ஊக்கஉணர்வுடன் வாழுங்கள்!

உழைப்பின் மூலம் சம்பாதித்துச் சேர்த்து வைத்த பணத்தையும், காடு தோட்டங்களையும், அழகான வீட்டையும் உங்களுக்கு வைத்துவிட்டுப் போகிறார் உங்கள் தந்தை! உங்களுக்கு எல்லா வசதிகளும், வாய்ப்புகளும் இருக்கின்றன. இல்லற வாழ்க்கையை மிக அழகாக அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாமுமே இருக்கின்றன. ஆனால் ஒன்று மட்டும் உங்களுக்கு இல்லை. அதுதான் ஊக்கம். இந்த ஊக்கம் மட்டும் இல்லாவிட்டால், உங்களுக்கு எத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தென்னÐ ஊக்கம் இல்லாவிட்டால் அத்தனையும் வீண்தான்!
ஊக்கம் மட்டும் உங்களுக்கு இருக்குமானால், உங்களுடைய சொத்துக்களைப் பாதுகாக்க உங்களால் முடியும். இல்லற வாழ்வின் இனிமையை நுகர முடியும். ஊக்கமில்லாவிட்டால் உங்களுடைய சொத்துக்கள் மெல்ல மெல்லக் கரைந்து கொண்டே வந்து, இறுதியில் ஒன்றுமே இல்லாமல் போய்விடும்.
உங்களுக்கு ஊக்கம் இல்லாவிட்டால், தன்னம்பிக்கை எப்படி உங்களுக்கு வரும்? உங்களிடம் ஊக்கம் இல்லை என்றால் உங்களுக்குச் சரியான குறிக்கோள் இல்லை என்று தானே அர்த்தம்! சிலருக்குத் தன்னம்பிக்கையும், குறிக்கோளும் இருந்தாலும் கூட அவர்களுக்கு ஊக்கம் என்ற ஒன்று இல்லாத காரணத்தால் அவர்களால் எதையும் சாதிக்க முடியாமல் பயனற்று வீணாகிப் போகிறார்கள். உங்களுடைய வாழ்க்கையும் அவ்வாறு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு உங்கள் மேல், யாராலும் அழிக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது. அருமையான குறிக்கோள் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு ஊக்கம் இல்லாத காரணத்தால் எந்தச் செயலையும் உங்களால் நிறைவேற்ற முடியவில்லை. அதனால் தான் நீங்கள் எதைக் கைவிட்டாலும் ஊக்கத்தை கைவிட்டு விடாதீர்கள் என்று சான்றோர்கள் சொல்லி வைத்தார்கள். “ஊக்கமது கைவிடேல்” என்ற வாசகத்தைப் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஊக்க உணர்வு கட்டாயம் பிறக்க வேண்டும்.
உயர்வைத் தருகின்ற வாசகர்களை நாம் குதர்க்கமான பொருளில் காண்கிறோம். ஊக்கத்தைத் தருகின்ற மதுவைக் கைவிடாதே என்று விளக்கம் தந்து மதுவிற்குப் பெருமையைத் தேடித்தருகிறோம்.
தளராத ஊக்கம் எவருக்கு இருக்கிறதோ அவரைத் தேடிக்கொண்டு செல்வம் என்ற திருமகள் செல்வாள். “அவர் எங்கே? எங்கே?” என்று வழியைக் கேட்டுக்கொண்டு செல்வாள் என்கிறார் வள்ளுவர். இறுதியில் அவரைக் கண்டுபிடித்து அவரை மார்போடு தழுவிக்கட்டி அணைப்பாள்.
