திருக்குறள்-/02/

 [திருக்குறள்- முகவுரை-02] பெயர்க்காரணம்

திருக்குறள் என்ற சொல் "திரு" மற்றும் "குறள்" என்ற இரண்டு தனிப்பட்ட சொற்களாலான ஒரு கூட்டுச் சொல் ஆகும். "திரு" என்பது தமிழில் மரியாதையையும் மேன்மையையுங் குறிக்கும் ஒரு சொல். இஃது இந்திய அளவில் பொதுவான "புனித, புனிதமான, சிறந்த, கௌரவமான, அழகான" என்று பலவாறு பொருள்படும் வடமொழிச் சொல்லான "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு ஒத்த தமிழ்ச் சொல்லாகும். "திரு" என்ற சொல்லுக்கு 19 வெவ்வேறு பொருள்கள் உண்டு. குறள் என்றால் "குறுகிய, சுருக்கமான, சுருக்கப்பட்ட" என்று பொருள். தொல்காப்பியம் கூறும் இரு பாவகைகளான குறுவெண்பாட்டு மற்றும் நெடுவெண்பாட்டு ஆகியவற்றில் குறுவெண்பாட்டுதான் சுருங்கிக் "குறள் பாட்டு" என்றாகிப் பின்னர்க் "குறள்" என்றானது. அஃதாவது "குறுகிய செய்யுள்" என்பதே "குறள்".இப்பாடல்கள் அனைத்துமே, குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய தமிழின் முதல் நூலும், ஒரே பழைய நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால், "குறள்" என்றும் அதன் உயர்வு கருதித் "திரு" என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்றும் பெயர் பெறுகிறது. மிரான் வின்சுலோவின் கூற்றுப்படி, ஓர் இலக்கியச் சொல்லாகக் "குறள்" என்பது ஈரடி கொண்ட, முதலடியில் நான்கு சீர்களும் இரண்டாமடியில் மூன்று சீர்களுமுடைய ஒரு பாவகையைக் குறிக்கிறது. சுருங்கக் கூறின், திருக்குறள் என்பது "தெய்வீக ஈரடிப்பாக்கள்" என்று பொருட்படும்.

எவ்விதத்திலும், ”குறள்” என்ற தமிழ்ச் சொல்லின் பொருள்கள் எவை என்பதை இன்றுவரை தமிழ் வித்தகர்கள் அறியவில்லை. இதற்குக் காரணம், முன்னைய, இன்றைய தமிழ் வித்தகர்கள் தொல்காப்பியர் உரியியலில் குறிப்பிட்ட ”மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” எனக் கூறிய சூத்திரத்தையும்,அதற்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர் எழுதியிருந்த உரைகளையும் சரியாக விளக்கி, ஒரு தமிழ்ச் சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது என்பதைச் சரியாக விளக்கிக்கொள்ளவில்லை என்பதேயாகும். [முகவுரை-தொடரும்...]

திருக்குறள் தொடர்கிறது... 

2. வான்சிறப்பு

 


👉குறள் 11:

வானின் றுலகம் வழங்கி வருதலால்

தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

மு.வ உரை:

மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.

கலைஞர் உரை:

உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

English Explanation:

By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.

 

👉குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉ மழை.

மு.வ உரை:

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.

கலைஞர் உரை:

யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.

English Explanation:

Rain produces good food, and is itself food.

 

👉குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின் றுடற்றும் பசி.

மு.வ உரை:

மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை:

உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.

கலைஞர் உரை:

கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

English Explanation:

If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.

 

👉குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.

மு.வ உரை:

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.

கலைஞர் உரை:

மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

English Explanation:

If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.

 

👉குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.

மு.வ உரை:

பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.

கலைஞர் உரை:

பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

English Explanation:

Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.

 

👉குறள் 16:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண் பரிது

மு.வ உரை:

வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

சாலமன் பாப்பையா உரை:

மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

கலைஞர் உரை:

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

English Explanation:

4 If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.

 

👉குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.

மு.வ உரை:

மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.

சாலமன் பாப்பையா உரை:

பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

கலைஞர் உரை:

ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.

English Explanation:

Even the wealth of the wide sea will be diminished, if the cloud that has drawn (its waters) up gives them not back again (in rain).

 

👉குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

மு.வ உரை:

மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.

சாலமன் பாப்பையா உரை:

மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

கலைஞர் உரை:

வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?

English Explanation:

If the heaven dry up, neither yearly festivals, nor daily worship will be offered in this world, to the celestials.

 

👉குறள் 19:

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனின்.

மு.வ உரை:

மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

கலைஞர் உரை:

இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.

English Explanation:

If rain fall not, penance and alms-deeds will not dwell within this spacious world.

 

👉குறள் 20:

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்

வானின் றமையா தொழுக்கு.

மு.வ உரை:

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.

சாலமன் பாப்பையா உரை:

எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

கலைஞர் உரை:

உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

English Explanation:

If it be said that the duties of life cannot be discharged by any person without water, so without rain there cannot be the flowing of water.

 

திருக்குறள் தொடரும்....

✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக 

அடுத்த பகுதி வாசிக்க.... அழுத்துக 👉
Theebam.com: திருக்குறள்-/03/ நீத்தார் பெருமை

0 comments:

Post a Comment