"அது என்ன நீரிழிவு நோய் (சர்க்கரை நோய் / டயாபடீஸ்)?" / பகுதி: 05தமிழ் மருத்துவத்தின் வரலாறு பொதுவாக இலக்கியங்களில் காணப்படும் மருத்துவம் சார்ந்த குறிப்புகளை தொகுத்து, மருந்து, மருந்துக்கான மூலப் பொருட்கள், மருத்துவன், மருத்துவம், நோய் , நோயாளி, நோயில்லா நெறி, உணவே மருந்து, உணவு பொருள்கள், அறுசுவை, மருத்துவக் கோட்பாடு  .... போன்ற பல தலைப்புகளில் இன்று ஆராயப் படுகிறது.

 

ஒருவருக்கு நோய் தீரவேண்டுமாயின் அவரின்  சித்தம் அல்லது மனம் இங்கு முக்கியமாகிறது. உதாரணமாக " நீ எதை நினைக்கிறாயோ, அதுவாகவே நீயாகிறாய்" என்பதை கவனிக்க! அதாவது உன்னை பலவீனன் அல்லது நோயாளி என்று நினைத்தால், நீ அப்படியே ஆகிவிடுவாய் என்கிறது. எனவே இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க சிறுநீரகம் பாதிப்படையும். அதோடு கை, கால் மூட்டுகளில் வீக்கம் உண்டாகும். சிறுநீரகம் வடிகட்ட வேண்டிய வேதிப் பொருட்கள் வடிகட்டப்படாமல் இரத்தத்தில் கலந்து விடுகின்றன. இதனால் இதயத்தின் துடிப்பு அதிகரித்து அதன் செயல்பாடு வலுவிழக்க ஆரம்பிக்கிறது. தேவையற்ற படபடப்பு உறக்கமின்மை, போன்றவை உண்டாக ஆரம்பிக்கிறது. எது எவ்வாறாகினும் நாம் மனிதனின் உடற்கூறுகளை என்றும் மாற்ற முடியாது. ஆனால் நீரிழிவு  நோயின் பிடியில் தவிப்பவர்கள் உடற்கூறுக்குத் தகுந்த வாறு மருந்து, மாத்திரை, சிகிச்சை எடுத்துக் கொண்டால் இந்த நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். நேரம் தவறாமல் சாப்பிடவேண்டும். எளிதில் சீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்லது. சர்க்கரையினை அதிகரிக்கும் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல் உடலுக்கு உடற்பயிற்சி அவசியத் தேவையாகும். அதோடு உடல் நன்கு வியர்க்க நடக்க வேண்டும். உணவு சாப்பிட்டபின் குறுநடை கொள்வது நல்லது என இன்று எம் அனுபவம் எடுத்துரைக்கிறது.

 


தேரையரின் மனதுக்கினிய  சீடரான யூகிமுனி வைத்திய முறைகளை எளிமையாய் சொல்லக்கூடியவர். இவரின்  வைத்திய காவியம் ஒன்று நீரிழிவு நோய்க்கு காரணம் கூறுகிறது.

 

"கட்டளைமிகுந்திட்டாலுங் காலங்கள்தப்பினாலும்

இட்டமாம் பாலும் நெய்யும் ரத்தமும்புளிப்பும் மிஞ்சில்

வட்டமாம் முலையார் தங்கள் மயக்கத்தின் கலவியாலும்

நெட்டிலைகோரை போலே நீரிழிவாகுந்தானே."

[யூகிமுனி வைத்திய காவியம்]

 

அதாவது ஓய்வு அற்ற, கூடிய வேலை [அதிக வேலை பழு, மன அழுத்தம்] , ஒழுங்கற்ற உணவுப் பழக்கம், கொழுப்பு கூடிய நெய், பால், மிருக இறைச்சி / கொழுப்பு  போன்ற உணவு முறை. வட்ட வடிவான நகில்களை [முலைகளை]  உடைய மகளிருடன் பாலியல் செயல்களில் அதிக ஈடுபாடு வைப்பது, நீண்டு (140 செ.மீ / 55 அங்குலம்) வளரக்கூடிய கோரை புல்லு [Nut grass] அல்லது தரமற்ற பொருட்கள் / உணவுகள் போல  இது தானாக நீரிழிவு கோளாறுக்கு வழிவகுக்கிறது என்கிறது.  கோரை புல் ஒரு களை (Weed) ஆகும். களை என்பது பொதுவாக, மனிதனால் உருவாக்கப்பட்ட தோட்டங்கள், புல்தரைகள், வயல்கள் போன்ற கட்டுப்பாடான சூழல்களில் வளரும் தேவையற்ற தாவரம் அல்லது தவறான இடத்தில் வளரும் தாவரம் என பொருள் படும்.

