பண்டைய காலத்தில் காது வளர்த்தல்


காது குத்துதல் என்பது முதன் முதலில் பழக்கமாகிப் பின்னர் அது வழக்கமாகிச் சடங்காக மாறியிருக்கிறது. ஆனால் பண்டைய காலத்தில் காதுவளர்க்கும் முறை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடம் இருந்தது. அதன் பின்னர் அனைத்து சமூகத்தினரும் அதனைப் பின்பற்றியுள்ளார்கள். இந்த காது வளர்க்கும் பழக்கம் பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடத்திலும் இருந்தது தான் வியப்பிற்குரியது.

Pambadamபெண் குழந்தைகள் பிறந்த சில தினங்களில் கூடைமுடையும் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வரவழைத்து அக்குழந்தையின் காதில் துளையிட்டு அதில் பஞ்சைத் திரியாக வைத்துவிடுவார்கள். அதில் ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் விடுவார்கள். அத்துளை பெரியதாவதற்காகப் பஞ்சின் அளவை அதிகரித்து அதிகரித்து அதனுள்ளே சோளத்தட்டையின் உட்பகுதியை வைத்துத் தொடர்ந்து பல நாட்கள் கட்டுவார்கள். அதனால் பெரிய ஓட்டை உருவாகிவிடும். அதன் பிறகு அதனுள் இருந்த புண் ஆறிய உடன் ஒரு சிறிய ஈயக்குணுக்கு போட்டு விடுவார். குணுக்கு போடும் காலத்தில் விளக்கெண்ணெய் வைத்துக் காதை இழுத்துவிடுவர். அந்தக் குணுக்கின் கணம் காரணமாகத் காதின் மடல் நீண்டு தொங்கிய நிலைக்கு வந்துவிடும். அதன் பிறகு அதனுள் இருந்த புண் ஆறிய பின்பு, ஒரு சிறிய கனமான இரும்பு வளையத்தைப் போட்டு விடுவர். கனம் காரணமாக நீண்டு தொங்கிய நிலைக்கு காது வந்துவிடும். அதில் ஒரு சிறிய வளையம் அல்லது தண்டட்டி போன்ற அணிகலன்களை அணிந்து கொள்வர். காது துளையிட வரும் ஆசாரிக்கு பருப்புச் சோறு போட்டு விருந்தளித்து, தானியங்களையும் வேட்டி, துணிமணிகளையும் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைப்பர்.

இவ்வாறு காதுகளை நீண்டு வளர்க்கும் வழக்கம் சமண சமயத்தின் தாக்கத்தால் கி.பி. 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தென் தமிழகத்தில் சமண, பௌத்த சமயத்துறவிகள் தங்கள் காதுகளை நீளமாக வளர்த்துக் கொண்னடர். அவர்களைப் பின்பற்றி தங்கள் காதுகளை நீளமாக வளர்த்துக் கொண்டிருக்கலாம்.

இக்காது வளர்க்கும் வழக்கம் பெண்களிடம் மட்டும் அல்லாமல் அக்காலத்தில் ஆண்களிடம் இருந்துள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள ரகசிய அறையில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் இராசராச சோழன் தனது காதுமடல்களை நீளமாக வளர்த்து அதில் வளையம் போன்ற அணிகலன்களை அணிந்திருப்பது போன்றே காட்சியளிக்கிறார்.

காதுகளில் காது அணிகலன்களான கொப்பு, முருக்கச்சி, ஒணப்புத்தட்டு, எதிர்தட்டு, குறுக்குத்தட்டு, தண்டட்டி, முடிச்சு நாகவட்டம் ஆகிய அணிகலன்களையும், கழுத்தில் கருப்புப் பாசி, சிவப்புப்பாசி, ஒரு தங்கத் தாயத்து தங்கக் குண்டு, தங்கக் காசு போன்றவற்றை ஒரு கருப்புக் கயிற்றில் கோத்து அதனை அணிந்து கொள்வர். இது பல மணி தாயத்து எனப்படும். மேலும் சரடு, வெள்ளிக்காரை போன்ற அணிகலன்களையும் கழுத்தில் அணிந்திருப்பர். கைகளில் வளையலும், கால்களில் தண்டை, கொலுசும் அணிந்திருப்பர். அதன் பின்னர் அரசளிவாளி என காதில் ஒவ்வொரு இடத்திலும் வளையங்களைப் பொருத்தினர். ஆண்களும், பெண்களும் காதுகளில் அணிகலன்களை அணிந்துள்ளனர். அவர் காதுகளில் 39 வகையான காதணிகளை அணிந்திருந்ததாக அறியமுடிகிறது.

