"தமிழர் சமயமும் அதன் வரலாறும்'' [ஒரு அலசல்]

எப்படி முதலாவது சமயம் உருவானது என்று ஒருவருக்கும் இன்னும் சரியாக தெரியாது.உலகில் எழுத்து உருவாகியபோது,பல சமயங்கள்,பல ஆயிரம் ஆண்டுகளாக, ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்தன.இயற்கை அனர்த்தங்களுக்கு எதிரான பயம் தான் சமயத்தை உருவாக்கியிருக்கும். மேலும் முதலாவது மதம் கருவுறுதல் அல்லது வளத்தை அடிப்படையாக அமைந்ததாக இருந்து இருக்கலாம்.ஆகவே முதலாவது தெய்வம் அதிகமாக பெண் தெய்வமாகவே இருந்திருக்கும்.சைவ சித்தாந்தம் பண்டைய தமிழர்களுடைய மதமும் தத்துவமும் ஆகும்.டாக்டர் போப்"சைவம் தென் இந்தியாவில்,சரித்திரத்திற்கு முற்பட்ட மதமாக,முக்கியமாக ஆரியர் வருகைக்கு முன் இருந்து,தமிழ் மக்களின் மனதை கவர்ந்த ஒன்றாக காணப்பட்டது ''என்று கூறியுள்ளார். என்றாலும் சைவ சித்தாந்தம் ஒரு தத்துவப் பிரிவாக உருவானது கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே என்று கருதப்படுகின்றது.நான் யார்? கடவுள் இருக்கிறாரா? கடவுள்,உயிர்,அண்டம்,இவைகளின் இயல்பு என்ன?உலகத்துடனும்,கடவுளுடனும் எனது தொடர்பு என்ன?ஒருவரால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சம்பவம்,எம் வாழ்வில் நிகழ்வதற்கு காரணம் என்ன?எந்த தத்துவ அமைப்பிலும் இப்படியான கேள்விகள் அடிக்கடி எழுகின்றன. சைவ சித்தாந்தம் இவைகளுக்கு எளிதில் நம்பத்தக்க,வாத வகையில் நேர்மையாக விடையையும் காரணத்தையும் கொடுக்கிறது. மக்களின் சுதந்திரம்,விடுதலை, உரிமை போன்றவற்றில் தலையிடுவதையும், இயற்க்கைக்கு எதிராக செயல்படுவதையும் இந்த தத்துவம் ஆலோசனை கூறவில்லை. மூட நம்பிக்கையிற்கும்,கண்மூடித் தனமான விசுவாசத்திற்கும் இங்கு இடமில்லை. கடவுளினதும் மதத்தினதும் பெயரால் மக்களை இது பிரிக்கவோ அல்லது கூறு செய்யவோ இல்லை.சைவ சமயத்தையும் தத்துவத்தையும் நிருவியவர்களும் அதை பிரச்சாரம் செய்பவர்களும் பரந்த நோக்குடையவர்களாகவும் மேன்மை பொருந்திய இதயம் படைத்தவர்களாகவும் இருந்தார்கள். "அன்பே  சிவம்","தென்னாடுடைய சிவனே போற்றி; என்னாட்டவர்க்கும் இறைவ போற்றி" என்று அது எங்களுக்கு போதிக்கிறது. அதாவது ஆண்டவனும் அன்பும் வேறு வேறு  இல்லை.இரண்டும் ஒன்றே!இந்த முதுமொழி, தமிழ் இலக்கியத்திலும் சமுதாய எண்ணங்களிலும் பொசிந்து புகுந்து எல்லா இடங்களிலும் பரவி இருப்பதுடன் இது அன்பே கடவுளை அடையும் மார்க்கம் என்ற தற்கால சிந்தனையில் இருந்து வேறுபடுகிறது.அதாவது அன்புதான் கடவுள் என்று இது போதிக்கிறது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,வாழ்வைப் பற்றிய எமது சைவ நோக்கம் உலகளாவியன."யாதும் ஊரே, யாவரும் கேளீர்"என புறநானுறு கூறுகின்றது. "ஒன்றே குலம் ஒருவனே தேவன்"என்று எம்மை அது வழி காட்டுகின்றது.எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் என்று திரும்ப திரும்ப சைவ சமயம் எதிர் ஒலிக்கிறது. "என்னை நன்றாக இறைவன் படைத்தனன்,தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"என்கிறார் இக்காலப் பகுதியில் வாழ்ந்த திருமூலர்.இவரே சைவ சித்தாந்தத்தின் சாரம் என்று கருதப்படும் திருமந்திரம் என்னும் நூல் தந்தவர் ஆவார்.இந்த நூலிலேயே சைவ சித்தாந்தம் என்ற சொற்பயன்பாடு முதல் முதலில் செய்யுள் வரி-1421 யில் காணப்படுகிறது. என்னினும் நாம் தமிழரின் வரலாற்றை,அவனின் தோற்றுவாயை சரியாக அறிவோமாயின் இந்த பெருமை பெற்ற தமிழரின் சமயத்தையும் அதனின் தோற்றுவாயையும் கூட நாம் அறியலாம்.ஸ்பென்சர் வெல்ஸ் எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”) என்ற நூலில் இருந்து "இந்தியன் மார்க்கர்" என அழைக்கப்படும் M 20 மக்கள்,மத்திய கிழக்கு,தென் மேற்கு ஆசியாவில் இருந்து பலுசிஸ்தானின் ஊடாக சிந்து சம வெளி வந்து,அங்கு இருந்து இறுதியாக தென் இந்தியா வந்ததாக அறியமுடிகிறது.மேலும் பல சான்றுகள் சுமேரியர்,சிந்து வெளி மக்கள் திராவிடர்கள் என்றும் அவர்கள் பேசியது பழந் தமிழ் என்றும் சுட்டிக்காட்டுகிறது தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?] என்ற 82 பகுதிகளைக்கொண்ட எனது கட்டுரையில்[www.theebam.com] விபரமாக ஆராயப்பட்டுள்ளது.ஆகவே தமிழரின் சமயம்,சுமேரியாவுடனும் சிந்து சம வெளியுடனும் அதிகமாக தொடர்பு கொண்டதாக இருக்கலாம்.

