திருமணத்திற்கு பத்துப் பொருத்தங்கள்

 திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.சோதிடம் சொல்லும் பத்துப் பொருத்தம் இவை - தினப் பொருத்தம் ,கணப் பொருத்தம் ,மகேந்திரப் பொருத்தம் ,ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் ,யோனிப் பொருத்தம் ,ராசிப் பொருத்தம் ,ராசி அதிபதி பொருத்தம் ,வசிய பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ,வேதைப் பொருத்தம் ஆகும். இவற்றை எங்கோ இருந்து ஈர்ப்பு விசையால் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கை நிகழ்வான கோள்களை வைத்துப் பார்க்கிறான். யாரை வைத்துப் பார்க்க வேண்டுமோ அதை மறந்து விடுகிறான்.அந்த ஆண்-பெண் இருவருக்கும் இருக்க வேண்டிய மனப் பொருத்தத்தையோ, அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டிய பொருத்தங்களையோ,அவர்கள் ஒன்றாக வாழ்க்கை நடத்த உதவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் சொந்த பந்தம் போன்றவற்றை மதிக்கும் இயல்புகளையோ பொதுவாக பார்ப்பதில்லை.மூல நட்சத்திரம், கேட்டை, ஆயில்யம், விசாகம் ஆகிய இந்நான்கு நட்சத் திரத்தில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்யப் பலர் தயக்கம் காட்டுகின்றனர்.மூலநட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத்  திருமணம் செய்தால் திருமணம் செய்யும் பையனின் தந்தைக்குக் கேடு.ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் பையனின் தாயாருக்குக் கேடு.இப்படி பல கூறுகின்றனர்.எனினும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் அதாவது நட்சத்திரத்தன்று பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் குறை ஏற்படும் என்பதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை.  பண்டைய சங்க காலத்தில் இப்படியாக பொருத்தங்கள் பார்த்ததாக எந்த குறிப்பும் இல்லை.இப்படி ஆண்-பெண் இருவர் சேருவதை திருமணம் என்கிறது தமிழ். கல்யாணம் என்றும் சிலர்
குறிப்பிடுவர்.உதாரணமாக, நாலடியார் கல்யாணம் (பாடல் 86:பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணஞ் செய்து கடிப்புக்க.... ) என்கிறது. ஆசாரக் கோவை (பாடல் 48:கலியாணம், தேவர், பிதிர், விழா, வேள்வி, என்று...) கலியாணம் [வடமொழி] என்கிறது. குறிஞ்சிப் பாட்டு (232:நேர் இறை முன் கை பற்றி நுமர் தர நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்...) மணம் என்கிறது. அய்ங்குறுநூறு வதுவை (61:..நல்லோர் நல்லோர் நாடி வதுவை அயர விரும்புதி நீயே.) என்கிறது.தொல்காப்பியம் மன்றல் என்பதோடு கடி,வரைவு,வதுவை என்றும் குறிப்பிடுகிறது.என்றாலும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட   தொல்காப் பியரும் பத்து பொருத்தங்களைப் பற்றி கூறியுள்ளார். ஆனால் அவர் கூறும் பொருத்தங்கள் அறிவு பூர்வமானவை. 

"பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு, நிறுத்த, காம வாயில்
நிறையே, அருளே, உணர்வொடு திருவென
முறையுறக் கிளத்த ஒப்பினது வகையே"

என்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது. ஒத்த பிறப்பும்[
ஒத்த குடியில் பிறத்தல்], ஒத்த குடி ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும்[ஆண்மை என்பது இங்கு ஆண்தன்மையைக் குறிக்காது.   ஆளும் தன்மையைக் குறிக்கும். குடியாண்மை எனப்படும். இது பெண்களுக்கும் உரிய பண்பே.], ஒத்த வயதும்[வயது ஒற்றுமை ], ஒத்த உருவும்[உருவழகு], ஒத்த

அன்பும்[இல்லற சுகத்தை நுகர்வதற்குரிய சக்தியும் உணர்வும் இருவரிடமும் சமமாக இருத்தல் வேண்டும்], ஒத்த நிறையும்[ கட்டுப்பாடு], ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் என்ற பத்துப் பண்புகளிலும் ஒத்தவர்களாக இருக்க வேண்டுமென் பது இதன் பொருள்.அதாவது,குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந்திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது.

"நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடொப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர்."

தற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது.ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக்கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும் ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது.எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில்

முதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும்.அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும்.அவர்களுக்கு ஒரு பொது நம்பிக்கை வேண்டும் அது எழுமலையானகாவோ அல்லது வேறு ஒன்றாகவோ இருக்கலாம்.நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்ற இயற்கையை ஐம்பெரும் பூதம் என்கின்றனர் முன்னோர்.ஆகவே இது உலகின் முன்னிலையில் என நாம் கருதலாம்.மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் அல்லது காமம் துய்த்து வீடுபேறடைதல் என கொள்ளலாம்.திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம்.ஆனால் உண்மையில் தேவைப்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே.உண்மையான அன்பிற்கு ஏது எல்லை. எல்லை கடந்த அன்பின் ஆழத்தில் தானே காதல் இன்பமும் இருக்கின்றது.இதை குறுந்தொகைப்பாடல் ஒன்று "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று,நீரினும் ஆர்அள வின்றே - சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு,பெருந்தேன் இளைக்கும் நாடெனொடு நட்பே" என்கிறது.அன்பு வயப்பட்ட காதலர்கள் இருவரும் இதயத்தால் ஒன்றுபடுகின்றனர். இந்த இதயப்பிணைப்பு எப்படி இருக்கிறது தெரியுமா? 'செம்புலப் பெயல் நீர்போல' இருக்கிறதாம் இன்னும் ஒரு குறுந்தொகைப்பாடல்.

"
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே."


அன்பால் இணைந்த காதலர்கள் திருமணம் புரிந்து இல்லறத்திற்குள் நுழைகின்றனர்.திருமணம் முடிந்ததும் கணவனுக்குப் பிடித்தமான மோர்க் குழம்பு வைக்கிறாள் தலைவி.தன் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் கட்டித்தயிரை மெதுவாகப் பிசைகின்றாள். அப்போது கட்டியிருந்த பட்டாடை சட்டென்று நழுவுகின்றது. மற்றொரு கையாலே சரிசெய்து கொண்டு தாளிக்கின்றாள். தாளிக்கும் போது உண்டான புகை, 'கயல்' போன்ற அவளது விழிகளை கலங்க வைக்கின்றது. துடைத்துக் கொள்கிறாள். இப்படி ஆசையோடு சமைத்து முடிப்பதற்குள்ளேயே வெளியில் சென்ற கணவன் வந்து விட்டான். முகத்திலும், ஆடையிலும் அழுக்கு அப்பியிருக்கின்றது. உணவைப் பரிமாறுகிறாள். அவனும் அவளது புறத்தோற்றத்தைக் கண்டு வெறுக்காமல் அகத்தின் அன்பினை நினைத்து இனிது, இனிது என்று பாராட்டிக் கொண்டே சாப்பிடுகிறான்.அந்தப் பாராட்டைப் பெற வேண்டும் என்று தானே அவள் இப்படி விரும்பிச் சமைத்தாள். இந்த இனிய இல்லறக் காட்சியினை தருகிறது இன்னும் ஒரு சங்க பாடல் :

'முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
கழுவுறு கலிங்கம் 
கழாஅது உடிஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத் 
தான் துழந்து இட்ட தீம்புளிப்பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே!'

இன்று திருமணம் முடிக்கும் மணமக்களுக்கு இதைவிட அறிவுரை சொல்ல வேறு ஏதேனும் இருக்கமுடியுமா. இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும்,கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை.மேலே கூறியவாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர்,பிற்காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் -தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது.கணித்துக் கூறுபவன் ஜோசியன். ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன்.கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்!!
_:-கந்தையா தில்லை விநாயகம் பிள்ளை.

0 comments:

Post a Comment