காதலில் தோல்வியா? தீர்வு என்ன?[

                   காதல் தோல்வியின் போது இதயம்

நொறுங்குவது போல் உணர்ந்திருக்கிறீர்களா?

-காரணம் இதுதான்

 


காதல் தோல்வி ஏற்பட்ட போது இதயம் நொறுங்குவது போல் உணர்ந்திருக்கிறீர்களா? கட்டுப்படுத்த முடியாத வகையில் அழுகை பீறிட்டதா? இந்த உலகமே தலைகீழாக மாறியது போல் உணர்ந்தீர்களா? ஏதோ ஒன்று உங்களை வெகுவாக பாதித்தது போல் ஸ்தம்பித்து போனீர்களா? இதுவெல்லாம் ஏன் நடந்தது, எப்படி நடந்தது?

 

இதற்கெல்லாம் விடை தெரிய வேண்டுமென்றால், முதலில் உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

காதல் தோல்வி ஏன் நம்மை வெகுவாக பாதிக்கிறது?

காதல் தோல்வி ஏன் மனிதர்களை வெகுவாக பாதிக்கிறது என்பது குறித்து ஸ்டான்ஃபோர்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் (Stanford University School of Medicine) ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

 

மனிதர்கள் காதலில் இருக்கும்போது அவர்களுடைய மூளையில் மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய டொபமைன் (Dopamine) என்னும் ரசாயனம் அதிகமாக சுரப்பதாக அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

நம்முடைய உணர்வுகளை தீர்மானிப்பதில் இந்த டொபமைன்களுக்கு மிகப்பெரும் பங்குகள் இருக்கின்றன. நமது உடலில் டொபமைனின் அளவு அதிகமாக இருந்தால், நாம் மிகவும் உற்சாகமான மனநிலையில் இருப்போம்.

 

இந்த நிலையில், ”நம்முடைய உடல் அதனுடைய வலிகளை தாங்கக்கூடிய சக்தியை தீர்மானிப்பதிலும் இந்த டொபமைன்களின் பங்கு இருப்பதாக” ஸ்டான்ஃபோர்ட் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் நடத்திய ஆய்வில் தற்போது தெரியவந்துள்ளது.

 

காதல் தோல்வியில் இதயம் ஏன் பாதிக்கிறது?

காதல் தோல்வியின்போது நம்முடைய இதயம் ஏன் பாதிக்கப்படுகிறது என்பது குறித்து, இதய சிகிச்சை நிபுணர் செலினா காத்ரி பிபிசியிடம் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

 

”Broken heart syndrome என்னும் ஒரு நிலையினால்தான் காதல் தோல்வியின்போது நம்முடைய இதயம் கனத்து, நெஞ்சுவலி ஏற்படுகிறது. இதனை ‘Takasubo syndrome’ என்றும் கூறலாம். இதுவொரு தீவிரமான இதய நோய் போன்றது. பொதுவாக இது பெண்களிடம் மிக அதிகமாக காணப்படுகிறது. இதுபோன்ற syndrome மூலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 90 சதவீத மக்கள் பெண்களாகத்தான் இருக்கிறார்கள். காரணம், பெண்கள் மிக எளிதாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்!

 

Broken heart syndrome -ஆல் பாதிக்கப்படுபவர்களின் மூளை செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு மெதுவாக சோர்வடைகின்றன. இது அவர்களுடைய உடலின் செயல்பாடுகளையும் பாதிக்கிறது” என்று செலினா விவரிக்கிறார்.

 

இதற்கு முன்னதாக Broken heart syndrome குறித்து பெரிதாக யாருக்கும் விழிப்புணர்வு இல்லை. ஆனால் தற்போது சூழ்நிலைகள் மாறி வருகின்றன. இதற்கான மருத்துவ தீர்வும் ஒருநாள் கண்டுபிடிக்கப்படும்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

 

காதல் தோல்வியால் ஏற்படும் வலிகள் தீவிரமானதா?

