புறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏

   

[மாவீரன் அதியமான் நெடுமான் அஞ்சி]


அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை (தருமபுரி) ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்க காலக் குறுநில மன்னர்களுள் ஒருவன். அஞ்சியின் வீரமும், கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப் பொருட்களாக உள்ளன. திண்மையான உடல் வலி பொருந்தியவன் என்றும்; சேரன், சோழன், பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். நாம், பாடசாலை பாடங்களில் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன் அதியமான் என்று படித்திருப்போம். அதியமான் என்பது பரம்பரைப் பெயர். அதியமான் நெடுமான் அஞ்சிதான் ஔவைக்கு கனி கொடுத்தவன். ஒரு முறை வேட்டையாடச் சேலத்தை அடுத்த கஞ்ச மலைக்குச் சென்றான். அங்கு உயர்ந்த பாறைப் பிளவின் உச்சியில் இருந்த நெல்லி மரத்தில் கனி ஒன்றிருக்க அதைப் பறித்து வந்தான். அதை உண்பவர்கள் நீண்ட ஆயுளும், உறுதியான உடல் வலிமையையும் பெறுவார்கள் என்று அறிந்த அதியமான், அக் கனியைத் தான் உண்ணாது, தன் அமைச்சரவையில் அவைப் புலவராக இருந்த ஔவைக்கு, அக்கனியைக் கொண்டு வந்து கொடுத்து உண்ணச் செய்தான். ஔவை உண்டால் தமிழ் வாழும் என்று கருதிய தன்னலமற்ற அரசன் அஞ்சி!

 

ஒரு சமயம் நடை பெற்ற போரில், அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்றான். வெற்றி பெற்றாலும், அவன் போரில் பகைவர்களின் படைக் கருவிகளால் தாக்கப்பட்டு மார்பிலும் முகத்திலும் புண்பட்டான். போரில் வெற்றி வாகை சூடி விழுப்புண்ணோடு இருக்கும் அதியமானைக் கண்ட அவ்வையார் பெரு மகிழ்ச்சி அடைந்தார். உன்னால் போரில் தோற்கடிக்கப் பட்டவர்கள் சிதறியோடினார்கள். அந்த பெருந் தன்மையற்ற அரசர்கள் அங்கு இறந்தார்கள் .அவர்கள் அவ்வாறு இறந்ததால், விழுப்புண் படாமல் நோயுற்று வாளால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். மற்றும், பகைவர்கள் ஓடியதால், இனி போர்கள் நடைபெற வாய்ப்பில்லை; ஆகவே, இனி நீ போர்களில் வெற்றி பெறுவது எப்படி சாத்தியமாகும்?” என்று அவ்வையார் அதியமானை பார்த்து கேட்டார். இதோ அந்த பாடல்:

 

"திண்பிணி முரசம் இழுமென முழங்கச்

சென்றுஅமர் கடத்தல் யாவது? வந்தோர்

தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு

ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்

நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்

காதல் மறந்துஅவர் தீதுமருங் கறுமார்

அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்

திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி

மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த

நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன

வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ

வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து

அண்ணல் யானை அடுகளத் தொழிய

அருஞ்சமம் ததைய நூறிநீ

பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே."

[புறநானூறு - 93]

 

பெருந்தகையே! உன்னை எதிர்த்து வந்த பெருமை இல்லாத மன்னர்கள் உன்னுடைய முற்படையையே தாங்கமுடியாமல் சிதறி ஓடினர். அம்மன்னர்கள் (அவ்வாறு ஓடியதால்), நோயுற்று இறந்தவர்களின் உடலைத் தழுவி, அவர்கள் மேல் உள்ள ஆசையை மறந்து, அவர்கள் போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி, நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர், செம்மையான, விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி, அதில் அவர்களின் உடலைக் கிடத்தி, “தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்க” என வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர். வரிகளை உடைய வண்டுகள் ஒலித்து வாயில் புகுகின்ற மதம் கொண்ட யானைகளைப் போர்க் களத்தில் நெருங்கி அழித்து விழுப்புண் பட்டதால், இனி வலிய கட்டமைந்த முரசம் “இழும்” [ஓர் ஒலிக் குறிப்பு / denoting sound, as that of a drum] என்னும் ஒலியுடன் முழங்குமாறு போரில் வெல்வது எப்படி? பகைவர்கள் ஓடியதால் இனி, போர்கள் நிகழ வாய்ப்பில்லை; அதனால் போரில் வெல்லும் வாய்ப்பும் இல்லை என்பது பொருள்.

 

புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் நெடுமான் அஞ்சி பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. ஔவையார், அஞ்சியத்தை மகள் நாகையார், பரணர், இடைக்கழிநாட்டு நல்லூர் நத்ததத்தனார், அரிசில்கிழார், பெருஞ்சித்திரனார், மாமூலனார் ஆகியோர் பாடிய பாடல்களில் இவரைப் பற்றிய தகவல்கள் உள்ளன.

