விஞ்ஞானம் வழங்கும் விந்தை

🍶அறிவியல்=விஞ்ஞானம்🍶

💥புற்றுநோய்க்கு உதவுமா புது மருந்து?

நீண்டகால மருத்துவம் தேவைப்படும் நோய்களில் ஒன்று புற்றுநோய். கல்லீரல் புற்றுநோய் மிகக் கொடிய நோய் வகையாகும். புற்றுநோய் மரணங்களில் மூன்றாவது அதிகமான மரணங்கள் எச்.சி.சி., (HCC) எனும் ஒருவகை கல்லீரல் புற்றுநோயால் ஏற்படுபவை தான்.

இதற்கான சிகிச்சை எளிமையானதன்று. இந்த நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை உருவாக்க விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வுசெய்து வந்தனர். இந்த நிலையில் அமெரிக்காவின் யுசி டேவிஸ் ஹெல்த் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 102 ஆண்டுகள் பழமையான பி.சி.ஜி., எனும் காசநோய்க்கான தடுப்பு மருந்தை, இந்த நோய்க்குப் பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளனர். ஏற்கனவே இதைச் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.

காசநோய்க்கான தடுப்பு மருந்தை, கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த எலிகளுக்குக் கொடுத்தார்கள். இந்த மருந்து புற்றுக்கட்டிகளின் வளர்ச்சியைத் தடுத்தது. அத்துடன் விஞ்ஞானிகள் ஆச்சரியப்படும்படி நோய் எதிர்ப்பாற்றல் மிக்க செல்களின் வளர்ச்சியைத் துாண்டியது.

குறிப்பாகப் புற்றுநோய்க்கு எதிராகப் போரிடும் டி செல்கள், மேக்ரோபேஜ்கள் ஆகியவை புற்றுநோய்க் கட்டிகள் நோக்கிப் பயணம் செய்ய உதவின. இதன் வாயிலாக, புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு கட்டிகள் சுருங்கத் துவங்கின. எலிகளின் மீதான சோதனை வெற்றி பெற்றுள்ளதால், மனிதர்களுக்கும் இது உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வேறு வகையான நோய்களுக்கும் இந்த மருந்து உதவுமா, என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது.

 

🍲உணவு ஒவ்வாமைக்கு தீர்வு

எல்லாருக்கும் எல்லா வகையான உணவுகளும் பிடிப்பதில்லை. விருப்பு, வெறுப்பு தாண்டி சிலருக்குச் சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். கடந்த சில ஆண்டுகளாக இந்த உணவு ஒவ்வாமை பிரச்னை அதிகரித்து வருகிறது. 12ல் ஒரு குழந்தைக்கும், 10ல் ஒரு பெரியவருக்கும் இந்த ஒவ்வாமை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு ஏராளமான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒவ்வாத உணவை உண்பது வாந்தி, வயிற்று வலியிலிருந்து துவங்கிப் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உணவுகளில் ஒவ்வாமை இருக்கும்.

அவர்களுக்குச் சில உணவுகளை உட்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இத்தகைய ஒவ்வாமையைச் சரி செய்வதற்கான மருந்துகளை உருவாக்க விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹோப்கின்ஸ் ஆய்வு மையம், ஆஸ்துமாவிற்குப் பயன்படும் 'ஒமாலிசுமாப்' என்ற ஒருவகை மருந்து ஒவ்வாமையைத் தடுக்க பயன்படும் என்று கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், இந்த மருந்து, உணவு ஒவ்வாமை கொண்ட பலரின் வாழ்க்கை முறையையே நல்லபடியாக மாற்றவல்லது என்று கூறுகிறார்கள்.

விஞ்ஞானிகள், 1 முதல் 55 வயதுடைய 180 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். நிலக்கடலை ஒவ்வாமையுடன், முந்திரி, பால், கோதுமை, முட்டை, வால்நட் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டின் மீது ஒவ்வாமை உடையவர்கள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு நான்கு மாதங்கள் வரை, 2 முதல் 4 வார இடைவெளியில் ஒமாலிசுமாப் மருந்து செலுத்தப்பட்டது.

