"புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 07

[கரிகால சோழன்]

முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னர்களில் ஒருவர் கரிகால சோழர். இவர் மௌரியப் பேரரசின் விரிவாக்கலை  தென் இந்தியாவில் தடுத்து நிறுத்திய மன்னர் இளஞ்செட்சென்னியின் மகன் ஆவார். மன்னர் கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பெயர்களும் உண்டு. சோழ அரசை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை கொண்ட பேரரசாக மாற்றிய பெருமை மன்னர் கரிகாலனையே சேரும்.

 

சங்ககால இலக்கியங்களில் மற்றும் கல்வெட்டுக்கள் வாயிலாக மன்னர் கரிகால சோழன் பற்றிய பல்வேறு தகவல்களை நாம் பெற முடிந்தாலும், அவருடைய ஆட்சி காலம் குறித்த சரியான தகவல்கள் ஏதுவும் இது வரையில் ஆதாரப் பூர்வமாக கிடைக்க வில்லை. கி.மூ 270ல் இருந்து கிபி 180க்கு இடைப் பட்ட காலத்தில இவர் ஆட்சி செய்து இருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

 

கரிகாலன் என்ற பெயர் ஒரு காரணப் பெயர் ஆகும். இந்த காரண பெயர் குறித்து இரு வேறு கருத்துகள் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இடையில் நிலவுகிறது. கரிகால சோழனுடைய சிறுவயதிலேயே அவருடைய தந்தை இளம்சேட்சென்னி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கரிகால சோழன் பாதுகாப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறினார். சரியான மன்னர் இல்லாது இருந்த சோழ நாடு பெரும் அரசியல் குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தது. சோழர் பரம்பரைக்கு ஆதரவாக இருந்தவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கருவூரில் இருந்த சோழ இளவல் கரிகால சோழனை நாட்டை ஆளக் கூட்டி வந்தனர். ஆனால் கரிகால சோழனுடைய அரசியல் எதிரிகள் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கரிகால சோழன் சிறையில் அடைக்கப் பட்டு இருந்தாலும் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அவருடைய செல்வாக்கு ஏறிக் கொண்டே இருந்தது. இதனால் கரிகால சோழனை கொல்ல நினைத்த அவருடைய அரசியல் எதிரிகள் கரிகால சோழன் அடைக்கப் பட்டு இருந்த சிறைச் சாலைக்கு தீ வைத்தனர். அந்தத் தீயில் இருந்து தப்பிச் செல்லும் பொழுது கரிகால சோழனுடைய கால்கள் கருகின. இதன் காரணம் கொண்டு பின்னர் இவர் கரிகாலப் பெருவளன்தான் என்று அழைக்கப்பட்டார். பின்னர் அதுவே மருவி கரிகால சோழனாக நிலைத்தது. சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கரிகால சோழன் அவருடைய மாமன் இருபிடர்தலையன் உதவியுடன் பெரும் படையை திரட்டி எதிரிகளை தோற்கடித்து சோழ அரியசானத்தில் [சிம்மாசனத்தில்] மன்னராக அமர்ந்தார். சில ஆராச்சியாளர்கள் கரிகாலன் என்ற பெயருக்கு வேறு காரணம் கருதுகிறார்கள். கரி என்றால் யானை காலன் என்றால் எமன், அதாவது யானைகளை கொன்றவன் என்கின்ற அர்த்தத்தில் வந்த பெயர்தான் கரிகாலன் என்று கருதுகிறார்கள்?

 

கரிகால சோழன் சோழ சிம்மாசனத்தில் மன்னராக அமர்ந்து அவரது ஆட்சியை நன்றாக வேரூன்ற செய்வதற்கு முன்பே, கரிகால சோழனை தோற்கடித்து சோழ நாட்டை வெற்றி பெறும் நோக்கத்துடன் பாண்டிய மன்னரும் சேர மன்னரும் மற்றும் 11 குறுநில மன்னர்களும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே அணியாக பெரும் படை கொண்டு சோழ நாட்டின் மீது போர் தொடுத்தார்கள்.

