புற்றுநோயைக் கண்டறிவது...

 


நாம் வாழும் இந்த பூமி எப்போதுமே சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. அதுபோலவே, நம் உடலிலும் லட்சக்கணக்கான உயிரணுக்கள் எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அவை, வேலை வெட்டி எதுவும் இல்லாமல் சுற்றவில்லை. சில உயிரணுக்கள் உடலின் நோய் எதிர்ப்புக்காக கிருமிகளை எதிர்கொள்கின்றன, சில உடலிலுள்ள காயங்களை ஆற்றுகின்றன. இன்னும் சில உயிரணுக்கள், நம் உடலின் பாகங்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயனளித்துக்கொண்டு இருக் கின்றன.

 

ஆனால், இப்படி பல காரணங்களுக்காக சுற்றித்திரியும் இந்த உயிரணுக்களின் செயல்பாடுகளில் ஏதேனும் தவறு நிகழ்ந்துவிட்டால், பின்விளைவுகள் புற்றுநோய் மற்றும் பரவும் புற்றுநோய் ஏற்படுவதாக கூட இருக்கலாம்.

 

துரதிஷ்டவசமாக, இந்த சுற்றித்திரியும் உயிரணுக்கள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்த திட்டவட்டமான புரிதல் இதுவரை ஏற்படவில்லை. ஆனால், இப்போது கொஞ்சம் புரிந்திருக்கிறது என்கிறார் அமெரிக்காவின் கால்டெக் ஆய்வு மையத்தின் பேராசிரியர் பால் ஸ்டெர்ன்பெர்க்.

 

புற்றுநோயைப் பொறுத்தவரை, தொடக்க நிலை புற்றுநோயைக் கண்டறிவது மற்றும் அவை எப்போது பரவும் புற்றுநோயாக மாறுகின்றன என்பதைக் கண்டறிவது போன்றவை நம்மால் முடியும். ஆனால், சுற்றித்திரியும் உயிரணுக்கள் நம் உடலை சுற்றிவரும்போது செய்யும் ஏதோ செயலால்தான் புற்றுநோயும், பரவும் புற்றுநோயும் ஏற்படுகின்றன. அது என்னவென்றுதான் இன்னும் நம்மால் கண்டறிய முடியவில்லை என்கிறார் ஸ்டெர்ன்பெர்க்.

 

சுற்றித்திரியும் உயிரணுக்களின் அந்த மர்மமான செயலைக் கண்டறிய, சீனோராப்டிடிஸ் எலிகன்ஸ் (சி.எலிகன்ஸ்) எனும் புழுவில் உள்ள `லின்க்கர் செல்’ எனும் சுற்றித்திரியும் உயிரணுக்களை ஆய்வு செய்தது ஸ்டெர்ன்பெர்க்கின் ஆய்வுக்குழு. இந்த லின்க்கர் செல்கள், சி.எலிகன்ஸின் இனவிருத்தி வளர்ச்சியின் போது அதன் உடல் முழுவதும் சுற்றி வருகின்றன.

 

அளவில் சிறியதாக இருக்கும் இந்த புழுவின் மரபணுக்களில் பல மனிதர்களிலும் இருக்கின்றன. மேலும், மைக்ரேஷன் அல்லது உயிரணுக்கள் சுற்றித்திரிவது எனும் உயிரியல் நிகழ்வு, பரிணாமத்தில் பல நூற்றாண்டுகளாய் தொடர்ந்து வரும் ஒன்று என்கிறார் ஸ்டெர்ன்பெர்க்கின் துணை ஆய்வாளர் மிஹோகோ காத்தோ.

 

இந்த புழுக்கள் அல்லது மனிதர்களின் ஒவ்வொரு உயிரணுவிலும், குறிப்பிட்ட ஒரு வேலை அல்லது பல வேலைகளைச் செய்யும் ஆயிரக் கணக்கான மரபணுக்கள் இருக்கின்றன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு மரபணுக்கள், ஒரு உயிரணுவில் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன.

 

உயிரணுக்கள் சுற்றித்திரியும் போது எந்த வகையான மரபணுக்கள் செயல்படுகின்றன என்பதைக் கண்டறிய, லார்வா வளர்ச்சி நிலையில் உள்ள சி.எலிகன்ஸ் புழுவின் லின்க்கர் செல்கள் அதிசக்தி மைக்ராஸ்கோப் கொண்டு சேகரிக்கப்பட்டன. 12 மணி நேரத்துக்கு முன்பு மற்றும் பின்பு என, இரு கால நிலைகளில் சேகரிக்கப்பட்ட லின்க்கர் செல்களில் எந்தெந்த மரபணுக்கள் செயல்படுகின்றன என்பது, சீக்குவென்சிங் மற்றும் கம்பியூட்டேஷனல் அனாலிசிஸ் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இதற்கு ட்ரான்ஸ்கிரிப்ஷனல் புரொபைலிங் என்று பெயர்.

 

இதன்மூலம், ஒரு குறிப்பிட்ட லின்க்கர் செல்லின் ஆரோக்கியமான சுற்றித்திரிதல் குறித்த புரிதல் ஏற்படும். இந்த புரிதலைக் கொண்டு ஒரு சுற்றித்திரியும் உயிரணு எப்படி அதன் சுற்றுச்சூழலில் பயணிக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும் என்கிறார் ஸ்டெர்ன்பெர்க். புற்றுநோய் பரவுதல் அல்லது மெட்டாஸ்டேசிஸ் குறித்த தற்போதைய நம் பார்வையில், புற்றணுக்கள் சுற்றித்திரியும் போது சில தடைகளை சந்திக்கின்றன. புற்றுநோய் பரவ வேண்டுமானால், அவை அந்த தடைகளை முறியடிக்க அல்லது தாண்டிச் சென்றாக வேண்டும். அதற்காக, புற்றணுக்கள் மரபணுக்கோப்பில் உள்ள ஏதோ ஒரு வழியைத்தான் கையாளுகின்றன.

 

ஆக, சுற்றித்திரியும் உயிரணுக்களின் பல்வேறு வகையான செயல்பாடுகளை புரிந்துகொள்வதன் மூலம், சுற்றித்திரிவதற்காக அவை பயன்படுத்தும் குறிப்பிட்ட மரபணுக்களை கண்டறிந்து அவற்றை செயலிழக்கச் செய்யும் புதிய வகையான மருந்துகளை உற்பத்தி செய்யலாம் என்கிறார் ஸ்டெர்ன்பெர்க்.

 

இதற்காக, லின்க்கர் செல் மைக்ரேஷனுடன் தொடர்புடைய, ஆனால் இதற்கு முன்பு ஆய்வு செய்யப்படாத, சி.எலிகன்ஸ் மற்றும் மனிதர்களில் உள்ள மரபணுக்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது ஸ்டெர்ன்பெர்க்கின் ஆய்வுக்குழு. இதன்மூலம், பரவும் புற்றுநோய்க்கான புதிய மருந்துகள் மட்டுமல்லாது, அதனை தொடக் கத்திலேயே கண்டறியும் பரிசோதனைகளையும் உருவாக்கலாம் என்கிறார் ஸ்டெர்ன்பெர்க்.

-முனைவர் பத்மஹரி


0 comments:

Post a Comment