புறநானுற்று மா வீரர்கள் [பகுதி/Part 05]‏

       Heros[Warriors]of Purananuru
[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Compiled by: Kandiah Thillaivinayagalingam]

 மாவீரன் அதியமான் நெடுமான் அஞ்சி:

அதியமான் நெடுமான் அஞ்சி தகடூரை(தருமபுரி) ஆண்ட அதியமான் மரபைச் சேர்ந்த சங்ககாலக் குறுநில மன்னர்களுள் ஒருவன்.அஞ்சியின் வீரமும்,கொடைச் சிறப்பும் ஔவையார் முதலிய புலவர்களின் பாடல்களின் கருப்பொருட்களாக உள்ளன.திண்மையான உடல்வலி பொருந்தியவன் என்றும்;சேரன் சோழன்,பாண்டியன் உட்பட்ட ஏழு அரசர்களை எதிர்த்து நின்று வென்றவன் என்றும் புலவர்கள் இவனைப் புகழ்ந்து பாடுகின்றனர். நாம்,பாடங்களில் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவன் அதியமான் என்று படித்திருப்போம்.அதியமான் என்பது பரம்பரைப் பெயர்.அதியமான் நெடுமான் அஞ்சிதான் ஔவைக்கு கனி கொடுத்தவன்.ஒரு முறை வேட்டையாடச் சேலத்தை அடுத்த கஞ்ச மலைக்குச் சென்றான்.அங்கு உயர்ந்த பாறைப் பிளவின் உச்சியில் இருந்த நெல்லி மரத்தில் கனி ஒன்றிருக்க அதைப் பறித்து வந்தான்.அதை உண்பவர்கள் நீண்ட ஆயுளும்,உறுதியான உடல் வலிமையையும் பெறுவார்கள் என்று அறிந்த அதியமான் அக்கனியைத் தான் உண்ணாது,தன் அமைச்சரவையில் அவைப்புலவராக இருந்த ஔவைக்கு,அக்கனியைக் கொண்டு வந்து கொடுத்து உண்ணச் செய்தான்.ஔவை உண்டால் தமிழ் வாழும் என்று கருதிய தன்னலமற்ற அரசன் அஞ்சி!

ஒரு சமயம் நடைபெற்ற போரில்,அதியமான் பகைவர்கள் அனைவரையும் வென்றான்.வெற்றி பெற்றாலும்,அவன் போரில் பகைவர்களின் படைக்கருவிகளால் தாக்கப்பட்டு மார்பிலும் முகத்திலும் புண்பட்டான்.போரில் வெற்றி வாகை சூடி விழுப்புண்ணோடு இருக்கும் அதியமானைக் கண்ட அவ்வையார் பெருமகிழ்ச்சி அடைந்தார்.உன்னால் போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் சிதறியோடினார்கள்.அந்த பெருந்தன்மையற்ற அரசர்கள் அங்கு இறந்தார்கள் .அவர்கள் அவ்வாறு இறந்ததால்,விழுப்புண் படாமல் நோயுற்று வாளால் வெட்டப்பட்டு அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர்.மற்றும்,பகைவர்கள் ஓடியதால்,இனி போர்கள் நடைபெற வாய்ப்பில்லை;ஆகவே,இனி நீ போர்களில் வெற்றி பெறுவது எப்படி சாத்தியமாகும்?”என்று அவ்வையார் அதியமானை பார்த்து கேட்டார்.இதோ அந்த பாடல்:

"திண்பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்றுஅமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார்தாங் குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடுஇல் மன்னர்
5 நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇக்
காதல் மறந்துஅவர் தீதுமருங் கறுமார்
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம்புரி பசும்புல் பரப்பினர் கிடப்பி
மறம்கந்து ஆக நல்லமர் வீழ்ந்த
10 நீள்கழல் மறவர் செல்வுழிச் செல்கஎன
வாள்போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரிஞிமிறு ஆர்க்கும் வாய்புகு கடாஅத்து
அண்ணல் யானை அடுகளத் தொழிய
அருஞ்சமம் ததைய நூறிநீ
15 பெருந் தகை விழுப்புண் பட்ட மாறே."


