தாயக தேசத்திலிருந்து ஒரு தொ[ல்]லைபேசி
அன்று சனிக்கிழமை. வேலையற்ற நாள் என்பதால் கனடிய கடும் காலைவேளை படுக்கையிலிருந்து எழும்ப கடினமாக இருந்தாலும்  தொலைபேசி அலறல் என்னை எழவே செய்துவிட்ட்து.அது அந்த வேளையில் சந்தேகமில்லை. ஊரிலிருந்து என்னுடைய பாட் டி யாகத் தான் இருக்கவேண்டும் என எண்ணியவாறே கைபேசியினை காதோடு அணைத்துக்கொண்டேன்.

''ஹலோ ,பாட்டி  தானே! எப்பிடிப்பாட்டி ! சுகமா இருக்கிறீயளே!''
காலைக்குரிய  சற்று சோம்பல் கலந்த குரலில்  ஆரம்பித்துக் கொண்டேன்.

''சுகந்தான்.'' அலுத்துக்கொண்டார் பாட்டி .
''என்ன பாட்டி வேண்டா வெறுப்பா கதைக்கிறியள் ''
''வேறென்ன ,அந்தக் காலத்தில நாங்க அறியாத தெல்லாம் இங்க உலாவுது.''
''என்ன பாட்டி  சொல்லுறியள். என்ன பேய்,பிசாசு உலாவுதே'' சற்று சிரித்துக்கொண்டேன் நான்.
''பேய்,பிசாசோ? அதுகள் பறுவாயில்லையே !''
''வேறென்ன பாட்டி '' அவசரப்பட்டுக்கொண்டேன் நான்.
''பாரடா  பேராண்டி,முந்தின காலத்தில எங்களுக்கு உந்த கொலஸ்ரோலும் தெரியாது,ஹார்ட் அட்டாக் உம்  தெரியாது ,டயபீரிசும் தெரியாது. தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் எண்டு எங்கட சாப்பாடுகள் எண்ணெயில  மிதக்கேல்லையோ , சீனி  போட்டு பலகாரம்,தண்ணி குடிக்கேல்லையோ? அதென்ன இப்ப மட்டும் வீட்டுக்கு வீடு இந்த வருத்தங்கள் தான் மோனை. வருத்தம் பார்க்க போறதும் செத்தவீடு போறதுமா  யெல்லோ என்ர  காலம் போகுது. இதென்ன கலியுகத்தின்ரை விளையாட் டோ  சொல்லு?'' பாட்டி தனது ஆதங்கத்தைக்  கேள்வியுடன் முடித்துக் கொண்டார்.

''பாட்டி ,இது க்கு காரணம் கலியுகமுமில்லை எலியுகமுமில்லை.
முந்தி  ஊரிலை நாங்கள் எல்லாம் நடந்தும்,சைக்கிளிலையும் எவ்வளவு தூரம் திரிஞ்சிருப்போம், இப்ப சனங்கள் கூப்பிடு தூரத்துக்கும்  '' ஓட்டொ '' எல்லோ தேடுனம். வீடுகளிலை அவசரத்துக்குக் கூட ஒரு சைக்கிள் இல்லை. முந்தி கப்பியிலையும் ,துலாவிலையும் கிணத்திலையிருந்து தண்ணியெடுத்த சனமெல்லாம் இப்ப மோட் டரை பாவிச்செல்லே  தண்ணி எடுக்கினம்.அப்பிடி வாழவேண்டாம் நான் எண்டு சொல்லேல்லை.
உடம்பை அசைக்காம இருந்தா உந்தவருத்தங்கள் வரும்தானே!உதுக்குத் தானே இங்கை  நடக்க,ஓட எண்டு காசுக்கட்டி உடல்பயிற்சி நிலையங்களுக்கு போகினம் .'' நானும் கிடைத்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக்கொண்டேன்.

''அப்பிடிச் சொல்லடா என்ற பேராண்டி! போன வரியம்  நீ ஊரில  வந்து நிக்கேக்க நடக்க ஆசையாய் இருக்கு எண்டு நடந்து வெளியில போக எத்தினை பேர் இங்கை உன்னைக் கேலிபண்ணினவை தெரியுமே ராசா! ''

'' ஓம் பாட்டி . கஞ்சத்தனத்தில நடந்து போறன் எண்டு சொல்லியும் என்ர காதில கேட் டது. என்ன செய்யிறது. நடக்கிறத்துக்கு இங்க காசு கட்டிப்  போகவே நேரமில்லாமல் நாங்கள் இயந்திர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்.. ஊருக்கு வந்த இடத்தில ஆசைக்கு நடப்பம் எண்டா எத்தினை பேருக்குக் கதை சொல்லவேண்டி வருகுது பாட்டி .''

''பேராண்டி, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் சனத்தின்ர கதையை ஒருபக்கம் வை.நாங்க நாங்க செய்யிற அடுத்தவனு பாதகம் இல்லாம இருந்தா சரி . இப்ப நான் போனை வைக்கிறன் . பிறகு ஒருக்கா எடு. என்ன?''

'' சரி பாட்டி . எடுக்கிறன் .எனக்கும்  ஒருக்கா வெளியில இறங்க வேண்டியிருக்கு,வந்து எடுக்கிறன் பாட்டி .''என்றவாறே தொடர்பினை முறித்துக்கொண்டேன் நான் .

--:ஆக்கம்-செல்லத்துரை மனுவேந்தன்.

0 comments:

Post a Comment