எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:05

எங்கே ,எப்பொழுது எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது என்ற முதல் இரு கேள்விகளும் எமது கவனத்தை ஒரு முக்கியமான வேறு ஒரு மாற்று கேள்விகளின் பக்கம் திருப்பு கிறது-அதாவது, எழுத்து ஒரு முறை கண்டு பிடிக்கப் பட்டு, மொழியை எழுத்து குறியீடுகளால் பிரதிநிதித்துவம் படுத்தும் அந்த கண்டு பிடிக்கப் பட்ட நுட்பம், அந்த மைய பகுதியில் இருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு பரவியதா? அல்லது எழுத்து பலமுறை, வெவ்வேறு பகுதிகளில் சுதந்திரமாக, தன் பாட்டில் வளர்ந்தா? என்ற கேள்விகளின் பக்கம் எம்மை திருப்பு கிறது.

இந்த கேள்விகளுக்கு அநேகமாக ஒரு எளிய பதில்  இருக்க முடியாது. மறு பக்கம்,வெவ்வேறு இடங்களில், அந்தந்த வாய் மொழிகளை பிரதி நிதித்துவம் படுத்தும், அங்கு விருத்தி அடைந்த  குறியீட்டு முறைமைகள், பலவழிகளில் வேறுபட்டு காணப்படுகின்றன. வெவ்வேறு பண்பாடு களுக்கு கிடையில், எந்த வித பரஸ்பர தாக்கங்கள் நடை பெற்று இருந்தாலும், எழுத்து ஆரம்பித்ததும், அதன் பின் அது கணிசமான அளவு தன்னிச்சையாகவும் நெகிழ்வு தன்மையாகவும் அந்தந்த மொழிக்கே உரிய குறிப்பிட்ட பண்புகளை உள்ளடக்கி, ஒரு குறியீட்டு முறைமையை தழுவியது எனலாம். அதாவது,ஆரம்ப எழுத்து அமைப்புகள் எமக்கு சுட்டிக் காட்டுவது என்ன வென்றால், மெசொப்பொத்தேமியாவை அல்லது மெசொப்பொத்தேமியா, எகிப்த்தை மையமாக கொண்டு அந்த எழுத்தைப் பற்றிய கருத்து பல்வேறு திசைகளில் கி மு 3 ஆம் ஆயிர மாண்டு தொடக்கத்தில் இருந்து பரவியது என்பதாகும். 

ஏன் எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது? என்பதைப் பற்றி பார்ப்போம். பொதுவான மொழிவரலாற்றியல் சார்ந்த கண்ணோட்டத்தின் படி, எழுத்து ஒரு மொழியை பிரதிநிதித்துவம் படுத்தி, மறைமுக தகவல் தொடர்பிற்கும் மற்றும் அறிவு பரிமாற்ற த்திற்கும் வழி வகுக்கிறது என முக்கியமாக கருதப் படுகிறது. அது மட்டும் அல்ல, மொழியானது நீண்ட காலம் புழக்கத்தில் இருப்பதற்கு, அதற்கு எழுத்து வடிவம் இருக்க வேண்டியது மிக மிக அவசியமானதும் ஆகும். வெறும் பேச்சு மொழியோடு மட்டுமே இருந்து விட்டால், அதனைப் பேசுகிற மனிதர்கள் இறக்கும் போது, கூடவே அதுவும் இறந்து விடும். எனவே, எழுத்து முறைமை (writing system), என்பது ஒரு மொழியைப் பார்க்கக்கூடிய வகையில் குறியீடுகள் மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும். உதாரணமாக, இதனால் தான் இன்று எமக்கு 4,000 ஆண்டுகள் முந்தைய உலகின் பழமையான வாடிக்கையாளர் புகார்க் (Customer Complaint) கடிதம் கிடைத்துள்ளது. நன்னி (Nanni) என்ற ஒரு  வாடிக்கையாளர், யா-நாசிர் [Ea-nasir] என்ற வணிகருக்கு எதிராக ஒரு செப்பு கப்பல் சரக்கைப் பற்றிய தனது மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளார். அந்த கடிதத்தில்,இப்படி எழுதி உள்ளது: 

"என்னிடம் நீ வந்த போது  'நான் கிமில்-சின்னிடம் [Gimil-Sin] (அவன் வரும்போது) முதற்தர செப்பு பாளங்களைத் தருவேன்.' என்று கூறிவிட்டு நீ சென்றாய் , ஆனால் நீ என்னிடம் என்ன வாக்குறுதி தந்தாயோ, அதனைப் பின் செய்யவில்லை. நீ தரமற்ற செப்புப் பாளங்களை என்னுடைய தூதுவன், சிட்-சின் [Sit-Sin] முன் வைத்து, அவனிடம் சொல்லியிருக்கிறாய்: 'இதை எடுக்க விரும்பினால் ,இதை எடு,இல்லை என்றால் நீ இடத்தை காலி பண்ணு' என்று.

