தமிழரின் உணவு பழக்கங்கள்/பகுதி:27[முடிவு]((தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்))

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்,ஒவ்வோர் இனத்திற்கும் அதன் நிலம்சார்ந்த உணவு அடையாளங்கள் உண்டு. சமைக்கும் முறை, பரிமாறுதல், உண்ணும் விதம் என ஒவ்வொரு சமூகக் குழுவிற்கும் பல தனித்தன்மைகள் உள்ளன. அமெரிக்கப் பூர்வகுடிகள் மத்தியில் ஆய்வு செய்த பிரபல மானுடவியலர் பிரான்ஸ் போயஸ், “சாலமன் மீனை இவர்கள் சமைக்கும் வகையில் இருந்தே இவர்களின் சமூக அமைப்பையும்,இவர்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வையும் புரிந்து கொள்ள முடியும்“ என்கிறார். இது தமிழ்ச் சமூகத்திற்கும் பொருந்தும்.மனிதன் உணவினைச் சூடு-குளுமை, புனிதமானது-புனிதமற்றது, குறிப்பிட்ட உணவு வகைகளின் மீதான விலக்கும்-விருப்பமும் எனப் பல வகையில் வலுப்படுத்தியுள்ளதற்குச் சூழலியல் காரணிகள் பொதுவாக அடிப்படையாய்
உள்ளன.உதாரணமாக,வெவ்வேறு நாடுகளில் இருந்து தலைமைச் சமையற்காரர் நடத்தும் சமையல் ஒளி,ஒலி பரப்புகள் அந்தந்த நாடுகளின் அல்லது  பிராந்திய சாப்பாட்டு விருப்பங்களை வெளிப்படுத்துகின்றன.இந்த சமையற்காரர்கள்,தாம் செய்துகாட்டிய உணவு மூலம்,அவர்களின் வாழ்க்கை மற்றும் பின்னணியை படம் பிடித்து காட்டுகின்றனர்.

மனிதன் சமுதாயத்தின் ஒரு உறுப்பு.எனவே, மனிதன் பேசும் மொழி,அணியும் ஆடை,உண்ணும் உணவு,வாழும் முறை, செய்யும் பணி,அவன் எண்ணங்கள் ஆகியவை அவன் சார்ந்த சமுதாயத்தின் பண்பாட்டை பொதுவாக வெளிப்படுத்தும் வாயில்களாகும்.இந்த  அடிப்படைத் தேவைகளில் மிகவும் முக்கியமானது உணவு ஆகும். ஆனால்,எதை உண்ணவேண்டும், எப்பொழுது உண்ண வேண்டும்,எப்படி உண்ணவேண்டும் என்பதை அவனது பண்பாடுதான்
சொல்லிக்கொடுக்கிறது. இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர்கள்,காலை உணவாக பொதுவாக முட்டை ,பன்றி இறைச்சி[bacon],தொத்திறைச்சி [sausage],போன்றவை அல்லது  தீயில் சுட்ட (smoked Fish) மீனை உண்ணுவார்கள்.அமெரிக்கர்கள்,குளிர்ந்த தானியங்களை உண்ணுவார்கள்.தமிழர்கள் காலை உணவாக,ஆவியில் வேகக்கூடிய, இட்லி,இடியப்பம்,பிட்டு போன்ற உணவுகளை உண்பார்கள்.இவை அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப அவர்களின் உணவு வகைகள் அமைந்திருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன.அப்படியே,உண்ணும் நேரமும் உண்ணும் முறையும் ஆகும்.தமிழர்கள் இரவு 7 அல்லது 8 மணிக்குள் இரவு உணவை பொதுவாக உண்பார்கள்,அத்துடன் பாரம்பரியமாக பாயில் உட்கார்ந்து, தரையில் பரப்பிய வாழை இலையில் உண்பார்கள்,வரலாறு முழுவதுமே,உணவு சமைத்து அவர்களுக்கிடையில் பகிர்ந்து உண்ணும் போது,அந்த குறிப்பிட்ட சமுகத்திற்கு இடையில் பிணைப்பும் பண்பாட்டு பகிர்வும் பொதுவாக ஏற்படுகின்றன.

