வருங்கால தொழிநுட்பம்:அங்கம்-01

வருங்கால தொலைநோக்கு[புதிய வாசகர்களுக்காக மீள்பார்வை]

இன்றில் இருந்து 2500 வருடம் வரை என்ன நடக்கும்? ஒரு அறிவுபூர்வமான தொழில்நுட்ப அலசல்:-ஆக்கம்:செல்வதுரை சந்திரகாசன்

(இது ஆங்கில மூலத்தின் சுருங்கிய தமிழ் வடிவம்)


௦0.30 மனிதனின் பரிணாம வளர்ச்சியும் தொழில்நுட்பப் புரட்சியும்:
மனிதன் பலவருடங்களாகப் படிப்படியாக வேட்டையாடத் தொடங்கி, விவசாயம் செய்யப் பழகித் தற்போது தொழில்நுட்ப உலகிற்குள் நுழைந்து விட்டான். இத்தகைய வளர்ச்சியின்போது ஏற்பட்ட அனுபவங்களாலும், ஆராய்ச்சிகளினாலும் அல்லது தற்செயலாகவும் பலவிதமான பதிய சாதனங்களைக் கண்டுபிடித்தான். இரண்டாயிரம் வருடங்களின் முன் வாழ்ந்தோர் தற்போது நாம் அனுபவிக்கும் வாழ்க்கை முறையினைக் கனவிலும் அனுமானிதிருப்பர்ர்களா? அதுபோல், இன்னும் இரண்டாயிரம் வருடங்களில் மனிதன் என்னமாதிரி வாழுவான் என்று கற்பனைதான் பண்ணிப் பார்க்க முடியுமா? வேண்டாம்! ஒரு 500 வருடங்களில் தான் என்ன நடக்கும் என்று நம்ம புத்திஜீவித தொலைநோக்கியூடாகப் பார்க்கத்தான் விழைவோமே! நிச்சயமாக 2500 இல் வாழ்வோர் நாங்கள் எவ்வளவுக்கு அறிவற்ற மூடர்களாய் இருந்து சரியாகக் கஷ்டப்பட்டோம் என்று வியக்கத்தான் போகின்றார்கள்.
தற்சமயம், நாம் எங்கள் மூளையின் 10% பகுதியை மட்டும் தான் நம் பலவிதமான செயல்பாடுகளுக்குப் பாவிக்கிறோம். மூளையின் பிறபகுதியினைப் பாவிக்காமல் விட்டால் அது நமக்கு வால் தேய்ந்து போனது போல இல்லாமல் போய்விடும். ஆனால், வருகால மனிதன் மூளையின் 100% பகுதியையும் பாவிப்பது மட்டுமல்ல, மூளையின் கலங்களின் எண்ணிக்கையும் பலமடங்காகப் பெருகிவிடும். இதனால் மனிதன் வருங்காலத்தில் ஒரு அபார ஞாபகசக்தியுள்ள அதிசூர உயிரினமாக திகழுவான். கடந்த காலங்களிலும் பார்க்க தற்போதைய விஞ்ஞான வளர்ச்சி வீதம் படுபயங்கர வேகத்தில் ஏறிக்கொண்டு போகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. இதனால் நீங்கள் கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவிற்கு பல புதுமைகளைக் காண இருக்கிறீர்கள்.
எனது இந்த எதிர்கால தொலை நோக்கில், தற்சமயம் பலர், இயற்கை கடந்த, தெய்வீகமான, சமகால வழக்கமான, மூடமான விடயங்கள் என்று சொல்லிக்கொண்டு ஒதிக்கி இருக்கும் பல விடயங்கள் உண்மையிலேயே எம் கண்முன்னால் சாதாரணமாக நடக்க இருக்கிறது என்பதை விரிவாக காட்டப் போகிறேன். தற்போதைய மனிதனின் ஒரு பெரிய குறைபாடு என்னவென்றால் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஒட்டுவதுதான்.ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால் கடிவாளம் பூட்டியதுபோல் அதே சீர் நேர்கோட்டிலேயே குறுகியகோணத்தில் ஆராய்வு செய்து ஏற்கனவே இருப்பனவற்றை திருத்தி அமைக்கும் கைங்கரியதிலேயே ஈடுபடுவதால் முற்றிலும் வேறுபட்ட பதிய பாதைகளைத் தேடுவது பெரும்பாலும் தடுக்கப்படுகிறது.
இந்த புதிய முயற்சியில் முக்கிய கர்த்தாவாகிய சக்தி ஆக்கம் பற்றி முதலில் ஆராய்வோம்.

