சமூக வலைதளம்களும், அண்டப் புளுகர்களும்.


நாளாந்தம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் விடுபவர்கள், அதிகமாக மாபெரும் பொய்களையே தயங்காமல் அவிட்டு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அவற்றில் ஒரு சிறிய பகுதியே உண்மையானதாக இருக்கும்.

முக்கியமாக, தங்கள் கற்பனையில் இருந்து படைக்காது, மூளையை வீணாக கரைக்காது, இலகுவாக வேறு யாரோ உருவாக்கியவற்றை அப்படியே, கொப்பி எடுத்துப் பேஸ்ற் பண்ணி, தாங்கள் எழுதியது, வரைந்தது, உருவாக்கியது என்று அடித்துக் கூறிப் போஸ்ற் பண்ணி விடுவார்கள். அல்லது துடிக்கப் பதைக்க வரும் ஆதாரமற்ற பொய்ச் செய்தி ஒன்றையும் அப்படியே ஃபோர்வார்ட் பண்ணிவிடுவார்கள். அவற்றின் உண்மைத்தனத்தை என்னவென்றே ஆராயாது, அவரின் ஒரு நண்பர் லைக் போட, இன்னொருவர் ஆஹா, ஓஹோ என்று பாராட்ட, இன்னொருவர் பிரமாண்டம் என்று அப்படி நூற்றுக் கணக்கான நண்பர்கள், அனுப்பியவரின் மனத்தை நோகடிக்காது, அவரை புகழ்ந்து தள்ளிவிடுவார்கள். இதனால், இதை அனுப்பியவர் தனது புகழ் எங்கும் பரவுகின்றது என்று சந்தோசப் பட்டுக்கொள்ளுவார்.

இவ்வாறாக, சமூக வலைத்தள அண்டப் புளுகுகள் சில:

1. எழுதாத கட்டுரை, கவிதை ஒன்றை தான் எழுதியதாக வெளியிடுவது - பேனை / கீபோர்ட் ஒன்றும் தொடாது.

2. வரையாத படத்தை தான் கீறியதாக சொல்லுவது - பிரஷ், பெயின்ற் எதுவும் கையில் எடுக்காது.

3. பயணங்களை அளவுக்கு அதிகமாய் மிகைப்படுத்துதல் - இதை விட சிறப்பானவை இங்கேயே இருந்தும்.

4. பயண சுற்றுலாவில், ஏறாத இடமெல்லாம் ஏறி, குதித்து, விழுந்து ஒரே முஸ்பாத்தியாய் இருந்ததாக காட்டுதல். - வீட்டில் படி ஏறக் கஷ்டம்..

5. பயணம் போனால் ஒரே கொண்டாட்டம் என்று காட்டல் - வீட்டிலோ ஒரே படுத்தபடி.

6. பயணம் போனால் ஒரே செலவாளி என்று காட்டல் - வீட்டில் ஒரே கஞ்சத்தனம்.

7. வேலை செய்யும் கொம்பனி ஒரு சர்வதேச மட்டத்தில் பெரிதுபோல் மெருகூட்டி பெயர் சொல்லிக் காட்டுதல் - மன்னார் அண்ட் கம்பெனியாக இருக்கும்.

8. வேலைத்தலத்தில் தான்தான் ஆகப்பெரிய பொறுப்பில் உள்ளவர் போல பகட்டான ஒரு தலைமைப் பெயரில் தன்னை ஒரு வர்ணம் பூசிக் காட்டிக்கொள்தல் - ஈ கலைத்துக் கொண்டு இருந்தாலும்.

9. வேலையில் தன்னை விட மற்றைய எல்லோருக்கும் ஒன்றும் தெரியாது என்று உயர்த்துதல் -அப்படி ஒன்றும் வீட்டில் தெரியவில்லை. .

10. செய்யாதவற்றைச் செய்து சாதனை படைத்தேன் என்று பெருமை தேடல் - யார் போய்ப் பார்த்தார்கள்!

11. தான் பெரிய இடத்தில் வசதியாய் இருக்கிறேன் என்று காட்ட முயல்தல் - எங்களுக்கு தெரியுமே!

12. ஐந்து நட்சத்திர ஹோட்டலில் எப்போ ஒருநாள் சாப்பிட்டதை படம் பிடித்து அறியப்படுத்தல் - அதுவும் உண்மையில் சாப்பிட்டதோ, படம் மட்டும்தானோ!

13. உண்மையில் செய்வதை விட அதிகமாக தனக்கு தெரியும் என்று காட்ட முயல்தல் - அதை நாங்கள் சொல்ல வேண்டும்.

14. கவலையே இல்லை, எப்போதும் மகிழ்ச்சியே என்று போடுதல் - அப்போ கடவுள்தான்!

15. எப்போதுமே வசீகரமான முகம் என்று படம் பிடித்துப் போடுதல் - தூங்கி எழும்பும்போதுமா?

16. எப்போதும் தான் சுத்தத்தை கடைப்பிடிப்பவர் என்று காட்டுதல் - கொஞ்சம் ஓவர்.

17. எப்பவும் என்னை சூழ நண்பர்கள் சூழ இருப்பார்கள் என்று காட்டுதல் - வீடடைக் கவனிப்பதில்லையோ?.

