பறுவதம் பாட்டி-தாயை ஏற்றுக் கொள்ளாத மேளும் ஒரு பெண்ணா?


அன்று சனிக்கிழமைகாலை ஆகையால் நிம்மதியாக என் அறையில் புரண்டு படுத்துக்கொண்டிருந்த நான் பாட்டியின் குரல்கேட்டு திடுக்கிட்டுக் கண்விழித்தபோது மாமாவீட்டில் வசிக்கும் அண்ணாமலைத் தாத்தாவுடன் ரெலிபோனில் பாட்டி அறுத்துக்கொண்டிருப்பதனை உணரமுடிந்தது.

''இவ்வளவு நாளும் சீனியர் ஹோம் இலிலை இருந்த பார்வதியெல்லே எங்கட பக்கத்தில இருக்கிற அவவின்ர மேள்   வீட்டை இருக்க வந்தவள்'' என்று  தான் அறிந்த  புதினத்தை பறுவதம் பாட்டி ஆரம்பித்துக்கொண்டார்.
பார்வதியம்மாவின் புதினம் எண்டால் அண்ணாமலைத் தாத்தாவுக்கு யானைக்கு கிடைச்ச கரும்பு மாதிரி.

''அப்ப பார்வதி இப்ப மேளோடையோ இருக்கிறா?'' என்று அவசரப்பட்டுக்கொண்டார்  அண்ணாமலைத் தாத்தா.

''எங்க மேள் தாயை ஏற்றுக்கொள்ளேல்லை.பார்வதி திரும்பி சீனியர் ஹோமுக்கே போயிற்றாள்.''

''இதென்ன! அநியாயமாயிருக்கு!அக்கிரமமாயிருக்கு!மேள்காரிக்கும் உந்த நிலைமை வராமலே போகும்!அவளிண்ட பிள்ளையளும் பார்த்துக்கொண்டு தானே இருக்குது.''அண்ணாமலைத் தாத்தா சற்று சத்தமாக பேச ஆரம்பித்துக் கொண்டார்.

''அநியாயம்தான்.அக்கிரமம்தான்.ஆருக்கேன்டாலும் ஆத்திரம் வரும்தான்.ஆனால் பார்வதியும் சிந்திக்கேல்லை தானே.20 வரியத்து முதல் பெற்ற தாயெண்டு தானே கனடாவுக்கு கூப்பிட்டவை.வந்த சிலநாளிலை கனடாவிலை சும்மாவாற காசையும் கண்டதும்  அப்ப பிறந்த பேரக் குழந்தைகளை பார்க்க நான் என்ன வேலைக்காரியோ? எண்டு கேட்டுக் கொண்டேல்லே வெளிக்கிட்டு போனவள்.இப்ப கால்,கை ஏலாதென்டதும் மேளை தேடுறாளோ?அதுக்கா வேண்டி மேள் செய்தது சரியெண்டு நான் சொல்லேலை. ஊரிலை பிள்ளையள், பேரப் பிள்ளையளோட எப்பிடி இருந்தனாங்கள் எண்டதை காசைக் கண்டதும் மறக்கக் கூடாது பாருங்கோ!’’

''ஓம் பறுவதம் நீ சொல்லுறதும் நியாயம்தான். புத்தி கெட்டவள்.இனி அவள்  திருந்தியும் என்ன பயன்'' என்றவாறே அண்ணாமலைத் தாத்தாவும் தன உரையாடலை முடித்துக் கொண்டார்.

பாட்டி தாத்தாவின் உரையாடலை எண்ணியவாறே நான் போர்வையினை சரிசெய்து புரண்டுபடுத்துக்கொண்டேன்.
ஆக்கம்:செல்லத்துரை மனுவேந்தன்

0 comments:

Post a Comment