௦1.00 சக்தி ஆக்கம்: இதுவரை:

1 .01 பழக்கம் மாறவில்லை:
கடந்த 90 வருடங்களாக மின்சாரம் என்னும் ஒரு சக்தியைக் கண்டுபிடித்து இன்னமும் அதையே இன்னும் இலகுவான முறையில் உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடிப்பதற்கே பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டு இருக்கிறான். தற்சமயம் மின்காந்தத் தூண்டல், ஒளி, வெப்ப, இரசாயன மற்றும் அணுத்தாக்கம் என்று பலவிதமான முறைகளினால் மின்சாரம் உற்பத்தி செய்து, அத்தோடு உபயோகிக்கக் கூடிய, X , UV , லேசர் கதிர்களையும், மைக்ரோ, ரேடியோ அலைகளையும் கண்டு பிடித்து தனது சௌகரிய வாழ்வுக்குப் பயன்படுத்திக் கொண்டான்.
இப்போது எனது கேள்வி என்னெவென்றால்,மனிதனின் கண்டுபிடிப்புகள் முடிவடைந்து விட்டதா?இந்த பரந்த விரிந்த அண்டத்தில் வேறு விதமான ஒரு உந்தும் சக்தி ஒன்றைக் கண்டு பிடிக்க முடியாதா?கண்டது கைமண்ணளவு,காணாமல் இருப்பது கடல் அளவாய் இருக்கலாம் அல்லவா?அது சரி, அது ஏன் தொடர்ந்து மின்சாரமாய் இருக்க வேண்டும்? அது ஏன் தொடர்ந்து மின்னோட்டமாய் இருக்க வேண்டும்?இந்தப் பரந்த வெளியில் பாரிய அளவிலான, மிகவும் சக்தி வாய்ந்த சில கதிர்கள். அலைகள், வீச்சுகள், அதிர்வுகள், உமிழ்வுகள், தெறிப்புகள்,எரிவுகள், தூண்டல்கள், கவர்வுகள், எதிர்வுகள், ஈர்ப்புகள், சேர்வைகள், சிதைவுகள், அழிவுகள், ஒளிர்வுகள் அல்லது இன்னும் வார்த்தையே இல்லாத அவைகள், இவைகள் என்று கோடிக்கணக்கான சக்திகள் இருக்கின்றன என்பதை அறிவுடையோர் எவரும் மறுக்க மாட்டார்கள்.
இந்தவிதமான சிந்தனைகளோடு நம் எதிர்காலம் நோக்கி நகர்வோம் வாருங்கள்.


1 .10௦. யுகம்: 2010 - 2050௦ - மின்சாரம்: மைக்றோ - நுண் சிம்பு காலம்:
இக்காலமுன் 20 வருடங்களில் சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் தொழில்நுட்பம் முன்னேறும்.2020 களில் ஐதரன் வாயு பிரதான எரிபொருளாக மாறும். தாவரங்களே சூரிய ஒளியின் உதவியால் பச்சயமும் நீரும் சேர்ந்து ஐதரசன் மற்றும் பிராண வாயு என்பவற்றை வெளியில் விடுகின்றபோது, மனிதனுக்கு மட்டும் இதை வர்த்தக அளவில் தயாரித்து உபயோகத்தில் விட என்ன அறிவு இல்லாமலா போய்விடுமா? பெரும் அளவில் கிடைக்கும் கடல் நீரையும் சூரிய ஒளியையும் வைத்துத் தயாரிக்கப்படும் ஐதரசன் வாயுவைப் பாரிய மின்கலங்களில் அடைத்து இரசாயன முறையினால் மின்சக்தி உற்பத்தி செய்து உலகம் பூராவும் உபயோகத்தில் இருக்கும். பிந்தியவருடங்களில் சூரிய ஒளித்தொகுப்பு முறையினால் மலிவாக ஐதரன்வாயு உற்பத்தி செய்வார்கள்.வண்டிகளை இயக்கும் உட்தகனஇயந்திரங்கள் எல்லாம் பெற்றோலைக் கைவிட்டு ஐதரசத் தொழில்நுட்பத்தினுள் நுழைந்து விடும்.பிந்திய காலத்தில் ஹைனல் எனப்படும் உயர் வெப்ப கரு மின்பகுப்பு முறையினால் மிக மிக மலிவான விலையில் ஐதரசன் உற்பத்தி செய்யப்படும்.இப்புதிய முறையில் கரியமிலவாயு நமது சுற்றாடலுக்குத் தள்ளப்படுவது முற்றாகவே நிறுத்தப்பட்டுப் பிராணவாயுவே கழிக்கப்பட்ட வாயுவாக வாயுமண்டலத்தினுள் செலுத்தப்படும்.