நம்முடைய உடல் வலிகளை சந்திக்கும்போதோ அல்லது மனம் கடினமாக உணரப்படும்போதோ, ‘’Anterior Cingulate Ridge’ என்னும் நம் மூளையின் ஒரு பகுதி இயங்க துவங்குகிறது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும், மனம் சோர்வடையும் நிலையிலும் இதேதான் நடக்கிறது.

 

இத்தகைய சமயத்தில் ஏற்படும் வலிகள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பது குறித்தும், உடல் ரீதியாக ஏற்படும் வலிகளுக்கும், உணர்வு ரீதியாக ஏற்படும் வலிகளுக்கும் என்ன மாதிரியான வேறுபாடுகள் இருக்கிறது என்பது குறித்தும் விவரிக்குமாறு, இந்த ஆய்வில் பங்குபெற்றபவர்களிடம் கேட்டுகொள்ளப்பட்டது.

 

இதற்கு ஆய்வில் பங்குபெற்ற பெண்கள் என்ன கூறினார்கள் தெரியுமா?

 

காதல் தோல்வியின்போது மன ரீதியாக ஏற்படும் வலிகள், ஒரு பெண் தன்னுடைய குழந்தையை பிரசவிக்கும்போது சந்திக்கும் வலிகளை விட அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டனர். மற்ற சிலர், கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் சந்திக்கும் வலிகளுடன் ஒப்பிட்டனர்.

 

’Broken heart syndrome’ ஏற்பட்டால் என்ன நடக்கும்?

’Broken heart syndrome’ மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் அவர்களுடைய இதய செயல்பாட்டில் மாற்றங்கள் நடக்கிறது. அவர்களின் இதயம் இயல்பிலிருந்து சற்று வேறுபட்டு இயங்க துவங்குகிறது.

 

1990 ஆம் ஆண்டு ஜப்பானில்தான், முதன்முதலாக ’Broken heart syndrome’ கண்டறியப்பட்டது. இது குறித்து நோயாளிகளிடம் ஆய்வு செய்த மருத்துவர்கள், இந்த பாதிப்பு ஏற்படும்போது அவர்கள் மாரடைப்பு ஏற்படுவது போல் உணர்வதாக தெரிவித்தனர். ஆனால் அதேசமயம், அவர்களுடைய இதயத்தின் இரத்தக்குழாயில் எந்தவொரு அடைப்பும் கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இதில் நிறைய பேர், ஓரிரு வாரங்களிலோ, நாட்களிலோ தங்களுடைய பாதிப்பிலிருந்து மீண்டுவிடுகின்றனர். ஆனால் சிலர் மரணம் வரை சென்றுவிடுகின்றனர்.

 

மனநல நிபுணர் காய் இதுகுறித்து கூறும்போது, “காதல் தோல்வியை சந்திப்பவர்களின் மூளையில் மாற்றங்கள் ஏற்பட துவங்குகிறது” என்று குறிப்பிடுகிறார்.

 

மூளைகளில் ஏற்படும் மாற்றங்களால்தான் அவர்களுடைய உடல் இறுக்கம் அடைகிறது. அது வலியை இன்னும் தீவிரப்படுத்துகிறது. இதனால் அவர்கள் தங்களுடைய பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு தாமதம் ஏற்படுகிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

 

காதல் என்பது ஒரு போதை. நீங்கள் காதலிக்கும்போது அதன் ஒவ்வொரு நினைவுகளும் உங்கள் மூளையில் பதிவாகி வரும். அதன் காரணமாகத்தான் நீங்கள் அதில் தோல்வியடையும்போது மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது” என்றும் காய் கூறுகிறார்.

 

நாம் தலைவலி ஏற்பட்டால் மாத்திரை எடுத்து கொள்கிறோம். அது சரியாகவில்லை என்றால் மருத்துவரை சந்திக்கிறோம். அதேபோல் காதல் தோல்வி அடைந்து, அதில் மீள முடியவில்லையென்றால் மனநல நிபுணர்களை சந்திக்க வேண்டுமென மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். அதுவே நம்முடைய பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.

 

நன்றி:: பிபிசி தமிழ்:

0 comments:

Post a Comment