அத்தனைக்கும் ஆசைப்படு

ஆசை – முயற்சி – நேரம்: வெற்றியின் மூன்று தூண்கள்


“ஆசை இல்லையெனில் முன்னேற்றம் இல்லை” என்பது ஒரு சாதாரண கூற்று அல்ல; அது வாழ்க்கையின் அடிப்படை உண்மை. மனிதன் முதலில் ஆசைப்பட வேண்டும். அந்த ஆசை தான் அவனை எழுப்பும், நகர்த்தும், உயர்த்தும். ஆனால் ஆசை மட்டும் போதாது; அதை அடையத் திட்டமிட்ட முயற்சியும் அவசியம்.

ஒரு மனிதன் ஒரு பெண்ணை நேசிக்கிறான் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அவளுடன் வாழ வேண்டும் என்ற ஆசை உருவாகிறது. அந்த ஆசையை நனவாக்க, அவன் தன்னைத் தயார்படுத்த வேண்டும்—நிலையான வருமானம், நல்ல வேலை, பொறுப்புணர்வு, வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் திறன். இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது: ஆசை ஒரு விதை; முயற்சி அதன் நீர்; நேரம் அதன் மண்.

இந்த மூன்றில் மிக முக்கியமானது ‘நேரம்’. பணத்தை இழந்தால் மீண்டும் சம்பாதிக்கலாம்; ஆனால் நேரம் ஒருமுறை சென்றால் திரும்பாது. நேரத்தின் மதிப்பை உணர்ந்தவர்களே வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர்.

ஒரு ‘Software Engineer’-ன் தினசரி வாழ்க்கையைப் பாருங்கள். காலையில் அலாரம் அடித்தும் தாமதமாக எழுதல், அவசரமாக வேலைக்கு செல்லுதல், சீரான உணவு பழக்கம் இல்லாமை, குடும்பத்தோடு நேரம் செலவிட முடியாமை, இரவில் அதிக நேரம் வீண் செலவழித்தல்—இவை அனைத்தும் சேர்ந்து உடல்நலக் குறைபாடுகளையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றன. இந்த வாழ்க்கை உண்மையில் முன்னேற்றமா, அல்லது மெதுவான சிதைவா?

நேரத்தின் மதிப்பை உணர சில சின்ன உதாரணங்கள் போதுமானவை.
ஒரு வருடத்தின் அருமையை தோல்வியடைந்த மாணவன் சொல்லுவான்.
ஒரு மாதத்தின் மதிப்பை குறை மாதக் குழந்தையை பெற்ற தாய் உணருவாள்.
ஒரு வாரத்தின் முக்கியத்துவத்தை வார இதழ் ஆசிரியர் அறிவார்.
ஒரு மணிநேரத்தின் விலையை காத்திருக்கும் காதலி உணருவாள்.
ஒரு நிமிடத்தின் அருமையை விமானத்தை தவறவிட்டவன் சொல்வான்.
ஒரு நொடியின் மதிப்பை விபத்தில் உயிர் தப்பியவன் உணருவான்.
ஒரு மில்லி செகன்டின் வித்தியாசம் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை தீர்மானிக்கிறது.

அம்பானி, டாடா, அல்லது ஒரு நாட்டின் பிரதமர்—யாராக இருந்தாலும் அவர்களுக்கும் 24 மணி நேரம்தான். ஆனால் சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். காரணம், அவர்கள் நேரத்தை நிர்வகிக்கத் தெரிந்தவர்கள்.

இதற்கு ஒரு சிறிய நிகழ்வு:
செந்தில் மற்றும் அவரது மனைவி கீதா ஊருக்குச் செல்லத் தயாராகிறார்கள். ஒரு பக்கம் டிக்கெட் பிரிண்ட் எடுக்க வேண்டும், மற்றொரு பக்கம் மேனேஜர் அவசரமாக ஒரு பட்டியல் கேட்கிறார். இதற்கிடையில் மொபைல் பில், குழந்தையின் பள்ளிக் கட்டணம், நண்பனின் அழைப்பு—எல்லாம் சேர்ந்து குழப்பத்தை உருவாக்குகிறது. மன அழுத்தத்தில் வண்டி ஓட்டும் செந்திலுக்கு விபத்து ஏற்படுகிறது.

இந்த நிகழ்வின் காரணம் ஒன்றே—நேர மேலாண்மை இல்லாமை.

நேரத்தைச் சரியாக கையாள ஒரு எளிய முறையுண்டு. நமது வேலைகளை நான்கு வகைகளாகப் பிரிக்க வேண்டும்:

  1. அவசியமும் அவசரமும் உள்ளவை

  2. அவசியம் உள்ளவை, ஆனால் அவசரம் இல்லாதவை

  3. அவசரம் உள்ளவை, ஆனால் அவசியம் இல்லாதவை

  4. அவசியமும் அவசரமும் இல்லாதவை

உடல் நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவமனைக்கு செல்வது, உடனடி அலுவலக வேலைகள் போன்றவை முதல் வகை.
தினசரி உடற்பயிற்சி, குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், முன்கூட்டியே கட்டணங்கள் செலுத்துதல் போன்றவை இரண்டாம் வகை—இவை தான் வாழ்க்கையை நிலைப்படுத்தும் முக்கிய செயல்கள்.
அவசியமில்லாத அவசர அழைப்புகள் மூன்றாம் வகை.
வீண் நேர விரயம்—அதிகமான டிவி, பயனற்ற உரையாடல்கள்—நான்காம் வகை.

நாம் பெரும்பாலும் இரண்டாம் வகை செயல்களை புறக்கணிப்பதால்தான் அவை முதல் வகை அவசர பிரச்சினைகளாக மாறுகின்றன. செந்திலின் வாழ்க்கையும் அதற்கே எடுத்துக்காட்டு.

எனவே, நம் வாழ்க்கையை திட்டமிட்டு, முக்கியத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டால், நம் ஆசைகள் நிச்சயம் நனவாகும்.

வெற்றி என்பது தற்செயலாக கிடைப்பதல்ல; நேரத்தை மதித்து வாழ்பவர்களுக்கு கிடைக்கும் பரிசு. இது வேத சத்தியம்.

நன்றி:ரஜினிகாந்த் கே   

0 comments:

Post a Comment