1).20௦. யுகம்: 2050 - 2200௦ - நன்சாரம்: நனோ -நுண் சிம்பு காலம்:
மனிதன் சிந்திக்கத் தொடக்கி விட்டான். இரு நூற்றாண்டு காலமாக உபயோகமாக இருந்த மின்சக்தி பற்றி வினாவைத் தொடங்கி விட்டான். இதன் விளைவாக மின்சாரம் போய் புதிய நன்சாரம் வந்துவிட்டது. நன்சாரமா? ஆம். 2050 இலிருந்து நனோ நுண் சிம்பு நுட்ப நன்சாரம் வந்துவிடும். இந்த நன்சாரத்தில் மின்சாரம் போன்று மின் அழுத்தம் இருக்காது. இதை உண்டாக்குவதற்கு பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் தேவை இல்லை. ஆனால் விநியோகச் சுற்றுகள் பாவனையில் இருக்கும். சரி இதை எப்படி தயாரிப்பது? இதற்கு விடை நம் முன்னால் இருக்கும் நமது சூரியன்தான்.

1 .21௦. சூரியன் - சக்தியின் மூலம்:

நெடுங்காலமாகவே சூரிய சக்தியை நன்குணர்ந்த நம்முன்னோர் சூரியனை ஒரு தெய்வமாகவே வணங்கினார்கள். சூரிய ஒளியும் வெப்பமும் இல்லாவிட்டால் உலக ஜீவராசிகள் எல்லாமே அழிந்து போய்விடும். சூரியனிலிருந்து எண்ணிக்கையற்ற சக்தி அலைகள், வீச்சுகள் பூமியை நோக்கி வருகின்றன. ஆனால் பெரும்பகுதி வெளிமண்டலத்தால் திருப்பி அனுப்பப் படுகின்றன. வந்து சேரும் ஒரு சிலவும் மனித கண்களுக்குப் புலனாவதும் இல்லை. இப்படி நம் கண்களுக்குப் புலப்படாத ஒன்றுதான் n - கதிர்கள்.

1 .22௦. நன்சாரம்:
இந்த என்-கதிர்கள் அல்பா, பீற்றா, காமா கதிர்களின் இயல்புகளை ஒத்தும் மாறியும் இருக்கும்.இரண்டு அணுக்கள் கிட்ட நெருங்க நெருங்க இலத்திரங்களுக்கு இடையிலும் கருமையங்களுக்கு இடையிலுமான வெறுத்து ஒதுக்கும் தன்மை கூடிகொண்டே போகும்.n-கதிர்களில் ஏற்படும் இந்த செயல்-எதிர்ச்செயல் ஒரு ஐசொரோபிக் வஸ்துவின் ஊடே பாயும்போது அதன் அணுக்களில் இச்செயல் இன்னும் வக்கிர +, எதிர் - சமிக்கைகளாய் உடனுக்குடன் மாற்றப்பட்டுக் கிடைக்கும் ஓட்டம் தற்போதைய மின்சாரத்திற்கு ஒத்ததாக இருக்கும்.விண்வெளியில் 2000 கி.மீ. உயரத்தில் நிலையான(ஆனால் சுற்றிக்கொண்டிருக்கும்)விண் கோள்களில் பொருத்தப்பட்டிருக்கும் n-கதிர் உணர்பொறிகள் இக்கதிர்களை ஆங்காங்கு மின்சாரக் கம்பங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பெறுவிகளுக்கு, விட்டு விட்டு நிகழ்வாக, அதிகூடிய அதிர்வோடு அனுப்பவே, அவை நன்னோட்டம் என்னும் மின்னோட்டமாக மாற்றப்பட்டு விநியோகிக்கப்படும்.2100 வரை மின்சாரப் பொருட்கள் யாவும் மின்சாரத்திலும், நன்சாரத்திலும் வேலை செய்யக்கூடியதாக உருவாக்கப்படும்.2100 இலிருந்து நன்சார விநியோகம் கம்பி இல்லா முறையில் நடக்கும்.அப்போதுமுதல் எங்கெங்கு மின்சாரம் வேண்டுமோ அங்கங்கு பெறுவிகளைப் பொருத்திவிட வேண்டியதுதான்.

1) .30௦. யுகம் 2: 2150 - 2300௦
- கோகோன் - பைகோ நுண் சிம்பு காலம்:
கடந்த 150 வருடங்களாக பாவனையில் இருந்த நன்சாரத்தின் குறைபாடுகளான ரேடியோ கதிர்வீச்சு அபாயம், விண்கோள்கள் பராமரிப்பு ஆகிய கஷ்டங்களால் ஒரு புதிய இலகுவான, பாதுகாப்பான ஒரு சக்தியமைப்புத் தேடலின் உந்தலினால் புதிய கோகோன் நுட்பம் கண்டுபிடிக்கப்படது.