நாம் எமது இளம் தலைமுறையினருக்கு,எப்படி எமது பாரம்பரிய
உணவுகளை சமைப்பது,அந்த உணவுகளுடன் இணைந்தியங்குவது போன்றவற்றை சொல்லிக் கொடுக்காவிட்டால்,அவர்கள் எம் பண்பாட்டுடன்,எமது முன்னைய வாழ்வுடன்  ஈடுபட முடியாமல் போய் விடும்.குடும்பத்துடன்,சமூகத்துடன் உணவையும் உணவு சமைக்கும் முறைகளையும் பகிர்தல் மூலம் அவர்களுக்கு தமது பண்பாட்டை அறிய வாய்ப்பு ஏற்படுகிறது.இதை நாம் குறைந்து மதிப்பிடக் கூடாது.பரப்பரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த உலகத்தோடு, நாமும் வேகமாக ஓடவேண்டிய காலக்கட்டத்தில்,உணவைப்பற்றி சிந்திப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை.எனவே  நமது வயிறு பசிக்கும் போது அல்லது ஏதாவது உணவுப்பொருளை பார்க்கும் போது மட்டுமே நமக்கு சாப்பிடத் தோன்றுகிறது.ஆகவே குறைந்தது,முதலாவது சந்திப்பு,குடும்ப கொண்டாட்டங்கள் அல்லது ஒரு முக்கிய பண்டிகை நிகழ்வு போன்றவையை பாரம்பரிய உணவுகளுடன் இணைத்து மகிழ்ந்து கொண்டாடினால்,அது எமது பண்பாட்டு அடையாளத்தை மேலும் இறுக்கமாக்கும்.

ஆகவே,பாரம்பரிய உணவு என்பதன் பொருள்,சுருக்கமாக,பல நூற்றாண்டுகளாக,ஆயிரம் ஆண்டுகளாக உட்கொள்ளப்பட்ட முழுமையான,பண்டைய உணவு ஆகும்.இது உனது தலைமுறை தலைமுறையாக உட்கொண்ட உணவு.இவை மிகவும் இலகுவானது. இயற்கையாக வளர்ந்தவை அல்லது வளர்க்கப்பட்டவை.கவனமாக சிந்தனையுடன் தயாரிக்கப்பட்டவை.இது எமது மூதாதையர்களை,தொழில்மயமாக்கப்பட்ட உணவு வருகைக்கு முன்பு,வரலாற்று காலம்,மற்றும் வரலாற்றிற்கு முந்திய காலம் முழுவதும் ஊட்டிவளர்த்த ஒன்று ஆகும்.அது மட்டும் அல்ல,அவன் பண்டைக் காலத்திலிருந்தே 12 வகையான உணவு உட்கொள்ளும் பழக்கத்தை வைத்திருந்தான் எனவும் அறிகிறோம்.அவனது இந்த ரசனையே தனித்தன்மையாக உள்ளது.அவை அருந்துதல்[மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது],உண்ணல்[பசி தீர சாப்பிடுவது],உறிஞ்சுதல் [நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்],குடித்தல்[நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்] ,தின்றல்[பண்டங்களை மெதுவாக கடித்துச்சாப்பிடுதல்], துய்த்தல் [உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்],நக்கல்[ நாக்கினால் துழாவித்துழாவி உட்கொள்ளுதல்],பருகல்[நீர் கலந்த பண்டத்தை கொஞ்சம் குடிப்பது],மாந்தல்[ரொம்பப் பசியால் மடமட வென்று உட்கொள்ளுதல்],கடித்தல்[கடினமான உனவுப்பொருளை கடித்தே உண்ணுதல்],விழுங்கல் [வாயில் வைத்து அரைக்காமல் அப்படியே உள்ளே தருள்ளுவது], முழுங்கல் [முழுவதையும் ஒரே வாயில் போட்டு உண்பது] போன்றவையாகும். இன்றைய நவீன உலகில் பல சம்பிரதாயங்கள் மறைந்து கொண்டு வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.ஆடை அணிகளிலிருந்து,உணவு பழக்கம் வரை மாறுகின்றன.சில உணவுகள் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமலே போகிறது.ஆகவே அவைகளை கேட்டு,தேடி அறிந்து கொள்ளுங்கள்.இறுதியாக ஒன்றை கூறிவைக்க விரும்புகிறேன். "பதறாத காரியம் சிதறாது" என்பார்கள்.ஆகவே முடிந்த வரை மெதுவாகச் சாப்பிடுங்கள்.இது உடலுக்கு மிகவும் நல்லது.மேலும் சாப்பிடும்போது,உணவை சிறு சிறு துண்டுகளாக மென்று சாப்பிட்டால்,உணவு விரைவாக ஜீரணமடைந்து திருப்தியளிக்கும்.இப்ப இந்த நுற்றாண்டு,வாகை சூட வா/2011 படத்தில் இருந்து ஒரு பாடலை கிழே தருகிறேன்.அது,டீ,சுட்ட ஈரல்,கோழி இறைச்சி,கமஞ்சோறு,ரசம்,தோசை, நூங்கு,போன்ற உணவுகளை தொட்டுச் செல்கிறது.