பெருந்தகையே! உன்னை எதிர்த்து வந்த பெருமை இல்லாத மன்னர்கள் உன்னுடைய முற்படையையே தாங்கமுடியாமல் சிதறி ஓடினர்.அம்மன்னர்கள் (அவ்வாறு ஓடியதால்),நோயுற்று இறந்தவர்களின் உடலைத் தழுவி,அவர்கள் மேல் உள்ள ஆசையை மறந்து,அவர்கள் போரில் வாளால் இறக்காத குற்றத்தை (இழிவை) அவர்களிடத்தினின்று நீக்க வேண்டி,நான்கு வேதங்களையும் நன்கு கற்றறிந்து அறத்தை விரும்பும் பார்ப்பனர்,செம்மையான,விரும்பத்தக்க பசுமை நிறமுள்ள புல்லைப் (தருப்பையைப்) பரப்பி,அதில் அவர்களின் உடலைக் கிடத்தி,“தமது ஆண்மையில் பற்றுடன் போரில் மாய்ந்த வீரக்கழலணிந்த வீரர்கள் செல்லும் இடத்திற்குச் செல்கஎன வாளால் பிளந்து அடக்கம் செய்யப்படும் இழிவிலிருந்து தப்பினர்.வரிகளை உடைய வண்டுகள் ஒலித்து வாயில் புகுகின்ற மதம் கொண்ட யானைகளைப் போர்க்களத்தில் நெருங்கி அழித்து விழுப்புண் பட்டதால்,இனி வலிய கட்டமைந்த முரசம்இழும்”[ஓர் ஒலிக் குறிப்பு/denoting sound, as that of a drum] என்னும் ஒலியுடன் முழங்குமாறு போரில் வெல்வது எப்படி? பகைவர்கள் ஓடியதால் இனி,போர்கள் நிகழ வாய்ப்பில்லை;அதனால் போரில் வெல்லும் வாய்ப்பும் இல்லை என்பது பொருள்.

மாவீரன் சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி:

இவன் தித்தன் என்பவனின் மகன். இவனுக்கும் இவன் தந்தைக்கும் இருந்த பகையின் காரணத்தால் இவன்  தன் தந்தையோடு வாழாமல் வேறொரு ஊரில்[ஆமூரில்] வாழ்ந்து வந்தான்.அங்கு இவன் ஆமூரை ஆண்ட மன்னனுக்குத் தானைத் தலைவனாகப்[படைத் தலைவனாகப்] பணிபுரிந்தான்.

பண்டைக் காலத்தில்,போர் வீரர்கள் மற்போர் பயிலும் பயிற்சிக்கூடங்கள் இருந்தன.அவற்றிற்கு போரவை [அல்லது முரண்களரி:-மறவர்கள் தமது வலிமையைக் காட்டும் போர்ப்பயிற்சிக் களம் ] என்று பெயர்.கோப்பெரு நற்கிள்ளி மற்போரில் மிக்க ஆற்றலுடையவன்.இவன் ஓரு போரவையையை நடத்தி வந்ததால் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்று அழைக்கப்பட்டான்.

இப்படியான போர்ப்பயிற்சிக் கம் அல்லது விளையாட்டுக் கம் ஒன்றைப்பற்றி பட்டினப்பாலை மிக தெளிவாக அழகாக கிழே உள்ளவாறு  கூறுகிறது

"முது மரத்த முரண் களரி
வரி மணல் அகன் திட்டை
இருங் கிளை இனன் ஒக்கல்
கருந் தொழில் கலிமாக்கள் 
........................................
கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டி
பெருஞ் சினத்தான் புறங் கொடாது
இருஞ் செருவின் இகல் மொய்ம்பினோர்
எல் எறியும் கவண் வெரீஇப் 
புள் இரியும் புகர்ப் போந்தை
 பட்டினப்பாலை(59-74)

வரி வரியாக மணல் பரந்த அகன்ற மேட்டுப் பகுதியில் உள்ள பழைமையான மரத்தின் நிழலில், மறவர்கள் தம் வலிமையைக் காட்டும் போர்ப்பயிற்சிக் களம் இருந்தது. அவ்விடத்து மறவர்களின் பெரிய உறவினர்களும், இனச் சுற்றத்தினரும் கூடியிருந்தனர்.வலிமையான போர்த்தொழிலில் வல்ல போர் மறவர்கள்,கையினாலும், படைக்கலத்தினாலும் ஒருவருக்கொருவர் பின் வாங்காது ,போட்டிப் போட்டுக் கொண்டு தம் மிகுந்த போர் வலிமையைக் காட்டினர். மேலும் வலிமையைக் காட்ட எண்ணி, கவணில்[catapult] கல்லை ஏற்றி எறிந்தனர். இவர்கள் எறிகின்ற கல்லிற்கு அஞ்சி பறவைகள், சொரசொரப்பான பனைமரங்களை விட்டு வேற்றிடத்திற்குச் சென்றன.