1) .31௦. கோகோன் - கோமிக் அலைகள்:

கோகோன் என்பது மின்சாரமும் இல்லை, மின்னோட்டமும் இல்லை.இது இலகுவான அதிர்வுசார்ந்த சக்திதான்.2200 ஆம் ஆண்டில், சூரியனிலிருந்து வரும் கோமிக் அலைகள் பற்றி கண்டறியப்பட்டது.இவ்வலைகள் சூரியனில் இருந்து வரும் கொஸ்மிக் அலைகளைவிட மிகவும் சக்தி வாய்ந்தது.இதற்குள் அல்பா, பீற்றா, காமா துனுக்கைகளை விட புதிய நண்பனான சீற்றாத் துணிக்கைகளும் உள்ளன.
இந்த சீற்றாத் துணிக்கைகளின் அலைகள் சில ஊடகங்களினூடே செல்லும்போது, பூமி மற்றும் சூரியனின் பாரிய ஈர்ப்புச் சக்திகளினால் ஒரு மிகச்செறிந்த கருப்பிரபஞ்ச ஈர்ப்பதிர்வுகளை உண்டாக்கும்.கோமிக் அலைகளினால் அயனாக்கப்பட்ட அணுக்கள் சூரிய + பூமி ஈர்ப்புச் சக்திகளால் மாறி மாறிக் கவரப்படும்.இக்கவர்வுகள் பைகோ நுண் சிம்புவினூடே செலுத்தப் பெறும் அதிர்வுகள் ஒரு உந்தும் சக்தியாக வெளிவரும்.இந்த ஈர்ப்பதிர்வுச் சக்திதான் 23 ஆம் நூற்றாண்டின் முக்கிய சக்தியாக இருக்கும்.அப்போது சகல வீதிகள், தொழில்சாலைகள், அலுவலகங்கள், வாகனங்கள் எல்லாமே கொகோன் அதிர்வுச் சக்தியையே பாவிக்கும்.


1.40௦. யுகம் 4: 2350 -2500 ஓம் - பெம்ரோ / அட்ரோ நுண் சிம்புக் காலம் :
கோகோன் சக்தி மிகவும் வசதியாகவே இருந்தும்,ஓம் அலைகளின் கண்டுபிடிப்பு மனிதனைப் பல ஏணிப்படிகள் மேலே கொண்டு சென்றுவிடும்.

1.41 ஓம் அலைகளில் ஓம் அதிர்வுகள்.
ஓம் அலைகள் சூரியனுக்கும் அப்பால் பிரபஞ்சத்திலிருந்து வருகிறது. இந்த ஓம் அலைகள் கோமிக் அலைகளைவிட பத்தாயிரம் மடங்கு விரைவான அதிர்வுகளைக் கொண்டிருக்கும்.இதற்குள் உள்ள நிறை குறைந்த உப அணுக்கள் நைட்ரோன் எனப்படும் நேர்+எதிர் ஏற்றங்களைக் கொண்டிருக்கும்.இவை பெம்ரோ நுண் சிம்புவினூடே செலுத்தி வரும் அதிர்வுகள் ஓம் சக்தி எனப் பெயரிடப்பட்டு, உலகம் பூராவும் பாவனையில் இருக்கும்.2450 இல் ஓம் சக்தி அட்ரோ நுண் சிம்புகள் ஒரு தலைமுடி அளவிலும் சிறியதாக இருக்கும்.இச்சிம்புகள் எங்கும் இலவசமாகக் கிடைக்கும்.மனிதன் பிறக்கும்போதே இச்சிம்புகள் குழந்தையின் உடலில் பொருத்தப் பட்டுவிடும்.இந்த ஓம் சக்தியின் உதவியோடு உலகம் எங்கும் இயந்திர மனிதர்கள் உட்பட எல்லா விதமான உபகரணங்களும் இயங்கிக்கொண்டு இருக்கும்.இக்காலத்தில் எந்த விதமான சக்தியாக்க இயந்திரங்களோ அல்லது மின் விநியோகச் சுற்றுக்களோ இருக்க மாட்டாது.தற்போது நிலவும் எரிபொருள் பற்றக்குறை என்பது வரும் காலத்தில் இருக்கவே இருக்காது.

1. 42 பகலா இரவா உங்கள் விருப்பம்!

பூமியின் மேலே நிலையான சூரிய மறைப்புத் தட்டுகளும், ஒளிரும் செயற்கைச் சந்திரன்களும் உலாவி வரும். நீங்கள் விரும்பியவாறு மறைக்கும் / ஒளிரும் அளவுகள், நேரங்கள், இடங்கள் என்பனவற்றைத் தரையில் இருந்தே கட்டுப்பாடு செய்து உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அனுபவிக்கலாம்.
சரி, வருடம் 2500 ௦ ஆகிவிட்டதால் இத்தோடு நிறுத்துவோம் .
இனி, சக்தியையே நம்பி இயங்கும் வாகனம், பொழுது போக்குத் துறைகளின் வளர்ச்சிதனைப் பார்ப்போம்.