"சர சர சார காத்து வீசும் போதும்
சார பாத்து பேசும் போதும்
சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே.

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன்
மூச்சு உட்பட….

டீ.. போல நீ..
என்ன ஏன்.. ஆத்துர

எங்க ஊரு பிடிக்குதா..எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல..சுட்ட ஈரல் மனக்குதா

முட்ட கோழி பிடிக்கவா..முறை படி சமைக்கவா
எழும்பது கடிக்கையில்..என்ன கொஞ்ச நினைக்க வா

கமஞ்சோறு ருசிக்க வா..சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்கவா

மொடக்காதன் ரசம் வச்சு மடக்கதான் பாக்குறேன்
ரேட்டை தோசை சுட்டு வச்சு காவ காக்குறேன்

முக்கன்னு நூங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கையே கேக்குரே"


--------------முடிவுற்றது------------------------

3 comments:

 1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Friday, April 15, 2016

  இரண்டு எழுத்துப் பிழைகள் உள்ளன.திருத்தி வாசிக்கவும்.
  [1] சூழலியல் காரணிகள் பொதுவாக அடைப்படையாய்
  உள்ளன.----சூழலியல் காரணிகள் பொதுவாக அடிப்படையாய் உள்ளன.
  [2]அது எமது பண்பாட்டு அடையாளத்தை மேலும் இருக்கமாக்கும் ......அது எமது பண்பாட்டு அடையாளத்தை மேலும் இறுக்கமாக்கும்.

  ReplyDelete
 2. பழைய உணவு முறையும் தொலையுது.
  உறவுகளும் தொலையுது
  உணர்வுகளும் தொலையுது
  புது நோய்கள் மட்டும் தேடி வருகுது

  ReplyDelete
 3. சந்திரகாசன்Sunday, April 17, 2016

  பரந்த ஆராய்ச்சிகளின்மூலம் விரிவாகவும், ஆழமாகவும் தயாரிக்கப்பட்ட இந்த ஆக்கங்கள் எல்லாவற்றையும் தொகுத்து, ஒவ்வொரு விடயங்களையும் தனித்தனி மின் புத்தக வடிவில் இணையத்தில் வைத்தால் பலருக்குப் பயனுள்ளதாய் இருக்கும்!

  ReplyDelete