உலகின் முதலாவது நாகரிகத்தை அமைத்த சுமேரியர்களுக்கு,பல மர்மமான இயற்கை நிகழ்வுகளிற்கு விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் அல்லது விளக்கம் கிடைக்கக் கூடிய வாய்ப்பு அன்று இருக்கவில்லை.ஆகவே அவர்கள் இயற்கை சக்திகளை உயிருள்ள ஒன்று என முடிவு எடுத்து,அந்த இயற்கை சக்திகளை கடவுளாக வழிபட தொடங்கினார்கள்.
இதனால்,இயற்கை வழிபாடே அவர்களின் சமயத்தின் மூலமாக இருந்தது.இயற்கை சக்திகளை அப்படியே சக்திகளாகவே அவர்கள் முதலில் வழிபட்டார்கள். எப்படியாயினும், நாளடைவில் காலம் செல்லச் செல்ல மனித உருவம் இந்த சக்திகளுடன் இணைக்கப்பட்டன. இந்த மனித உருவ கடவுள்,இயற்கை சக்திகளை கட்டுப்படுத்துவதாக அவர்கள் சிந்திக்க தொடங்கினார்கள்.அவர்களின் உலகம் முழுவது ஆண்-பெண் கடவுள்கள் பல பல நிரம்பின.ஏண் உடு அன்னா[En-hedu-ana] எனப்படும் ஓர் அம்மையார் எழுதிய ஈனன்னை சீர்பியத்தில்[The Exalatations of In-Anna] முதல் பாடலின்,"நின் மெய் சர்ர ஒள் தெள்ளயிய [nin-me-sar-ra u-dalla-e-a ]" என்ற முதல் வரியே இன்றளவு சைவத்தின் ஓர் கூறாக இருக்கும் மெய்ஞானத்தை விளம்புகின்றது என்கிறார் முனைவர் கி.லோகநாதன்,இதன் கருத்து,சர்வ மெய்களின் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினள் [Lady of all the me's[divine powers], resplendent light] ஆகும்.மேலும் சங்க கால தமிழர்கள் கூட முதலில் இயற்கையையே வழிபட்டார்கள்.கன்னி மகளிர் தொழும்படி செவ்வானத்தில் திடீரென்று தோன்றிய பிறைச் சந்திரன் என்று குறுந்தொகை- 307 விளக்குகிறது.மேலும் சுமேரியர்கள்,தாம் பூமியில் பிறந்தது,கடவுளுக்கு பணி புரியவும் கடவுளை நன்றாக பார்த்துக் கொள்ளவும் என கருதினர்.கி.பி ஏழாம் நூற்றாண்டு,திருநாவுக்கரசு நாயனாரும் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று கூறுகிறார்.