2 .௦ 00 வாகனம்- பொழுதுபோக்கு:
2 .01 பழக்கம் மாறவில்லை
கடந்த 200 வருடங்களாக, சகல இயங்கும் வாகனங்களிலும் உட்தகன இயந்திரங்களைப் பாவிப்பதிலும்,அவற்றை மேலும், மேலும் அதிசக்தி உள்ளவைகளாக மாற்றுவதிலும் தான் மனிதன் விடா முயற்சியில் ஈடுபட்டு இருந்தான்.ஆனால் புதிய, புதிய சக்திரூபக் கண்டுபிடிப்புகளினால் மனிதன் படிப்படியாக வித்தியாசமான இயந்திர நுட்பங்களினுள் புகுந்துவிட்டான்.

2 .10 யுகம் 1 : 2010 - 2050 - மின்சாரம்:

முதல் பத்து வருடங்களில் வாகனங்களில் எதனோல் கலந்த பெட்ரோலும், பின்னர் பெற்றோல்/ மின்சாரம் கலந்த இயக்கிகளும், அதன் பின்னர் முழு அளவு மின்சார தானுந்திகளும் (automovers) பாவனைக்கு வரும்.இந்தத் தானுந்திகள் மிகவும் சிறிய அளவினதாக, ஆனால் மிகவும் பலமுள்ளதாகவும் இருக்கும்.இவற்றின் கூரையில் நனோ சூரிய மின் கலங்கள் பொருத்தப்பட்டு வேண்டிய அளவு சக்தியை சூரியனிலிருந்து பெற்றுக்கொள்ளும்.அப்போது, இதனால் எரிபொருள் செலவு என்பது மின்கலன்களின் பராமரிப்புக்குத் தேவையான அளவு மாத்திரமே.

2020 இலிருந்து ஐதரசன் எரிபொருள் இன்னும் மிகக்குறைந்த செலவில் சக்தி கூடிய உட்தகன இயந்திரங்களை இயக்குவதற்குப் பாவிக்கப்படும். இக்காலத்தில்,நுண்ணறிவில் தானியங்கும் தானுந்தி பாவனைக்கு வரும். இவ்வாகனக் கணனியின் திரையில்,நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்து விலாசத்தை இட்டதுமே,இதன் உணர்விகள், சுற்றாடலில் காணப்படும் வாகனங்கள், தடைகள் எல்லாவற்றையும் கண்காணித்து உரிய இடத்திற்கு விபத்தே இல்லாமல் அழைத்துச் செல்லும்.நீங்கள் இந்தப் பயணத்தின் போது ஒரு தூக்கமே போடலாம்.இப்போது, வாகன விபத்து என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் தானுந்தியின் வேகம் 200 கி.மீ.வரையே இருக்கும்.
ஆனால், 2020 இலில் வீதிகளின் நெரிசல் காரணமாக விண்வழியே செல்லக்கூடிய வான் கார் (aircar) தனிப்பட்ட உபயோகத்திற்காக கண்டுபிடிக்கப்படும்.இவ்வண்டி, 300 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியதாய் இருந்தாலும்,அதன் பாரிய (ஆனால் மடிக்கக்கூடிய) சிறகுகளும், அது மேல் ஏறுவதற்குத் தேவையான நீண்ட ஓடுபாதையும் மனிதனுக்குச் சங்கடத்தை உண்டுபண்ணும்.சிறகுகள் மடிக்கப்பட்ட நிலையில் வீட்டிலிருந்து ஒரு ஓடுபாதை நோக்கிப் போகவேண்டி இருக்கும்.

இதனால், 2030 இல் வான் ஷூட்டர் (airshooter) எனப்படும் வாகனம் ஒரு புதிய அத்தியாயத்தினுட்புகும்.இது, உயர்நுட்ப ஐதரசன் மின்கலங்களினால் இயக்கப்படும்.சின்னஞ்சிறு ஜெட் இயந்திரங்கள் அடங்கிய,சிறகுகள் இல்லாத 2 - 5 இருக்கைகளைக் கொண்டது.வீட்டில் இருந்தபடியே மேலெழுந்து பறக்கலாம்.திரும்பவும் வீட்டின் முன்பாகவே வந்து இறங்கலாம்.முக்கியமாக, இதன் ஜெட் இயந்திரங்கள் காற்றினை மட்டும்தான் மிக அழுத்தத்துடன் பின்னே தள்ளும்.கொடிய கரியமில வாயுவை அல்ல.வான் ஷூட்டர், எதிர்பாராத விபத்து ஏற்ட்பட்டால் உபயோகிக்க வான் குடைகளைக் கொண்டிருக்கும்.