பண்டைய காலத்தில்,ஒரு நாட்டிற்கு எதிராக படையெடுத்துத்தாக்குதல்  செய்வதென்றால் ,முதல் ஒரு எச்சரிக்கையாக அந்த நாட்டின் பசுக்களை வெட்சி பூ[ஒருவகைக் காட்டுப்பூ] சூடி ,அங்கு போய் கவருவார்கள். இப்படியான வழக்கம் மகாபாரத காலத்திலும் இருந்தது என்றாலும்,அங்கு பூ சூடுவதில்லை. இப்படி தமிழர் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு பூ சூடுவது போல் உலகில் எங்கும் இல்லை. எதிர் அணி  பசுக்களை வெற்றிகரமாக மீட்க போரிடும் .அப்பொழுது அவர்கள் கரந்தை பூ சூடி போரிடுவார்கள்.வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கணநூல் கூறுகிறது. அப்படியான ஒரு வெட்சி  கி மு 500 ஆண்டளவில் ஆமூரில் நடைபெற்றது

அதை மீட்கும் பொறுப்பு ஆமூர் அரசனின் படைத் தலைவன்  கோப்பெரு நற்கிள்ளிக்கு உரியதாயிற்று.அவன் தன் வீரர்களுடன் கரந்தைப் போருக்குச் சென்றபொழுது[பகைவரின் பசுக்களைக் கவர்தல் வெட்சிப் போரும்.பசுக்களை வெட்சி வீரர்கள் கவராதவாறு தடுக்கும் அல்லது அப்படி கவர்ந்த பசுக்களை மீட்கும் போர்,கரந்தைப் போர் ஆகும் ], வீரர்களை அசைவும் அச்சமும்  தோன்றாதவாறு நீண் மொழி [நீண்மொழி என்பது புறநானூறு 287-ஆம் பாடலுக்குத் தரப்பட்டுள்ள துறைப்பெயர்.கரந்தைத்திணையின் துறையாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. Neenmoli: Theme describing the vow taken by a warrior] பேசி  அவர்களை  ஊக்குவிப்பதற்கா,அவன் துடி கொட்டுவோனையும், முரசறைவோனையும் வருவித்து மறவர் பலரும் அறியும்படி தானுரைக்கும் நீண்மொழியைத் தெரிவிக்குமாறு சாத்தந்தையாருக்கு பணித்தான்.இதோ அந்த பாடல்:

 "துடி எறியும் புலைய!
எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
5 பொலம்புனை ஓடை அண்ணல் யானை
இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
10 தண்ணடை பெறுதல் யாவது? படினே,
மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே."

துடிப் பறையை அடிக்கும் பறையனே!குறுந்தடியால் பறையடிக்கும் பறையனே!கார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைக்குமாயினும்,வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படைவந்து பாயினும், பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த பெருமை பொருந்திய யானைகள் விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியால் குத்தினாலும்,அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள் ஆழ்ந்த நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன் நெல்வளமிக்க வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டில் புரளும் மருதநிலத்தூர்களைப் பெறுவதால் என்ன பயன்?வீரர்கள் போரில் இறந்தால்,அவர்கள் மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து நன்கு இன்பம் அனுபவிப்பார்கள். அதாவது போர் வீரர்களை வானுலக மகளிர் தழுவுவர் என இது கூறுகிறது.அதனால்,குறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படைவருவதை இங்கிருந்தே காண்பீராக என்று உற்சாகப்படுத்தினான்.

ஒரு  பெண் புலவர் பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்,இவன் இளவரசனாக இருந்த போது,இவன்  மேல் ஒரு தலைக் காதல் [கைக்கிளைக்  காமக்  காதல்] கொண்டிருந்தாள் என்று புறநானுறு 83,84 & 85 மற்றும் சங்க பாடலில் இருந்தும் நாம் அறிகிறோம்.பெருங்கோழி’ (கோழியூர்) என்பது உறையூருக்கு வழங்கப்பட்ட பெயர்களில் ஒன்று. ‘நாய்கன்என்னும் சொல் நீர்வணிகனைக் குறிக்கும்.ஆகவே உறையூர்க் காவிரியாற்றுப் படகுத்துறை வணிகனாக இவள் தந்தை இருக்க வேண்டும். அந்த காதலுக்கு என்ன நடந்தது என்றோ ,இவன் எப்படி சோழ அரசன் ஆக்கினான் என்றோ தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை...........................முடிவுற்றது................................

0 comments:

Post a Comment