 

சங்ககால போர்களங்களில் ஒன்றான வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் இந்தப் போர் நடந்தது. அதிக படை பலம் கொண்டு கரிகால சோழனை எளிதாக போரில் வெற்றி கொள்ளலாம் என்று கருதி போர் தொடுத்து வந்த அத்தனை மன்னர்களையும் அவர்களின் பெரும் படைகளையும் கரிகால சோழன் நிர்முலமாக்கி போரில் வெற்றிவாகை கொண்டான். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே ஆகும். ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவன் முறியடித்து விட்டான். இப் போரில் கரிகால சோழன் எய்த அம்பினால் மார்பிலிருந்து பின் முதுகு வரை துளைக்கப் பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், இது தனக்கு ஏற்பட்ட பெரும் அவமானம் எனக் கருதி வடக்கிருந்து உயிர் துறந்தார் என வரலாறு கூறுகிறது. இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக்குயத்தியார் என்னும் புறநானூற்றுப்புலவர் புறநானூற்றுப் பாடல் 65 மூலம் விளக்குகிறார்.

மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப

இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப,

சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப,

புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்

வாள் வடக்கிருந்தனன்…..”

(புறநானூறு 65)

 

வெண்ணி ஊரில் பிறந்த குயவர் தொழில் மரபில் வந்த பெண் புலவர் ஒருவர் கரிகால சோழனை புகழ்ந்து புறநானூறு 66 இல்:

 

நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!

களி இயல் யானைக் கரிகால் வளவ!

சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற

வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை

மிகப் புகழ் உலக மெய்திப்

புறப் புண் நாணி வடக்கு இருந்தோனே”

(புறநானூறு 66)

 

காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே!  செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே! போருக்குச் சென்று உனது வலிமை தோன்றுமாறு வெற்றி கொண்டவனே!  மிகுந்த அளவில் புதிய வருவாய் உள்ள வெண்ணி என்னும் ஊரில் நடைபெற்ற போரில், முதுகில் புண்பட்டதற்கு நாணி, வடக்கிருந்து மிக்க புகழுடன் விண்ணுலகம் எய்திய சேரமான் பெருஞ்சேரலாதன் உன்னைவிட நல்லவன் அல்லனோ? என்று கேட்க்கிறார். இவற்றைவிட, அகநானூறு 55, மற்றும் சிலப்பதிகாரம் போன்ற வற்றிலும் இவனைப் பற்றிய குறிப்புக்கள் உண்டு.

 

இவனது படைப்  பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவன் முறியடித்தான். கரிகாலனின் படைகள் அவனது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப்பாலையின் ஆசிரியர் மிக விளக்கமாக வர்ணிக்கிறார்.

 

இவன் தாய் வயிற்றில் இருக்கும் போதே தந்தை இறந்து விட்டார். எனவே, பிறக்கும் முன்பே அரசுரிமையை பெற்றவன் இவன் என்பதை

 

‘‘உருவப் பஃறேர்; இளையோன் சிறுவன்

முருகன் சீற்றத்து உருகெழு குரிசில்

தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தி’’ (128 - 130)

 

என்று பெருநராற்றுப்படை கூறும்.  இவனுக்குப் பல குழந்தைகள் இருந்தனர் என்பதை

 

"……………………….. தன் ஒளி மழுங்கி

விசி பிணி முழவின் வேந்தர் சூடிய

பசு மணி பொருத பரு ஏர் எறுழ்க் கழல் கால்,

பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும்," " (292 - 295) 

 

என்ற பட்டினப்பாலை  வரிகளால் அறியலாம். அதாவது தங்களின் மறம் குறைந்த, வார் இறுக்கமாகக் கட்டிய முழவினையுடைய வேந்தர்களின் பச்சை மணியையுடைய முடி, பருத்த அழகிய வீரக் கழலினைக் கட்டிய கரிகாலனின் கால்களைத் தொட, பொன்னால் செய்த தொடிகளை [வளையல்களை] அணிந்த அவனது புதல்வர்கள் ஓடி ஆடி விளையாடவும் என்கிறது.

