கழுத்து வலியை ஏற்படுத்தும் 'ஒன்லைன்' வகுப்புகள்!

 


'ன்லைன்' வகுப்புகளில், சிறு குழந்தைகளை பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார வைப்பதால் கை, கால், கழுத்து, மூட்டுகளில் வலி இருப்பதாக குழந்தைகளை பெற்றோர் அழைத்து வருகின்றனர்.

'டேப், மொபைல் போன், லேப்டாப்'பை குழந்தைகள் பயன்படுத்தும் போது, குறைந்தது 2 மீட்டர் இடைவெளியில் வைத்து பயன்படுத்தும்படி, சொல்ல வேண்டும். அருகில் வைத்து பார்ப்பதால், கழுத்தை அதிகமாக முன்பக்கம் சாய்க்க வேண்டியிருக்கும்.

வகுப்பை கவனித்து கேட்பது ஒரு பக்கம் இருந்தாலும், கை, கால், கழுத்தை அதிகம் முன் பக்கமாக சாய்ப்பது வலியை ஏற்படுத்தும். இதனால் சிறிது நேரத்தில் குழந்தைகள் சோர்ந்து விடுகின்றனர். விளையாடாமல் ஒரே இடத்தில் இருந்தால், எலும்பு திசு வளர்ச்சியை அதிகமாக பாதிக்கும்; எலும்பு வலிமையாக வளராது.

குழந்தைகள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால், 'விட்டமின் டி' குறைபாடு வரலாம். மொட்டை மாடியில், அதிகம் கூட்டம் இல்லாத இடத்தில் தினமும் சிறிது நேரமாவது குழந்தைகளை விளையாட விட வேண்டும்.

வயதானவர்களும் வீட்டிலேயே முடங்கி இருக்காமல், முக கவசம், சமூக இடைவெளி என்ற உரிய பாதுகாப்புடன் நடை்பயிற்சி செய்யலாம்; இது எலும்பு மூட்டுகள், தசைகளுக்கு நல்லது. கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான பின், உடனடியாக முழு வீச்சில் உடற்பயிற்சி செய்ய வேண்டாம்.

முதலில் தினமும் சிறிது நேரம் நடைபயிற்சி, நாலு - ஆறு வாரங்கள் கழித்து மற்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். விட்டமின் டி குறைபாடு இருந்தால், டாக்டரின் ஆலோசனைப்படி, வாரத்தில் ஒரு நாள் அதற்கான மாத்திரை சாப்பிடலாம். தினமும் 30 நிமிடங்கள் சூரிய வெளிச்சத்தில் இருப்பது, குறைபாடு நீங்க உதவும்.

டாக்டர் எஸ்.செந்தில் குமார்,  
எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்,
தி இந்து மிஷன் மருத்துவமனை, சென்னை.

0 comments:

Post a Comment