சங்க இலக்கியத்தில் காதணி வகைகள்

அட்டிகை, இட்டடிக்கை, ஓலை, மாணிக்கஓலை, கடிப்பினை, கடுக்கன், கன்னப்பூ,
குண்டலம், குணுக்கு, குதம்பை, குறடு, குழை, குவளை, கொப்பு, சன்னாவ தஞ்சம், சின்னப்பூ, செவிப்பூ, தடுப்பு, கொப்பு, சன்னாவ தஞ்சம், சின்னப்பூ, செவிப்பூ, தடுப்பு, தண்டட்டி, தாளுருவி, திரிசரி, தோடு, பொன்தோடு, மணித்தோடு, நவசரி, நவகண்டிகை, நாகபடம், பஞ்சசரி, பாம்படம், பாம்பணி, புகடி, மகரி, மஞ்சிகை மடல், மாத்திரை, முடுச்சு, முருகு, மேலீடு, வல்லிகை, வாளி முதலியவனவாகும். கடிப்பு என்னும் அணிகலனை அணிந்து வர காதுமிக நீண்டதாக ஆகின்றது. தற்காலத்தில் மாட்டல், பூங்கொப்புமணி, பூட்டுக்காப்பு, தொங்கல், மாட்டல், அட்டியல், பொன்மனி, திருச்சூலி, அலுக்குத்து, சரப்பளி போன்ற ஆபரணங்கள் காதுகளில் குத்தப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும். தற்பொழுது கால மாற்றத்தினால் காது வளர்க்கும் முறை குறைந்து காதுகுத்துதல் மற்றும் இடைக்காது குத்தும் முறையாக மாறியுள்ளது. இவ்வாறு அனைத்து சமூகத்தினரிடையும் காது குத்தும் வழக்கம் ஒரு விழாவாகவே எடுத்து நடத்தப்படுகிறது.

காலில் அணியும் அணிகலன்கள்

இவ்வாறான அணிகலன்களை தமிழன்னைக்கு அணிகலன்கள் அணிவித்து அழகு பார்த்துள்ளான் இளங்கோவடிகள். அதனைப்பற்றி பின்வருமாறு பாடல் ஒன்றில் சிலப்பதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

காதொளிரும் குண்டலமும் கைக்குவளை
யாபதியும் கருணை மார்பில்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில்
மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிர் பூந்தாளிணையும் பொன்முடி
சூளாமணி பொலியச் சூட்டி
நீதியொளிர் செங்கோலாய்த் திருக்குறளைத்
தாங்கு தமிழ் நீடு வாழ்க

காலின் அடியில் பாதத்தின் மீது பொருந்துமாறு அணிவது காலணிகள் சிலப்பதிகாரத்தில் மிகச்சிறப்புடன் கூறப்படுகிறது. இவை இருபது வகைகள் ஆகும். அரியகம், அரவம், சுழல், வீரக்கழல், கொடைக்கழல், பொன்கழல், கண்டை, காற்சரிகை, கால் கொலுசு, சிலம்பு, ஊசிமணி, ஞெகிழகம், பரியகம், பரிவடிம்பு, படாகம், புகங்கக் கடகம், புனையாரம், தண்டை, நூபுரம், வெள்ளித்தலை என்பன ஆகும். கால்விரல்களில் அணியும் அணிகலன்களை பெண்களே அணிகின்றனர். அங்கு பொன் அணிகலன்களோ, மணிகள் பதித்தோ அணிவதில்லை அவைகளில் காய்கள், மீன்வாய் போன்ற வடிவங்களில் அணிகின்றனர். அவை பத்து வகைகளாகும். கால் மோதிரம், காலாழி, தாழ்செறி, நல்லணி, பாம்பாழி, பில்லனை, பீலி, மகரவாய், முஞ்சி, முட்டி, மெட்டி என்பன

கான்மோதிரம்: கால்பெருவிரலில் அணியப்படுவது
பாம்பாழி: பாம்பு சுருட்டியதுபோல் உள்ள கால்விரல் மோதிரம்
பீலி: கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணியப்படுவது
முஞ்சி: முஞ்சி என்பதை இன்று மிஞ்சி என அழைக்கிறார்கள்
மெட்டி: இன்று திருமணங்களில் அணிவிக்கப்படுகிறது.


நன்றி:- வைகை அனிஷ்

0 comments:

Post a Comment