உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 04


[The belief and science of the sleep]


ஒவ்வொருவர் மனதிலும் இயல்பாக எழும் கேள்வி மனிதர்கள் எவ்வளவு நேரம் உறங்காமல் தொடர்ந்து விழித்திருக்க முடியும்? பொதுவாக ஆய்வுகள் 8 தொடங்கி 10 நாட்கள் என்று, கவனமாக கண்காணிக்கப்பட்ட சோதனையின் முடிவுகள் உறுதிப்படுத்தின. எனினும் ராண்டி கார்ட்னர் (ஆகஸ்ட் 7, 1949 இல் பிறந்தவர்/ Randy Gardner), 1965 ஆம் ஆண்டு தனது 17 அகவையில், பாடசாலை உயர் வகுப்பு மாணவனாக, ஒரு அறிவியல் கண்காட்சி ஒன்றில், 264 மணித்தியாலம்  (ஏறத்தாழ 11 நாட்கள்) விழித்திருந்தார். ஆலயமணி படத்தின் "தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே" என்ற பாடல் எனக்கு ஞாபகம் வருகிறது. அந்த அமைதி தரும்  உறக்கத்தையும் 11 நாட்கள் தொடர்ந்து வெற்றி கொண்டு இந்த உலக சாதனையை படைத்தார். இவர். நாலு நாட்களின் பின் மருட்சி [hallucinating / பிரமை] அடைந்தார்.  இதைத் தொடர்ந்து ஒரு மாயை [delusion] அவருக்கு ஏற்பட்டது, அப்பொழுது அவர் தான் ஒரு பிரபல கால்பந்து வீரர் என எண்ணினார். என்றாலும் ராண்டி உண்மையில், ஆச்சரியப்படும் விதமாக, தனது ஆய்வின் முடிவில், சோர்வடையாமல், நிதானமாக ஆய்வை முடிக்க சிறப்பாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

ஒவ்வொரு உயிர் இனத்துக்கும் உடலியல் ரீதியாக ஒரு ஓய்வு ஒரு குறிப்பிட்ட இடைவெளியின் பின் தேவைப்படுவதுடன், அந்த ஓய்வு நேரத்தில் மூளை தன்பாட்டில் பல முக்கியமான தயாரிப்பு பணிகளிலும் ஈடுபடுகிறது என அறிவியல் கூறுகிறது. அந்த ஓய்வுதான் உறக்கம் ஆகும். எனவே, இந்த  உறக்கம் என்பது பொதுவாக அசையாத தன்மையுடன் தொடர்புடையதும் மற்றும் முற்றாக    செயலில்லாமல் அல்லது குறைந்த உடனடியாக பதிலளிக்க கூடிய தன்மையுடனும் ஆனால் மீண்டும் தனது முழு உணர்வுபூர்வமான நிலைக்கு மீளக்கூடிய தன்மையையும் கொண்டது என வரையறுக்கலாம் [Sleep is defined as a reversible condition of reduced responsiveness usually associated with immobility.]. இதை மனிதர்களுக்கும் மட்டும் அல்ல விலங்குகளுக்கும் பொருந்தும் எனலாம். அது மட்டும் அல்ல நாமும் குரங்கில் இருந்து பரிணமித்தது என்றே அறிவியல் கூறுகிறது. உதாரணமாக, சங்க இலக்கியத்தில், புறநானூறு, பாடல் 229 , "மைந்துடை யானை கைவைத்து உறங்கவும்" என்ற வரி மூலம் வலிமையான யானையும், துதிக்கையை நிலத்தில் போட்டு உறங்குவதையும், அதே போல புறநானூறு 384 "வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை" என்ற வரியில் நாரை மரத்தின் கிளையில் உறங்குவதையும் காண்கிறோம். ஆமாம், விலங்கு உலகிலும் உறக்கம் ஒரு முக்கிய பாகம் வகிக்கிறது என்பதில் ஆச்சரியமில்லை. உண்மையில், பல உயிரினங்கள் வசீகரிக்கும் விதத்திலும், சில சமயங்களில் வேடிக்கையான விதத்திலும், பெரும்பாலும் அபூர்வமான விதத்திலும் கண்ணயர்ந்து உறங்குகின்றன, அதைத்தான் சங்க இலக்கியத்திலும் காண்கிறோம். 

பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, நீர்நில வாழ்வன மற்றும் சில மீன்கள், அத்துடன் சில வடிவங்களில் பூச்சிகளிலும் உறக்கம் ஆட்கொள்ளுவதை நீங்கள் காணலாம். அவைகளின் உறக்க நிலையும், உறக்க நேரமும்  பலவகையாக மாறுகின்றன. உதாரணமாக, மலைப்பாம்புகள் [Python] சராசரியாக 18 மணித்தியாலமும், புலி 15.8 மணித்தியாலமும், பூனை 12.1 மணித்தியாலமும், மனிதக்குரங்கு [சிம்பன்சி] 9.7 மணித்தியாலமும், செம்மறி 3.8 மணித்தியாலமும், ஆப்பிரிக்க யானை 3.3 மணித்தியாலமும், ஒட்டகச்சிவிங்கி 1.9 மணித்தியாலமும் ஒரு நாளில் உறங்குகின்றன. படுக்கும் நிலைகளை கவனித்தீர்கள் என்றால், உதாரணமாக, சிங்கம் மல்லாக்கப் படுத்து உறங்குகின்றன. அப்பொழுது அதை எவராவது பார்த்தால், அது ஒரு வீட்டுப் பூனையைப் போன்ற மிகவும் சாதுவான பிராணியென்றே முடிவு செய்து விடுவார்கள். 17ஆம் நூறாண்டு எழுத்தாளர் தாமஸ் கேம்ப்பியன் [Thomas Campion], வலிமைபொருந்திய சிங்கத்துக்கும்கூட, கொன்றுதின்னும் அதன் வாழ்க்கைப்பாணியை வெற்றிகரமாய் நிறைவேற்ற ஒரு நாளுக்கு சுமார் 20 மணிநேர உறக்கம் தேவை [even the mighty lion needs sleep—about 20 hours a day—in order to carry out its demanding predatory life-style.] என வியந்து எழுதியது கவனிக்கத் தக்கது. இன்னும் ஒரு அதிசயம் என்னவென்றால், காட்டில் விலங்குகள் உறங்கும் பொழுது, அவற்றின் எதிரிகளுக்கு இரையாகும் அபாயம் அதிகம் இருப்பதால், ஒரு பாதுகாப்புக்காக, பல காட்டு விலங்குகள் ஒரு கண்ணைத் திறந்து கொண்டே  உறங்குகின்றன. அத்துடன்  உறங்கும் பொழுது ஆபத்தை உணர்த்தும் ஓசைகளுக்கு பிரதிபலிக்கக் கூடியதாக முன் எச்சரிக்கையுடன்  இருப்பதற்கு, அவற்றின் மூளைகள் ஓரளவு உணர்வுள்ளவையாக ஒத்துப்போகின்றன. இன்னும் பிற விலங்குகள் ஏதேனும் ஆபத்திருக்கிறதா என்று அவ்வப்போது பார்த்துக்கொள்வதன் மூலம் தம்மை தற்காப்பு செய்கின்றன..உதாரணமாக, கூட்டமாய் உறங்கும் பறவைகள் ஆபத்து ஏதும் நேரிடப்போகிறதா என்பதைப் பார்ப்பதற்காக, அவ்வப்போது ஒரு கண்ணைத் திறந்து, இலேசாக  ஒரு பார்வை பார்த்துக்கொள்கின்றன.

மனிதர்களைப் போலப் பாதுகாப்பாகத் தூங்கும் சூழ்நிலை விலங்குகளுக்கு இல்லை. ஒரு விலங்குக்கு எப்போது வேண்டுமானாலும் மற்றொரு பெரிய விலங்கால் ஆபத்து வரலாம். எனவே சில விலங்குகள், உதாரணமாக, குதிரைகள், வரிக்குதிரைகள் நின்றபடியே உறங்கும் இயல்புடையவை. அப்படியான நிலையால், கண் விழித்த வேகத்தில் குதிரைகளால் பாய்ந்து ஓடி , தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்கிறது. அது மட்டும் அல்ல, தமது இரைக்காக அவை எப்போது வேண்டுமானாலும் உறக்கத்திலிருந்து அவை எழுந்து ஓடவேண்டி வரலாம், எனவே பொதுவாக விலங்குகள் தமக்கு கிடைக்கும் இடைவெளி நேரங்களில் குட்டி உறக்கமோ, பாதி விழிப்பு; மீதி ஓய்வு என அரை உறக்கமோ கொள்கின்றன. விலங்குகளில் கரடியின் குளிர்கால உறக்கம் ரொம்ப பிரபலமானது. உணவின்றி சுமார் 8 மாதங்கள் வரை கரடி கும்பகர்ண உறக்கம் கொள்வதுண்டு. என்றாலும், மற்ற நேரங்களில், ஒருசில மணி நேரங்கள் மட்டுமே உறங்குகின்றன. ஓர் உயிரினம் வாழ்வியலுக்கு சாதகமான சூழல் இல்லாத காலங்களில் தனது செயல்பாடுகளை குறைத்துக் கொண்டு நீண்ட உறக்கத்தில் ஆழ்வதனைப் பொதுவாகப் அறிதுயில், பனிக்கால உறக்கம் அல்லது குளிர்கால ஒடுக்கம் (hibernation) என்பார்கள். குளிர்காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்துக் கொள்ளும். இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும். இந்த கொழுப்பு தான் நீள் உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தி அளிக்கிறது.