2035 இல் சமநிலை தழம்பியதால் ஏற்றபட்ட ஒரு சில விபத்துகளின் பின்னர், ஜி-பலன்சர் எனப்படும் மின்பொறி முறை புவியீர்ப்பு தள நிறுத்திக் கருவி கண்டுபிடிக்கப்படும்.இதனால், வாகனம் ஒருபக்கம் சரிவது என்பது பழைய கதையாகி, விபத்து என்பதே இல்லாமல் போய்விடும்.
மேலும்,இவை தானிங்கு சாதனங்களைக் கொண்ண்டிருக்கும் என்பது சொல்லவே தேவை இல்லை.

2 .11 3D - மாய மெய்மை - பிரயாணங்கள் குறையும்:

2020இல் முப்பரிமாண மாய மெய்மைத் தொழில் நுட்பம் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும்.தற்போது தொலைபேசியில் குரல் கேட்டுக் கதைப்பது போல,இக்காலத்தில் உங்கள் உறவினர், நண்பர்கள், ஊழியர்களுடன் நேருக்கு நேர், முகத்தோடு முகம் பார்த்துக் கதைக்கலாம். ஆரம்பத்தில் முப்பரிமாண உருவம் திரையில் மட்டும்தான் தெரியும்; காலப்போக்கில் உங்கள் முன்பாகவே முழு உருவத்தின் மாயத் தோற்றம் காணப்படும்.இவர்களுடன் வேண்டியமட்டும் கதைக்கலாம்.ஆனால், விருந்து மட்டும் தற்சமயம் வைக்க இயலாது. அதுவும் நடக்கும் இன்னும் 200 வருடங்களில்!இக்காரணத்தினால் மனிதன் பிரயாணம் செய்வது குறைந்து விடும்.


2 .12 இயந்திர மனிதர் - பிரயாணங்கள் இன்னும் குறையும்
மேலும்,புதிய பரம்பரை இயந்திர மனிதர் 2040 களில் பலவிதமான மனித கருமங்களைச் செய்யத் தொடங்கிவிடுவர்.அத்தோடு 2050 இல் 500 கி.மீ. வேகத்தில் தானே இயங்ககூடிய வான்ஷூட்டர்கள் வந்துவிட்டதால் மனிதன் பிரயாணம் செய்வது மேலும் குறையும்.

2 .20 யுகம் 2 : 2050 - 2200 - நன்சாரம்
தற்போது, என் கதிர்களின் கண்டுபிடிப்பினால் சக்தியானது நேரடியாகவே வான்வெளி உணர்பொறியில் இருந்து பெறப்படுவதால்,இன்னும் சிறந்த தொழில்நுட்பத்தோடு கூடிய 2000 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வான்ஜெட்டுகள்(airjets) பாவனைக்கு வரும்.சகல பண்டப் போக்குவரத்து யாவும் கடல் மார்க்கமாக 500 கி.மீ. வேக,தானியங்கிக் கடல் கப்பல்கள் மூலம் நடத்தப்படும்.ஆகவே,பயணம் செய்ய வேண்டிய அவசியம் என்னும் குறையும்.

2 .30 யுகம் 3: 2200 - 2350 - கோகோன்
கோகோன் சக்தி காலத்தில் பிரயாணத் துறையில் பிரமாண்டமான வளர்ச்சி ஏற்பட்டு அதிகூடிய தொழில்நுட்ப சாதனங்களோடு கூடிய படுவேக(3000 கி.மீ./ம) ஜெட்டுகள் பாவனைக்கு வந்துவிடும்.அப்போது எந்தவொரு நில-நீர் வாகனங்களும் இருக்காது.ஆதலால், வான் என்ற பதமும் வாகனப் பெயரின் முன் பாவிப்பது இல்லாமல் போய்விடும்.

2 .31 3 D - உலகப்படம் - ஏன் பயணம்?
உலகின் எந்த மூலை, முடுக்குகள் எதுவானாலும் சகல விதமான துல்லிய விபரங்களுடனும், நீங்கள் விரும்பிய அளவில் நீள. அகல, உயரங்களோடு, முழு உருவமாகவே உங்கள் முன்னால் இருக்கும்போது அவற்றை நேரில் போய்ப் பார்க்க வேண்டும் என்று யார் விரும்புவார்?

2 .32 உலகமே உன் காலடியில்! -இன்னுமா பயணம்?


2200 இல், உங்களுக்குத் தேவையான, நீங்கள் போக விரும்பும் அதியசய உலகம்,பூந்தோட்டம்,கடற்கரை,பவளப்பாறை மற்றும் எந்தப் பொழுதுபோக்கு இடங்கலாயினும் சரி,மாய மெய்மை நுட்பத்தினால் உங்கள் வீட்ட்டின் உள்ளேயே உருவாக்கிவிடலாம்.நம்பினால் நம்புங்கள், இதற்கு உங்களுக்கு ஒரு செலவும் இருக்காது,ஏக்கர் கணக்கில் நிலமும் தேவை இல்லை. எல்லாம் உங்கள் மூளைக்குள்ளேயே கட்டப்பட்டு அவற்றின் உண்மையான,அதே ஆனந்த உணர்ச்சியினை அனுபவிப்பீர்கள். இன்னுமா பயணம் தேவை?

