திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து


(முகவுரை /பகுதி-01)

திருக்குறள், சுருக்கமாகக் குறள் (Tirukkuṟaḷ), ஒரு தொன்மையான தமிழ் மொழி இலக்கியமாகும். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது.

 

 இந்நூல் முறையே அறம், பொருள், காமம் (அல்லது இன்பம்) ஆகிய மூன்று பகுப்புகளை அல்லது தொகுப்புகளைக் கொண்டது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமூகமாகக் கூடி வாழவும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது.

 

 இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று பாரம்பரியமாக அறியப்படுகிறார். இந்நூலின் காலம் பொ.ஊ.மு. 300 முதல் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டு வரை எனப் பலவாறு கணிக்கப்படுகிறது. பாரம்பரியமாக இந்நூல் கடைச்சங்கத்தின் கடைசிப் படைப்பாகக் கருதப்பட்டாலும் மொழியியல் பகுப்பாய்வுகள் இந்நூல் பொ.ஊ. 450 முதல் 500 வரையிலான கடைச்சங்க காலத்திற்குப் பிறகு இயற்றப்பட்டதாகக் குறிக்கின்றன.

 

இந்திய அறிவாய்வியல், மீவியற்பியல் ஆகியவற்றின் மிகப் பழமையான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் திருக்குறள், "உலகப் பொதுமறை", "பொய்யாமொழி", "வாயுறை வாழ்த்து", "முப்பால்", "உத்தரவேதம்", "தெய்வநூல்" எனப் பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அகிம்சையை மையமாகக் கொண்டு இயற்றப்பட்ட இந்நூல், தனிநபர் அடிப்படை நல்லொழுக்கங்களாக இன்னா செய்யாமை மற்றும் புலால் உண்ணாமை ஆகியவற்றை. இவற்றொடு வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுயகட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை நலம், பரத்தையரோடு கூடாமை, கள்ளாமை, மது உள்ளிட்ட போதைப்பொருட்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், கூடாஒழுக்கங்களை விலக்குதல் முதலிய அனைத்துத் தனிநபர் ஒழுக்கங்களையும் போதித்துக்  கூடுதலாக ஆட்சியாளர் மற்றும் அமைச்சர்களின் ஒழுக்கங்கள், சமூகநீதி, அரண், போர், கொடியோருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற பலவிதமான அரசியல் மற்றும் சமூகத் தலைப்புகளை உள்ளடக்கியது. மேலும் நட்பு, காதல், தாம்பத்தியம் மற்றும் அகவாழ்க்கை பற்றிய அதிகாரங்களும் இதில் அடங்கும். சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குற்றங்களையும் குறைகளையும் மறுத்துரைத்து அவர்தம் பண்பாட்டு முரண்களைத் திருத்தியும் பிழைப்பட்ட வாழ்வியலை மாற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந்தரமாக வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ்கிறது.

 

இயற்றப்பட்ட காலத்திலிருந்து குறள் அற, சமூக, அரசியல், பொருளாதார, மத, தத்துவ மற்றும் ஆன்மீகத் துறைகளைச் சார்ந்த அறிஞர்களாலும் தலைவர்களாலும் பரவலாகப் போற்றப்பட்டு வந்துள்ளது. இவர்களில் இளங்கோவடிகள், கம்பர், லியோ டால்ஸ்டாய், மகாத்மா காந்தி, ஆல்பர்ட் சுவைட்சர், இராமலிங்க அடிகள், வ. உ. சிதம்பரம்பிள்ளை, காரல் கிரவுல், ஜி. யு. போப், அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி மற்றும் யூ ஹ்சி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். தமிழ் இலக்கியங்களில் மிகவும் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூலாகவும் அதிகம் சுட்டப்பட்ட நூலாகவும் அதிகம் சுட்டப்படக்கூடிய நூலாகவும் திருக்குறள் திகழ்கிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அயல் நாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் உலகின் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட பண்டைய படைப்புகளில் ஒன்றாகும். 1812-ம் ஆண்டு முதன்முறையாக அச்சுக்கு வந்ததிலிருந்து இடையறாது அச்சில் உள்ள நூலாகக் குறள் திகழ்கிறது. திருக்குறள் ஒரு தலைசிறந்த படைப்பாகவும் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான நூல்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. அனைத்து நூல்களிலும் காணப்படும் சிறந்த அறங்களைத் தேர்ந்தெடுத்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் பொதுப்படையாக வழங்கும் தனது இயல்புக்காக குறளின் ஆசிரியர் அறிஞர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார். காலவெள்ளத்தில் தொன்றுதொட்டுத் தமிழக மக்களாலும் அரசாலும் போற்றிப் பாதுகாத்து வரப்படும் நூலாகக் குறள் திகழ்கிறது.

(முகவுரை:பகுதி-02)+(திருக்குறள்-02/வான்சிறப்பு) இணைப்புடன் தொடரும்...)

அதிகாரம் 1 / Chapter 1 -:கடவுள் வாழ்த்து

👉குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

மு.வ உரை:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

கலைஞர் உரை:

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.


👉குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

மு.வ உரை:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

சாலமன் பாப்பையா உரை:

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

கலைஞர் உரை:

தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின்  முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.


👉குறள் 3:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

மு.வ உரை:

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

சாலமன் பாப்பையா உரை:

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்

கலைஞர் உரை:

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.


👉குறள் 4:

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல

மு.வ உரை:

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை

சாலமன் பாப்பையா உரை:

எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை

கலைஞர் உரை:

விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.


👉குறள் 5:

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

மு.வ உரை:

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை

சாலமன் பாப்பையா உரை:

கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை

கலைஞர் உரை:

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.


👉குறள் 6:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்

மு.வ உரை:

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்

சாலமன் பாப்பையா உரை:

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்

கலைஞர் உரை:

மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.


👉குறள் 7:

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது

மு.வ உரை:

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது

சாலமன் பாப்பையா உரை:

தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்

கலைஞர் உரை:

ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.


👉குறள் 8:

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது

மு.வ உரை:

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது

சாலமன் பாப்பையா உரை:

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்

கலைஞர் உரை:

அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.


👉குறள் 9:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

மு.வ உரை:

கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்

சாலமன் பாப்பையா உரை:

எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே

கலைஞர் உரை:

உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.


👉குறள் 10:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

மு.வ உரை:

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது

சாலமன் பாப்பையா உரை:

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்

கலைஞர் உரை:

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

 🕮🕮🕮(திருக்குறள்-02/வான்சிறப்பு) (முகவுரை:பகுதி-02)  இணைப்புடன் தொடரும்...)

 ⇔⇔⇔.........⇔⇔⇔

1 comments:

  1. திருக்குறள் எனும் கடலில் மூழ்கி முத்தெடுப்போர்க்கு நல்ல விடயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துகள்!

    ReplyDelete