ஆன்மீகத்தைத் தேடி.....:தோழி

ஆன்மீகம் என்றால் என்ன ?
ஆன்மீகம், இந்த ஒரு வார்த்தைக்குத்தான் எத்தனை எத்தனை
அர்த்தங்கள், ஆளுக்கொரு அர்த்தங்களை பிடித்துக் கொண்டு தங்களுடைய மதம்தான் உயர்வானது என்று நிரூபிக்க வேண்டி என்னவெல்லாம் சொல்கிறார்கள், செய்கிறார்கள். கொஞ்சம் அழுத்தமாய் யோசித்தால் இத்தகைய மதங்களினால் சமூக நல்லிணக்கம் என்பது எங்காவது சாத்தியமாகி இருக்கிறதா? இதற்கு என்னதான் தீர்வு? வாருங்கள் இன்று இதைப் பற்றி கொஞ்சம் பேசித் தீர்ப்போம்.


அண்ட பெருவெடிப்பில் துவங்கிய இந்த பூமியில் ஒரு செல் உயிரியாக
ஜனித்து இன்று மனிதனாய் வளர்ந்திருப்பதாக அறிவியல் சொல்கிறது. இதற்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும் அறிவியலார் சொல்லும் சாத்தியங்களை ஏற்றுக் கொள்கிற மன நிலைக்கு அநேகமாய் நம்மில் அனைவரும் வந்து விட்டோம். ஆக ஆதியில் இருந்து இன்றைய நிலை வரை நம்மை வார்த்தெடுத்தது எது?


அதுதான் காலம். ஆம், கால பரிமாணத்தில் உருவானதுதான் இந்த பூமியும் அதில் வசிக்கும் அத்தனை உயிரினங்களும். இந்த காலத்திற்கு கடவுள் வேஷம் போட்டால் எப்படி இருக்கும். ஆனால் யாரும் அப்படி காலத்துக்கு கடவுள் வேஷம் போட்டதாக தெரியவில்லை. நம்மை போலவே கையும் காலும் உள்ள பிம்பங்களை உருவகித்து அதற்கு மகா சக்தியை கொடுத்து அதற்காக நம்முடைய காலத்தை கரைத்துக் கொண்டிருக்கிறோம்.


நண்பர்களே, நாம் பார்க்கப் போகிற ஆன்மீகம் என்பது மிக நிச்சயமாக மதத்தின் அடையாளம் இல்லை. அது நம் மனதின் அடையாளம். இதை தெளிவாக உணராமல் போனதால்தான் ஆளுக்கொரு மதச்சாயத்தை அப்பிக் கொண்டு நிற்கிறோம். சர்வ நிச்சயமாக மதச் சின்னங்களை உடம்பெல்லாம் அணிந்து கொண்டும், மத நூல்களை படித்துக் கொண்டும், அதன் விதிகளுக்குள் நம்மை சுருக்கிக் கொண்டு வாழ்வதல்ல ஆன்மீகம்.


எது நம்மை இயக்குகிறதோ அது எதுவென தேடி அறிவதே ஆன்மீகம். இது ஒரு வகையான அறிவு சார்ந்த தேடல். ஆன்மீகம் என்பது நமது அறிவின் ஓர் இயல்... ஆம்!, அறிவியலேதான். நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நிரூபிக்கப் படாத எதையும் அறிவியல் ஏற்றுக் கொள்வதே இல்லை.


ஆக, எது நம்மை இயக்குகிறது? கொஞ்சம் இப்படி சிந்தித்துப் பார்ப்போமே!, இரண்டு பேரின் அன்புதான் நம்மை உயிர்விக்கிறது, அவர்களின் அன்பும், அக்கறையும் நம்மை வளர்த்தெடுக்கிறது. அனுபவம் நம்மை செதுக்குகிறது, அறிவைத் தருகிறது. கருணை நம்மை உயர்த்துகிறது. ஆசையோ நம்மை உந்துகிறது. பெருகிய ஆசைதான் பொறாமையை தருகிறது. பொறாமை நம்முடைய நிதானத்தை இழக்கச் செய்கிறது. பெருகிய ஆசையும், பொறாமையும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்கிறது.


ஒரு வாழ்நாளை இயக்குவது இவைதான். இந்த சக்கர வட்டத்தில் சுழன்று கொண்டிருப்பதுதான் மனிதம். இதில் நம்மை எது உயர்த்தும் எது அழிவுக்கு கொண்டு செல்லும் என்பது தெளிவாக இருக்கிறது. இதுதான் நாம் தேடும் ஆன்மீகம். இதைத்தான் எல்லா மதங்களும் சொல்கிறது. நாம்தான் இந்த கருத்துக்களை மறந்து விட்டு மதம் சொல்லும் கதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பொய்யான ஒன்றின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம்.


ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

இதுதான் ஆன்மீகம், இதுதான் கடவுள்.
 வாழ்க நலமுடன்.

0 comments:

Post a Comment