2350இல் superjet களின் வேகம் 5000 கி.மீ.ஐத் தாண்டிவிடும்.ஆனால் பயணம் செய்வோர் தொகைதான் குறைந்துவிடும்.

2 .40 யுகம் 4: 2350 - 2500 - - எல்லாம் ஓம் மயம்
இவ்வளவு முன்னேற்றத்தின் பின்பும்,மன்னிக்கவும்,மனிதன் இன்னமும் குண்டுசட்டிக்குள்தான் குதிரை ஒட்டிக் கொண்டிருப்பது தெரியவரும். இன்னமும் ஒருவட்டத்தினுள் இருந்தபடி பிரயாணம் செய்வதற்கு ஒரு வண்டியைத் தான் எப்பவும் உருவாக்கத் துடித்துக்கொண்டு இருக்கிறான். பிரயாணம் ஒன்றைச் செய்வதற்கு உண்மையில் ஒரு வாகனம் தேவையா?வாகனமே இல்லாமல் பயணிக்க முடியாதா? முடியும்! மேலே செல்லுங்கள்!


2 .41 சக்திச் சொட்டுத் தத்துவம் ( Quantum Theory ) - எல்லாம் சக்தி மயம்
மனிதனின் அறிவு ஞானம்,இருண்ட,குறுகிய கோணத்திலிருந்து வெளிப்பட்டு, சக்திச் சொட்டுத் தத்துவம் பற்றிய சிந்தனை தலை தூக்கத் தொடங்கியது.இந்தப் பிரபஞ்சத்திலே உள்ள எந்த, எல்லா உயிர்கள், பொருட்கள், செடிகள், கொடிகள், சூரியர், சந்திரர், வெள்ளிகள் கிரகங்கள், வெளிமண்டலங்கள், அணுக்கள், மூலக்கூறுகள், சிறிதோ, பெரிதோ எல்லாம் ஒரு முடிவே இல்லாத பலவித அதிர்வுகளைக் கொண்ட சக்திகளேயாகும்.இம்மாபெரும் சக்தி எப்போதும் எம் கண்முன்னே இருந்தும்,மனிதனின் சிற்றறிவும், குறிகிய மனப்பாங்கும், தான் நினைப்பதே சரி என்ற அகங்காரமும் இவ்வளவு காலமும் இச்சக்தியின் மகத்துவத்தை அறியக் குறுக்கே நின்றன.


2400 இல், ஒவ்வொரு பொருட்களுக்குமான சக்தியின் அளவு மற்றும் அதன் அதிர்வு எண்ணிக்கை ஆகியவற்றைத் துல்லியமாகப் பகுப்பறிந்து, அந்தந்தப் பொருட்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளைக் கொண்ட பெம்ரோ சிருஷ்டி நுண் சிம்பு தயாரிக்கப்படும்.இந்த நுண் சிம்புவின் உதவியால் எந்த ஒரு பொருளையும், தற்போது கடதாசியில் பிரதி எடுப்பதுபோல், முழு உருவத்தையும், முப்பரிமாணத்தில் பிரதி பண்ண முடியும்.அதாவது, நீங்கள் பேருந்து ஒன்றைப் பிரதிபண்ண வேண்டுமென்றால், பேருந்துக்கான மூலபொருட்கள் (உபரிப் பாகங்கள் அல்ல) கொண்ட அறையினூடே அந்தப் பேருந்துவைச் செலுத்தி எடுத்தால் போதும், நுண் சிம்பு தன் வேலையைச் செய்து, புதிய பேருந்து அறையின் அடுத்த பக்கத்தால் வெளிவரும். 2450இல் இப்படி எதுவும் பிரதி பண்ணலாம்.இனிப் பொருட்கள் வாங்க அங்கும் இங்கும் அலையவே தேவை இல்லை.பயணங்கள் என்பது கணிசமான அளவு குறைந்து விடும்.