நாம் ஒவ்வொரு முறையும் வானை நோக்கும் போது,நமது பிரபஞ்சம் எப்படி தோன்றியது போன்ற பல கேள்விகளுடனும் வியப்புடனும் நோக்குகிறோம்.இக்கேள்விகளுக்கு தமது பதிலாக உலகின் முதலாவது படைத்தல் கதைகளை சுமேரியன் எமக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு தந்துள்ளார்கள்.மனிதன் உட்பட எல்லாமும் தெய்வீக சக்திகளால் படைக்கப்பட்டவையே என்பது சுமேரியர்களின் நம்பிக்கை.இதற்கு மாறாக,மூத்த சங்க இலக்கியமான தொல்காப்பியத்தில்,உயிர்கள் கடவுளால் படைக்கப் பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை.மாறாக "நிலமும்,நீரும்,தீயும்,காற்றும்,விண்ணும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று.இவையாவும் ஓர் எல்லைக்கு உட்பட்டு இயங்கிக் கொண்டிருந்த நிலையில் உயிர்கள் தோன்றிற்று" எனத் தொல்காப்பியர் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பை போல ஒன்றை இற்றைக்கு இரண்டாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னால் கூறுயிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது(தொல். மரபியல் 1589).சுமேரிய கடவுள் வெறுமனே மிகவும் சக்திவாய்ந்தவராக இருந்தார்.அத்துடன் அவரின் கருணையை உறுதி செய்ய,தமது கூடிய நேரங்களை வழிபாட்டிற்கும்,பிரார்த்தணைக்கும்,தெய்வங்களுக்கு உயிர் பலி கொடுத்தலுக்கும் ஒதிக்கினார்கள். சுமேரியர்களின் ஆலயம் சிகுரத்[ ziggurat] என அழைக்கப்பட்டது.இது குன்று மாதிரி உயரமாக எழுப்பப்பட்டன.சுமேரியாவில் மலைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம்,தமிழரின் செல்வாக்கு நிறைந்த புகழ் பெற்ற தெய்வம்,முருகன் கூட  மலையில் வாழ்வதாகவும்,மக்கள் தமது
நோயை, குறைகளை போக்க அவருக்கு காணிக்கை,படையல் செய்வதாக,ஐங்குறுநூறு 243,அகநானூறு 22,போன்ற பாடல்கள் கூறுகிறது.ஆரம்பத்தில் முருகன் உருவமில்லாத மலை கடவுளாக இருந்ததுடன் அவரை ஆவியாகவே/சத்தியாகவே வழி பட்டார்கள்.உதாரணமாக குலக் குழுக்களின் பூசாரியாகவும் மந்திரவாதியாகவும் கடமையாற்றும் வேலன் என்ற ஒருவன்,பேயோ அணங்கோ தெய்வமோ ஒருவரில் ஆவேசிக்கும்போது,அங்கு வந்து வேலேந்தி வெறியாட்டு ஆடி அதை ஓட்டுகிறான்.அவன் உடலில் முருகு என்னும் தெய்வம் ஆவியாக சன்னதமாகி குலங்களுக்கு நற்செய்தி சொல்கிறது என சங்கப்பாடல் வர்ணிக்கிறது.பின் மரத்திலும் கல்லிலும்,இறுதியாக மனித வடிவத்திலும் வழிபட்டார்கள்.சிந்துவெளி நாகரிகத்தில்,குறிப்பாக ஹரப்பா,மொகெஞ்சதாரோ நகரங்களில் இவர் 5000 வருடங்களுக்கு முன்பே "ஆமுவான்" என்ற மரக் கடவுளாக வழிபடப்பட்டுள்ளார்.