 

உடல் உறவு அல்லது பாலியல் நடவடிக்கை என்பது உண்மையில்  மெதுவோட்டம் [நடையோட்டம்] அல்லது உயிர்வளிக்கோரும் பயிற்சி போன்ற ஒரு பயிற்சியே. எனவே இது இரத்தத்தில் சக்கரையின் அளவை குறைக்கும் [Sex is an exercise, like jogging or aerobics, and it can bring on low blood sugar, says the American Diabetes Association (ADA)], எனவே கூடிய பாலியல் நடவடிக்கைகள் நீரிழிவு நோயை ஏற்படுத்தாது. இது ஒரு தவறான புரிந்துணர்வு என்று நம்புகிறேன்.  "பாலும் பழமும் கைகளில் ஏந்தி, பவள வாயில் புன்னகை சிந்தி, கோல மயில் போல் நீ வருவாயே" என்ற பாடல் ஞாபகம் வருகிறது. ஆமாம் அமெரிக்கா நீரிழிவு கூட்டமைப்பு சர்க்கரை குறைவதை தடுப்பதற்கு சற்று முன்போ அல்லது சற்று பின்போ உண்ண சொல்லுகிறது  [To avoid low blood sugar, plan to eat food either immediately before or shortly after sex to cover the glucose you use.] அதனால் தான் 'பாலும் பழமும்' பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணுகிறேன்? இந்த நோயின் அறிகுறிகள் என்ன என்ன என்று யூகிமுனி மேலும் இன்னும் ஒரு பாடலில் கூறுகிறார்.

 

"முகமுங்காந்துநெஞ்சலர்ந்து முறிந்தவுடலுநடுநடுங்கி

நகமேலறிந்து நாவறண்டு நஞ்சுண்டவர்போல் மிகசோர்ந்து

பகலுமிரவி முறங்கிஉடல் பரிந்தே தட்டி மெலிந்து உழன்று

மிக வேதனை உண்டாகி வேண்டாதன்னம் வேண்டாதே".

 

அதாவது, முகத்தில் எரிச்சல் ஏற்பட்டு, தாகம் கூடி நெஞ்செரிவு உண்டாகி, உடல் நடுநடுங்கி, நாவறண்டு, நஞ்சு உணடவர் போல் மிக சோர்ந்து, உடல் மெலிந்து, வேதனை உண்டாக்கும் என்கிறது.

 

நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும்  அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அதிக அளவிலான பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கார்போ ஹைட்ரேட் நிறைந்த உணவு வகைகளான அரிசி, பாண், பாஸ்தா (Pasta), கிழங்கு வகைகள் போன்றவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் சர்க்கரை நிறைந்த பானங்களைத்  தவிர்த்து விட வேண்டும். மேலும் சப்பாத்தியோ அரிசிச் சோறோ எதை எடுத்துக்கொண்டாலும் அத்துடன் அதிக அளவில் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சப்பாத்திக்குப் பதிலாகச் சிவப்பு அரிசி, பார்லி, கடலை மாவு ஆகியவற்றால் செய்த உணவையும் எடுத்துக் கொள்ளலாம். நீரிழிவு நோய்க்கு கார்போ ஹைட்ரேட் உணவு எதிரி என்பதால், அரிசி உணவை கட்டுப்பாடுடன் கொஞ்சமாக எடுக்கலாம். முழுவதுமாகத் தவிர்க்க வேண்டிய கட்டாயமில்லை. அதேநேரம் அதிக அளவில் உண்ணாமல் அளவைக் குறைத்துச் சாப்பிட வேண்டும். பொதுவாக, வெள்ளை அரிசிக்கு மாற்றாக சிவப்பு அரிசி, கைகுத்தல் அரிசி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். தினமும் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்வது நல்லது. பழங்கள், காய்கறிகள், ராகி, பார்லி  [Ragi Barley] போன்றவை தினசரி உணவில் கட்டாயம் இருப்பது நல்லது. மீன், ஆலிவ் எண்ணெய் [Olive oil], பாதாம் பருப்பு, வாதுமை கொட்டை (walnut / வால் நட்) ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பழச்சாற்றுக்குப் பதிலாகப் பழமாக உண்ண வேண்டும். குறிப்பாக ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், நாவல் பழம், ஆகிய பழங்களை நீரிழிவு நோயாளிகள் அதிகம் உண்ணலாம். இந்தப் பழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்தப் பழங்கள் அதிக நேரம் உடலுக்குச் சக்தியைக் கொடுக்கும். நீரிழிவு நோயாளிகள் அசைவ உணவைத் தாராளமாகச் சாப்பிடலாம். கோழி, கடல் உணவான மீன், இறால், நண்டு ஆகிய அசைவ உணவில் உள்ள சத்துகள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. சுருக்கமாக,  நீரிழிவு நோயாளிகள் அனைத்துச் சத்துகளும் நிறைந்த உணவு, அதற்கேற்ற உடற்பயிற்சி, மருந்துகளை எடுத்துக்கொண்டால் நோயின் தன்மையையும் வீரியத்தையும் கட்டாயம் குறைக்க முடியும்.

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,அத்தியடி, யாழ்ப்பாணம்]

 

-முடிவுற்றது-

0 comments:

Post a Comment