2 .42 சிந்தனாசக்தி ( Thought Energy ) - பயணமே வேண்டாம்!
2450இல் சிந்தனாசக்தி பற்றிய புரிந்துணர்வு உண்டாகும்.சிந்தனை என்பது ஒரு தூய சக்தி வடிவமே.இச்சக்தியானது அதிவேக அதிர்வுகளைக் கொண்டது.இது மனத்திற் தங்கியிருக்கிறது.நீங்கள் ஒரு பொருளை, அதாவது வீடு, கார், விலைமிக்க தொலைக்காட்சி அல்லது அழுக்குப் படர்ந்த சாக்கடை எதையும் பார்த்தாலும் அவை யாவும் பலவிதமான சேர்க்கையிலான, விதவிதமான அதிர்வுகளைக் கொண்ட சக்தியின் ரூபங்களே. ஒரு மனிதன் தன் குறைந்த ஐந்து அறிவினைக் கொண்டு, அவனின் பார்வையில், அவனின் புலன்களுக்கு எட்டிய வரையில் ஒன்றைப் பார்த்து அது 'இன்னது', 'இருக்கிறது' என்றுதான் முடிவு செய்வான். அதனால், அவனுடை புலன்களுக்கு அப்பாற்பட்ட,பல பரிமாணமுள்ள வேறுபல பொருட்கள் இருந்தும்,அவனுடைய கண்களுக்குத் தெரியவில்லை என்ற காரணத்திற்காக, அந்தப் பொருட்கள் இல்லை என்று ஆகிவிடுமா? மனிதனுக்குத் தெரிந்த நாலு பரிமாணங்களாகிய நீளம், அகலம், உயரம், நேரம் (அல்லது வெளி) ஆகியவை எதையும் முன்பக்கமாகத்தான் நகர்ந்துகொண்டு இருக்கின்றன என்ற மயக்கத்தில் அவன் இருகின்றான்.ஆனால் அவை பின்னோக்கியும் நகரலாம்.

2480 இல் இந்த மயக்கத்தில் இருந்து மனிதன் விடுபட்டு, சிந்தனாசக்தி பற்றிய முற்றுணர்வு தரும் ஓர் ஆறாவது அறிவினைப் பெறுவான்.


2 .43 சிந்தனாசக்தி - பொருளைப் பிரதி எடுக்கலாம்
தற்சமயம்,உதாரணமாக, கார் ஒன்றைச் செய்வதற்கு பல சக்திகள் ஒன்றுசேர்ந்து தொழிற்பட வேண்டியிருக்கிறது. முதலில் சிந்தனைச் சக்தியைத் தொடர்ந்து வடிவமைப்பு, வரைபடம், மூலப்பொருட்கள் பென்சில், பேப்பரிலிருந்து மேசை, கணணி, மனிதர், இரும்பு, அலுமினியம், இயந்திரம், ஆணி, தொழிற்சாலை அது, இது என்று பலவிதமான, வித்தியாசமான சக்திகளின் ஒட்டுமொத்த மாற்றமே இறுதியில் கார் என்ற சக்தியாக வெளிவருகிறது. 2450 இல் மனிதன் இந்தச் சிந்தனாசக்தியைப் பாவித்து,சிக்கல்மிக்க, நீண்ட செய்முறைகள் இல்லாமல், நினைத்த உடனேயே விரும்பியதை உருவாக்கும் ஆற்றலைப் பெறுவான். அதுமட்டுமல்ல,சமய முனிவர்களைப்போல் முக்காலமும் உணர்ந்து ஒரு பொருளைப் பார்க்குமிடத்து, அப்பொருளில் உள்ள பொருட்கள் இதற்கு முன்பு எப்படி இருந்தது என்றும், பிற்காலத்தில் என்னவாக மாறும் என்பதும் அறியக்கூடிய புலனைப் பெறுவான்.


2 .44 சிந்தனாசக்தி -
இங்கே மறைந்து அங்கே தோன்றலாம்
அவ்வேளை, இச்சக்தியின் ஒளியிலும்விட அதிவேக அலைகளின் அதிர்வுகளைக் கண்காணித்து, எந்த ஒரு பொருளையோ அல்லது மனிதனையோ, சட நிலையிலிருந்து சக்தி நிலைக்கு மாற்றித் திரும்பவும் இன்னொரு இடத்தில் சட நிலைக்கு மாற்றும் DARA எனப்படும் செப்ரோ நுண் சிம்பு நுட்பத்தை கண்டுபிடிப்பான்.இதன்மூலம், இங்கே மறைந்து அங்கே தோன்றும் ஆற்றல் மனிதனுக்கு இயல்பாகவே வந்துவிடும்.இந்த நுட்பத்தினால், பிரயாணத் தூரம், நேரம் என்பன ஒரு கேலிக்கதையாய் விடும்.ஒருவர், இங்கே மறைந்து அண்டத்தின் எந்த இடத்திலும் கணப்பொழுதில் தோன்றிவிடலாம்.
சரி, இத்தோடு நிறுத்துவோம்.
இனி அடுத்தபகுதிகளில்மேலும் வினோதமான விடயங்களைப் பார்ப்போம்.
[மேற்படி கட்டுரை 2011 ம் ஆண்டு தீபத்தில் வெளியானது,மறு வெளியீடு செய்யப்படுகிறது.]technology tamil

…………………………..அவுஸ்த்திரேலியாவிலிருந்து தொடரும்.....

0 comments:

Post a Comment