கந்தாயணம்-இராமபுராணம்: ஒரு அலசல் பகுதி:01

கந்தபுராணம் மற்றும் இராமாயணம் கதைகளைப் படித்தவர்களில், இவை இரண்டுமே ஒரு கதைதான், பாத்திரங்களின் பெயர்கள்தான் வேறு என்ற உண்மையை ஊகித்திருப்போர் ஒரு சிலராகத்தான் இருந்திருக்க வேண்டும்.

நமது தமிழ் சினிமாப் படங்களின் கதை எல்லாமே ஒன்றாய் இருந்தாலும், நடிப்பவர்களையும், பெயர்களையும் மாற்றி, மாற்றிப் போட்டு எத்தனையோ வித்தியாசமான(?) படங்கள் தயாரிப்பது போல, வால்மீகியின் ராமாயணத்தை அப்படியே பிரதி செய்து,வேறு பாத்திரப் பெயர்களை இட்டு, வித்தியாசமான கதையாக்கிக் கந்தபுராணம் என்ற ஒரு பெயரில் கச்சியப்பர் தந்திருக்கின்றார்.

இதைத் தெளிவுபடுத்த, ஒரு சில முக்கிய எடுத்துக்காட்டுகளை இவற்றின் கதை ஓட்டத்திலிருந்து பொறுக்கி எடுத்து விளக்க முனைவோம். ஆன்மீகப் பேரறிவுடையோர் மன்னிப்பார்களாக!

1.தெய்வம் தந்த ஏடு:
கந்தபுராணம்:

முருகனின் வேண்டுதலில், அவர் அடி எடுத்துக் கொடுக்க, கச்சியப்பர் தினமும் எழுதி ஒப்புவிக்க, அதை முருகன் தினமும் தனது கரத்தால் திருத்தி வழங்கியது.
இராமாயணம் :
நாரதர் கூறிய கதைக் கருவுடன், பிரம்மதேவரின் வேண்டுதலில், இவர் விளக்கிக் கூறிய காட்சிகளையும் உள்ளடக்கி, வால்மீகியால் பாடப்பட்டது


2.கர்ம வினை யாரை விட்டது!:
கந்தபுராணம்::
தக்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை மீறித் தேவர்கள் போனதால், கர்மவினைப்படி தேவர்கள் சூரன் பிடியில் அகப்பட்டுச் சித்திரவதை அடைய வேண்டும் என்று இருந்தது.
இராமாயணம் :
(அறியாத காரணத்தின்) கர்மவினைப்படி தேவர்கள் இராவணன்  பிடியில் அகப்பட்டுச் சித்திரவதை அடைய வேண்டும் என்று இருந்தது.

3. கோட்டை விட்டீரோ!:
கந்தபுராணம்:சூரன் தன் சிவ தவத்தினால் உலகில் யாராலும், எவராலும் வெல்லமுடியாத, கொல்லப்படமுடியாத வரத்தினைப் பெற்றான். 'தேவர்களினாலும்' என்று கேட்காது கோட்டைவிட்டு விட்டான்
இராமாயணம் :
இராவணன் தன் தவ வலிமையால் பெற்ற வரங்களினால், பெரும் வீரனானான். அவன் பலத்தின் முன், உலகில் உள்ள மனிதரோ, விலங்குகளோ முன்னே நிற்கவே இயலாத காரியம். அவன் பிரமாவின்பால் கடும் தவம் புரிந்து , தனக்கு ஒருகாலமும் தேவர்களால் மரணம் நிகழக் கூடாது என்ற வரத்தையும் பெற்றான். 'மனிதர்களாலும்' என்று வரம் கேளாது  கோட்டைவிட்டு விட்டான்.

4. மாவீரன்:
கந்தபுராணம்:
சூரன் பெருவலிமை கொண்ட வீரனாகி, மூவுலகையும் வென்று தேவர்கள் எல்லோரையும் தன் அடிமைகள் ஆக்கிச் சித்திரவதைகள் செய்தான்.
இராமாயணம் :
இராவணன் பெருவலிமை கொண்ட வீரனாகி, மூவுலகையும் வென்று தேவர்கள் எல்லோரையும் தன் அடிமைகள் ஆக்கிச் சித்திரவதைகள் செய்தான்.

5. சகோதரனின் காவல்:
கந்தபுராணம்:
தேவர்கள் தங்கள் துயர் நீக்க இந்திரனிடம் உதவியை நாடினர். இந்திரன் தன் மனைவி இந்திராணியை முருகனின் அண்ணன் ஐயப்பன் காவலில் விட்டு சிவனிடம் போனான்.
இராமாயணம் :
சீதையைக் கவர, இராவணன், மாமன் மாரீசனை மானாக வரும் உதவியை நாடினான். இராமன் சீதையை, தன் தம்பி இலக்குவனின் காவலில் விட்டு, மானைப் பிடிக்கப் போனான்.(பின் கதை).

