ஏன் தமிழர் இப்பிடி? [பறுவதம்பாட்டி]


(இது ஒரு நடப்பு நிகழ்வுகளின் அலசல்)

அன்று பாடசாலையின் விடுமுறை என்பதால் விடிந்து நெடு நேரமாகியும் புரண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.மாமா வீட்டில்  வாழும் அண்ணாமலைத் தாத்தாவின் தொலைபேசி அழைப்பாக இருக்கவேண்டும்.பாட்டி  அவசரமாக  போனை எடுத்துக்கொண்டு வீட்டின் வெளிப்பக்கமாக வந்ததிலிருந்து எனக்கு அது  புரிந்தது.பாட்டி போனை ஸ்பீக்கரில்  விட்டு பேசிக்கொண்டிருந்தது என் அறை ஜன்னலுடாக  தெளிவாகக் கேட்டது.
அண்ணாமலைத் தாத்தா தான்  பேசிக்கொண்டிருந்தார்.
"என் இவையள் இப்படி?" என்று தாத்தா ஆரம்பித்துக்கொண்டார்.
"ஆரை சொல்லுறியள்".
"எங்கடை தமிழரைத்தான்.நேற்று இவன் மேனின்ரை பிள்ளையின் நாட்டிய நிகழ்ச்சிக்கெண்டு எல்லோரும் போனனாங்கள் தானே!பாத்தனியே எத்தினை தமிழர் ஆளுக்கு 4 ,5 கதிரை எண்டு பிடிச்சு வைச்சிருந்தினம்.ஒரு மனச்சாட்சியே இல்லாத சனங்கள். இந்த டான்ஸ் செய்யப்போற பிள்ளை ஒரு கொஞ்ச நேரம் இருக்கக் கேட்கவே அவர் வருவார் எண்டு சொல்லிப்போட்டினம். நானும் அவர் வருவார், அவர் வருவார் எண்டு சொன்னவையை விட அக்கறையாய் பார்த்துக்கொண்டிருந்தால் பிள்ளையின்ரை டான்ஸ் துவங்கமுதல் கதிரை பிடிச்சு வைச்சிருந்தவை போய்விட்டினம்."
சிரித்துக்கொண்டே பாட்டி தொடர்ந்தார்.
"உது இண்டைக்கு நேற்றே நடக்குது.எங்கடை ஆட்கள் ஊரிலேயே வீடு,வளவு வேலியளையும்,வயல் காணி வரம்புகளையும் மெல்ல,மெல்ல அரக்கி போடுவது பின்னர் ஆட்சி செலுத்திறதும்,அவைக்காக கத்தி,பொல்லு தூக்கிறதும் இண்டைக்கு வரைக்கும் நடந்துகொண்டுதான் இருக்குது.உதைச் சொல்லுறியள்.இந்த பேத்தி 3 வயதை இருக்கேக்கை எல்லே ஒரு தமிழர் வணிகவிழாவிலை சாப்பிடும் இடத்திலை இந்தப்பிள்ளை சாப்பிட இடம் மறுத்து அவர் வருவார் என சாட்டுக் கூறிய  ஒரு தமிழ் அன்னை அருகில் (அந்த வெறும் கதிரையின் அருகில்)என்ர பேத்தி நிண்ட நிலையில சாப்பிட்டு முடிந்து அந்த இடத்தினை விட்டு விலகும் வரையில் அந்த அன்னையின் அவர் வரவில்லையே!
"ஒரு பொது இடத்திலை எப்பிடி நடக்கவேணும் ஒரு நாகரீகம் தெரியாத சனம்."
"ஆனா ஒரு வெள்ளைக்காரனை கண்டால் எழும்பி தங்கட இடத்தையே குடுப்பினம்."
"சரியாச்சொன்னாய்? ஏன் எங்கட ஆட்களின்ர குரோசரி கடைகளில பில் போட நீண்ட  லைனில  நிற்போம். வேற நாட்டுக்காரர் ஆறாவது ஒரு சாமானோட நிண்டால் அதை எங்களுக்கு சுட்டிக்காட்டி அவரை உடன் அழைச்சு பில் போட்டு நன்றியும் சொல்லி அனுப்புவினம். ஆனால் எங்கட ஆட்கள் ஒரு சாமானோட லைனிலை நிண்டால் அவர்கள் கண்ணில் படாது.பட்டாலும் ஒரு சாமானை வேண்டிறாரே எண்டு வேண்டா வெறுப்பாக நடப்பார்கள்."
“சரி,பாங்க்(bank) எண்டு போனாலும் அங்கை வேலை செய்யிற தமிழ் பிள்ளையள் தங்களை தமிழ் எண்டு காட்டிக்கொள்ளாயினம். ஆனால் இந்தியா,சீனாக்காரன் தன் நாட்டுக் காரனைக் கண்டா தங்கட மொழியிலை கதைக்கத் தொடங்கியிடுவான்."
"என்ரை மேன் கூட சொல்லுவான்.வேலை செய்யிற இடத்திலை தமிழர் தமிழரோடு பழகுவதைவிட வேற நாட்டுக்காரரோடு பழகுவதைத்தான் கூட விரும்புகிறார்களாம். அதைவிட தன்னினத்தைப் பற்றி மேலிடத்திலை போட்டுக்குடுக்கிற தெண்டால் அது எங்கட இனம் ஒன்டால தான் முடியுமாம்."
"இதையும் கேளுங்கோ! ஒரு சீனாக்காரன்ரை வீட்டிலை  ஒரு நடக்கக் கூடாதது      நடந்துவிட்டால் அந்த சமுதாயத்தில் ஒருவனைக் நடந்த சம்பவத்தைப்பற்றி   கேட்டாலும்  தமக்கு தெரியாது எண்டு கதையை முடித்துவிடுவார்கள். ஆனால் ஒரு தமிழன் வீட்டிலை அது நடந்துவிட்டால், அச்சம்பவத்துக்கு தமிழர் காத்து,மூக்கு  வைச்சு கதையினை பெருப்பித்து அடுத்த மொழிக்காரருக்கும் கூறித்திரிவார்கள். இது தங்களுக்கும் அவமானம் என்று சிந்திப்பதில்லை."
"உதெல்லாம்  புரிஞ்சிருந்தால் தமிழன் தரணியெங்கும் தலைகுனிஞ்சு வாழும் நிலை வந்திருக்காது பார்."
"அதெண்டா உண்மைதான்.சரி. பிள்ளை படுக்கையால எழும்பிவிட்டாள். தண்ணி வைக்கவேணும்.இனி பின்னேரம் போன் பண்ணுங்கோ."
பாட்டி,தாத்தாவின் உரையாடலும் முடியவே நானும் வோஷ் ரூம் பக்கம் நடையைக் கட்டினேன்.
ஆக்கம்:செல்லத்துரை மனுவேந்தன்