அமெரிக்காவின் அதிபர் லிங்கன் பார்ப்பதற்கு நன்றாக இருக்கமாட்டார். அவருடைய முகத்தோற்றம் அனைவரும் பார்க்கும் படியாகக் கவர்ச்சிகரமாக இருக்காது. ஆனாலும் லிங்கன் தன்னம்பிக்கையோடு செயல்பட்டார். விடாமுயற்சியை அவர் கைவிடவே இல்லை. பார்ப்பவர்களைக் கவரத் தக்க தோற்றம் நமக்கு இல்லையே! என்று எண்ணாமல் மிகுந்த தைரியத்துடன் வாழ்ந்தார். அவர் சோர்ந்து போய் உட்கார்ந்துவிடாமல், ஊக்கத்துடன் செயலாற்றினார். இறுதியில் ஜனாதிபதி பதவி அவரைத்தேடி வந்தது. அவருடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது அவர் கொண்டிருந்த ஊக்கம்தான்!
டச்சு நாட்டுத் தடகள வீராங்கனை பேனி எல்சி பிளாங்கர்ஸ் கோயென்னுக்கு வயது முப்பது. இவர் இரண்டு குழந்தைகளுக்குத்தாய்! தடகளப் போட்டிகளில் நான்கு தங்கப்பதங்களை வென்றார். தடை தாண்டி ஓடும் போட்டியில் சாதனை படைத்தார். 33 வயதுக்குள் 5 முறை ஐரோப்பிய சாம்பியன் பட்டங்களையும், 11 உலக சாதனைப் பட்டங்களையும் வென்றார். 1999ம் ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்ற துடிப்பு, தன் குழந்தைகளை நல்ல முறையில் பேணிக்காக்க வேண்டும் என்ற பொறுப்பு, ஆகிய உணர்வுகளுடன் “தங்கப்பதக்கம் ஒன்றே குறிக்கோள்” என்று மனதில் சங்கல்பம் கொண்டு ஊக்கத்துடன் அயராமல் பயிற்சி பெற்று இறுதியில் வெற்றி பெற்றார். சிறந்த சாதனைகளைப் படைத்தார். இரண்டு குழந்தைகளைப் பெற்ற தாய், ஒலிம்பிக் போட்டிகளில் வென்று (1948, லண்டன்) நான்கு தங்கப்பதக்கங்களைப் பெறுவதற்குக் காரணம் அவரிடமிருந்த ஊக்கமே ஆகும்.
‘உலகத்தில் பெறப்பட்டுள்ள அனைத்து வெற்றிகளும் ஊக்கத்தின் சின்னங்களே!’ என்பார், எமர்சன். உங்களுக்கு வரும் தடைகளை உடைத்தெறியும் படைக்கலமாக இருப்பது ஊக்கம் ஒன்றுதான்! ஊக்கத்தை இழந்தவனே ஆக்கத்தை இழந்தவனாகிறான்.
நீங்கள் ஊக்க உணர்வுடன் வாழ்வதற்கு யோகா, தியானம் ஆகியவைகள் உறுதுணையாக இருக்கின்றன. நீங்கள் ஊக்கமாக வாழ்கின்ற போதுதான், மிகச் சிறந்த வழிகளை உங்களுடைய செயல்களும், முயற்சிகளும் உங்களுக்கு நன்கு அமைத்துத் தருகின்றன.
உங்களை யார் அவமதித்தாலும் சரி, கேவலமாகப் பேசினாலும் சரி, உங்களைப் பழித்து நையாண்டி செய்தாலும் சரி, அவைகளை எண்ணி வருத்தப்படாதீர்கள். மனம் சோர்ந்து விடாதீர்கள்!!என்னை அவமதித்தவர்கள் மூக்கின் மேல் விரலை வைத்து வியக்கும் அளவுக்கு நான் முன்னுக்கு வருவேன்!! என்று உள்ளத்தில் நினைத்து மிகுந்த ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். முன்னுக்கு வரவேண்டிய முறைகளையும், வழி வகைகளையும் நன்கு ஆராய்ந்து அதில் கவனம் செலுத்தி இடைவிடாமல் உழையுங்கள். ஊக்க உணர்வுடன் நீங்கள் கடுமையாக உழைக்கும்போது உங்களுக்கு வெற்றி கிடைக்காமல் போகுமா?