இயற்கை வழிபாட்டின் படி,சேயோன் → முருகன் → குறிஞ்சிக் கடவுள் அல்லது குறிஞ்சி நிலத்  தலைவன் ஆனான்!எனினும் பிற்காலச் சைவத்தின் பரம்பொருளாகிய சிவனைப் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியத்தில் காணமுடியவில்லை.எனினும் சிவனைப் பற்றிய குறிப்புகளை தொல்காப்பியத்துக்குப் பிந்திய கடைச்சங்க இலக்கிக்கியங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.என்றாலும் இன்றைய சைவ சமயத்திலே காணப்படும் இலிங்க வழிபாடு.சக்தி வழிபாடு,சிவ (பசுபதி) வழிபாடு முதலியன 4500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியமான சமயப் பண்புகளாக விளங்கின என்பது பல அறிஞரின் துணிவாகும்.சிந்துவெளி மக்கள் வழிபட்ட தெய்வங்களை முக்கியத்துவத்தின்படி முறைப்படுத்திய மார்ஷல்,முதலில் அன்னைத் தெய்வத்தையும், அதற்கடுத்தபடியாக மும்முகமுடைய கடவுளையும்,மூன்றாவதாக இலிங்கம் அல்லது ஆண் குறியையும் எடுத்துக் கூறியுள்ளார்.பெண்தெய்வ வழிபாடு தோன்றுவதற்கு அடிப்படைக் காரணம் அது தோன்றிய சமுதாயத்திலே தாய்வழிமுறை நிலவியதே என்பது ஆராய்ச்சியாளர் காட்டும் உண்மையாகும்.அங்கு அன்னைத் தெய்வமே முழுமுதற்றெய்வமாக இருப்பதைப் பார்க்கிறோம்.பண்டைய சிந்து சமவெளி நாகரிக மக்கள் பொதுவாக தந்திர முறை பண்பாட்டையே கொண்டிருந்தார்கள்.இது ஆரியர்களின் வேத வழக்கத்தில் இருந்து வேறு பட்டது.இது ஒருவர் தனது எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த வைக்கும் முறையாகும்.அதாவது மனதும் உடலும் ஒன்றுபட்டு இயங்குவதே தந்திர முறையின் முக்கிய கூறு.உடலையும் மனதையும்  தனித்தனியே பிரிக்க முற்படுவதுதான் மற்ற வழிபாட்டு முறை ஆகும்.ஆரியர் வந்த காலத்தில் வடஇந்தியாவிற் குடியிருந்தவர் பெரும் பாலும் திரவிடரே.ஆரியர் வடநாட்டுப் பழங்குடி மக்களொடு போரிட்டு நாடு கைப்பற்றியதாக வேதத்திற் கூறப்பட்டிருக்கிறது. காலப்போக்கில்,ஆரியக் கலப்புக்குப் பின்னர்,முருகன்→ ஸ்கந்தன்/சுப்பிரமணியன் ஆனான்!திருமால்→ விஷ்ணு ஆனான்!சிவன்→ ருத்திரன் ஆனான்! கொற்றவை→பார்வதி/துர்க்கை ஆனாள்! உதாரணமாக சுத்த தமிழ்க்கடவுளான முருகனை,பிராமணர்கள்சுப்ரமண்யனாக்கி விட்டார்கள்.ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள்.அடிமைப் படுத்தப் பட்ட மக்களை, வென்றவர்களின் கலாச்சாரத்திற்குள் உள்வாங்கிய வரலாறு தான், பிற்கால இந்து மதத்தின் வரலாறு ஆகும்.