2 comments:

  1. கந்தையா தில்லைவிநாயகலிங்கம்Tuesday, September 18, 2012

    இது முற்றிலும் உண்மை.நான் கொழும்பில்/புத்தளத்தில் வேலை செயும் பொது "யாழ் தேவி" புகையிரதத்தில் பட்ட பாடு இன்னும் ஞாபகம் இருக்கிறது."இந்தியா,சீனாக்காரன் தன் நாட்டுக் காரனைக் கண்டா தங்கட மொழியிலை கதைக்கத் தொடங்கியிடுவான், ஏன் தமிழன் கதைப்பது இல்லை? " எனது மகன் என்னிடம் கேட்கும் கேள்வியும் இதுவே.எனது மகன் ஆஸ்திரேலியா போனபோது ,தமிழில் பெரியாப்பவுடன் நன்றாக உரையாடுதலை கேட்ட ஒரு தமிழ் நண்பர் கேட்டது இவர் இலங்கையில் இருந்து இப்ப தான் வந்தவரோ ? இவ்வளத்திற்கும் சின்ன வயதில் இருந்து "கலாநிதி " வரை இங்கிலாந்தில் தான் படித்தவர் .எம் வீடு மாறினால் எம் உலகமும் மாறும்.

    ReplyDelete
  2. அருண்Sunday, April 17, 2016

    இப்போது தமிழ் இனத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் நடந்துகொண்டு பழம் பெருமைகளை மேடைகளில் முழங்கி திரிவதில் அர்த்தமில்லை.இதே மேடைகளில் எதிர்காலம் இப்போது வாழ்ந்து சென்றாரை திட்டியே தீரும்.

    ReplyDelete