்றிணை வரியில் படம் பிடித்துள்ளார்

பெண்கள் உலக நன்மைக்காக நோன்பிருந்து நீராடியது போல நல்ல கணவன் தமக்குக் கிடைக்க வேண்டுமென தைத்திங்களில் நீராடி வீடு வீடாகச் சென்று பாடி தாம் பெற்றதை பலருக்கும் உவந்து கொடுத்தை 

வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ  தையில் நீராடி தவம் தலைப் படுவையோ[கலித்தொகை (59:12-13)] எனவும்

பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடி நீ
எய்திய பலர்க்கீந்த பயன் பயக்கிற்பதோகலித்தொகை 59;16-17 எனவும் கலித்தொகை சொல்லும்.  

"செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்
கண்ணிற் காணின் எனா குவள்கொல்
நறுவீ  ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப்
பலர்படிந்து உண்ணுநின் பரத்தை மார்பே."
[ஐங்குறுநூறு 84] 
 'உன் மனைவி உன்மேல் சொல்லில் அடங்காத கோபத்திலிருக்கிறாள்.ஏனென்றால், தைமாத நோன்பிருக்கும் பெண்கள் பலரும் ஒரே குளத்தி்ல் தோய்ந்து நீராடுவார்கள் அல்லவா?அப்படி உன்னுடைய மார்பு,பலபெண்கள் தோய்ந்து,துய்க்கும் கயமாக (குளமாக) இருக்கிறது என்பது உன் மனைவிக்குத் தெரிந்திருக்கிறது அல்லவா!  என்கிறது 

"தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
........................................
தைஇத் திங்கள் தண்கயம் போல்
கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்
........................................
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!" 
[புறநானூறு. 70:6-7]

தேன் போன்ற இனிய இசையை அளிக்கும் சிறிய யாழையுடைய பாண! ......கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது..... பரிசு கிடைக்குமா என்று நீ ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்
என்கிறது 
தாயருகே நின்று தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதிஎன்கிறது பரிபாடல்-11:91-92. 

ஆகவே தமிழ் மரபில் & சங்க இலக்கியங்களில்.....மிகச் சிறப்பாக/மிக அதிகமாகப் பேசப்படும்/போற்றப்படும் மாதம் = தை! அல்லது "தைஇத் திங்கள்"

அது மட்டும் அல்ல தை-ன்னாலே....மதம் கலவாமல்....தமிழ் மட்டும் தனித்து தெரியும்

ஆம் தை மாதம்: ஒரு  சிறப்பான மாதம்!

"அருவியில் தவம்     முடித்து  
இருவராய்  தந்தது    தையே!

ஊருக்கு    பொங்கல் படைத்து 
பெருவிழா  தந்தது    தையே

முருகிற்கு  அழகு    சேர்த்து 
ஒருபூசம்   தந்தது    தையே!

பெருமை   பற்பல   படைத்து  
அருமை    தந்தது   தையே!"

..........................முடிவுற்றது................................


0 comments:

Post a Comment