வருங்கால தொழிநுட்பம்: அங்கம்-04

வருங்கால தொலைநோக்கு
[புதிய வாசகர்களுக்காக ஒவ்வொரு புதனும் மீளிடுகை]
இன்றில் இருந்து 2500 வருடம் வரை என்ன நடக்கும்? ஒரு அறிவுபூர்வமான தொழில்நுட்ப அலசல்:
(இது ஆங்கில மூலத்தின் சுருங்கிய தமிழ் வடிவம்)
5. 00.அண்டவெளியும் பயணமும்:
5.10.அண்டவெளி:
தற்போது மனிதன் அண்டவெளியை அண்ணாந்து பார்த்து, இது எங்கே தொடங்கி,  எங்கே முடியும் என்று ஆச்சரியம் கொள்கிறான்.அவன் நினைக்கிறான், இந்த வெளியானது தனது ஐம்புலானால் அறியக்கூடியது என்றும்,தனக்குத் தெரிந்த
நீளம்,அகலம்,உயரம்,காலம் எனப்படும் நான்கு பரிமாணங்களுக்கும்  உட்பட்டது  என்றும் தப்புக்கணக்குப் போட்டுக்கொள்ளுகிறான்.நமது சிற்றறிவுக்கு ஒரு பொருளின் இந்த நாலு பரிமாணங்களும் மட்டும்தான் தெரியும்.ஏன் எங்களுக்குத் தெரியாத 5 வது பரிமாணம் இருக்கப்படாது?மேலும்,ஏன் 7 , 8 அல்லது 100 பரிமாணங்களும் இருக்கமுடியாது?இந்த மேலதிக பரிமாணங்கள் ஒன்றையும் எங்களால் உணர்ந்துகொள்ள முடியாது என்பதனால் அவைகள் இல்லை என்று நாம் சாதிக்கமுடியாது.உதாரணமாக, எங்களுக்கு நீளம், அகலம், நேரம் என்னும் மூன்று பரிமாணங்கள்தான் தெரியும்.உயரம் என்ற பரிமாணம் தெரியவே தெரியாது என்று வைத்துக் கொண்டால்,ஒரு பந்து வெறும் வட்ட நிழலாகவும், ஒரு பெட்டி வெறும் சதுர நிழலாகவும் தெரியும்.ஒன்றைக் குறைத்தாலே இப்படியென்றால், பலவற்றை மறைத்தால் எப்படி இருக்கும்?இந்த புதிய பரிமாணங்களின் அடிப்படையில்,தொடக்கம்-முடிவு,இறந்த-நிகழ்-வரும் காலங்கள், சிறியது-பெரியது, இப்போது-அப்போது, இங்கு-அங்கு, இது-அது, நீ-நான் என்பன எல்லாம் முழுவதும் வேறுவிதமான கருத்தைக் கொண்டிருக்கும். நீங்கள் இப்போது கண்டுகொண்டிருக்கும் ஒரு பொருள், சில-பல காலங்களின் முன் இருந்துகொண்டிருப்பதாகவோ,அல்லது வரும் காலமொன்றில் இருக்கப்போவதொன்றாகவோ,அதுவுமில்லாமல் அப்படி ஒரு பொருள் இல்லாத ஒன்றாகவோ இருக்கலாம்.ஆகவே, அண்டம் உட்பட எந்த ஒரு பொருளுக்கும், நீள-அகலமோ, தொடக்கம்-முடிவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை.அப்படி ஒன்று இல்லாமலும் இருக்கலாம்.  அது தற்சமயம் நமது சிற்றறிவுக்கு எட்டாது!
5 .20அண்டவெளிப்பயணம்:
தற்சமயம்,அண்டவெளிப்பயணம் செய்ய அதிவேக வாகனம் தேவை.வேகம் எனப்படுவது ஆள், இடம், நேரம், வெளி ஆகியனவற்றைச் சார்ந்த ஒரு பதமாகும். பூமியில் ஒருவரை வெளியில் நின்று பார்த்தால்,1660 கி.மீ. வேகத்தில் சுழர்வதாகவும் சூரியனில் நின்று பார்த்தால் மேலும் 107 ,280 கி.மீ. வேகத்தில் சுற்றுவதாகவும், பால்வெளி மண்டலத்தில் இருந்து பார்த்தால் முழுவதுமே 540 000 கி.மீ.வேகத்தில் விரைவதாகவும், இன்னும் வெளியண்டத்தில் இருந்து நோக்கினால் 2 160 000 கி.மீ. வேகத்தில் சகலதும் பாய்வதும்  காணலாம்.மேலும் அண்டம் விரிந்து செல்லும் வேகத்தைக் கணக்கெடுக்க வேண்டாம்.ஆகவே, வேகம் என்பது எங்கு நின்று எப்படி அளக்கிறோம் என்பதுவே உண்மை.