"இடையது கொடியாய் இளமையது பொங்க"



"இடையது கொடியாய்
இளமையது பொங்க
நடையது அன்னமாய்
நயனம் இமைத்து
உடையது ஜொலிக்க
உச்சாகம் தந்து
சடையது அலைபாய
சஞ்சலம் தந்தவளே!"

"அழகில் மயிலாய்
அன்பில் தாயாய்
ஆனந்தத் தேனாய்
ஆசைக்கு நாயகியாய்
வானின் தேவதையாய்
வாழ்க்கைக்கு துணையாய்
தன்னையே தந்து
தந்திரமாய் பறித்தவளே!"

"பணிந்து உன்னை
பலவாறு காட்டி
பண்பின் திறனை
பலவாறு விளக்கி
பருவ எழிலை
பலவாறு வீசி
பந்தத்தை ஏற்படுத்தி
பத்தினியாய் வந்தவளே!"

என்னை அறிந்து
எல்லாம் தந்து
இன்பம் அளித்து
இடர்கள் அகற்றி
சிந்தை தெளிவாக்கி
சிற்றறிவை பேரறிவாக்கி
துன்பம் களைய
துணை கொடுத்தவளே!"

"ஏகாந்தம் இனிதென
ஏற்று வாழ்ந்தவனை
வலிந்து அணைத்து
வலிகள் தணித்து
காதோடு சொல்லி
காமம் தெளித்து
குமிழி வாழ்க்கையை
குதூகலம் ஆக்கியவளே!"

"வாழ்வின் அர்த்தத்தை
வாழ்த்தி எடுத்துரைத்து
வசந்தத்தை ஏற்படுத்தி
வருத்தம் நீக்கி
களைப்பும் சோர்வும்
கலந்த மனதை
சிரிப்பு பூக்களால்
சிந்தையை மயக்கியவளே!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

1 comments:

  1. MANUVENTHAN SELLATHURAIMonday, August 24, 2020

    மனைவியாய், துணைவியாய் வாழ்ந்தவளை வரிவரியாக அழகுற விவரிக்கும் இது போன்ற கவிகள் காண்பது அரிது. மிகவும் நன்று

    ReplyDelete