 

அக்காலத்தில் மலைநாட்டை ஆண்ட மலையமான் திருமுடிக் காரி என்பவருடன் போரிட்டு அவரது தலைநகரமான திருக்கோவிலூரை அஞ்சி கைப்பற்றியதாகத் தெரிகிறது. காரிக்குச் சார்பாகச் சேர மன்னன் பெருஞ் சேரல் இரும்பொறை என்பான் நெடுமான் அஞ்சியுடன் போர் தொடுத்தார். சோழ மன்னனும், பாண்டியனும் அதியமானுக்கு ஆதரவாக இருந்தனர் எனினும்,இப்போரில் தோற்று இறந்தார். இப் போரை நேரில் கண்ட புலவர்கள் பாடிய நூலே தகடூர் யாத்திரை என்பது. இந்நூல் இன்று முழுமையாகக் கிடைக்கவில்லை.

 

மேற்படி இலக்கியச் சான்றுகள் மட்டுமன்றி, இம்மன்னன் பற்றிய குறிப்புடன் கூடிய ஜம்பைக் கல்வெட்டு [படம் - 05] என அறியப்படும், தமிழ் பிராமிக் கல்வெட்டு ஒன்று ஜம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ளது. ஜம்பை, தென்னாற்காடு மாவட்டம் திருக்கோயிலூருக்கு அண்மையில் உள்ளது. சமண முனிவருக்கு இம்மன்னன் கற்படுக்கைகள் வெட்டிக் கொடுத்தது பற்றி இக் கல்வெட்டுக் கூறுகிறது. "சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி" என்று இம்மன்னனின் பெயர் இக் கல்வெட்டில் தெளிவாகக் காணப்படுகிறது. இது கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்தது எனக் கொள்ளப்படுகிறது. இந்த ஜம்பைக் கல் வெட்டு, 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு மாணவர் ஒருவரால் கண்டு பிடிக்கப் பட்டது. அதில்:

 

"ஸத்திய புத்திரன் அதியன் நெடுமான் அஞ்சி என்பவர் தானமாகக் கொடுத்தே பாளி (சமணர் படுக்கை)"

 

என பதியப் பட்டுள்ளது. அதாவதுஅதியமான் நெடுமானஞ்சி ஒரு குகை வாழிடத்தைத் தனக்கு தானமாகக் கொடுத்ததை இக் கல்வெட்டு அறிவிக்கின்றது. அத்துடன், அதியமான் இக் கல்வெட்டில் "சதிய புத்தோ" என்னும் அடை மொழியுடன் குறிப்பிடப்பட்டுள்ளான். இதன்மூலம் அசோகனின் கல்வெட்டொன்றில்,

[The Edicts of King Asoka - 2, Everywhere  within Beloved-of-the-Gods, King Piyadasi's domain, and among the people beyond the borders, the Cholas, the Pandyas, the Satiyaputras,  the Keralaputras [Cera dynasty], as far as Tamraparni and where the Greek king Antiochos rules, and among the kings who are neighbors of Antiochos,..] சேர, சோழ, பாண்டியர்களுடன் "சதிய புத்தோ" எனக் குறிப்பிடப்பட்டுள்ள அரசகுலம் எது என்பது குறித்து நிலவிய விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்ததும் இதன் இன்னொரு சிறப்பு ஆகும்.

 

"ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்,

நீர்த்துறை படியும் பெருங்களிறு போல

இனியை, பெரும ! எமக்கே ; மற்றதன்

துன்னருங் கடாஅம் போல

இன்னாய், பெரும ! நின் ஒன்னா தோர்க்கே."

[புறநானூறு - 94]

 

பெரும! நீ, நீர்த்துறையில் படிந்திருக்கும் யானை அதன் மீது ஊர்ந்து வந்து அதன் கொம்புகளைக் கழுவும் மக்களுக்கு அடங்கிக் கிடப்பது போல எம் போன்ற பாணர்க்கும் புலவர்க்கும் இனிமை தருபவன். உன் பகைவர்க்கு அந்த யானையின் மதநீர் [Musth / மதநீர் = மதம் + நீர், ஆண் யானைகளுக்கு சில வேளைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும் நீர். இது இவைகளை மிகவும் ஆக்ரோசமாகவும் ஆபத்தாகவும் மாற்றும் தன்மையுடையது என்றும், இது ஆண்களின் பாலுணர்வினைச் சார்ந்ததென்றும் கூறுவர். இவ்வாறாக மதநீர் வழியும் காலத்தில் யானைக்கு மதம் பிடித்தல் என்று கூறுவர். பெண் யானைக்கு எக்காலத்திலும் மதநீர் சுரக்காது.] போலக் கொடுமையானவன் என அவ்வையார் இவனை புகழ்ந்து பாடுகிறார்.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 06 - "மாவீரன் சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி" தொடரும். வாசிக்க அழுத்தங்கள்👉 Theebam.com: "புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 06 0 comments:

Post a Comment