வேனில் உறக்கம் (Aestivation) என்பது உயர் வெப்பநிலை மற்றும் வறண்ட கால நிலையில் விலங்குகள் தங்களைக் காத்துக்கொள்ளும் வகையில், பனிக்கால உறக்கம் போன்று செயலற்ற தன்மையோடு உறங்கி, செயலற்ற நிலையில் இருத்தல் ஆகும். இது வெப்பம் மற்றும் வறட்சி மிகுந்த காலங்களான, சூடான உலர் பருவத்தில், பெரும்பாலும் கோடை மாதங்களில் நடக்கும். முதுகெலும்புள்ள மற்றும் முதுகெலும்பு அற்ற விலங்குகள் உயர் வெப்பநிலையிலிருந்து தங்களுக்கு சேதமேற்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த வேனில் உறக்கத்தில் ஆழ்கின்றன. நிலவாழ் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் இரண்டும் இந்த உறக்கத்தை அடைகின்றன. இவ்வாறு சில வகை நத்தைகள், பாலைவன ஆமை, சில வகைத் தவளைகள் முதலியவை பெரும்பாலானவை பாலைவன மணலுக்குள் புதைந்து கொண்டு உறங்க ஆரம்பித்து விடுகின்றன.

பூச்சிகளும், ‘குளிர்கால உறக்கம்’ மற்றும் ‘கோடைக்கால உறக்கம்’ என இரண்டு வகையான உறக்க நிலையைக் கடைப்பிடிக்கின்றன.  பெரும்பாலும் கூட்டுப்புழுப் பருவத்தில்தான் பூச்சிகள் உறக்க நிலையில் இருக்கின்றன. இந்தப் பருவத்தில் இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் இறக்கைகள் வளர்கின்றன.

மரங்களும் உறங்குகின்றனவா என்று பார்த்தால், பொதுவான மறுமொழி இல்லை என்பதே, ஏன் என்றால், மரங்களுக்கு விலங்குகள், மனிதர்கள் போல் மத்திய நரம்பு மண்டலங்கள் [central nervous systems] இல்லை. என்றாலும் மரங்களுக்கு 24 மணித்தியால பூமியின் பகல் - இரவு  சுழற்சிக்கு ஏற்ப ஒத்தியைந்த சர்க்காடியன் தாளங்கள் உண்டு [circadian rhythms tuned to Earth's 24-hour light-dark cycle] எனவே, அவை மனிதர்களைப் போலவே, இரவிலும் முழுநேர வெளிச்சத்தில் வைத்திருந்தாலும், எப்படி மனிதன் இரவில் உறங்குகிறானோ, அப்படியே அதுவும் பூமியின் பகல் - இரவு சுழற்சியை பின்பற்றுகிறது. உதாரணமாக, எமக்கு சர்க்காடியன் தாளங்கள், எப்ப நாம் உறங்கவேண்டும், எப்ப நாம் விழிக்க வேண்டு என்பதை தீர்மானிக்கிறது. அது போலவே, மரங்களும் தமது தொழிற்பாட்டை பகல் - இரவு சுழற்சிக்கு ஏற்ப மாற்றுகிறது. உதாரணமாக, ஒளிச்சேர்க்கை [photosynthesis] போன்ற சில செயல் முறைகளை, ஞாயிறு மறைய நிறுத்திக் கொள்கிறது. மேலும் ஞாயிறு மறையும் போது, பூக்கும் செயல்பாட்டை நிறுத்தி கொள்கிறது [close their blooms]. எனவே நீங்கள் விரும்பினால் உங்கள் தோட்டத்திற்கு இரவு வணக்கம் சொல்லலாம்! 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி: 05 தொடரும்..... வாசிக்க அழுத்துக :  Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும் / பகுதி: 05
ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக: Theebam.com: உறக்கம் பற்றிய நம்பிக்கையும், அறிவியலும் /பகுதி: 01


1 comments:

  1. MANUVENTHAN SELLATHURAITuesday, September 08, 2020

    புலம் பெயர் நாடுகளில் தமிழன் உறக்கத்தினை எதிரியாக எண்ணி ,உழைப்பு உழைப்பு என்று ஓடுகிறான்.இங்கே விலங்குகளின் உறக்க நேரத்தினை கவனித்தால் தமிழன் பொறாமைப்படுவான் [ஒட்டகச்சிவிங்கி 1.9 மணித்தியாலம்], உறங்காமையின் விளைவுகளை இன்று சந்திக்க ஆரம்பித்துவிட்டான்.உறக்கம் உங்கள் தொடர் பல் விடயங்களையும் அறிய வைக்கிறது.நன்றி.

    ReplyDelete