 

கரிகாலன் இமயம் நோக்கி படை எடுத்தார் என்று சிலப்பதிகாரம் மட்டுமே கூறுகிறது. மற்றும்படி வேறு ஆதாரங்கள் ஒன்றும் இல்லை. அதேபோல இலங்கை மீது படையெடுத்தார் என்றும் கல்லணை காட்டினார் என்றும் செய்திகள் உண்டு.

 

அணை எனப்படுவது ஒரு நீரோட்டத்தின் குறுக்கே கட்டப்படும் ஒரு அமைப்பாகும். இது நீரோட்டத்தைத் தடுக்கவும் திசை மாற்றவும் பொதுவாக நீரைத் தேக்கவும் பயன்படுகின்றன.

 

முதலாம் பராந்தகச் சோழனின், கி பி  932 ஆண்டை சேர்ந்த  வேலஞ்சேரி செப்பேடு ஒன்று திருத்தணிக்கு [Thiruttani] அருகில் உள்ள வேலஞ்சேரியில் [Velanjeri]  6-10-1977 அன்று கண்டு பிடிக்கப்பட்டது. இதில் கரிகாலனை பற்றிய குறிப்பில்:

 

"அவனுடைய [கரிகாலனின்] ஆணையாலே காவேரியின் இரு மருங்கும் கரை எழுப்பியது . காஞ்சி நகரத்தில் மேகம் தழுவும் மாளிகைகள் நிறைந்தன" [He raised embankments on either side of river Kaveri and controlled its flood and  he made Kanchi a city of palaces] என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது காவேரி பெருக்கெடுப்பதை தவிர்க்க இரு கரையும் ஆணை எழுப்பப்பட்டது தெரியவருகிறது. ஆனால் நீரோட்டத்தைத் தடுத்து சேமித்து வைக்கவில்லை போல் தோன்றுகிறது. மேலும் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப் பாலையில் கல்லணை பற்றி ஒன்றுமே கூறப்படவில்லை. ஆகவே கரிகாலன் உண்மையில்  கல்லணை கட்டினானா என்ற ஒரு கேள்வி எழுகிறது?

 

எனினும்

"காடுகொன்று நாடாக்கி

குளந்தொட்டு வளம்பெருக்கி"

என்ற பட்டினப்பாலை 283 - 284 அடிகள், அவன் காடுகளை அழித்து விளை நிலங்களாக மாற்றினான், மழை நீர் தேங்கும் குளங்கள் அமைத்து நீர் வளத்தை பெருக்கினான் என்கிறது. ஆகவே காவிரி ஆற்றின் கிளை ஆறான, கொள்ளிடம் ஆற்றின் (Coleroon)  ஊடாக கடலில் தண்ணீரை சேர்ப்பதிலும் பார்க்க, அதிக தண்ணீரை காவிரி ஆற்றிற்க்குள் திருப்பி விட்டு வெள்ளத்தை கட்டுப்படுத்த வில்லை என்றால், காவிரியின் இரு பக்கமும் கரைகளை உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது? அது மட்டும் அல்ல, வயல்களுக்கு பாசனம் செய்ய அதிக தண்ணீர் சேமித்து வைக்கவில்லை என்றால், எதற்க்காக அவன் காடுகளை அழிக்க வேண்டும்? இவைகளையும் கவனத்தில் எடுத்து, கரிகாலன் கட்டினானா இல்லையா என்பதை நாம் அலசவேண்டும் என்று கருதுகிறேன்  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி 08 - "முடிவுரை" தொடரும்.

0 comments:

Post a Comment