உங்களை “உடையவர்” என்று சிறப்பாகச் சொல்லப்படுவதற்குக் காரணமாக இருப்பது ஊக்கம் ஒன்றே ஆகும். அந்த ஊக்கத்தை நீங்கள் பெறாமல் வேறு எதைப் பெற்றிருந்தாலும் பெற்றிருப்பவராக ஆக மாட்டார்கள்.
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதிலார்
உடையது உடையரோ மற்று
என்று வள்ளுவரும் ஊக்கத்தின் சிறப்பைப் புகழ்ந்துரைக்கின்றார்.
2004ம் ஆண்டு ஒலிம்பிக் செல்லும் தகுதிப் போட்டியில் நான்காவதாக வந்த இபான் தோர்ப் என்ற ஆஸ்திரேலிய வீரர், ஊக்கத்தோடு உழைத்து பயிற்சிகளில் ஈடுபட்டு தங்கப்பதங்களை வென்று வந்தார். இவரது உயர்வுக்கு அடிப்படையாக அமைந்ததே ஊக்கமே!
அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்பவர் மிகவும் ஊக்கத்துடன் செயல்பட்டு, உலகத்தையே வியக்கவைத்த தொலைபேசியைக் கண்டுபிடித்தார். ஊக்கமின்றி அவர் வீட்டிலேயே முடங்கி அமர்ந்திருந்தால் இத்தகைய சாதனைகளைச் செய்திருக்க முடியுமா? அலெக்சாண்டர் கிரகாம்பெல்லின் உயர்வுக்கு அடிப்படையாக அமைந்தது ஊக்கமே!
டெம்போ ஷேரி என்ற 15 வயதுச் சிறுவன் எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சி செய்தபோது கடும்பனியினால் அவன் தன்னுடைய இரண்டு விரல்களை இழந்துவிட்டான். விரல்களை இழந்த போதிலும் அவன், தளராத ஊக்கத்தைக் கைவிடவே இல்லை. அடுத்த ஆண்டு கடும் முயற்சி செய்து மிகக்குறைந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தான். அவனுடைய இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்தது, அவன் கொண்ட ஊக்கமும், தன்னம்பிக்கையுமே!
எழுத்தாளராக வேண்டும் என்ற கொள்கையுடன் விடாப்பிடியாக இருந்து, மிகுந்த ஊக்கத்துடன் உழைத்து மிகச்சிறந்த எழுத்தாளரானார் பெர்னாட்ஷா. பத்து ஆண்டுகளாக எழுதிக்கொண்டே இருந்தார் பெர்னாட்ஷா. நாடகங்கள் எழுத ஆரம்பித்துப் புகழ்பெற்ற நாடக ஆசிரியராக உருவானார். தளராத ஊக்கம் அவருக்கு உலகப் புகழைக் கொடுத்தது.
உங்களுக்குக் காசு பணம் இல்லையா? எந்த வசதியும் உங்களுக்கு இல்லையா? எவரும் உங்களுக்கு பரிந்துரை செய்து நீங்கள் முன்னேறுவதற்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறார்களா? அவைகளைப் பற்றியெல்லாம் வீணாகக் கவலைப்பட்டு உங்கள் உள்ளத்தை வருத்திக் கொண்டிருக்காதீர்கள். உங்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை. முதலில் உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை வையுங்கள். அதன் பிறகு ஊக்கத்தோடு உழையுங்கள். ஐயோ! அவர் மட்டும் காரும், பங்களாவுமாக நன்றாக வாழ்கிறாரே!! என்று ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மிகுந்த ஊக்கத்தோடு கடுமையாக உழைத்து வாருங்கள். உங்களுக்கு வெற்றி கிட்டாமல் போகுமா? தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்! ஊக்க உணர்வுடன் வாழுங்கள்”ஆக்கம் பெற்று உலகை ஆளுங்கள்”

0 comments:

Post a Comment