6. பாசமலரம்மா!:
கந்தபுராணம்::
அந்நேரம் சூரனின் தங்கை அஜமுகி, தேவராணியைத் தன் அண்ணனுக்காகக் கவரச் சென்றாள்.அதனால், அவளது கைகள் ஐயப்பனால் வெட்டப்படவே, கதறிச் சென்று சூரனிடம் முறையிட்டாள். சூரன் கடும் கோபம் கொண்டு தேவரை மேலும் சித்திர வதை செய்தான்.
இராமாயணம் :
இராவணனின் தங்கை சூர்ப்பனகை இராமன் மீது மையல் கொண்டதால் இலக்குவன் அவளது காதையும், மூக்கையும் அறுத்து மானபங்கப் படுத்தி அனுப்பினான்இதனால், அவள் தன் அண்ணனிடம் சென்று முறையிட்டு, சீதை என்னும் ஒரு அழகியைக் கண்டு, தான் அவளை உனக்காகக் கவர்ந்து கொண்டு வர முனைந்த போதுதான் தனக்கு இந்தக் கதி நேர்ந்தது என்று முறையிட்டாள். கடும் கோபம் கொண்ட இராவணன், சீதைக் கவர்ந்து சென்று சிறை வைத்தான்.

7. காத்தருள்வீர்:
கந்தபுராணம்:
தேவர்கள் சிவனிடம்  சென்று தங்களை மீட்டருளுமாறு வேண்டி நின்றனர்
இராமாயணம் :
தேவர்கள் திருமாலிடம் சென்று தங்களை மீட்டருளுமாறு வேண்டி நின்றனர்.

8. அருள் தந்தோம்:
கந்தபுராணம்:
சிவன் தன் நெற்றிக் கண்ணிலிருந்து தேவ மகனாகிய முருகனை உருவாக்கினார். பராசக்தி, சூரானோடு போர் புரிய ஞானவேல் ஆயுதத்தை வழங்கி வாழ்த்தி அனுப்பினார்.
இராமாயணம் :
திருமால், தான் ஒரு மனிதனாகப் பிறந்தால் தான் சாத்தியம் ஆகும் என்று உலகில் மனித இராமனாகப் பிறந்தார். வேறு தேவர்களை, போர் புரிய, மிருகங்கள் (குரங்கு), பறவைகள் (சடாஜு) ஆகப் பிறக்கச் செய்தார்.

9. தம்பி உள்ளான்:
கந்தபுராணம்:
சூரனுக்கு இரண்டு  தம்பியர் இருந்தனர். சண்டைக்கு அஞ்சுவானா!
இராமாயணம் :
இராவணனுக்கு இரண்டு  தம்பியர் இருந்தனர். சண்டைக்கு அஞ்சுவானா!

10. தூது செல்ல:
கந்தபுராணம்:
முருகன் தன் சகோதரர் வீரவாகுவுடன் சூரனைத் தேடிப் போனார்.
முருகன் வீரவாகுவை சூரனிடம் தூது அனுப்பினார்.சூரன் அவனை அவமதித்து இருக்கை கொடுக்க மறுத்தான். ஆனால் அவர் பெரிய ஒரு சிம்மாசனம் உருவாக்கி அதில் அமர்ந்து தான் வந்த விடயத்தைக் கூறினார். சினம் கொண்ட சூரன் அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டான். வீரபாகு தன் பலத்தால் தப்பிச் சென்று அவன் நாட்டையே எரித்துவிட்டுத் திரும்பினார்.
இராமாயணம் :
இராமன் தனது சகோதரன் இலக்குவனுடன் இராவணனைத் தேடிப் போனான். தனது பக்தன் அனுமானை இராவணனிடம் தூது அனுப்பினான். இராவணன் அவனை அவமதித்து இருக்கை கொடுக்க மறுத்தான். ஆனால் அவன் பெரிய ஒரு சிம்மாசனம் உருவாக்கி அதில் மேல் அமர்ந்து தான் வந்த விடயத்தைக் கூறினான். சினம் கொண்ட இராவணன் அவனைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டான்.அனுமான்  தன் பலத்தால் தப்பிச் சென்று அவன் நாட்டையே எரித்துவிட்டுத் திரும்பினான்.
[கந்தாயணம்-இராமபுராணம்: அலசல், அடுத்த அங்கத்துடன் முடிவுறும்]

ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்

1 comments:

  1. http://ohpodu.blogspot.com.au/2012/11/blog-post_6371.html

    ReplyDelete