என்னை எப்படி நீ  நினைத்துக் கொண்டாய், யாரோ ஒருவனை பேசுவது போல, என்னை  அவமதித்து பேசியுள்ளாய்... நான் கூறுவதை கேள் (இப்போதிலிருந்து) இதற்குமேல் நான் இங்கிருந்து உன்னிடம் தரமில்லாத எந்தவொரு செப்பையும் பெற அனுமதிக்கமாட்டேன். நான் (இப்போதிலிருந்து) பாளங்களை தனித்தனியாக என்னுடைய கொல்லை புறத்திலிருந்து தேர்வு செய்து எடுத்துக்கொள்வேன், பின்பு நான் உனக்கெதிராக எனக்குள்ள நிராகரிக்கும் உரிமையை நீ என்னை அப்படி அவமதித்ததற்காகப் பயன்படுத்துவேன்." என்று அந்த கடிதம் கூறுகிறது.
இந்த கடித முத்திரை, ஊர் என்ற நகரத்தில் கண்டு பிடிக்கப் பட்டு, இன்று பிரிட்டிஷ் அருங்காட்சியக த்தில் வைக்கப் பட்டுள்ளது.

பொதுவாக, ஒலியைக் குறிக்கும் குறியீடான எழுத்தை, 

[1]ஓவிய எழுத்து (pictographical/உதாரணம்: பழைய எகிப்திய எழுத்துகள்), 

[2]கருத்து எழுத்து (ideographical/உதாரணம்: சீன மொழி எழுத்துகள்), உருபனெழுத்துக்கள் [(logographic)] சில சமயங்களில் கருத்தெழுத்துக்கள் (Ideogram) என அழைக்கப்படுவதுண்டு. பண்பியல் (abstract) எண்ணங்களை வரைபுருவினாற் குறிப்பதால் இந்தப் பெயர். இங்கு உருபனெழுத்து என்பது ஒரு முழுச் சொல்லை அல்லது ஒரு உருபனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எழுத்தாகும். உருபன் ஒன்று தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உருபன்கள் சேர்ந்தோ சொல்லை உருவாக்குகின்றன. எடுத்துக்காட்டாக: வாழ் ஒரு உருபன், கிறு ஒரு உருபன், ஆன் ஒரு உருபன். இம்மூன்று உருபன்களும் சேர்ந்து வாழ்கிறான் (வாழ் + கிறு + ஆன்) என்னும் சொல்லை உருவாக்குகின்றன. இச்சொல்லை உருவாக்கிய உருபன்களில் வாழ் என்ற உருபன் தனியாக நின்றும் பொருள்தரும் சொல்லாகக்கூடியது. 

[3]அசை மொழி எழுத்து (syllabary writing /உதாரணம்: தமிழ் -பெரும்பாலும் அசை எழுத்து முறையைக் கொண்டது ),ஆங்கில மொழியைப் போன்ற சிக்கலான அசை அமைப்பையும், பெருமளவிலான மெய்யொலிகளையும், சிக்கலான மெய்யொலிக் கூட்டங்களையும் கொண்ட மொழிகளில் சொற்களை அசையெழுத்து முறையில் எழுதுவது கடினமாகும். ஆங்கிலத்தை இதேமுறையில் எழுதுவதாயின் பல ஆயிரம் எழுத்துக்கள் வேண்டியிருக்கும் எனக்கூறப்படுகிறது. 