18. எப்போதும் குதூகலமாக இருப்போம் என்று அவர்களுடன் செல்பி எடுத்துக் போடுதல் - கோபமே வராது பாருங்கோ!.

19. தத்துவம், சத்தியம், நேர்மை என்று கதைப்பதில் எம்.ஜீ.ஆர் யையே வெல்லுதல் - ஒரு புத்தகம் எழுதலாம்..

20. தொண்டு செய்வதில் அன்னை திரேசாவையே மிஞ்சுதல் - ஒரு நோபல் பரிசும் கிடைக்கலாம்.

21. இணையத்தில் இருக்கும் கவர்ச்சியான வசனங்களை எடுத்து, பந்தி பந்தியாக அடுக்கி, எவரையும், எல்லோரையும் அளவுக்கு மிஞ்சி வானளாவ புகழ்ந்து, வாழ்த்து தெரிவித்தல் - வாசிப்பவர்கள் கஷ்டம் புரியாமல்!

22. லைக் போடும் எல்லோருமே உண்மையில் நண்பர்கள் என்று அதன் எண்ணிக்கையை வைத்து பெருமையாக பேசிக்கொள்வது - எத்தனைபேர் உண்மையானவர்களோ!.

23. பல விடயங்களை ஷேர் செய்வதால், அவற்றில் கூறப்படுவன எல்லாவற்றையும் தானும் செய்வதாக பிறரை நம்ப வைத்தல் - ஊருக்குத்தான் உபதேசம்!

24. படம் ஒன்றை ஃபோட்டோ எடிற் செய்து தான் தான் வரைந்ததாக போடுவது - மற்றையவர்கள் எல்லோரும் கண்டுபிடிக்க முடியாத, விடயம் விளங்காதவர்கள் என்று எடை போடுவது..

25. வீடியோ ஒன்றை வீடியோ எடிற் செய்து தனது படைப்பு என்று நினைக்க வைப்பது - நம்பிவிட்டோம்!

26. உலகில் எல்லோருக்கும், எல்லாம் கிடைக்க வேண்டும் என்று , கடவுள் படத்தை போட்டு -இதை ஷேர் செய், அதைச் ஷேர் செய் என்று புலுடா விடுவது. 100% கிடைக்காது என்று அவருக்கு தெட்டத் தெளிவாக நன்றாய்த் தெரியும் என்றபடியால்தான் துணிவாக மற்றயவர்களுக்கு மிகவும் 'பாசத்தோடு' அள்ளி வழங்குகிறார். அப்படிக் கிடைக்கும் என்றால் , இரகசியமாக அவர் மட்டும்தான் எடுத்துக் கொள்வார், ஒருபோதும் ஒரு சதமும் சொந்த சகோதரத்திற்கே கிடைக்க வழி சொல்ல  மாட்டார் - இப்படிக்கு கிடைக்கும் என்றால் வேலைக்குப் போகாமல், இருந்த இடத்திலேயே இருந்து இந்த சுலபமான சுவாமிப் பட ஷேர் மார்க்கெற் வியாபாரத்தில் இறங்கலாமே!

இப்படி, இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இதைக்கூடி நான் எங்கோ இருந்து கொப்பி பண்ணி பேஸ்ற் பண்ணி இருப்பேனோ?

யாருக்குத் தெரியும்?

இந்தக் காலத்தில் ஒருவரையும் நம்ப இயலாது பாருங்கோ!
✍செல்வதுரை,சந்திரகாசன் 

3 comments:

  1. இன்றும் கூட தொடரும் திருட்டுப் பதிவுகளில் மத்தியில் மனிதன் இறந்தபின் நடப்பது காணொளியாக புழுகித்தள்ளப்பட்டுள்ளது. உடல் கண்முன்னே எரிக்கப்பட்ட பின் , உடலற்ற சீவன் நடக்குமாம், கதறுமாம் ,உண்ணுமாம் இதென்ன பிதற்றல். எமலோகம் 6,02,000km தூரத்தில் -என்பது நாஸாவுக்கு ஒரு பெரும் தூரமல்ல. இந்த தகவலை நாஸாவுக்கு கொடுத்தால் அவர்களும் கண்டுபிடித்து உண்மையென நிரூபித்தால் இந்து மதத்திற்கு பெருமை சேருமல்லவா.

    ReplyDelete
  2. பாடகர் பாலசுப்பிரமணியம் வைத்தியசாலை சென்றதும் முகநூலில் அவர் இறந்ததாக படமிட்டு ,பலர் அஞ்சலியும் செலுத்தியிருந்தனர். இப்படி பல பொய்யுரைகள் வந்தாலும் உடன் ஆராயாது கருத்த்துகள் வழங்க என்றே ஒரு கூட்டம் இருக்கிறது.

    ReplyDelete
  3. சாந்தன்Wednesday, September 02, 2020

    "நான் இறந்துவிட்டேன்" என்று செய்தி போட்டாலும், கண்ணை மூடிக்கொண்டு 'like' போடவும், 'RIP' போடவும் நிறையவே சனங்கள் இருக்குது!

    ReplyDelete