16 வாரங்களிலேயே நல்ல முன்னேற்றம் தெரிந்தது. நிலக்கடலை ஒவ்வாமை இருந்தவர்களுக்கு அது குணமாகி இருந்தது. அதாவது 600 மி.கி., நிலக்கடலை புரதத்தை எடுத்துக் கொண்டும் அவர்களுக்கு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை.

அத்துடன் முந்திரி, பால், முட்டை ஆகியவற்றின் மீதான ஒவ்வாமை முறையே 41, 66, 68 சதவீதம் குறைந்திருந்தன. எதிர்காலத்தில் இந்த மருந்து மேலும் பல உணவு ஒவ்வாமைகளைக் குணப்படுத்தவும் பயன்படலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

🌭பதப்படுத்தப்பட்ட உணவு

அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை (Ultra processed food) தொடர்ந்து உண்பது, இதயம் தொடர்பான நோய்களை 50 சதவீதமும், நீரிழிவை 12 சதவீதமும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அத்துடன் இவற்றால் மன அழுத்தமும் 22 சதவீதம் அதிகரிப்பதாக அதிர்ச்சி தருகின்றனர் ஆய்வாளர்கள்.

 

🦵முழங்கால் கீல்வாத நோய்

வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுவது முழங்கால் கீல்வாத நோய். இதைச் சரி செய்ய மூக்கில் உள்ள இணைப்புத் திசுக்களைப் பயன்படுத்த முடியும் என, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜெ.எம்.யூ., பல்கலைக்கழகம் கண்டறிந்துள்ளது.


👱முடியின் வளர்ச்சி

 ஜப்பானின் டிசுகுபா (Tsukuba) பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானிகள், வேரிலிருந்து முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஜெல் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இது கெரடின் நானோ துகள்களாலானது.

 

💚ஈர்க்கும் திறன் அதிகமாக..

கடலில் வாழும் பாசிகள் ஒரு தனி வகை பச்சையத்தைக் கொண்டுள்ளன. இந்தப் பச்சையத்தை உற்பத்தி செய்யும் மரபணுவை எடுத்து நிலத்தில் வாழும் தாவரங்களுக்கும் பொருத்த முடியும். அப்படிச் செய்தால் அவற்றின் ஒளி ஈர்க்கும் திறன் அதிகமாகும். இதனால், தாவரங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்று, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


🌰மாரடைப்பு காரணம்

இளைஞர்களிடைய திடீரென்று மாரடைப்பு ஏற்படுத்துவது 'மையோகார்டிடிஸ்' நிலை ஆகும். இதற்கு வைரஸ்கள் தாக்கும்போது நம் உடலில் நோயெதிர்ப்பு ஆற்றல் துாண்டப்பட்டு, அதனால் ஏற்படும் வீக்கமே காரணம் என, இதுவரை அறியப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, அமெரிக்காவைச் சேர்ந்த ப்ராலின் ஆய்வு மையம் வைரஸ்களே நேரடியாக இதய தசைகளைத் தாக்குவதால் தான் இந்த நிலை ஏற்படுவதாகக் கண்டறிந்துள்ளது.

 

હஅமிலக் கசிவு

வயிறு, உணவுக்குழாய் உள்ளிட்ட பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்த பின் பலருக்கு அவற்றில் அமிலக் கசிவு ஏற்படும். இதைக் கண்டறிய, உலோகத் தகடுகள் பதித்த சிறிய ஸ்டிக்கர் ஒன்றை அமெரிக்காவைச் சேர்ந்த நார்த்வெஸ்டர்ன் பல்கலை வடிவமைத்துள்ளது. அமிலம் பட்டவுடன் விரிகின்ற ஹைட்ரோ ஜெல், கசிவைக் காட்டிக் கொடுக்கும்.

 

🧠நினைவாற்றல் குறைபாடு

அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை மேற்கொண்ட ஆய்வில், 12 வாரங்கள் தொடர்ந்து குண்டலினி யோகம் பயிற்சி செய்வது நினைவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பல மூளை தொடர்பான நோய்களைக் குறைப்பதாகத் தெரிய வந்துள்ளது.

பதிவு:செமனுவேந்தன்

0 comments:

Post a Comment