[4]ஒலியன் எழுத்து (phonetic writing /உதாரணம்: ஆங்கிலம், ஆனால்,உண்மையில் அப்படி கூறமுடியாது,98% அப்படி இருக்கலாம்? என்பார்கள். ஒலியனெழுத்து (Alphabetic) என்பது ஒவ்வொன்றும், பேச்சு மொழியொன்றிலுள்ள, ஒரு ஒலியனை, அண்ணளவாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது பிரதிநிதித்துவப்படுத்திய சிற்றளவிலான எழுத்துக்களைக் கொண்ட தொகுதி ஆகும் [- அடிப்படையான குறியீடுகள் ஆகும்- ]. ஆங்கிலத்தில் இச் சொல்லைக் குறிக்கும் "அல்பபெட்" (alphabet) என்னும் சொல், கிரேக்க அரிச்சுவடியின் முதல் இரண்டு எழுத்துக்களான "அல்பா", "பீட்டா" என்பவற்றைச் சேர்த்துப் பெறப்பட்டது. ஒரு முழுமையான ஒலியன் எழுத்து முறைமையில் (phonological alphabet), ஒலியன்களும் (phoneme), எழுத்துக்களும் ஒன்றுடனொன்று இரண்டு திசைகளிலும் முழுமையாகப் பொருந்தக்கூடியன ஆகும்: ஒரு சொல்லின் உச்சரிப்புக் கொடுக்கப்பட்டால், எழுதுபவர் ஒருவர் அதற்குரிய எழுத்துக்களைக் கண்டுகொள்ளக்கூடியதாகவும், அதே போல சொல்லுக்குரிய எழுத்துக்கள் கொடுக்கப்படும்போது, பேசுபவரொருவர் அதன் உச்சரிப்பை அறியக்கூடியதாகவும் இருக்கும்.  ஆரம்பத்தில் ஒரு தெளிவற்ற, ஒழுங்கு படுத்தப் படாத 'பட' அல்லது 'ஓவிய' குறியீடு  (pictographical)  மூலம் ஆதி மனிதன் தனது உணர்வுகளை அல்லது அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் அவனின் ஒலிகளை அல்லது பேச்சு மொழிகளை பார்க்கக்கூடிய வகையில் பதிவு செய்து காட்டினான்.பின் அசை எழுத்து முறைமைகள் [syllabary] தோன்றி இறுதியாக ஒலியன் எழுத்து முறைமை [alphabetic writing] தோன்றியது எனலாம்.

தமிழ் பெரும்பாலும் அசை எழுத்து முறையைக் கொண்டது (syllabary writing system). 'அம்மா' என்ற சொல்லை /அ/ ம்/ மா/ என்று ஒலியன் பிரித்து ஒலிக்க வேண்டும். புறநானூறு போன்ற கடினமான சொற்களை /புற/ /நா/ /னூறு/ அசை பிரித்து ஒலிக்க வேண்டும். அதேபோல, "அகர முதல எழுத்தெல்லாம்" என்பதை பின்வருமாறு அசை பிரிக்கலாம்: /அக/ /ர/ /முத/ /ல/ /எழுத்/ தெல்/ /லாம்/. மற்ற இந்திய மொழிகளும் பெரும்பாலும் அசை எழுத்து முறைமையைக் கொண்டவையே. அசை எழுத்து முறையில் ஓர் எழுத்து ஓர் அசை (ஒலிப்பு முறையில்)யைக் குறிக்கும் வகையில் எழுதப் பெறுகின்றது. அதாவது, க என்னும் உயிர்மெய் எழுத்தை ஒரே எழுத்தாக எழுதுகிறோம்.ஆனால், ஒலியன் எழுத்து முறையில்  க என்பதை எழுத வேண்டும் என்றால் க்அ என்று தான் எழுத வேண்டும். இவ்வாறு ஒலியன் எழுத்து முறையில் எழுதும் வழக்கம் தமிழில் இல்லை. எனினும் ஐ, ஒள தவிர்த்து உள்ள பத்து உயிரெழுத்துகளும் க் முதல் ன் வரை உள்ள பதினெட்டு மெய் எழுத்துகளும், ஒலியன்கள் என்பதால் ஒலியன் எழுத்து முறையில் அமைந்தவை போல் காணப்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அசை எழுத்து முறையில் கடல் என்று எழுதுவதை, ஒலியன் எழுத்து முறையில் க்அட்அல் என்று எழுதுவர். இதுவே இரண்டிற்கும் உள்ள வேறுபாடு ஆகும்.

இனி எமது கவனத்தை இறுதிக்  கேள்வியான எப்படி எழுத்து கண்டுபிடிக்கப் பட்டது என்பதின் பக்கம் திரும்புவோம். முதலில் அறியப்பட்ட எழுத்து இரண்டு பெரும் நைல்,டைக்ரிஸ் ஆறுகளின் [ the Nile and the Tigris] கீழ் பகுதியில் இருந்து வந்துள்ளது.ஆகவே இரண்டு நாகரிகங்களும் இந்த முக்கிய மாற்றத்திற்கு பொறுப்பானவர்கள் என பொதுவாக எவரும் கருதலாம், ஆனால்,உண்மையில் சுமேரிய எழுத்து கி மு 3100 ஆண்டு எனவும், அதன் பின் குறைந்தது 100 ஆண்டுகள் அல்லது அதற்குப் பின்பே எகிப்திய எழுத்து உருவாகி இருக்கலாம் என அறிய முடிகிறது. எனவே இந்த அதி முக்கிய மாற்றத்திற்கு சுமேரியனே முதன்மை காரணியாக உள்ளான். எகிப்து ,சுமேரியாவிற்கு அண்மையில் இருந்ததால், இந்த சுமேரியரின் யோசனை அல்லது நுட்பம் மிக விரைவாக எகிப்தியரை அடைந்திருக்கலாம் என நாம் கருதலாம். 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:06  தொடரும்

0 comments:

Post a Comment