கி. பி. நாலாவது,அல்லது ஐந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர்,தமிழர் சமயக் கிரியைகளோடு வைதீக வேள்விக் கிரியைகள் கலந்தன.தமிழர் அமைத்த கோயில்களில் பிராமணர் பூசகராயும் சமற்கிருதம் பூசனை மொழியாகவும் ஆனது.சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த அரசர்களே இதற்கெல்லாம் வழி கொடுத்து வணங்கி நின்றனர். பழந்தமிழரின் கொற்றவை சைவசித்தாந்தத்திலும்,சக்தியாக,சிவனுடைய சக்தியாக உருமாறியது.பல தமிழ் இலக்கியங்கள் முருகனை தாய்வழி உரிமை பெறும் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன."வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ" என்றும் "மலைமகள் மகனே" என்றும் "இழையணி சிறப்பிற் பழையோள் குழவி"என்றும் பாடுகின்றது. சிவனுடைய மகன் என்று சொல்லாமல் கொற்றவை சிறுவன் என்று முருகன் குறிப்பிடப்படும்பொழுது அங்கு தாய்வழி உரிமைச் சமுதாய உறவுமுறை நிலவியது என்று நாம் திடமாக நம்பலாம்.சங்க கால தமிழர்கள் ஆன்மீக சார்ந்த,தத்துவ ஞானம் சார்ந்த குறிப்பிட்ட உண்மைகளை அறிந்தது இருந்தார்கள்.உதாரணமாக உயிர்,உடம்பு பற்றிய கோட்பாடுகள்,ஊழ்-விதியின் வலிமை,ஒரு புனிதமான நோக்கத்திற்காக மரணிப்பது போன்றவைகளாகும்.பல வகைப்பாடான கடவுள் தன்மையை[இறைமையை] புராண இலக்கியங்களில் ஒருவர் எதிர்கொள்ள நேர்ந்தாலும்,தேவாரங்களை மிக நுணுக்கமாக படிக்கும் போது,அவை அதற்கு எதிர் மாறானதே உண்மை என சுட்டிக் காட்டும். எல்லா நாயன்மார்களும் ஒப்புயர்வற்ற கடவுளின் தனித்தன்மை[ஒருமை] ஒன்றையே உறுதியாக்குகிறார்கள். மாணிக்கவாசகர் தமது  திருத்தெள்ளேணத்தில் "ஒரு நாமம், ஓர் உருவம்,ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி,நாம் தெள்ளேணம் கொட்டாமோ!"என்கிறார். அதாவது ஒரு பெயரும்,ஒரு வடிவமும்,ஒரு தொழிலும் இல்லாத இறைவனுக்கு,ஆயிரம் திருப் பெயர்களைக் கூறி நாம் ஏன் துதிக்கிறோம்?.என கேள்வி கேட்கிறார். சாதிக்கொள்கை சைவக்கொள்கை அன்று.சாதி அமைப்பு சைவம் உருவாக்கியது அன்று. சாதிப் பாகுபாடு சைவம் செய்தது அன்று. சாதிவெறி சைவநெறி அன்று. `குலம் ஒன்று; இறைவர் ஒருவர்’ என்பது சைவத்தின் அடிப்படைக் கொள்கை. இக்கொள்கைக்கு மாறான எக்கொள்கையும் சைவத்துக்கும் புறம்பான கொள்கையே ஆகும்.சாதிப் பாகுபாட்டைச் சைவம் நெடுகிலும் எதிர்த்தே வந்துள்ளது. தென்ஆப்பிரிக்க இன வெறிக் கொள்கை போல பிராமணர்களால் சாதிக்கொள்கையும் தீண்டாமையும் எமது பண்பாட்டை சீரழிக்க புகுத்தப்பட்டது.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’என்று வினவுகிறார்.பொதுவாக தனி மனிதனைக் கடந்து அண்டத்தை உணர்த்தி நிற்கும் அல்லது ஒன்றை(கடவுள், இறைவன்) உணரும் வழிமுறையின் கட்டமைப்பே “சமயம்“ என்பர். எங்கு அன்பு உள்ளதோ அங்கு வாழ்வு உண்டு. இன்று இந்து மதத்தின் உட்பிரிவாக ஆரிய மயப்பட்ட சைவ சமயமே பெரும்பான்மை தமிழர்களின் சமயமாக இருக்கிறது. இதனால்,பக்திநெறி காலத்தில் காணப்பட்ட வழிபாட்டு முறை,சமத்துவம், தமிழ்மொழியில் அர்ச்சனையும் இன்று காணப்படவில்லை. இதனால் தமிழ்மக்களுக்கும் சைவ சமயத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருகிறது.சைவ சிந்தாந்தம் தந்த திருமூலர் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் சமஸ்கிரதம் செய்யுமாறே" என்று இன்று கூறுவரோ?!யாம் அறியோம் பரா பரமே!! 

                                                                         [ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]


3 comments:

 1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Saturday, April 23, 2016

  கனடா இந்து மாமன்றத்தின் பொங்கல் விழா மலர்-2016,"சைவநீதி"யில் எழுதியது இந்த "தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]" என்ற கட்டுரை.இதை மேலும் விரிவாக்கி பகுதி பகுதியாக கிட்டத்தட்ட, ஒரு 20 பகுதிகளாக வடிவமைத்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் தரலாம் என எண்ணுகிறேன்.உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

  அன்புடன்,

  கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

  ReplyDelete
 2. தங்கள் முயற்சியை வரவேற்கின்றேன்

  ReplyDelete
 3. திராவிடர்கள் என்றால் தெலுங்கு பேசும் மக்கள்.தாங்கள் தமிழர்களையும் திராவிடர்கள் என்று கூறுகிறீர்கள்....

  ReplyDelete