அண்டம் என்று வந்துவிட்டால் வேகம் என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விடயம். அத்தோடு,அண்டவெளி என்பது நாம் நினைப்பதுபோல தட்டையான,முடியாத ஒன்றல்ல. வருங்கால மனிதன், சமாந்தரப் பிரபஞ்சங்கள் எல்லாவற்றையும் ஒன்றுடன் ஓன்று இணைக்கும்  wormhole  எனப்படும் அண்டவெளிக் குழாய்கள் இருப்பதைக் கண்டுபிடித்து, இந்தச் சுருக்கு வழிக் குழாய்கள் மூலம் பிரயாணம் செய்து, பிரயாண நேரத்தை வெகுவாகக் குறைத்து விடுவான். அத்தோடு, ஒளியிலும் கூடிய வேகத்தில் மனிதனால் பயணிக்க முடியாது என்ற கொள்கையை உடைத்து எறிந்து, சடப்பொருட்களைச் சக்தி அலைகளாக மாற்றி, அதைத் திரும்பவும் சடப்பொருளாக இன்னொரு இடத்தில் மாற்றுவதன் மூலம் அண்ட வெளியெங்கும் பயணம் செய்து வேற்றுலக உயிர்களைத் தேட முயல்வான்.
5.30.வேற்றுலக உயிர்களுக்கான தேடல்:
மனிதன் எப்பவும் வேற்றுலக உயிர்களின் வடிவம் பற்றி ஒரு பிழையான கருத்தினைக் கொண்டுள்ளான்.ஒரு கிணற்றினுள் இருந்தபடியே, ஒரு வேற்றுலக உயிரினம் கட்டாயம்,
-  ஒரு மனிதனின் உருவச்சாயலாகவும்,
- மனிதனிலும் சற்றே உயரம் கூடிய அல்லது குறைந்ததாகவும்,
- ஒரு தலை, ஆனால் பெரிதாகவும்,
- இரு கண்கள், ஆனால் விரிந்ததாகவும்,
- இரு காதுகள், ஆனால் பரந்ததாகவும்,
- ஒரு வாய், சிறிது வேறுபட்டதாகவும்,
- இரு கால்கள், கைகள், ஆனால் குறுகிய அல்லது  நீண்டதாகவும்,
-  பிராண வாயு, நீர், ஆகாரம் உட்கொள்வனவாகவும்,
- நமக்கேற்ற சீதோஷ்ண நிலையில் வாழ்வது ஆகவும்,
- எதுவோ ஒரு மொழியைப் பேசுவதாகவும்,
- நமக்குப் புலப்படும் தோற்றம் உள்ளது ஆகவும்,
- பழைய வானொலி அண்டெனா போல ஒரு உணர் கொம்பு உடையது  போலவும் கொண்டிருக்கும் ஒரு உயிரினம் என்று பிழையான அணுகுமுறையில் தேடுகிறான்.
ஒ, மனிதன் ஏன்தான் இப்படி யோசிக்கிறான்?ஏன் எங்களைப் போல அது  இருக்க வேண்டும்?ஏன் எமது அளவில் இருக்க வேண்டும்?மேலும், ஏன்தான் எமக்குப் பரிச்சயமான மூன்று பரிமாணத்தில் மட்டும் இருக்க வேண்டும்?அளவு எனப்படுவது ஒன்றைச் சார்ந்த ஒரு சொல்லாகும்.அது, எது. எதனால், எதற்காக அளக்கப்பட்டது என்பதைப் பொறுத்து உள்ளது.ஒரு இராட்சத எறும்பு,ஒரு குட்டி யானையிலும் பெரிதாகுமா? ஒரு வேற்றுலக உயிர் நம்மிலும் பார்க்கப், பல, பல கோடானு கோடி அளவு சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கலாம்;நாலு, ஐந்து அல்லது பல்பரிமாண உருவத்தைக் கொண்டிருக்கலாம்.அப்படியானது, தற்சமயம் நம்மைச் சுற்றி பல இருக்கக் கூடும்.இருப்பதை நம் குறுகிய புலத் திறமையினால் கண்டு பிடிக்கமுடியாத  அப்பாவிகளாய் இருக்கிறோம்.
மனிதன், வரும் 500 வருடங்களாக வேற்றுலக உயிர்களைத் தேடி ஒரு வெற்றியடையாத பயணத்தையே மேற்கொள்வான்.இப்பயணம், ஒரு ஆர்வ முனைப்பினாலேயே ஒழிய அங்கு குடியேறுவது நோக்கம் அல்ல.ஏனெனில், மனிதன் பூமியில் தன்னிறைவு கொண்டு விடுவான். (தொடரும்)technology tamil

                                                 - செ.சந்திரகாசன்

0 comments:

Post a Comment